1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் வரதட்சணை மரணங்கள், மணமகள் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பரவலான பாகுபாட்டை எதிர்கொண்டனர். நாடு முழுவதும் பெண்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
1992-ஆம் ஆண்டு பன்வாரி தேவி மீதான கொடூரமான தாக்குதலை 2012-ஆம் ஆண்டு டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையுடன் இணைக்காமல் இந்தியாவில் பாலின நீதிச் சட்டங்களின் வரலாற்றைக் கூற முடியாது. இவை தனித்தனி குற்றங்கள் மட்டுமல்ல, பெண்களின் நீண்டகால வலி பொதுமக்களின் கவனத்திற்கு வந்து சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்த தருணங்கள்.
விசாகா எதிர் ராஜஸ்தான் மாநிலம் (Vishakha vs. State of Rajasthan (1997)) வழக்கு, ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் தொடங்கியது. மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிமட்ட ஊழியரான பன்வாரி தேவி, ஒரு சிறுமியின் குழந்தை திருமணத்தை நிறுத்த முயன்றார். இந்தச் செயல் பழைய ஆணாதிக்க மரபுகளை மீறுவதாக இருந்தது. இதனால் அவர் நில உரிமையாளர்களால் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அடுத்து நடந்தது அக்கறையின்மை மற்றும் அமைப்பின் தோல்வியைக் காட்டியது. காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுத்துவிட்டனர். பன்வாரி தேவியின் மருத்துவ அறிக்கையும் முழுமையடையவில்லை. மேலும், நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது. அவரது கணவரின் சாட்சியத்தையும் நீதிமன்றம் சந்தேகித்தது, மேலும் உயர் சாதி ஆண்கள் தாழ்த்தப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய மாட்டார்கள் என்று கூறியது.
1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில், இந்தியா வரதட்சணை மரணங்கள், மணமகள் கொலைகள் மற்றும் பரவலான பெண் வெறுப்பை எதிர்கொண்டது. நாடு முழுவதும் பெண்கள் பேரணிகள், போராட்டங்கள் மற்றும் மறியல்கள் மூலம் எதிர்த்துப் போராடினர். பன்வாரி தேவி வேலை செய்யும்போது தாக்கப்பட்டார். அவருக்கு அரசாங்கம் எந்தப் பாதுகாப்பையோ ஆதரவையோ வழங்கவில்லை. இதனால் மகளிர் குழுக்கள் மற்றும் தலித் அமைப்புகளை கோபப்படுத்தியது. அதனால் இவ்வழக்கு வரலாற்று சிறப்புமிக்க தீப்பொறியாக மாறியது.
கீழ் நீதிமன்றம் செய்யாததை உச்சநீதிமன்றம் இப்போது செய்ய வேண்டியிருந்தது. பணியிடப் பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு உரிமை என்று அறிவிக்க வேண்டும். 1997-ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக "விஷாகா" என்ற பெயரில் பல அமைப்புகளால் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டது.
பாலின சமத்துவம் என்பது பிரிவுகள் 14 (சட்டத்தின் முன் சமத்துவம்), 19(1)(g) (தொழில் செய்யும் உரிமை) மற்றும் 21 (கண்ணியத்துடன் வாழும் உரிமை) ஆகியவற்றின் கீழ் உள்ள உரிமைகளின் ஒரு பகுதியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இந்த உரிமைகளை மீறுவதாகவும், இது ஒரு அரசியலமைப்புச் சிக்கலாக மாறுவதாகவும் அது கூறியது.
அப்போது எந்தச் சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் விசாகா வழிகாட்டுதல்களை உருவாக்கியது. பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற பணியிடங்களை வழங்குவதற்கு முதலாளிகளை பொறுப்பேற்க வைக்கும் விதிகள் உருவாக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள், பெண்கள் பேசத் தேவையான தைரியம் மற்றும் காவல்துறை மற்றும் நீதித்துறையால் பெரும்பாலும் காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றையும் நீதிமன்றம் அங்கீகரித்தது.
முக்கியமான தீர்ப்பு இருந்தபோதிலும், செயல்படுத்தல் பலவீனமாக இருந்தது. ஒரு சில முதலாளிகள் மட்டுமே விதிகளைப் பின்பற்றினர். மிகக் குறைந்த பெண்களே புகார்களைப் பதிவு செய்தனர். வழிகாட்டுதல்களை சட்டமாக மாற்றுவதில் அரசாங்கம் மெதுவாக இருந்தது. சமூகத்தின் மனப்பான்மையும் டிசம்பர் 2012 வரை பெரும்பாலும் அப்படியே இருந்தது.
2012-ஆம் ஆண்டு, டெல்லியில் ஒரு பேருந்தில் 23 வயது பெண் ஒருவர் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆறு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், பொது இடங்களில் பெண்களைப் பாதுகாக்க அரசு தவறியதை மீண்டும் காட்டியது. விசாகா வழக்கில் தொடங்கிய அவசரத்தை மீண்டும் கொண்டு வந்தது. நாடு பெரும் கோபத்துடன் எதிர்வினையாற்றியது. அரசு விரைவாக செயல்பட்டு, அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒரு குற்றவாளி போலீஸ் காவலில் இறந்தார். மற்ற நான்கு ஆண்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறார் நீதிச் சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் சிறார் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தது.
மிக முக்கியமாக, பல வருட தாமதத்திற்குப் பிறகு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் நிலை உருவானது. அரசாங்கம் முக்கிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம் (The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act), 2013, விசாகா வழிகாட்டுதல்களுக்கு சட்டப்பூர்வ சக்தியை அளித்தது மற்றும் முதலாளியின் செயலற்றத் தன்மையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியது.
குற்றவியல் (திருத்த) சட்டம், 2013, பாலியல் வன்முறையின் வரையறையை விரிவுபடுத்தியது, பின்தொடர்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களைச் சேர்த்தது, தண்டனைகளை அதிகரித்தது மற்றும் விரைவான விசாரணைகளை கோரியது.
பன்வாரி தேவியின் தாக்குதலிலிருந்து டெல்லி பாலியல் வன்கொடுமை வரையிலான பயணம், இந்தியாவில் நீதி பெரும்பாலும் பெரும் துன்பங்களுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பதைக் காட்டுகிறது. சட்டப் புறக்கணிப்பின் அதிக விலையை விசாகா வழக்கு வெளிப்படுத்தியது. மேலும், டெல்லி வழக்கு சட்டங்களுக்கும் அவற்றின் அமலாக்கத்திற்கும் இடையிலான பரந்த இடைவெளியைக் காட்டியது. இன்றும் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன, ஆனால், பெண்கள் இன்னும் வீட்டைவிட்டு தனியாக செயல்பட பயப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவமானத்தையும் அவநம்பிக்கையையும் எதிர்கொள்கின்றனர், நீதிமன்ற வழக்குகள் மெதுவாக நடக்கிறது. மேலும், பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டம் பதிலளிக்கும்வரை பெண்கள் துன்பப்பட வேண்டியிருப்பது துயரமான ஒன்றாக உள்ளது. பன்வாரி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி இன்னும் சுதந்திரமாக இருக்கிறார். ஆனாலும் அவரது போராட்டம் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. பாலின நீதிக்கான போராட்டம் முடிவடையவில்லை. ஆனால், முன்னோக்கி செல்லும் பாதை இப்போது தெளிவாக உள்ளது.
இன்சியா வாகன்வதி ஒரு சமூக-அரசியல் விமர்சகர் மற்றும் The Fearless Judge என்ற புத்தகத்தின் ஆசிரியர். ஆஷிஷ் பரத்வாஜ் மும்பையில் உள்ள பிட்ஸ் பிலானி சட்டப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் தலைவர்.