குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன் உள்ள சவால் — மாநிலங்களவையில் கூட்டாட்சி முறையைப் பாதுகாத்தல் -K R விக்னேஷ் கார்த்திக்

 இந்தியாவின் கூட்டாட்சி சமநிலை [federal balance] ஒரு பாரபட்சமற்ற தலைவரின் கீழ் தினசரி நடைமுறையான இரு அவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு குடியரசு துணைத் தலைவரையும் மதிப்பிடுவதற்கான அளவுகோல் அதுதான்.


குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடிந்துவிட்டது. ஆளும் கூட்டணியின் வேட்பாளர் C.P.ராதாகிருஷ்ணன் நல்ல வாக்கு வித்தியாசத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிகாரபூர்வ கணக்குகளின்படி, அவர் 452 வாக்குகள் பெற்றார். அதே நேரம் எதிர்க்கட்சி வேட்பாளர், நீதிபதி B சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். தேர்தலுக்கு முன்னதான காலம் அசாதாரணமான முறையில் காரசாரமான விவாதங்களுடன் இருந்தது. 


சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) மறுசீரமைப்பு குறித்து நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கை முதல் சல்வா ஜூடும் குறித்து அவர் முன்னர் வழங்கிய தீர்ப்பு வரை மற்றும் நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் மீதான அதன் தாக்கம் வரை - பல விவகாரங்கள் விவாதத்தை வடிவமைத்தன. இத்தகைய விவாதங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை முன்னிறுத்துகின்றன: குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராகவும் இருக்கிறார். எனவே, அவர்  இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்கு முக்கியமானவர். அவர்கள் வெறும் கட்சி உறுப்பினராக மட்டும் செயல்படக்கூடாது.


இந்திய நாடாளுமன்றம் வடிவமைப்பால் இரு அவைகளைக் கொண்டது. மக்களவை நேரடி பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வழியை வழங்குவதன் மூலம் மாநிலங்களவை (Council of States) கூட்டாட்சியை ஆதரிக்கிறது. இது சட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கு மட்டுமல்ல. அரசியலமைப்பின் பிரிவு 249-இன் படி, அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒப்புக்கொண்டால், அது நாட்டிற்கு முக்கியமானதாக இருந்தால், மாநில விவகாரங்களில் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அனுமதிக்கலாம்.


 அரசியலமைப்பின் பிரிவு 312-இன் கீழ், அதே பெரும்பான்மையுடன், ஒன்றியத்தின் நிர்வாக கட்டமைப்பை வடிவமைக்கும் புதிய அகில இந்திய சேவைகளை (All-India services) உருவாக்க முடியும். அரசியலமைப்பில் செய்யப்படும் பெரும்பாலான மாற்றங்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டின் ஒப்புதலும் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சிறப்பு பெரும்பான்மையுடன் செய்யப்படுகின்றது. மாநிலங்களவை முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மக்களவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண விவகாரங்களில்கூட, மாநிலங்களவை இன்னும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒன்றிய அரசாங்கம் மாநிலங்களவையில் வரவு-செலவு அறிக்கையை (budget) சமர்ப்பிக்கிறது பணக் கொள்கைகளைப் (fiscal policy) பற்றி விவாதிக்கிறது. மேலும், இரு அவைகளின் ஒப்புதலின்றி எந்த  நிதியையும் செலவிட முடியாது.


மாநிலங்களவை மத்திய மற்றும் ஒன்றிய அரசுகளுக்கிடையே ஒரு பாலமாக செயல்படுவதால், அதன் நம்பகத்தன்மை தலைவர் நாற்காலியில் இருக்கும் நபரைப் பெரிதும் சார்ந்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் மாநிலங்களவைக்கு தலைமை தாங்குகிறார், (presiding officer) அவை உறுப்பினராக அல்ல. யார் பேசலாம் என்பதை முடிவு செய்யும்போதும், விதிகளை உருவாக்கும்போதும் அவர் நியாயமாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும். சிறிய கட்சிகள் மற்றும் சிறிய பிராந்திய கட்சிகள் நியாயமான கருத்து கேட்கும் வாய்ப்பைப் பெறுவதையும் அவர் உறுதி செய்ய வேண்டும். நிதிப் பகிர்வு (fiscal devolution), ஆளுநர்-மாநில மோதல்கள், ஒன்றிய அரசு வழித் திட்டங்கள் (centrally sponsored schemes) மற்றும் முக்கிய நியமனங்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன. அவர் நடுநிலையாக இருப்பது மிகவும் முக்கியம். ஒரு வலிமையான தலைவர் பெரும்பான்மையைத் தடுக்க மாட்டார். ஆனால், அனைவருக்கும் நியாயமான விவாத நேரம், பேச சம வாய்ப்புகள், விதிகள் குறித்த தெளிவான முடிவுகள் மற்றும் மாநில சுயாட்சியைப் பாதிக்கும்போது கவனமாக மதிப்பாய்வு செய்வதை உறுதி செய்கிறார்.


சமீபத்திய ஆண்டுகள் கவலைக்குரிய காரணங்களை அளித்துள்ளன. முதலாவதாக, சில முக்கியமான சட்டங்கள் பண மசோதாக்களாக நிறைவேற்றப்படுகின்றன. மாநிலங்களவை பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். ஆனால், அவற்றைத் தடுக்க முடியாது. பண மசோதா செயல்முறை மாநிலங்களவையின் அதிகாரத்தைக் குறைத்திருக்கலாம். ஆனால், நீதிமன்றங்கள் இதில் உடன்படவில்லை என்பதற்கு ஆதார் சட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டாவதாக, குழுவின் ஆய்வு கடுமையாகக் குறைந்துள்ளது. குழுக்களுக்கு பரிந்துரைக்கப்படும் மசோதாக்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது. அதே நேரத்தில் சட்டங்கள் குறைந்தபட்ச விவாதத்துடன் அதிகளவில் நிறைவேற்றப்படுகின்றன. இந்த முறைகள் இரு அவைகளின் விவாதப் பங்கை பலவீனப்படுத்துகின்றன மற்றும் அதன் கூட்டாட்சி தன்மையை உறுதிப்படுத்தும் மாநிலங்களவையின் திறனைக் குறைக்கின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி பற்றிய நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கை, ஒன்றிய அரசுக்கு அதிகப்படியான நிதி அதிகாரம் செல்வது குறித்த கவலைகளைக் காட்டியது. அதனால்தான் குடியரசு துணைத் தலைவரின் பங்கு நியாயமானதாக இருக்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் சார்புடையதாக இருக்கக்கூடாது. ராதாகிருஷ்ணனின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் நடுநிலையாக இருந்து உயர்ந்து கூட்டாட்சியின் உரிமைகள் குறித்த நியாயமான விவாதங்களைப் பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர்கள் டாரன் அசெமோக்லு மற்றும் ஜேம்ஸ் A.ராபின்சனின் வாதங்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய தலைவரின் செயல்திறனை நிறுவன அளவுகோல்களுக்கு எதிராக மதிப்பிட வேண்டும். ஏனெனில், வலுவான நிறுவனங்கள் ஜனநாயகத்தின் உயிர்நாடியாகும். கூட்டாட்சி கேள்விகளில் நடைமுறை ரீதியாக சமத்துவம் மிக முக்கியமானது. மாநிலங்களவை ஒன்றிய-மாநில நிதி, ஆளுநர்களின் அதிகாரங்கள் அல்லது நிதிக் கடமைகளுடன்கூடிய தேசியத் திட்டங்களை விவாதிக்கும்போது, ​​தலைவரின் தீர்ப்புகள் ஆய்வு உண்மையானதா அல்லது அடையாளமா என்பதை தீர்மானிக்க முடியும். இரு அவைகளுக்கும் மரியாதை சமமாக முக்கியமானது. மக்களவையில் மசோதாக்கள் எவ்வாறு சான்றளிக்கப்படுகின்றன என்பதைத் தலைவரால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், மாநிலங்களவையில் வலுவான விவாதம் மற்றும் தேவைப்படும் இடங்களில் தேர்வுக் குழுக்களுக்கு பரிந்துரைப்பது அதன் பங்கை வலுப்படுத்தும். சபையில் மரியாதை மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பது முக்கியம். தெளிவான விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும், நியாயமான பேச்சு நேரத்தை வழங்குவதன் மூலமும், சிறிய பிராந்தியக் கட்சிகளைக் கேட்பதன் மூலமும், மாநிலங்களவை உண்மையிலேயே அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.


சாத்தியமான சீர்திருத்தங்கள் அரசியலமைப்பு மாற்றமின்றி நிறுவனத்தை வலுப்படுத்தலாம். வெளிப்படையான பேச்சாளர் பட்டியல்களையும் நேர ஒதுக்கீடுகளையும் சட்டமாக்குவது, சிறிய கட்சிகளை சமநிலையற்ற பிரதிநிதித்துவத்திலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக கூட்டாட்சி விவகாரங்களில், அனுமதிக்கப்படுதல் குறித்து விளக்கமான தீர்ப்புகளை வெளியிடுவது, எதிர்கால தலைவர்கள் பின்பற்றக்கூடிய முன்னுதாரணங்களை உருவாக்கி, பாரபட்சம் என்ற குற்றச்சாட்டுகளை குறைக்கும். தலைவரின் அதிகார வரம்புக்கு அப்பால், பண மசோதா சான்றிதழின் நோக்கத்தை குறுக்குவது மற்றும் பல கட்சி ஒப்பந்தங்களை மீண்டும் உயிர்ப்பித்து மேலும் மசோதாக்களை குழுக்களுக்கு அனுப்புவது, இரு சபை முறையை மேலும் வலுப்படுத்தும்.


சுருக்கமாகச் சொன்னால், துணைக் குடியரசுத் தலைவர் பதவி வெறும் மரபுசார்ந்த பதவி மட்டுமல்ல. மாநிலங்களவையின் நம்பகத்தன்மை தங்கியிருக்கும் முக்கியப் பதவி அதுதான். ராதாகிருஷ்ணனின் தேர்தல் மட்டும், கூட்டாட்சி தத்துவத்தை ஏதோ ஒரு வகையில் சாய்த்துவிடாது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் சபையை எவ்வாறு நடத்துகிறார் என்பதுதான் முக்கியம். குறிப்பாக, மாநில சுயாட்சியைப் பாதிக்கும் நிதி அல்லது நிறுவன கேள்விகள் விவாதத்திற்கு வரும்போது அவர் அவையை எவ்வாறு நடத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில், ஆபத்துகள் மேலும் அதிகரிக்கக்கூடும். 

எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இட மறு ஒதுக்கீடு மாநிலங்களுக்கிடையே சமச்சீரற்ற தன்மையை ஆழப்படுத்தினால், அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரே அரசியலமைப்பு வழி மாநிலங்களவை மட்டுமே. சமமான பிரதிநிதித்துவத்தை நோக்கி நகர்வது போன்ற தீர்வுகளை நிபுணர்கள் ஏற்கனவே முன்மொழிந்துள்ளனர். இந்தியாவின் கூட்டாட்சி சமநிலை பிரிவுகள் 249 மற்றும் 312 அல்லது திருத்த நடைமுறையை மட்டுமல்ல, ஒரு பாரபட்சமற்ற தலைவரின்கீழ் இரு அவைகளின் தினசரி நடைமுறையையும் சார்ந்துள்ளது. எந்தவொரு குடியரசு துணைத் தலைவரையும் மதிப்பிடுவதற்கான அளவுகோல் அதுதான்.


கார்த்திக் கே ஆர், KITLV-Leiden-ல் இந்திய மற்றும் இந்தோனேசிய அரசியலின் முதுகலை ஆய்வாளரும், திராவிடப் பாதை என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.



Original article:

Share: