தேவையை அதிகரிக்க வருமானத்தை அதிகரிப்பதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.
செப்டம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தித் தரவு, இரண்டாவது காலாண்டு மற்றும் நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதாரத்தின் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் செய்திகள் அனைத்தும் மோசமாக இல்லை. ஆனால், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. அரையாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2025-க்கு இடையில், தொழில்துறை உற்பத்திக் குறியீடு (Index of Industrial Production(IIP)) தரவு, தொழில்துறை வளர்ச்சி குறைந்தது ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. இது வெறும் 3% மட்டுமே, இது எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு. இருப்பினும், இரண்டாவது காலாண்டில் நிலைமை மேம்படுவதைக் காட்டுகிறது. இதில், இரண்டாவது காலண்டின் (Q2) வளர்ச்சி முதல் காலாண்டின் (Q1) 2% உடன் ஒப்பிடும்போது 4.1% மிகவும் வலுவானது. இவை அனைத்திலும் உற்பத்தித் துறை முக்கிய நேர்மறையான புள்ளியாக இருந்தது. செப்டம்பரில், இது 4.8% வளர்ச்சியடைந்தது, இது இந்த நிதியாண்டில் இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சியாகும். காலாண்டு அடிப்படையில், ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் உற்பத்தித் துறை ஒப்பீட்டளவில் வலுவான 4.9% வளர்ச்சியைக் கண்டது, இது டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டிற்குப் பிறகு அது கண்ட வேகமான காலாண்டு வளர்ச்சியாகும். அரையாண்டு அடிப்படையில், இந்தத் துறையின் வளர்ச்சி முந்தைய ஆண்டின் முதல் பாதியில் 3.8%-ஆகக் குறைந்த பின்னர், ஏப்ரல்-செப்டம்பர் 2025 பாதியில் 4.1% ஆக மீண்டும் உயர்ந்தது. சுரங்கத் துறையின் செயல்பாடு செப்டம்பர் 2025, இரண்டாவது காலாண்டிலும், நிதியாண்டின் முதல் பாதியிலும் சுருங்கியது. இந்த ஆண்டு பருவமழை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றாலும், இந்த செயல்திறன் இன்னும் வழக்கத்திற்கு மாறாக மோசமாக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் உத்திநிலையான கனிமப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தத் துறையை வலுப்படுத்துவது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
உற்பத்தித் துறையின் வலுவான செயல்திறன் வெளிப்படையாகத் தெரிவது, அதை நேரடியாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. இந்தத் தரவுகள் வளர்ச்சிக்கான பரந்த அளவில் இல்லை என்றும், இது ஒரு சில துறைகளில் குவிந்துள்ளது என்றும் காட்டுகின்றன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) அளவிடப்பட்ட 23 முக்கிய உற்பத்தி துணைத் துறைகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கின. ஆடைகள், தோல் பொருட்கள், ரப்பர் பொருட்கள் மற்றும் நெகிழிப் பொருட்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகள் அனைத்தும் செப்டம்பர் 2025 காலாண்டில் சுருங்கியது கவலைக்குரியது. வளர்ச்சி அடைந்த துறைகளில் மரப் பொருட்கள், கனிமப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகப் பொருட்கள் ஆகியவை அடங்கும், இவை பலவும் அதிக மூலதனச் செலவினங்களைக் கொண்டுள்ளன. இந்தப் போக்கு தொடர்ந்தால், அது வேலை உருவாக்கத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். தரவின் மற்றொரு கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், நுகர்வோர் நீடித்து உபயோகிக்க முடியாத பொருட்கள் துறை கடந்த ஆறு தொடர்ச்சியான காலாண்டுகளாக சுருங்கியுள்ளது. இவற்றில் சில உப்பு மற்றும் உணவு எண்ணெய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் என்றாலும், மற்றவை விருப்பத்தேர்வு செலவினப் பொருட்களாகும். இதில் பெரும்பாலானவை அடிப்படை விளைவு காரணமாக இருந்தாலும், தேவை குறைவு என்பது கொள்கை வகுப்பாளர்கள் சில காலமாக எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும். உண்மையான தீர்வு வருமானங்களை அதிகரிப்பதிலும் வேலைகளை உருவாக்குவதிலும் உள்ளது.