ஈடுபாடு என்பது தார்மீக பிரச்சினைகளைப் புறக்கணிப்பதைக் குறிக்காது. ஆனால், அது பொதுக் கண்காணிப்பு மற்றும் தெளிவான வரம்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். புது தில்லிக்கு முக்கிய சவால் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைகளைக் கொண்ட குடிமக்களின் கண்ணியம் இரண்டையும் பாதுகாப்பதாகும்.
வெளியுறவுக் கொள்கை எப்போதும் தார்மீக மதிப்புகளுக்கும் நடைமுறைத் தேவைகளுக்கும் இடையில் உள்ளது. நாடுகள் உலகளாவிய கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், அது அவர்களின் நலன்களுக்கு ஏற்றவாறு தங்கள் செயல்களை மாற்றுகின்றன. ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைமையிலான அரசாங்கத்துடனான இந்தியாவின் சமீபத்திய தொடர்பு, குறிப்பாக இந்த மாதம் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் வருகை போன்றவை இந்த சமநிலையை தெளிவாகக் காட்டுகிறது. இந்தியாவின் சந்திப்புகள், கூட்டு அறிக்கை மற்றும் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான வாக்குறுதிகள் ஒரு இராஜதந்திர திட்டத்தை பிரதிபலிக்கின்றன. இருப்பினும், பெண் பத்திரிகையாளர்களை விலக்குவது குறித்த சர்ச்சை பெரும்பாலும் அரசியல் உத்திகளுடன் வரும் தார்மீக சமரசங்களை எடுத்துக்காட்டுகிறது.
தாலிபானுடன் இணைந்து செயல்படுவதற்கான இந்தியாவின் முடிவு மூன்று நடைமுறைக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.
முதலாவதாக, இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆப்கானிஸ்தான் முக்கியமானது. இந்திய எதிர்ப்பு போராளிகளை ஆதரிக்காத அல்லது தங்குமிடம் அளிக்காத ஒரு நிலையான ஆப்கானிஸ்தான் மிக முக்கியமானது. கடந்தகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் பாகிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் நெருங்கிய உறவுகளையும் கருத்தில் கொண்டு இது முக்கியமானதாக கருத்ப்படுகிறது.
இரண்டாவதாக, இந்தியா நீண்டகால வளர்ச்சித் திட்டங்களையும் ஆப்கானிஸ்தான் மக்களுடன் வலுவான உறவுகளையும் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி உதவியை ($2.3 பில்லியன்) அதிக அளவில் பெறும் நாடாக இருந்தது. உதவி, உள்கட்டமைப்பு மற்றும் தூதரக தொடர்புகளை செயலில் வைத்திருப்பதன் மூலம், இந்தியா அதன் முதலீடுகள் மற்றும் செல்வாக்கைப் பாதுகாக்கிறது.
மூன்றாவதாக, வளர்ந்துவரும் புவிசார் அரசியல் போட்டியுடன் கூடிய ஒரு பிராந்தியத்தில் இந்தியாவின் ஈடுபாடு ஒரு இராஜதந்திர பாதுகாப்பாகும். காபூலுடனான தொடர்பை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகள் தங்கள் உறவுகளை வலுப்படுத்தவும், இந்தியாவின் செல்வாக்கை பலவீனப்படுத்தவும், இந்தியாவின் நலன்களுக்கு எதிரான விளைவுகளை வடிவமைக்கவும் அனுமதிக்கும்.
இந்தக் காரணங்கள், புது தில்லி அமீர் கான் முத்தகியை வரவேற்றதற்கும், ஆப்கானிஸ்தான் தூதரகத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதற்கும், சிறந்த தூதரக வசதிகளைப் பற்றி விவாதிப்பதற்கும், அதன் மனிதாபிமான ஆதரவை உறுதிப்படுத்துவதற்கும் காரணங்களை விளக்குகின்றன. கூட்டங்களுக்குப் பிறகு ஒரு கூட்டு அறிக்கையில் இந்த நடவடிக்கைகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டன. இந்தியா தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், காபூலில் உள்ள அதன் "தொழில்நுட்பப் பணி" ஒரு "தூதரகமாக" மேம்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் இந்தியாவின் ஈடுபடும் ஆர்வத்தையும் அதன் எச்சரிக்கையான அணுகுமுறையையும் காட்டியது.
ஆப்கானியர்களின் இராஜதந்திர தவறு காரணமாக இந்த வருகை சர்ச்சைக்குரியதாக மாறியது. தலிபான்கள் புதுதில்லியில் ஒரு பத்திரிகையாளர் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். ஆனால், அதில் பெண் பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. இது இந்தியாவில் கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது மற்றும் இந்த சம்பவத்திலிருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டு ஒரு அரசாங்க அறிக்கையை வெளியிட்டது. இந்திய ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதை இந்தியாவிற்குள் பெண் வெறுப்பு நடைமுறைகளை கொண்டுவரும் முயற்சி என்று கண்டனம் செய்தனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இந்த பின்னடைவுக்குப் பிறகு, தலிபான் தலைவர் பின்னர் பெண் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ஒரு தனி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். இருப்பினும், இந்த சர்ச்சை இந்தியாவில் ஒரு மோசமான தோற்றத்தை ஏற்படுத்தியது மற்றும் தலிபான் அரசாங்கத்துடனான புது தில்லியின் உறவுகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியது.
இந்த சம்பவம் ஒரு முக்கியமான பாடத்தை வழங்குகிறது. மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது சில நன்மைகளைத் தரும், எடுத்துக்காட்டாக, இந்தியாவுக்கு எதிரான குழுக்களால் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தைப் பயன்படுத்தப்படாது என்ற உத்தரவாதங்களைப் பெறுவது முக்கியமானதாக இருக்கும். இருப்பினும், இது இந்தியர்களை ஒரு கடினமான உண்மையை எதிர்கொள்ள வைக்கிறது. இந்தியா அதன் அரசியலமைப்பின்கீழ் பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் அதே வேளையில், அது இப்போது பெண்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு இயக்கத்தைக் கையாள்கிறது.
இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ள, தாலிபானுடனான அதன் கடந்தகாலப் பிரச்சனைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முதல் தாலிபான் ஆட்சியின்போது, இந்தக் குழு இந்தியா மீதான பாகிஸ்தானின் விரோதத்தை ஆதரித்தது. மிகவும் வேதனையான உதாரணம் 1999-ஆம் ஆண்டு டிசம்பரில் காந்தஹாருக்குச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 கடத்தப்பட்டது. அந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியாவை கட்டாயப்படுத்தின. இது ஆழமான உணர்ச்சி மற்றும் அரசியல் வடுக்களை ஏற்படுத்தியது. அந்த அனுபவம் புது தில்லியை பல ஆண்டுகளாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வைத்தது மற்றும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தாலிபான்களை அங்கீகரிக்கவோ அல்லது ஒத்துழைக்கவோ கூடாது என்ற தெளிவான கொள்கைக்கு வழிவகுத்தது.
பல காரணிகளால் நிலைமை மாறிவிட்டது. புவிசார் அரசியல் சூழல் இப்போது வேறுபட்டது. தாலிபான்கள் இராஜதந்திர அங்கீகாரத்தைப் பெறவும், பாகிஸ்தானில் உள்ள அதன் முன்னாள் ஆதரவாளர்களிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர். இது இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல்களுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவிற்கும் அதன் சொந்த இராஜதந்திர தேவைகள் உள்ளன.
2021-ல் அமெரிக்கா விலகியபிறகு, பிராந்திய கூட்டணிகள் மாறின. மேலும், ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு உதவியை பெரிதும் நம்பியிருந்தது. இந்த மாற்றங்கள் நாடுகள் தொடர்பு வழிகளை மீண்டும் திறக்க ஊக்குவித்துள்ளன. அமைதியான இராஜதந்திரத்தைப் பயன்படுத்துவது, மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒத்துழைப்பைப் பயன்படுத்துவது தனிமைப்படுத்தப்படுவதைவிட அதன் நலன்களைப் பாதுகாப்பது சிறந்தது என்று இந்தியா நம்புகிறது.
இந்தியாவின் தார்மீக வெளியுறவுக் கொள்கை முடிவுகளின் வரலாறு, தற்போதைய சூழ்நிலையைப் பற்றி பல இந்தியர்களை கவலையடையச் செய்கிறது. 1970-ஆம் ஆண்டுகளில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இனப் பாகுபாட்டை சட்டப்பூர்வமாக ஆதரித்த ஒரு நாட்டிற்கு எதிராக விளையாடுவதற்குப் பதிலாக 1974-ல் டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியைக் கூட கைவிட்டது. இந்தச் செயல், காலனித்துவம் மற்றும் இனவெறிக்கு எதிரான ஒரு தேசமாக இந்தியாவின் பிம்பத்தை வலுப்படுத்திய ஒரு தார்மீக முடிவாகும்.
ஆனால் இப்போது, அதே இந்தியா, தென்னாப்பிரிக்கா ஒரு காலத்தில் கருப்பின மக்களை நடத்தியது போலவே பெண்களை மோசமாக நடத்தும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது. பாலினப் பாகுபாட்டை, இனப் பாகுபாட்டைவிட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஏன் பார்க்கப்படுகிறது? இந்தியாவும் இதேபோன்ற தார்மீக நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டாமா? அல்லது இனப் பாகுபாடு கடந்த காலத்தில் இல்லாத வகையில் இன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை பொறுத்துக்கொள்ளப்படுகிறதா? -போன்ற கேள்விகளை எழுப்புகிறது.
இதற்கான பதில் ஓரளவுக்கு அந்நியச் செலாவணியிலும், ஓரளவுக்கு நிலைமை எவ்வளவு அவசரமாகத் தோன்றுகிறது என்பதிலும் உள்ளது. நிறவெறி சகாப்த தென்னாப்பிரிக்கா ஒரு தெளிவான தார்மீகப் பிரச்சினையையும், உலகளாவிய தனிமைப்படுத்தலுக்கான வலுவான காரணத்தையும் கொண்டிருந்தது, இது அதற்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதில் இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமை மிகவும் சிக்கலானது. அது மனிதாபிமான நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் பலவீனமான நிர்வாகத்தை எதிர்கொள்கிறது. இதில் முடிவுகளை எடுப்பது கடினம். இருப்பினும், நடைமுறைச் சாத்தியக்கூறு தார்மீகக் கேள்வியை மறைக்கக்கூடாது: இந்தியா ஒருகாலத்தில் இன ஒடுக்குமுறையை நிராகரித்திருந்தால், இப்போது ஏன் ஒரு குறுகியகாலத்திற்குக் கூட, அதன் பாதி மக்களுக்கு அடிப்படை சுதந்திரங்களை மறுக்கும் ஒரு ஆட்சியை பொறுத்துக்கொள்கிறது?
இந்த சூழ்நிலைக்கு சிந்தனையுள்ள இந்தியர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பொது அக்கறை உண்மையானது, நியாயமானது மற்றும் முக்கியமானது. இணைந்து செயல்படுவது என்பது தார்மீக பிரச்சினைகளை புறக்கணிப்பதைக் குறிக்காது. ஆனால், அதற்கு தொடர்ந்து பொது கண்காணிப்பு மற்றும் தெளிவான வரம்புகளை நிர்ணயிப்பது அவசியம். பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்:
முதலில், மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவி பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான அவர்களின் அணுகலை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, இராஜதந்திர உறவுகள் நிபந்தனைக்குட்பட்டதாகவும், கவனமாக நிர்வகிக்கப்பட்டதாகவும், மீளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதில் தார்மீக சமரசங்கள் இருக்கக்கூடாது.
மூன்றாவதாக, இந்தியா அதன் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு எதிராகச் செல்லும் வெளிநாட்டு நபர்களுக்கு, குறிப்பாக பாலின சமத்துவம் தொடர்பானவர்களுக்கு சமூக அல்லது குறியீட்டு முக்கியத்துவத்தை வழங்கக்கூடாது.
உதவிகளை வெளிப்படையாகக் கண்காணித்தல், உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தெளிவான இலக்குகள் மற்றும் பாதுகாப்பு வாக்குறுதிகள் குறித்து பொது அறிக்கையிடல் போன்ற பொறுப்புக்கூறல் அமைப்புகளை உள்ளடக்கியிருந்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நடைமுறை மற்றும் தார்மீக ரீதியாக இருக்க முடியும். சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த நிலைமைகளை மறைக்காமல் திறந்த மற்றும் தெளிவானதாக மாற்ற அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
தலிபான் பிரச்சினை நவீன இராஜதந்திரத்தில் உள்ள மோதலைக் காட்டுகிறது. ஒரு ஜனநாயக சமூகத்தின் தார்மீக மதிப்புகளுடன் தேசிய நலன்களை சமநிலைப்படுத்துதல் போன்றவற்றை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நமது தற்போதைய முடிவுகளில் அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது மறக்கவோ விடக்கூடாது. நெறிமுறை வரம்புகள் இல்லாமல் ஈடுபடுவது அடக்குமுறையை ஊக்குவிக்கக்கூடும். அதே நேரத்தில் ஈடுபாட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பது இராஜதந்திர இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் கண்ணியம் இரண்டையும் பாதுகாக்கும் வகையில் கொள்கைகளையும் நடைமுறைத்தன்மையையும் சமநிலைப்படுத்துவது இந்தியாவுக்கு கடினமான பணியாகும். நல்ல இலக்குகள் ஒருபோதும் தவறான முறைகளை நியாயப்படுத்த முடியாது என்று கற்பித்த மகாத்மா காந்தியின் பூமியாக, இந்தியா அதன் மதிப்புகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களாகிய நாம், நம் பெயரில் என்ன சொல்லப்படுகிறது, என்ன செய்யப்படுகிறது என்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எழுத்தாளர், முன்னாள் ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ளார்.