இவர்களின் தேவையை கருத்தில்கொண்டு, ஆட்சேர்ப்பு முறை, ஊக்கத்தொகைகளின் பங்கு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
சத்தீஸ்கரில் சுமார் 16,000 தேசிய சுகாதார திட்ட (National Health Mission (NHM)) ஊழியர்கள் சமீபத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். ஹரியானா மற்றும் கேரளாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists(ASHA)) தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொழிற்சங்கங்களை அமைத்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களுக்குள் உள்ள தீவிரமான பிரச்சினைகளைக் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (comprehensive primary healthcare (CPHC)) வழங்குவதற்கான உந்துதல் புதிய பணியாளர் சவால்களை உருவாக்கியுள்ளது, அவை திறம்பட தீர்க்கப்பட வேண்டும்.
இந்தச் சூழலில், விரிவான ஆரம்ப சுகாதார சேவையை (CPHC) வழங்குவதில் வழக்கமான சுகாதாரப் பணியாளர்களை ஆதரிக்கும் மூன்று பிரிவு பணியாளர்கள் தனித்து நிற்கிறார்கள். இதில், அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi workers (AWW)), அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) ஆவர். அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) 1975-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் (Integrated Child Development Services Scheme (ICDS)) ஒரு பகுதியாகும். மேலும், அவர்களின் பங்கு ஊட்டச்சத்து கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கூடுதல் மற்றும் தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை வழங்குவதை எளிதாக்குவது ஆகியவற்றுடன் தொடர்புடையது. சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அவர்கள் அதனுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள்.
சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) 2005-ஆம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டனர், மேலும் அவர்களது முதன்மைப் பொறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சாத்தியமான பயனாளிகளை சுகாதார வசதிகளுக்கு திரட்டுவதுமாகும். சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகளை விரிவுபடுத்துவதற்காக 2018-ல் சமூக சுகாதார அதிகாரிகளின் (CHO) புதிய பிரிவு தொடங்கப்பட்டது. அவர்கள் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது ஆயுஷ் பயிற்சியாளர்கள் ஆவார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அவர்களது ஊதியம் நிலையான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையின் கலவையாகும்.
அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களும் (Accredited Social Health Activists(ASHA)) அங்கன்வாடி பணியாளர்களும் (Anganwadi workers (AWW)) சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் (healthcare providers) அல்ல. இருவரும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் சுமார் 1,000 பேர் அல்லது 200 வீடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். இருவரும் "இணைப்பு" பணியாளர்கள் - அவர்கள் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை சமூகத்துடன் இணைத்து, கடைசி கட்ட இணைப்பை வழங்குகிறார்கள்.
சேவை வழங்குவதை உறுதி செய்யத் தவறிய வழக்கமான தொழிலாளர்களின் அனுபவம் குறைவாக இருந்ததால், தன்னார்வலர் அடிப்படையிலான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருவரும் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வரை பகுதிநேர வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு (AWW) நிலையான கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) செய்யப்படும் ஒவ்வொரு நிலை வேலைக்கும் ஊக்கத்தொகையாக ஊதியம் பெறுகிறார்கள். பிரசவம் அல்லது நோய்வாய்ப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை போன்ற எந்தவொரு அவசரநிலைகளுக்கும் அல்லது ஒரு நோயாளியை சுகாதார வசதிக்கு அழைத்துச் செல்வதற்கும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மாதத்திற்கு ரூ.5,000-10,000 சம்பாதிக்கிறார்கள். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) சுமார் ரூ.12,000 சம்பாதிக்கிறார்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் அங்கீகாரம்பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களின் (ASHA) பணி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுடன் (ASHA) நான் தொடர்பு கொண்டபோது, அவர்களை தங்கள் பணியில் பெருமை கொள்ளும் ஒரு உந்துதல் பெற்ற மக்கள் குழுவாக நான் பார்க்கிறேன். அவர்கள் இப்போது சுகாதார அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாக மாறிவிட்டனர். அவர்கள் இல்லாமல் திறம்பட செயல்பட முடியாது.
காலப்போக்கில், இந்த இரண்டுவகை பணியாளர்களுக்கும் அவர்களின் உண்மையான பணியின் ஒரு பகுதியாக இல்லாத கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொற்றில்லா நோய் (Non-Communicable Diseases (NCDs)) பரிசோதனை மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குதல் ஆகியவை அடங்கும். விருப்பமில்லாத வழக்கமான ஊழியர்களை கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பணியாளர்களுக்கு அத்தகைய பணிகளை ஒதுக்கி அவர்களை ஊக்குவிப்பதை இந்த அமைப்பு எளிதாக்குகிறது. இது அவர்களின் வேலை நேரத்தை உண்மையான நிலையில் நான்குபேரைவிட அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்கள் சில கூடுதல் ஊதியத்தைப் பெறுகிறார்கள்.
இருப்பினும், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) இருவருக்கும் பல குறைகள் உள்ளன. இவற்றில் அதிகரித்துவரும் பணிச்சுமை, போதுமான பாதுகாப்புநிலை இல்லாதது, மிக முக்கியமாக, பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் இல்லாதது ஆகியவை அடங்கும். இந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ASHA) தொழிற்சங்கங்களை உருவாக்க வழிவகுத்தது. பல மாநிலங்களில் வேலைநிறுத்தங்கள் இப்போது பொதுவானதாகிவிட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்கும் தொழிற்சங்கங்கள் உள்ளன, மேலும் அவர்கள் வழக்கமான பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். நீதிமன்றங்கள் பொதுவாக அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, விடுப்பு போன்ற அரசு ஊழியர்களின் சலுகைகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்தன. இருப்பினும், அரசாங்கம் அவர்கள் "தன்னார்வலர்கள்" என்றும், அரசு ஊழியர்களாகக் கருத முடியாது என்றும் கூறுகிறது. இருப்பினும், அது அவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்துள்ளது.
இந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது மிகப்பெரிய சம்பளப் பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொரு குழுவிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இது பதவி உயர்வுகள் தொடர்பான சிக்கல்களையும் உருவாக்கும். இந்த தன்னார்வ பணியாளர்கள் உருவாக்கப்பட்டபோது, பதவி உயர்வுகளுக்கான எந்த அமைப்பும் திட்டமிடப்படவில்லை. இப்போது நிரந்தரப்படுத்தல் மற்றும் பதவி உயர்வுகள் இந்த பணியாளர்கள் முதலில் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையையும் நியாயத்தையும் கேள்விக்குள்ளாக்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சமூக சுகாதார அதிகாரிகள் (CHO) இந்தப் பணியாளர்களைப் போலவே பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், அவற்றின் பதவி உயர்வு வழிகளும் நன்கு வரையறுக்கப்படவில்லை.
சுகாதாரப் பணியாளர்களுக்கு மற்றொரு சவால், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகும். துணை செவிலித் தாதி (Auxiliary Nurse Midwife (ANM)) பணியிடங்களில் சுமார் 10-15 சதவீதமும், மருத்துவர் பணியிடங்களில் 20-25 சதவீதமும் காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் இப்போது பெரும்பாலும் ஒப்பந்தப் பணிகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த ஊழியர்களை நோக்கிய இந்த மாற்றம் முக்கியமாக நிகழ்கிறது. ஏனெனில், இது குறைந்த சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இல்லாதது போன்ற நிதிச் செலவுகளைக் குறைக்கிறது. மேலும், ஆட்சேர்ப்பு தாமதங்கள் மற்றும் ஊழலைத் தவிர்ப்பதன் மூலம் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த உதாரணங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது சுகாதாரப் பணியாளர்களை எவ்வாறு அணுகுகின்றன என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. சமூக சுகாதார அதிகாரிகள் (Community Health Officers (CHO)) போன்ற பல மத்திய நிதியுதவித் திட்டங்கள், வழக்கமான ஊழியர்களை பணியமர்த்துவதற்கான மாநிலங்களின் மோசமான உந்துதலைத் தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் இந்த சவால்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் தீர்வுகளைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஆட்சேர்ப்பு முறைகள், ஊக்கத்தொகை கட்டமைப்புகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அமைப்பு போன்ற முக்கிய கவலைகளைக் கையாள வேண்டிய நேரம் இது. இதில், ஒப்பந்த மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஒரு பங்கு இருந்தாலும், அமைப்பு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது அவர்களை அதிகமாகச் சார்ந்துள்ளது. இதில் சிறந்த சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
எழுத்தாளர் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சமூக மருத்துவ மையத்தில் பேராசிரியராக உள்ளார்.