மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும்.
தற்போது 17 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் மற்ற நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 1.2 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பலவீனமான தொழிலாளர் சட்டங்கள் அல்லது பாதுகாப்பு அபாயங்கள் உள்ள நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்று ஒரு நாடாளுமன்ற அறிக்கை காட்டுகிறது.
இருப்பினும், இந்தியா இன்னும் பழைய குடியேற்றச் சட்டத்தின் மூலம் இந்தப் பெரிய இடம்பெயர்வை நிர்வகிக்கிறது. இது 42 ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்றைய உலகிற்கு இனி பொருந்தாது. அரசாங்கம் 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டில் அதைப் புதுப்பிக்க முயற்சித்தது. ஆனால், அப்பொழுது தோல்வியடைந்தது. இப்போது, அரசாங்கம் வெளிநாட்டு நகர்வு (சேவை மற்றும் நலன்) மசோதா (Overseas Mobility (Facilitation and Welfare) Bill) (2025) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், அரசாங்கம் நவம்பர் 7 வரை பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.
இது ஒரு முக்கியமான தருணம்: இந்த மசோதா இறுதியாக நமது உலகளாவிய தொழிலாளர்களுக்குத் தகுதியான பாதுகாப்புகளையும் பாதைகளையும் வழங்குமா?
இந்த மசோதா 1983-ஆம் ஆண்டு சட்டத்திற்கு ஒரு நவீன புதுப்பிப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், வலுவான நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உலகமயமாக்கலின் நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. வளர்ந்துவரும் உலகமயமாக்கல் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும், அனைத்து நிலைகளிலும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க வலுவான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதியளிக்கிறது.
இருப்பினும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஒரு நெருக்கமான பார்வை ஏமாற்றமளிக்கும் யதார்த்தத்தைக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, வலுவான உரிமைகளுக்குப் பதிலாக தெளிவற்ற வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் அவர்களை மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாற்றுவதாகத் தெரிகிறது.
சட்டப் பாதுகாப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்குப் பதிலாக அதிகாரிகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன்மூலம் இது புலம்பெயர்ந்தோரை ஏமாற்றுகிறது. இதன் விளைவாக, தொழிலாளர்கள் தொடர்ந்து அதே பழைய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வளைகுடா நாடுகளில் ஊதியம் பெறாத வேலைகள் அல்லது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணைய அடிமை முகாம்களுக்கு (cyber slave camps) கடத்தப்படுவது போன்ற பல ஆண்டுகளாக இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொண்ட அதே வகையான சுரண்டலுக்கு அவர்களை ஆளாக்குகிறது.
தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், இந்த மசோதா மக்கள் சுதந்திரமாக பணியாற்ற உதவாது; மாறாக, அது அதிக சிக்கல்களையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்.
இந்த மசோதா வேலைவாய்ப்புகள் பற்றிய மிகக் குறைந்த விவரங்களையே வழங்குகிறது. அங்கு அதிக தெளிவு தேவைப்படுகிறது. பிரிவு 2(v) வேலை வகைகளை பட்டியலிடுவதன் மூலம் "வேலை" என்பதை வரையறுக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஊதியம், கூடுதல் நேர ஊதியம் அல்லது ஓய்வு நாட்கள் போன்ற முக்கிய பாதுகாப்புகளைக் குறிப்பிடவில்லை.
பிரிவு 4(d) தொழிலாளர்களின் "பாதுகாப்பான திரும்புதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பை" உறுதி செய்வது பற்றி கூறுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த நிதி அல்லது பயிற்சித் திட்டங்களை வழங்கவில்லை. இது 182 நாட்களுக்குள் நாடு கடத்தப்படுபவர்களையும் பிரிவு 2(t) விலக்குகிறது. குறுகிய காலத்தில் நாடு திரும்புபவர்களை விட்டுவிடுகிறது.
புதிய சட்டம் பழைய 1983ஆம் ஆண்டு சட்டத்தின் குடியேற்ற அனுமதி அலுவலகங்களை (emigration clearance offices), "நடமாடும் வள மையங்கள்" (Mobility Resource Centers) என்று மாற்றுகிறது. இருப்பினும், இந்த மையங்களுக்கு உண்மையான அதிகாரம் குறைவாகவே உள்ளது. பல மொழிகளில் முறையான ஆலோசனையை உறுதி செய்வதற்கான தெளிவான விதிகள் இல்லை அல்லது பாஸ்போர்ட் பறிமுதல் அல்லது தொழிலாளர் துஷ்பிரயோகம் போன்ற அபாயங்கள் பற்றிய தகவல்களை எளிதாக நடைமுறைப்படுத்தக்கூடிய தரநிலைகளும் இல்லை. இதன் விளைவாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த பல குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் இன்னும் சரியான விழிப்புணர்வு அல்லது பாதுகாப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.
பிரிவு 11(vi) வெளிநாடுகளில் உள்ள "வழிமுறைகள்" பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், நிலையான காலக்கெடுவுடன் கூடிய தூதரக அடிப்படையிலான நடுவர் மன்றம் போன்ற தெளிவான படிகளைக் குறிப்பிடவில்லை.
பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறியீட்டு கவனத்தை மட்டுமே பெறுகின்றன. பிரிவு 12(2) "பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான" திட்டங்களை உருவாக்குவது பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் யார் என்பதை வரையறுக்கவில்லை. துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களுக்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை, குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. இது பெரும்பாலும் கடத்தலுக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் சிறார்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகிறது. இது பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாட்டிற்கும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW)) எதிரானது. இந்தியர்கள் ஏற்கனவே பாகுபாட்டை எதிர்கொள்ளும் அரபு வளைகுடா நாடுகளில், இத்தகைய தெளிவின்மை இன்னும் தீங்கு விளைவிக்கும்.
இந்த மசோதா அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தையும் வழங்குகிறது. எந்தவொரு நீதித்துறை மதிப்பாய்வு அல்லது புலம்பெயர்ந்தோரின் உள்ளீடு இல்லாமல் "தேசிய பாதுகாப்பு" அல்லது "பொது நலன்" போன்ற தெளிவற்ற காரணங்களுக்காக முழு நாடுகளுக்கும் பயணத்தைத் தடைசெய்ய பிரிவு 13 மையத்தை அனுமதிக்கிறது.
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்ட 1983-ஆம் ஆண்டு சட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த மசோதா வெளிப்படைத்தன்மை இல்லாமல் அவற்றை விரிவுபடுத்துகிறது. இது திடீரென வெளிநாட்டில் வேலை செய்வதைத் தடுக்கக்கூடும். மேலும், பிரிவு 19-ன் கீழ் இயக்க சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தை மீறக்கூடும்.
வெளிநாட்டு வேலைகளிலிருந்து வரும் வருமானத்தை நம்பி பல குடும்பங்கள் இருக்கும் உலகில், இதுபோன்ற நியாயமற்ற கொள்கைகள் பாதுகாப்பை வழங்குவதில்லை. மேலும், அவை கண்ணியத்திற்கு தடையாகின்றன.
வெளிநாட்டு வேலைக்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படும் ஆட்சேர்ப்பு, பெரும்பாலும் ஒரு கனவாகவே மாறிவிடும். பிரிவு 14, வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றிப் பேசுகிறது. ஆனால், முக்கியமான விவரங்களை பின்னர் "விதிகளின்" மூலம் முடிவு செய்ய விட்டுவிடுகிறது. ஆட்சேர்ப்பு கட்டணங்கள் அல்லது பிணைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மீதான தடைகள் குறித்த எந்த வரம்புகளையும் இது குறிப்பிடவில்லை. 1983-ஆம் ஆண்டு சட்டம் குறைந்தபட்சம் கட்டண வரம்புகளைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த புதிய மசோதா அவற்றை முழுமையாகப் புறக்கணிக்கிறது. தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தக் கோரும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளின் 181 பிரிவையும் இது கவனிக்கவில்லை.
இதன் காரணமாக, கடன் அடிமைத்தனம் தொடர்கிறது. குறிப்பாக அரபு வளைகுடாவில், பல இந்திய தொழிலாளர்கள் மாதக்கணக்கில் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இதை "நல்ல வேலை நிலைமைகள்" ("decent working conditions”) என்று அழைக்க முடியாது. மாறாக, வேலை தேடுபவர்களை சுரண்டும் இடைத்தரகர்களுக்கு இது பயனளிக்கிறது.
இதேபோல், பிரிவு 17 வெளிநாட்டு முதலாளிகளைப் பற்றி கூறுகிறது, ஆனால் கட்டுமானம் மற்றும் வீட்டு வேலைகளில் பாதுகாப்பற்ற அல்லது சுரண்டல் நிலைமைகளுக்கு ஆய்வுகள் அல்லது முதலாளிகளின் பொறுப்பை அவை வழங்கவில்லை. வளைகுடாவில் இந்தியர்கள் மிகவும் ஆபத்தில் உள்ள துறைகள் உள்ளன. 1983-ஆம் ஆண்டு சட்டம் சிறந்த பாதுகாப்புகளை எதிர்பார்த்த நிலையில் அது தற்போது நீண்ட வேலை நேரம் மற்றும் பாதுகாப்பற்ற பணியிடங்கள் போன்ற துஷ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின் (ILO) 155 பிரிவான பாதுகாப்பான பணிச்சூழலுக்கான கோரிக்கையை மீறுகிறது.
ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு (பிரிவு 18) சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் தரவைச் சேகரிக்கிறது. இது அவர்களின் சம்மதத்தைக் கேட்காது மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP)) சட்டம் சட்டத்தைப் பின்பற்றாது. இந்த பலவீனமான தனியுரிமைப் பாதுகாப்பு, மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்கிறது மற்றும் நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு களங்கத்தை உருவாக்குகிறது. அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, தரவு கண்காணிப்புக்கான ஒரு கருவியாக மாறுகிறது. பிரிவுகள் 20–22 இந்திய நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடுமையான அபராதம் விதிக்கின்றன. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எந்த அபராதங்களும் விதிப்பதில்லை. இதில் காப்பீடு தொடர்பான சலுகைகளும் இல்லை. இந்த அணுகுமுறை தடுப்பைவிட தண்டனையில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இது சர்வதேச தொழிலாளர் தரநிலைகளின் (ILO) நல்ல வேலைவாய்ப்பு முறைகளுக்கு எதிரானது.
1983 சட்டம் ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் பலவீனமான மேற்பார்வை மற்றும் ஊழலுக்கு எதிராக ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, கட்டாய தரநிலைகளை அமைத்தல், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்தல், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards (ILO)) விதிமுறைகளுடன் உரிமைகளை சீரமைத்தல் மற்றும் பிரத்யேக நிதிகளை உருவாக்குதல் போன்ற மேம்பாடுகளைக் கோர வேண்டும். நாம் சரியான ஆதரவுடன் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை என்றால், நாம் திறமையை ஏற்றுமதி செய்யவில்லை மாறாக விரக்தியை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் உலகளாவிய லட்சியங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்; நாட்டில் மக்களும் சிறப்பாக இருக்க வேண்டும்.
குட்டப்பன் ஒரு தொழிலாளர் இடம்பெயர்வு நிபுணர் மற்றும் எழுத்தாளர்.