இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கட்டமைப்பு இன்னும் இல்லை.
இந்தியா அதிக மக்கள்தொகை மற்றும் இளைஞர்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். இந்திய தொழில் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry (CII)) மதிப்பீடுகள், அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியா அதன் உழைக்கும் வயதுடையோர்களில் (15-64 வயது) சுமார் 133 மில்லியன் மக்களைச் சேர்க்கும் என்று தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை உலகளாவிய தொழிலாளர் தொகுப்பின் மொத்த அதிகரிப்பில் கிட்டத்தட்ட 18% ஆகும். இருப்பினும், இந்த மக்கள்தொகை நன்மைகளைப் பயன்படுத்த இந்தியாவுக்கு ஒரு குறுகியகாலம் மட்டுமே உள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடையோர்கள் 2043-ம் ஆண்டில் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எண்ணிக்கைக்கு நிகராக சமத்துவம் மற்றும் சேர்க்கைக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது அவசியம். பெரிய அளவில் தரமான வேலைகளை வழங்குவது மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுபடவும், பிராந்திய மற்றும் சமூக இடைவெளிகளைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியின் நியாயமான பகிர்வை உறுதி செய்யவும் உதவும். வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு வேலைகளை உருவாக்குவதும் இன்றியமையாதது. இந்தியா போன்ற நுகர்வு சார்ந்த பொருளாதாரத்தில், அதிக தரமான வேலைகள் என்பது உயர்ந்த மற்றும் நிலையான நுகர்வு என்பதைக் குறிக்கிறது. இது வேகமான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
நீண்டகால வேலை உருவாக்கத்தில் கவனம் செலுத்துங்கள்
எனவே, வேலைவாய்ப்பை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருத வேண்டும். இதை அடைய, பகுதியளவாக அல்லது குறுகியகால அணுகுமுறைகளைக் காட்டிலும், நிலையான முதலீடு மற்றும் நீண்டகால வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நிலையான வளர்ச்சிக் கொள்கைகள் தேவை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்முயற்சிகள் இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை முழுமையாகக் கையாளும், ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பு இந்தியாவில் இன்னும் இல்லை.
வேலை உருவாக்கத்திற்கு தொழிலாளர் சந்தையின் தேவை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டிலும் தலையீடு தேவைப்படுகிறது. இந்த இரண்டும், பொருளாதார மற்றும் துறைசார் வளர்ச்சியால் உந்தப்படுகிறது. அதே சமயம் விநியோக திறன்கள், தொழிலாளர் இயக்கம் மற்றும் சமூக விதிமுறைகளால் பாதிக்கப்படுகிறது. இந்த இடைவெளிகள் நிரப்பப்படாவிட்டால், கொள்கைகள் குறைந்த முடிவுகளையே தரும். ஒரு குறிப்பிட்ட சிக்கலானது, பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு ஆகும். மாணவர்களை வேலைக்குத் தயாராக்க கல்லூரி பாடத்திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். கூடுதலாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொழில்கள் மற்றும் புதிய வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, ஒருங்கிணைந்த தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை அவசரத் தேவையாக உள்ளது. இந்தக் கொள்கை, ஏற்கனவே உள்ள திட்டங்களை ஒருங்கிணைத்து பல்வேறு முயற்சிகளை சீரமைக்க வேண்டும். இது மாநிலங்கள், முக்கிய அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் சவால்களைப் புரிந்துகொள்ளும் மாவட்ட திட்டமிடல் குழுக்களின் தலைமையில் செயல்படுத்தப்படும், அதிகாரமளிக்கப்பட்ட செயலர்கள் குழுவால் நிர்வாகத்தை மேற்பார்வையிட முடியும்.
இந்தக் கொள்கையானது, வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு உட்பட்ட இலக்குகளை வரையறுக்க வேண்டும். அதிக வேலைவாய்ப்புள்ள துறைகளை அடையாளம் காண வேண்டும் மற்றும் வேலை உருவாக்கத்தை அதிகரிக்க வர்த்தகம், தொழில்துறை, கல்வி மற்றும் தொழிலாளர் கொள்கைகளை சீரமைக்க வேண்டும். இது தொழிலாளர் சந்தையின் தாக்கங்கள், பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் தடைகளை சமாளிக்க வேண்டும். அதே நேரத்தில், திறன் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தானியங்கியல் (robotics) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
மற்றொரு பெரிய சவால், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கைக்கும், கிடைக்கும் வேலைகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி ஆகும். அரசியல் ஒரு தடையாக மாறாமல், வேலைவாய்ப்புக்கான இயக்கத்தை ஆக்கப்பூர்வமாக ஊக்குவிக்கும் இடம்பெயர்வு கொள்கைகள் மற்றும் ஆதரவு அமைப்புகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இவை மக்கள் எளிதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வேலைக்குச் செல்ல உதவும். அரசியல் இந்த இயக்கத்தைத் தடுக்கக்கூடாது. வேலைவாய்ப்பு இயக்கத்திற்கான ஒருங்கிணைந்த "ஒரே இந்தியா" (One India) அமைப்பை உருவாக்குவது மிக முக்கியம்.
நான்கு தொழிலாளர் குறியீடுகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இந்தச் செயல்பாட்டின்போது, தெளிவான மாறுதல் வழிகாட்டுதல்கள் மற்றும் வணிகங்களுக்கான ஆலோசனை ஆதரவு அவசியம்.
முற்றிலும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள்
வேலை உருவாக்கும் முயற்சிகளில் ஜவுளி, சுற்றுலா, வேளாண் பதப்படுத்துதல், மனைவணிகம் (ரியல் எஸ்டேட்) மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற உழைப்பு மிகுந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறை ஏற்கனவே 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதற்கு வலுவான மற்றும் முழுமையான ஆதரவு தேவை. நிதி, நவீன தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த சந்தை இணைப்புகளை எளிதாக அணுகுவது இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகள் "வேலைகளுடன் வளர்ச்சியை" (growth with jobs) அடைய உதவும். நகர்ப்புற வேலை நெருக்கடியைத் தீர்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை முன்னோடியாக செயல்படுத்தலாம்.
வேகமாக வளர்ந்து வரும் கிக் பொருளாதாரத்தில் (gig economy) ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. இது தற்போது 80 லட்சம் முதல் 1.8 கோடி தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 9 கோடியாக உயரக்கூடும். கிக் பொருளாதாரம் இப்போது நிலை-2 மற்றும் நிலை-3 என்ற நகரங்களுக்கு பரவி வருகிறது. இது வேலை உருவாக்கம் மற்றும் முறையான வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய ஆற்றலைக் காட்டுகிறது. இந்தத் துறைக்கான ஒரு தேசிய கொள்கை இந்த வாய்ப்புகளைத் திறக்க உதவும்.
இந்தக் கொள்கை, திறன் மேம்பாடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு மூலம் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவேடு தடையற்ற தொழிலாளர்கள் சேருவதை எளிதாக்கவும், அவர்களின் பணி வரலாறுகளைப் பாதுகாக்கவும், மற்றும் நுழைவுக்கானத் தடைகளைக் குறைக்கவும் உதவும். நியாயமான ஒப்பந்தங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான அளவில் குறைகளை தீர்க்கும் அமைப்புகளும் நடைமுறையில் இருக்க வேண்டும்.
வேலையின் தரத்தை மேம்படுத்துவது, வேலையின் எண்ணிக்கையை அதிகரிப்பது போலவே இதுவும் முக்கியமானது. இதன் பொருள், சிறந்த ஊதியத்தை வழங்குதல், பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதி செய்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குதல் போன்றவை ஆகும். தொழில்துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள மலிவு விலையில் வீடுகள் தொழிலாளர்கள் எளிதாக இடம்பெயரவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும். வேலைவாய்ப்பு பிராந்தியங்கள் முழுவதும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மிகவும் வளர்ச்சியடையாத 100 மாவட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், பட்டதாரிகளுக்கான கிராமப்புற பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதன் மூலமும், சிறிய நகரங்களில் தொலைதூர வேலை மற்றும் BPO-க்களை ஊக்குவிப்பதன் மூலமும் இதைச் செய்யலாம்.
பெண் தொழிலாளர் பங்கேற்பை மேம்படுத்துவது மற்றொரு முன்னுரிமையாக இருக்க வேண்டும். இதற்கு வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Employment-Linked Incentive (ELI)) திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகள், அங்கன்வாடி மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்களின் பணிகளையும் முறைப்படுத்துதல், குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பில் முதலீடு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் சமூக விதிமுறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரச்சாரங்கள் தேவை.
வேலைவாய்ப்பு தரவு தேவை
இறுதியாக, உயர்தர, நிகழ்நேர வேலைவாய்ப்புத் தரவு முக்கியமானது. ஒரு பிரத்யேக பணிக்குழு, வழிமுறைகளை வலுப்படுத்தலாம், முறைசாரா மற்றும் கிராமப்புற பணியாளர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தலாம் மற்றும் தரவு சேகரிப்பு மற்றும் வெளியீடு ஆகியவற்றுக்கு இடையிலான தாமதத்தைக் குறைக்கலாம்.
ஒருங்கிணைந்த சீர்திருத்தங்கள், இலக்குக்கான முதலீடுகள் மற்றும் உள்ளடக்கிய தேசிய வேலைவாய்ப்பு உத்தியின் மூலம், இந்தியா தனது வேலைவாய்ப்பு நிலைமையின் அடிப்படையில் மாற்றியமைக்க முடியும். இந்த மாற்றம் இந்தியாவின் மக்கள்தொகை நன்மையைப் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. நியாயமான, நிலையான மற்றும் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் முக்கியமானது.
இந்த வேலைவாய்ப்பு சார்ந்த நடவடிக்கைகள், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) அதன் சமீபத்திய ”போட்டியானது இந்தியாவிற்கான கொள்கைகள் குறித்த அறிக்கையில்” வழங்கிய பெரிய சீர்திருத்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்பது, போட்டித்தன்மை வாய்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் மற்றும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) அடைவதற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
சஞ்சீவ் பஜாஜ் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) முன்னாள் தலைவர் ஆவார். சந்திரஜித் பானர்ஜி, இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.