டார்ஜிலிங் மழை நிலச்சரிவு செய்திகள் : சூறாவளி (cyclones) போன்ற சில இயற்கை நிகழ்வுகளுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவுகள் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அவை ஏன் ஆபத்தானவை மற்றும் பிரச்சினையைத் தீர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
டார்ஜிலிங் மழைப்பொழிவின் சமீபத்திய தகவல் : மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 4) இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
கடுமையான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு, மழை சேதத்தால் மோசமடைந்து, மீட்புப் பணிகளை கடினமாக்குவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
இந்த பேரிடரால் அண்டை மாநிலமான சிக்கிம் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கலிம்பொங்கில் உள்ள டீஸ்டா பஜாருக்கு (Teesta Bazaar) அருகிலுள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் பெய்த கனமழையின் பல தாக்கங்களில், நிலச்சரிவுகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. சூறாவளி போன்ற சில இயற்கை நிகழ்வுகளுக்கு எதிராக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (early warning system) இன்னும் முயற்சிக்கப்படுகிறது. மேலும் மக்கள்தொகை, மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் அழுத்தங்கள் பாதிப்பை அதிகரித்துள்ளன.
நிலச்சரிவுகள் என்றால் என்ன, இந்தியா ஏன் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது?
நிலச்சரிவு (landslide) என்றால் என்ன?
மண், பாறைகள் மற்றும் குப்பைகள் உட்பட நிலத்தில் ஒரு சாய்வில் சரியும் போது நிலச்சரிவு ஏற்படுகிறது. மேலும், புவியீர்ப்பு விசையானது ஒரு பொருளை ஒன்றாக வைத்திருக்கும் எந்த 'பசை'யையும் (glue) விட வலுவாக மாறும்போது நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. பசை என்பது பல்வேறு காரணிகளின் கலவையாக இருக்கலாம். அவற்றில் மரங்களின் வேர்கள் மண்ணை ஒன்றாகப் பிடித்துக் கொள்வது, சாய்வின் சாய்வு, மண்ணின் எடை மற்றும் நிறை, நீர் மண்ணின் வழியாகவும் சரிவிலும் செல்லக் கிடைக்கும் கால்வாய்கள் போன்றவை அடங்கும்.
கனமழை பெரும்பாலும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது மண்ணை கனமாக்குகிறது மற்றும் உராய்வைக் குறைக்கிறது. இது மண் மற்றும் பாறைகள் சரிவுகளில் சரிவதை எளிதாக்குகிறது.
இந்தியாவில், குறிப்பாக மலைப்பகுதிகளில், திட்டமிடப்படாத கட்டுமானம் பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளது. கட்டிடங்கள் மற்றும் சாலைகள் பெரும்பாலும் ஒரு சாய்வு எவ்வளவு எடையைத் தாங்கும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கட்டப்படுகின்றன. மோசமான வடிகால் அமைப்புகள் தண்ணீரை வெளியேற்ற பாதுகாப்பான வழி இல்லாமல் விட்டுவிடுகின்றன. சமவெளிகளில், அதிக மழையின் போதுகூட, தண்ணீர் பரவ அதிக இடம் உள்ளது.
இந்தியாவில் நிலச்சரிவு ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தாக இருக்கிறது?
ஏனெனில், போதுமான முன்-எச்சரிக்கை அமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, சூறாவளிகளைப் பொறுத்தவரை, பொதுவாக மக்களை வெளியேற்றுவதற்கும், மீட்புப் பணிகளைத் திரட்டுவதற்கும் முன்னரே எச்சரிக்கை வரும். கனமழைக்கு, கணிப்புகள் பொதுவாக குறைந்தது ஒரு நாள் முன்னதாகவே வரும்.
எடுத்துக்காட்டாக, இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) சனிக்கிழமை மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என்று முன்னறிவித்தது. பீகாரை நெருங்கி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இது ஏற்பட்டது. இருப்பினும், கனமழை எப்போது நிலச்சரிவை ஏற்படுத்தும் என்பதை இன்னும் சரியாகக் கணிப்பது கடினம்.
இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 0.42 மில்லியன் சதுர கிமீ அல்லது அதன் பரப்பளவில் சுமார் 13% நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது. இந்தப் பகுதி, 15 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India (GSI)) தெரிவித்துள்ளது. இது நாட்டின் அனைத்து மலைப்பாங்கான பகுதிகளையும் உள்ளடக்கியது. சுமார் 0.18 மில்லியன் சதுர கிமீ, அல்லது இந்த பாதிக்கப்படக்கூடிய பகுதியில் 42% வடகிழக்கு பகுதியில் உள்ளது. அங்கு நிலப்பரப்பு பெரும்பாலும் மலைப்பாங்கானது.
மனித செயல்பாடு தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்து, காலநிலை மிகவும் கணிக்க முடியாததாக மாறும்போது, மக்களை எச்சரிப்பதற்கும் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் நாம் வழிகளை உருவாக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) நிலச்சரிவுகளால் ஏற்படும் அபாயங்களை நிர்வகிப்பதற்கு இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஒரு தேசிய நிலச்சரிவு இடர் மேலாண்மை உத்தி 2019-ல் (National Landslide Risk Management Strategy) இறுதி செய்யப்பட்டது. இந்த உத்தியில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக்குதல், மிகவும் ஆபத்தில் உள்ள இடங்களை அடையாளம் காணுதல், முன்கூட்டியே எச்சரிக்கைக்கான அமைப்பை உருவாக்குதல் மற்றும் மலை மண்டலங்களுக்கான விதிமுறைகளை தயாரித்தல் ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த வேலைகளில் பெரும்பாலானவை இன்னும் முழுமையடையவில்லை.
கேரளா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்டில் சில இடங்களில் சோதனை அடிப்படையில் சில முன் எச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை அமைப்புகள் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) மழைப்பொழிவு முன்னறிவிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, நிலம் சரிய வாய்ப்புள்ளதா என்பதைக் கணிக்க மண் மற்றும் நிலப்பரப்பு தரவுகளுடன் இந்த முன்னறிவிப்புகள் இணைக்கப்படுகின்றன. இதுபோன்ற போதிலும், இந்த அமைப்புகள் இன்னும் பரவலாக செயல்படுத்தப்படவில்லை.