மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? -கிரிஜா போஸ்லே

 பல வருடங்களாக தேர்தல்கள் ஏன் நடத்தப்படவில்லை? இது நிர்வாகத்தை பாதித்துள்ளதா? நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள்?


தற்போதைய செய்தி:


உச்சநீதிமன்றம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களையும் ஜனவரி 31, 2026-க்குள் நடத்த உத்தரவிட்டது. மே 6-ஆம் தேதி செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று கூறிய முந்தைய உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.


தாமதத்திற்கான காரணங்கள் என்ன?


இந்த தேர்தல்களை நடத்துவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (Other Backward Classes (OBC)) இடஒதுக்கீடு பிரச்சினை நிலுவையில் உள்ளதால் மட்டுமல்லாமல், நீதித்துறை தாமதங்கள், நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் விருப்பமின்மை ஆகியவற்றாலும் ஏற்பட்டுள்ளது.


இன்று மகாராஷ்டிராவில், 29 நகராட்சி மாநகராட்சிகள் (Municipal Corporations), 248 நகர சபைகள் (Municipal Councils), நூற்றுக்கணக்கான நகர் பஞ்சாயத்துகள் (Nagar Panchayats), 34 மாவட்ட பஞ்சாயத்துகளில் (Zilla Parishads) 32 மற்றும் 351 பஞ்சாயத்து சமிதிகளில் (Panchayat Samitis) 336 ஆகியவை நிர்வாகிகளால் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சியான, ஆண்டுக்கு ரூ.74,000 கோடிக்கும் மேலான வரவு செலவுத் திட்டத்தைக் கொண்ட பிரகான்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation (BMC)), மார்ச் 2022 முதல் மாநகராட்சி உறுப்பினர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜல்னா (Jalna) மற்றும் இச்சல்கரஞ்சி (Ichalkaranji) நகராட்சி மாநகராட்சிகள், உருவான நாளிலிருந்தே தங்கள் மாநகராட்சி உறுப்பினர்களுக்காக காத்திருக்கின்றன.


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை என்ன?


2010-ஆம் ஆண்டில், எந்த சமூகங்கள் 'அரசியல் ரீதியாக பின்தங்கியவை' (‘politically backward) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் பயனடைய வேண்டும் என்பதை தீர்மானிக்க 'கடுமையான விசாரணையை' (rigorous investigation’) மேற்கொள்ளும் பொறுப்பை உச்சநீதிமன்றம் மாநிலங்களிடமே வழங்கியது. மார்ச் 2021-ல், உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீடுகளை வழங்க மூன்று மடங்கு சோதனையை வகுத்தது. மகாராஷ்டிரா இந்த விதியை முறையாகப் பின்பற்றாததால், மார்ச் 2022-ல் பந்தியா ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜூலை 2022-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை இப்போது உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநிலங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறினால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, 106 நகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை பொது பிரிவுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்தியது.


இந்த ஆண்டு மே 6-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு 2022-ஆம் ஆண்டு பந்தியா ஆணைய அறிக்கைக்கு முன்பு இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டுடன் தேர்தல்களை நடத்த உத்தரவிட்டது. உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகத்தை வலுவாக வைத்திருக்க உள்ளாட்சித் தேர்தல்கள் முக்கியம் என்பதை நீதிமன்றம் ஆணையத்திற்கு நினைவூட்டியது. தேர்தல்களை நடத்த நீதிமன்றம் வலியுறுத்துவது ஒரு நல்ல நடவடிக்கை என்றாலும், அது ஏற்படுத்திய தாமதத்தையும் புறக்கணிக்க முடியாது. 106 நகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) தேவையான இடங்களை ஒதுக்காமல் தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இது சீரற்ற முடிவுகளுக்கு வழிவகுத்தது. கூடுதலாக, தற்போதைய தேர்தல்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கைச் (pending litigation) சார்ந்துள்ளது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்யக்கூடும்.


மேற்கண்ட உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநில ஆணையம் தேர்தல்களை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாதது, பள்ளிக் கல்வி வாரிய தேர்வுகள் மற்றும் போதிய அதிகாரிகள் இல்லாதது ஆகியவற்றை காரணங்காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கான காரணங்களாக குறிப்பிட்டது. பல ஆண்டுகளாக மாநில அரசும் சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.


தாமதம் பணிகளை பாதிக்கிறதா?


உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாதது யாரையும் பாதிக்கவில்லை என்று சிலர் வாதிடலாம். ஏனெனில், அதிகாரிகள் எப்படியும் நிர்வாகப் பணிகளை செய்து விடுவார்கள். இருப்பினும், பலவீனமான உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக ரீதியான பாதிப்பின் காரணமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, பொறுப்பு உள்ளூர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது மாவட்ட அமைச்சர்கள் மீது விழுகிறது. அவர்களைச் சந்திப்பதும் கடினமாக உள்ளது.


மறுபுறம், அதிகாரிகளுக்கு முடிவுகளை எடுக்க பொறுப்பு வழங்கப்படவில்லை. மாறாக, அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு மட்டுமே அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் பிரச்சினைகளை கவனிப்பது நிர்வாகிகளுக்கு தேவையற்ற சுமையாகும். இது அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமையாகும். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை போல் பொறுப்பு ஏற்பதில்லை இது தெளிவாகத் தெரிகிறது.


அதிகாரிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளை நடத்துவது, ஒரு மாநிலத்தை அதன் ஆளுநர் மூலம் நடத்துவதில் இருந்து வேறுபட்டது அல்ல. இந்த நிலைமை இறுதியில் மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படுவதற்கும், முக்கியமான கொள்கை பிரச்சினைகள் தாமதமடைவதற்கும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைக் குறைப்பதற்கும், அதிகாரிகளுக்கு அதிக வேலைப்பளுவுக்கும், ஜனநாயகம் பலவீனமடைவதற்கும் வழிவகுக்கிறது.


சமீபத்தில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தலையீடு காரணமாக அனைத்து 29 மாநகராட்சிகளும் இந்திய ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகளால் வழிநடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை தானே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை கையாள்வது கடினம் என்பதை குறிக்கிறது. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லாதது மட்டுமல்ல, அரசியலமைப்பின் விதிகளும் வாக்குறுதிகளும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதும் ஒரு பிரச்சனையாகும். 


73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்களுக்குப் பிறகு, உள்ளூர் மட்டத்தில், குறிப்பாக கிராமங்களில் வலுவான சுயாட்சி அமைப்பு  (self-governance system) இருப்பது சட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒரு தன்னிச்சையான தேர்தல் ஆணையமும், அதிகாரத்தை சுமுகமாக மாற்றுவதும் அரசியலமைப்பு தாராளமய ஜனநாயகத்தின் (liberal democracy) அடையாளங்களாகும். நியூயார்க் மேயர் தேர்தல் உலகளாவிய கவனத்தைப் பெற்றாலும், மும்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு இல்லாதது ஏன் குறிப்பிடத்தக்க அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என்பதை நாம் ஆராய வேண்டும்.


கிரிஜா போசலே இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி பட்டதாரி மற்றும் உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தராகப் பணியாற்றினார்.



Original article:

Share: