இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு, இந்தியா 2025 தங்க முதலீடு : மோர்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருக்கின்றன. இது தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதமாகும்.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு :
சச்சின் டெண்டுல்கர் இப்போது இந்தியாவின் பெரிய பொருளாதார நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறார். அதாவது, டாடாவுக்குச் சொந்தமான நகை பிராண்டான தனிஷ்க்கின் விளம்பரத்தில் அவர் தோன்றுவதுடன் அதில், இந்தியர்கள் தங்கள் பழைய தங்கத்தை ஏன் புதிய நகைகளுக்கு மாற்ற வேண்டும் என்பதை விளக்குகிறார். இது இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்க உதவும் என்று அவர் கூறுகிறார்.
"இந்தியா கிட்டத்தட்ட எல்லா தங்கத்தையும் இறக்குமதி செய்கிறது. ஆனால் உங்கள் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றினால், தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. இது நம் நாட்டை வலிமையாக்கும்,” என்று டெண்டுல்கர் கூறினார். அவரது செய்தியானது, கிரிக்கெட்டைப் பின்பற்றுபவர்கள், தங்கம் வாங்குபவர்கள் மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி சமூகத்தில் உள்ளவர்கள் என மூன்று வேறுபட்ட பார்வையாளர்களை ஒன்றிணைக்கிறது.
தனிஷ்க் மற்றும் சச்சின் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அதிக தங்க இறக்குமதிகள் இந்தியாவின் வணிகப் பற்றாக்குறையை அதிகரிக்கின்றன. இதன் பொருள், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட, இந்தியா வெளிநாட்டு நாணயங்களில் அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பெரிய பற்றாக்குறை இந்திய ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்த அழுத்தம் கொடுக்கிறது. ரூபாய் மதிப்பு பலவீனமடையும் போது, வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியர்களுக்கு அதிக விலை கொண்டதாக மாறும். இந்தியாவின் வர்த்தக சூழ்நிலையில் தங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியர்கள் தங்கத்தை விரும்புகிறார்கள்.
தங்கத்திற்கான தேவையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் (World Gold Council (WGC)) கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் சீன நுகர்வோர் 857 டன்) தங்கத்தை வாங்கிய நிலையில், இந்தியர்கள் 803 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில், இரு நாடுகளும் தங்கத்திற்கான உலகளாவிய நுகர்வோர் தேவையில் பாதிக்கும் சற்று அதிகமாகவே உள்ளன.
ஆனால் இது தங்கத்திற்கான வருடாந்திர தேவை மட்டுமே. மோர்கன் ஸ்டான்லி பொருளாதார வல்லுநர்களான உபஸ்னா சச்ரா மற்றும் பானி கம்பீர் ஆகியோரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் இந்திய குடும்பங்கள் 34,600 டன் தங்கத்தை வைத்திருந்தன. மேலும், விலைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த தங்கம் தோராயமாக $3.8 டிரில்லியன் மதிப்புடையது அல்லது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 89 சதவீதத்தை உள்ளடக்கியது.
கடந்த வாரம் ஒரு குறிப்பில் சச்ராவும் கம்பீரும் குறிப்பிட்டது என்னவென்றால், தங்கம் கையிருப்பில் இருப்பது வீடுகளுக்கு நேர்மறையான செல்வ விளைவை அளிக்கிறது. பணவியல் கொள்கை தளர்வு காரணமாக குறைந்த வட்டி செலுத்துதலும் இந்த நன்மைக்கு துணைபுரிகிறது. கூடுதலாக, நேரடி மற்றும் மறைமுக வரி குறைப்புக்கள் மூலம் செலவழிப்புக்கான வருமானம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சேமிப்புப் பிரிவு
தொடர்ந்து தங்கத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து குறித்து ஒரு உலகளாவிய நிபுணர் கடைசியாக ஒரு பத்தாண்டிற்கு முன்பு இந்தியர்களை எச்சரித்தார். இது ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராக இருந்தபோது நடந்தது. அந்த நேரத்தில், வேகமாக உயர்ந்துவரும் விலைகளால் தங்கள் சேமிப்பு குறைக்கப்படுவதைத் தடுக்க வீடுகள் தீவிரமாக தங்கத்தை வாங்கின. உண்மையில், உலக தங்க கவுன்சில் (WGC) தரவுகள், இந்தியர்களின் தங்கத்திற்கான நுகர்வு தேவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது ஓரளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதன் காரணமாகும். இது 2012-13-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்த சராசரி சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் 2.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
தங்கத்திற்கான தேவை குறைவதற்கு பணவீக்கம் வீழ்ச்சியடைவது மட்டுமே காரணம் அல்ல. இந்தியர்களும் இப்போது பல்வேறு வகையான சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள்.
சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில் வீடுகளின் பரஸ்பர நிதி மற்றும் பங்கு முதலீடுகள் அவர்களின் மொத்த நிதி சேமிப்பில் 15.2% ஆக இரட்டிப்பாகின. பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட பெரிய மாற்றத்தால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. 2024-ஆம் ஆண்டில் தனிநபர்கள் இந்தியப் பங்குகளில் நிகர அடிப்படையில் ரூ.1.66 லட்சம் கோடி முதலீடு செய்ததாக NSE தரவு காட்டுகிறது. இது முந்தைய 10 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1.53 லட்சம் கோடியைவிட அதிகம்.
ஆனால் நிதி சார்ந்த சொத்துக்களை வாங்குவதற்கு அல்ல, நேரடி சொத்துக்களை (physical assets) வாங்கப் பயன்படுத்தப்படும் பணத்தைப் பற்றி என்ன?
புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, குடும்ப சேமிப்பு உருவில் உள்ள நேரடி சொத்துக்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் குறைந்து, 2011-12ல் 45.9 சதவீதமாக இருந்தது 2020-21ல் 36.9 சதவீதமாக குறைந்தது. இருப்பினும், பின்னர் அது 2022-23ல் 43.8 சதவீதமாக உயர்ந்தது — இது பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி மக்கள் வீடுகள் மற்றும் வாகனங்கள் வாங்கியதால் என்று கருதப்படுகிறது — பின்னர் 2023-24ல் மீண்டும் 41.5 சதவீதமாக சற்று குறைந்தது. 2024-25-க்கான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் சேமிப்பதற்கான போக்கு ஒத்திருக்கிறது. இது 2011-12 ஆம் ஆண்டில் மொத்த சேமிப்பில் 1.1%-லிருந்து 2020-21-ஆம் ஆண்டில் 0.7% ஆக உயர்ந்தது. பின்னர் அது 2022-23-ல் 0.8% ஆக சற்று உயர்ந்து 2023-24-ல் 0.7% ஆகத் திரும்பியது.
டெண்டுல்கரின் பொருளாதார சிறப்பு வகுப்பு
இந்தியர்கள் முன்பைவிட குறைவாக தங்கம் வாங்குகிறார்கள் என்றால், தனிஷ்க் ஏன் டெண்டுல்கரை வேலைக்கு அமர்த்தியது? தங்க இறக்குமதியைக் குறைப்பது ஏன் இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க அவர் பணியமர்த்தப்பட்டார். ஏனெனில், அதிகரித்து வரும் தங்க விலைகள் ஏற்கனவே தங்கத்தை வைத்திருப்பவர்களை மிகவும் பணக்காரர்களாக ஆக்குகின்றன.
அமெரிக்காவின் வரிப் போரால் ஏற்பட்ட நிச்சயமற்றத் தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் அதன் சாத்தியமான தாக்கம், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் கொள்முதல்கள் போன்ற பல காரணிகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக தங்கத்தின் விலை உயர வழிவகுத்தன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. இப்போது, அது ரூ.1.3 லட்சத்தை நோக்கி நகர்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டைவிட விலை 50%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு இந்தியர்கள் தங்கம் வாங்கும் திறனைப் பாதித்துள்ளதுடன், நகைக்கடைக்காரர்களைப் பாதிக்கிறது. குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் பழைய தங்கத்தை புதிய நகைகளுக்கு மாற்றுவது ஒரு கவர்ச்சிகரமான வணிக யோசனையாக மாறியுள்ளது.
இந்தியாவின் வர்த்தகத் தரவுகளில் அதிக விலைகளின் விளைவு தெரியும். புதன்கிழமை வெளியிடப்பட்ட தரவு, செப்டம்பரில் தங்க இறக்குமதி $9.62 பில்லியனாக உயர்ந்ததாகக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, அதே மாதத்தில், இறக்குமதி $4.65 பில்லியனாக இருந்தது. இந்த ஏற்றம் இருந்தபோதிலும், 2025-26-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இறக்குமதிகள் இன்னும் 9% குறைந்துள்ளன.
பரிவர்த்தனை-வர்த்தக நிதி (exchange-traded fund (ETF)) விருப்பம்
ஒரு முதலீடாக, இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தேவை இன்னும் நீடிக்கிறது.
"தங்க இறக்குமதி அதிகரிப்பின் ஒரு பகுதி, தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால் முதலீட்டு தேவை அதிகரிப்பதாலும் ஏற்படலாம். வெள்ளி இறக்குமதியிலும் ஒரு உயர்வு காணப்படுகிறது (செப்டம்பரில் $1.3 பில்லியன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $452 மில்லியன்), இது ஒரு முதலீட்டு விருப்பமாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது," என்று IDFC FIRST வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுரா சென் குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
தங்கம் மற்றும் வெள்ளி பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடுகள் இந்தப் பொருட்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் உண்மையில் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் தங்க பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETF) முதலீடு கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்து ரூ.8,363 கோடியாக இருந்தது. இந்த தங்கம் மற்றும் வெள்ளி நிதிகளில் முதலீடு செய்வதற்கான விருப்பம் அதிக அளவுக்கு இருந்ததால், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து அதிக பணம் எடுப்பதை நிறுத்திவிட்டன.
"நேரடி வெள்ளியின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உள்நாட்டு விலைகள் இப்போது சர்வதேச அளவுகோல்களைவிட 5–12 சதவீத கூடுதல் விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, உள்ளூர் சந்தையில் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் தற்போது உலகளாவிய நியாய விலையைவிட கணிசமாக அதிகமாக செலுத்துகின்றனர்," என்று Groww மியூச்சுவல் ஃபண்டின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் குப்தா இந்த வாரம் LinkedIn-ல் குறிப்பிட்டிருந்தார்.
"புதிய பரிவர்த்தனை-வர்த்தக நிதி (ETF) அலகுகளை உருவாக்கும்போது, நிதி நிறுவனங்கள் வெள்ளியை வாங்க வேண்டும். இந்த கட்டத்தில் புதிய மொத்த முதலீடுகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்வது என்பது தற்காலிகமாக உயர்த்தப்பட்ட விலைகளில் புதிய முதலீடுகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இது பிரீமியம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் சரிசெய்யப்படலாம்," என்று குப்தா மேலும் கூறினார்.