‘காலநிலை இலக்குகளை அடையத் தவறுவது பன்முக செயல்முறைகளை பொருத்தமற்றதாக மாற்றாது’: COP ஏன் முக்கியமானது? -வைபவ் சதுர்வேதி

 COP30 மாநாட்டிற்கு முன்பு, இந்த மாநாடு ஏன் இன்னும் முக்கியமானது என்பதை ஒரு காலநிலை நிபுணர் விளக்குகிறார். இதில் அமெரிக்கா விலகியிருந்தாலும், 1.5°C இலக்கு மீறப்படும் நிலையில், UNFCCC அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை காலநிலை ஆர்வலர்கள் கோருகின்றனர்.


COP30 மாநாடு  நவம்பர் 10 முதல் 21 வரை பிரேசிலின் பெலெமில் நடைபெறும். இந்த வருடாந்திர காலநிலை உச்சிமாநாடு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள் முன்னெப்போதையும் விடக் கடுமையாக இருக்கும் நேரத்தில், 1.5°C இலக்கு எட்ட முடியாததாகத் தெரிகிறது. மேலும், இது அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருக்கும் நேரத்தில் வருகிறது.


காலநிலை மாற்றம் குறித்த நாடுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change (IPCC))  ஏழாவது மதிப்பீட்டு அறிக்கையின் ஆசிரியரும் காலநிலை ஆராய்ச்சியாளருமான அலிந்த் சௌஹானிடம், COP மாநாடுகள் ஏன் முக்கியம், உலகம் ஏன் 1.5°C இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.


COP30 மாநாட்டை நடத்தும் பிரேசில், இதை "நடவடிக்கை மற்றும் செயலாக்கம் சார்ந்த COP" (“COP of action and implementation”) என்று அழைத்துள்ளது. அதாவது உண்மையான தீர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உச்சிமாநாடு இது என்று அறிவித்துள்ளது. உமிழ்வு இலக்குகள் போன்ற பெரிய அறிவிப்புகளில் கவனம் செலுத்திய முந்தைய COP மாநடுகளைப் போலல்லாமல், இது நடைமுறை மற்றும் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.



இதற்கு ஒரு உதாரணம் புதிய கூட்டு அளவீட்டு இலக்கு (New Collective Quantified Goal (NCQG)) ஆகும். COP29-ல், வளர்ந்த நாடுகள் 2035-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு $100 பில்லியனில் இருந்து ஆண்டுக்கு $300 பில்லியனாக காலநிலை நிதியை அதிகரிப்பதாக உறுதியளித்தன. இருப்பினும், வளரும் நாடுகள் இந்தத் தொகை இன்னும் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றன. இருப்பினும், பிரேசில் தலைமை இந்த விவாதத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.


அதற்குப் பதிலாக, வளரும் நாடுகளுக்கு இடையே $300 பில்லியனை எவ்வாறு நியாயமாக விநியோகிப்பது, தணிப்பு மற்றும் ஏற்புத்தன்மைக்கு (mitigation and adaptation) எவ்வளவு செலவிடப்பட வேண்டும், இந்த நிதியிலிருந்து சிறந்த முடிவுகளை எவ்வாறு பெறுவது போன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துதல், புதிய இலக்குகள் அல்லது வாக்குறுதிகளை மட்டும் நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், உண்மையான நடவடிக்கை மற்றும் செயல்படுத்தலை அடைவதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.


2035ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் காலநிலை நிதியில் $1.3 டிரில்லியன் திரட்டுவதற்கான ஒரு திட்ட வரைவை உருவாக்கவும் தலைமை  திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் "பாகு முதல் பெலெம் வரை 1.3 டன் திட்ட வரைவு" (“Baku to Belém Roadmap to 1.3T”) என்று அழைக்கப்படுகிறது. இது COP30  மாநாட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.


COP30, அமேசான் மழைக்காடுகளின் நுழைவாயிலான பெலெமில் நடைபெறும். அமேசான் காடுகளை பாதுகாப்பதிலும், இந்த இலக்கை அடைய எந்த வகையான அமைப்பு அல்லது திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது.


வளரும் நாடுகள் கார்பன் எல்லை சரிசெய்தல் பொறிமுறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBAM என்பது இரும்பு, எஃகு, சிமென்ட், அலுமினியம் மற்றும் உரங்கள் போன்ற இறக்குமதிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பசுமை இல்ல வாயு (GHG) அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாகும். ஜூன் மாதம் ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற ஆண்டின் நடுப்பகுதியில் நடந்த காலநிலை கூட்டத்தின் போது நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து இந்த விவாதங்கள் மீண்டும் தொடங்கும்.


வளரும் நாடுகள் CBAM என்பது உண்மையில் ஒரு மறைக்கப்பட்ட வரி, இது ஐரோப்பிய ஓன்றியம் உடனான தங்கள் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று வாதிடுகின்றன. அவர்களில் சிலர் வரலாற்று ரீதியாக பெரும்பாலான காலநிலை சேதத்தை ஏற்படுத்திய நாடுகள் மீது எதிர் வரியை உருவாக்க பரிந்துரைத்துள்ளனர்.


வரவிருக்கும் COP30 மாறிவிட்ட உலகளாவிய அரசியல் சூழ்நிலையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகி, இந்தியா போன்ற நாடுகள் மீதும், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீதும் கூட வரிகளை விதித்துள்ளது. இது நாடுகளிடையே நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளது மற்றும் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியுள்ளது, இது காலநிலை பேச்சுவார்த்தைகளை மிகவும் கடினமாக்குகிறது.


COP போன்ற சர்வதேசக் கூட்டங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், இதுபோன்ற சூழ்நிலைகளில், COP தலைமைத்துவத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது. உச்சிமாநாட்டின் முக்கிய கருப்பொருள் மற்றும் சரியான செயல்முறைறையை வடிவமைக்க தலைமைத்துவம் உதவுகிறது. இறுதி முடிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும். COP அமைப்பு தனது தலைமைத்துவத்தைக் செயல்படுத்தும்போதும், ​​நாடுகளை ஒன்றிணைக்கும்போதும் ​​மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும்போதும் இது நிகழ்கிறது. இது காலநிலை விவாதங்களை வேறு இடங்களில் நடக்கும் பெரிய அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. அதிர்ஷ்டவசமாக, பிரேசில் தலைமைத்துவம் இதுவரை இதைச் சிறப்பாகச் செய்து வருகிறது.


இதேபோல், புவி வெப்பமடைதல் அல்லது காலநிலை நிதி இலக்குகளை அடையத் தவறியது இந்த சர்வதேச கூட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. எந்தவொரு பேச்சுவார்த்தையாளரும் இந்த செயல்முறையை கைவிட மாட்டார்கள். காலநிலை ஆர்வலர்கள் தவறவிட்ட இலக்குகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எதிர்வினையாற்றலாம். ஆனால், பேச்சுவார்த்தையாளர்கள் அமைதியாக இருக்கவும் அத்தகைய சவால்களைக் கையாளவும் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டு, காலநிலை நிதியை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். எடுத்துக்காட்டாக, காலநிலை நிதியை அதிகரிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீர்திருத்தத்திற்கான தெளிவான தேவை உள்ளது. ஏனெனில், பெரிய முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. இரண்டு நாடுகள்கூட உடன்படவில்லை என்றாலும், எந்த முடிவும் எடுக்க முடியாது. UNFCCC ஒருமித்த முறையைப் பின்பற்றுகிறது. அதாவது ஒவ்வொரு நாடும் ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒரு முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வழியில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு முடிவைத் தடுக்க அல்லது வீட்டோ உரிமையை பயன்படுத்தும் அதிகாரம் உள்ளது.


இருப்பினும், COP என்பது பெரிய முடிவுகளை எடுப்பது மட்டுமல்ல. இந்தக் கூட்டங்களின்போது நடைபெறும் விவாதங்களும், நாடுகளும் தனியார் நிறுவனங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் வடிவமைக்கின்றன.


எனவே, COP-ல் ஒரு பெரிய முடிவை எட்டுவது மட்டுமே முக்கியமான முடிவு அல்ல. உதாரணமாக, எரிவாயு மற்றும் எண்ணெய் வெளியேற்றத்திற்கான குறிப்பிட்ட இலக்குகளை COP இன்னும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இந்தப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே பல வளைகுடா நாடுகளை தங்கள் பொருளாதாரங்களை பன்முகப்படுத்த ஊக்குவித்துள்ளன. விரைவில் அல்லது பின்னர், அத்தகைய உமிழ்வு இலக்குகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.


COP-ன் உண்மையான சக்தி அங்குதான் உள்ளது. அங்கு நடைபெறும் விவாதங்கள், உலக நடவடிக்கை எடுக்கும் திசையை நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் காட்டுகின்றன. இந்த விவாதங்கள் தீவிரமாகி வருவதை அவர்கள் கண்டவுடன், அவர்கள் தங்கள் எதிர்கால நலன்களைப் பாதுகாக்க தங்கள் நடவடிக்கைகளை சரிசெய்யத் தொடங்குகிறார்கள்.


1.5°C இலக்கு, நாடுகள் புவி வெப்பமடைதலை தீவிரமாகக் கருதுவதையும், அதிக வெப்பநிலை வரம்பை இலக்காகக் கொள்ளாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இந்த இலக்கைக் கைவிடுவது, காலநிலை மாற்றம் குறித்து உலகம் எப்படி நினைக்கிறது என்பதை மாற்றும். மேலும், இது உலகளாவிய அளவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


அதனால்தான், புவி வெப்பமடைதல் 1.5°C-ஐத் தாண்டினாலும், காலநிலை மாற்றத்திற்கான நாடுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) இலக்கை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக தற்காலிக இலக்கைவிட அதிகமாகச் செல்வதை (overshoot) அனுமதிக்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இதன் பொருள், உலக சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் — எடுத்துக்காட்டாக, 1.7 டிகிரி செல்சியஸ் ஆக ஒரு காலக்கட்டத்திற்கு உயர்ந்து, பின்னர் இலக்கிற்கு கீழே சென்றுவிடுகிறது என்று அர்த்தம். இது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் (GHG emissions) விரைவாக குறைக்கப்பட்டால் நிகழலாம்.


வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் (CEEW) மூத்த உறுப்பினராக உள்ளார்.



Original article:

Share: