இந்தியாவின் கார்பன் சந்தைக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் -கே.எஸ். ஆதித்யா, அதீத் ஏ.ஜி. கரியப்பா

 இந்தியா கார்பன் சந்தையை கட்டமைக்கும் வேளையில், உலகளாவிய தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைகள், விவசாயிகளையும் சமூகங்களையும் பாதுகாப்பது ஏன் முன்னுரிமையாக வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.


தொழில்துறை புரட்சியில் தொடர்ச்சியான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியானது, ஏற்கனவே பூமியின் எல்லைகளை பாதுகாப்பான சுற்றுச்சூழல் வரம்புகளுக்கு அப்பால் தள்ளியுள்ளது. சுற்றுச்சூழல் சேதத்தை நிவர்த்தி செய்ய "வளர்ச்சியைக் குறைத்தல்" (degrowth) என்று சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், வறுமை மற்றும் பசியை இன்னும் எதிர்கொள்ளும் வளரும் நாடுகளுக்கு இந்த யோசனை நியாயமானதாகவோ அல்லது நடைமுறைக்குரியதாகவோ இல்லை. பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் தீங்கிலிருந்து பிரிப்பதே ஒரு நியாயமான அணுகுமுறையாகும். இது, கடந்த காலத்தின் அதிக மாசுபாடு, அதிக உமிழ்வு மாதிரியை மீண்டும் ஏற்படுத்தாமல், வறுமையைக் குறைப்பதற்கும் தங்கள் பொருளாதாரங்களை விரிவுபடுத்துவதற்கும் நாடுகள் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

தூய்மையான தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை உறுதிபடுத்துவதன் மூலம் இதை மேற்கோள்ளலாம். உதாரணமாக, இந்தியாவில், சூரிய எரிசக்தி மற்றும் நுண் நீர்ப்பாசனத்தின் விரைவான விரிவாக்கம், வளர்ச்சியின் நிலைத்தன்மையும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை விளக்குகிறது.


கார்பன் வரவு 


கார்பன் வரவு என்பது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது, கார்பன்-டை-ஆக்சைடு (CO2) சமமானவற்றில் அடிப்படையில் அளவிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் சான்றளிக்கப்பட்ட குறைப்பு அல்லது நீக்கத்தைக் குறிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகள் அல்லது மீள்காடு வளர்ப்பு, வேளாண் காடுகள் மற்றும் உயிரிகரிமம் போன்ற கார்பன் பிரித்தெடுத்தல் முயற்சிகள் மூலம் உருவாக்கப்படலாம். நிறுவனங்கள் தூய்மையான தொழில்நுட்பங்களை நோக்கி நகரும்போது தங்கள் சொந்த உமிழ்வை ஈடுசெய்ய கார்பன் வரவுகளை எதிர்நோக்குகின்றனர். குறைந்த கார்பன் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் வளரும் நாடுகளுக்கு சலுகை அளிக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது.


கார்பன் வரவுகள் பெருகி வருகின்றன. முதன்மையாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இயற்கை சார்ந்த திட்டங்களான REDD+ மற்றும் காடு வளர்ப்பு போன்றவற்றிலிருந்து ஆண்டுதோறும் 175 மில்லியன் முதல் 180 மில்லியன் வரை நிலை பெறுகின்றன. கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் (Carbon Credit Trading Scheme (CCTS)) மூலம் இந்தியா தனது சொந்த கார்பன் சந்தையையும் உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டம் எரிசக்தி-தீவிரத் துறைகளுக்கான உமிழ்வு-தீவிரத்தின் அளவுகோல்களை அமைக்கும் மற்றும் தன்னார்வ அளவில் ஈடுசெய்வதை உள்ளடக்கும். ஒரு தேசிய பதிவேடு மற்றும் வர்த்தக தளம் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும், உயிரி எரிபொருள், குறைக்கப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் குறைந்த உமிழ்வு நெல் சாகுபடிக்கான வரைவு முறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.


உலகளவில், வேளாண் திட்டங்கள் நிறைய திறன் உள்ளவை ஆனால் பின்தங்கியுள்ளன. வெர்ராவின் கீழ் உள்ள 64 இந்திய திட்டங்களில், நான்கு மட்டுமே பதிவாகியுள்ளன, எதுவும் கிரெடிட் வழங்கவில்லை. CIMMYT ஆராய்ச்சி, சிறு விவசாயிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சாதி குழுக்களுக்கு பயிற்சி, ஈடுபாடு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு பலவீனமாக இருப்பதை காரணமாக கூறுகிறது.


கார்பன் சந்தைகளும் சுரண்டலின் அபாயமும்


கார்பன் திட்டங்கள், காலநிலை நடவடிக்கைகளின் முன்னணியில் உள்ள சமூகங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டவை. ஆனால், பாதுகாப்பு இல்லாமல், அவை காலனித்துவ பெருந்தோட்டங்களின் தர்க்கத்தை எதிரொலிக்கும் வகையில், சுரண்டும் அதிகார கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கும் அபாயம் உள்ளது. கார்பன் விலைகள் உயர்வது இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. வடக்கு கென்யா புல்வெளி கார்பன் திட்டம் ஒரு எச்சரிக்கை கதையாக உள்ளது. 2012 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 1.9 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியது மற்றும் 30 ஆண்டுகளில் 50 மில்லியன் டன் CO2-ஐ அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது. சமூகம் தலைமையிலானதாக வடிவமைக்கப்பட்டாலும், இந்த திட்டம் உள்ளூர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் உள்ளூர் நில உரிமைகளை பலவீனப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது, இது கார்பன் திட்டங்களை உண்மையில் யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் பயனடைகிறார்கள் என்ற முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த திட்டம் சுழற்சி மேய்ச்சல் மற்றும் புல்வெளி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தியது, ஆனால் விரைவில் விரிசல்கள் தோன்றின.


2023-ம் ஆண்டில், மண் கார்பன் (soil carbon) அளவீட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் பழங்குடி சமூகங்களின் இலவச, முன் மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (free, prior, and informed consent (FPIC)) இல்லாததை பரிந்துரைக் குழுக்கள் எடுத்துக்காட்டியதை அடுத்து, வெர்ரா கடன் வழங்கலை நிறுத்தி வைத்தது. பதிவு செய்யப்படாத சமூக நிலத்தில், பொதுமக்களின் ஆலோசனை இல்லாமல், பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, ஆயுதங்கள் தாங்கிய காவலாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். 2025-ம் ஆண்டில், கென்ய நீதிமன்றம், முக்கியப் பாதுகாப்பு மையங்கள் பொதுமக்களின் பங்கேற்பைத் தவிர்த்துவிட்டன என்பதை உறுதிப்படுத்தியது. இது வெர்ரா திட்டத்தை மீண்டும் இடைநிறுத்த வழிவகுத்தது. கென்யா முழுவதும் பொதுவான சமூகப் பாதுகாப்பு மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் மூலம் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் நோக்கம் கொண்ட உள்ளூர் நிர்வாக அமைப்புகளாகும். கொள்கையளவில், அவை பரவலாக்கப்பட்ட, சமூகத்தால் இயக்கப்படும் வள மேலாண்மையை உள்ளடக்குகின்றன. இருப்பினும், இந்த திட்டம் மேலிருந்து கீழாக மேய்ச்சல் கட்டுப்பாடுகளை விதித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன் நிர்வாகம் தெளிவற்றதாக இருந்தது என்பதையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. இந்த சிக்கல்கள், காலனித்துவ கால வளக் கட்டுப்பாட்டை ஒத்திருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். இத்தகைய நடைமுறைகள் கால்நடை வளர்ப்பு நில உரிமைகளை மீறுவதாகவும், சமூகத்தால் வழிநடத்தப்படும், காலனித்துவ நீக்கப்பட்ட கார்பன் திட்டங்களுக்கான அவசரத் தேவையைக் காட்டுவதாகவும் உள்ளன.


இதேபோல், கென்யாவில் உள்ள துர்கானா காற்றாலைத் திட்டம் 1,50,000 ஏக்கர் சமூக நிலப்பகுதியை வேலி அமைத்து, மேய்ச்சல் பாதைகள் மற்றும் தண்ணீரிலிருந்து மேய்ப்பர்களைத் துண்டித்தது. இது பாதிக்கப்படக்கூடிய மக்களின் இழப்பில் நிலைத்தன்மை அடையப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியது.


இந்தியாவும் இதே போன்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடும். காடு வளர்ப்பு, மீள் காடு வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் கார்பன் திட்டங்கள் பெரும்பாலும் வழக்கமான நிலப் பயன்பாடு உள்ள பகுதிகளுக்கு நீட்டிக்கப்படுகின்றன. கிராமப் பொது நிலங்கள் அல்லது வன விளிம்புகளில் உள்ள தோட்டங்கள் சமூக ஒப்புதல் இல்லாமல் மேய்ச்சல், விறகு மற்றும் வன விளைபொருட்களுக்கான அணுகலைத் தடுக்கலாம். விவசாயத் திட்டங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சாதி விவசாயிகளைத் தவிர்த்து, சில நன்மைகளை வழங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளன. கென்ய நீதிமன்றத் தீர்ப்பு ஒரு சரியான நேரத்தில் எச்சரிக்கையாக நில உரிமைகள், ஒப்புதல் மற்றும் நியாயமான நன்மை பகிர்வு பாதுகாக்கப்படாவிட்டால், இந்தியாவின் கார்பன் சந்தை காலநிலை நடவடிக்கை என்ற போர்வையில் பிரித்தெடுக்கும் மாதிரிகளை மீண்டும் உருவாக்கும் அபாயம் உள்ளது.


கார்பன் திட்டங்கள் ஏன் பாதிக்கப்படக்கூடியவை?


சக்திவாய்ந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி, உள்ளூர் சமூகங்கள் ஒதுக்கப்படும்போது கார்பன் திட்டங்கள் "நவீன தோட்டங்களாக" (modern plantations) மாறக்கூடும். இந்தியாவில், விவசாயிகள் மற்றும் பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் தகவல் மற்றும் சக்தி சமச்சீரற்ற தன்மையை எதிர்கொள்கின்றன. அவை, தெளிவற்ற ஒப்பந்தங்கள் மற்றும் நியாயமற்ற நன்மைப் பகிர்வை செயல்படுத்துகின்றன. திட்ட செயல்படுத்துபவர்கள் நன்மைகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், உள்ளூர் நிலைமைகள் அல்லது சமூக ஒப்புதலில் சிறிதும் அக்கறை இல்லாமல், பல திட்டங்கள் மேலிருந்து கீழ் அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. 


இந்தியாவின் கார்பன் வரவு வர்த்தகத் திட்டம், நோக்கமாக இருந்தாலும், முக்கியமாக நடைமுறைகள் மற்றும் இணக்கத்தில் கவனம் செலுத்துகிறது. நில உரிமைகள், இலவச, முன் மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (FPIC) மற்றும் சமமான வருவாய் விநியோகம் ஆகியவற்றில் மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறது. சந்தை வளரும்போது பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் விலக்கு மற்றும் சுரண்டலை எதிர்கொள்ள நேரிடும்.


அதிகப்படியான கட்டுப்பாடும் தீர்வாகாது. சிக்கலான சட்ட அமைப்புகள் நேர்மையான நிபுணர்களைக்கூட ஊக்கப்படுத்தக்கூடும். தேவையற்ற அதிகாரத்துவத்தை உருவாக்காமல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், நன்மைகளைப் பகிர்வதை முறைப்படுத்தும் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு சமநிலையான மற்றும் எளிமையான ஒழுங்குமுறை கட்டமைப்பு இந்தியாவுக்குத் தேவை. இந்த இலக்கை அடைவதற்கு பங்குதாரர் ஆலோசனை, தகவமைப்பு ஒழுங்குமுறை மற்றும் அபாயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா தனது கார்பன் சந்தையில் நம்பிக்கையையும் ஒருமைப்பாட்டையும் உருவாக்க முடியும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் நீதி அல்லது சமத்துவத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதையும் இது உறுதி செய்யும்.



கே.எஸ். ஆதித்யா, புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) ஒரு விஞ்ஞானி ஆவார். அதீத் ஏ.ஜி. கரியப்பா, சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தில் (CIMMYT) சுற்றுச்சூழல் மற்றும் வள பொருளாதார நிபுணர் ஆவார்.



Original article:

Share: