இந்திய ஹாக்கியின் 100 ஆண்டுகள். -குஷ்பூ குமாரி

 இந்தியா ஹாக்கியின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், அதன் வரலாற்றையும் இந்தியாவின் ஒலிம்பிக் செயல்திறனையும் சுருக்கமாகக் காணலாம்.


நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இது நாட்டின் முதல் விளையாட்டு நிர்வாக அமைப்பாகும். இந்த நாளானது, இந்தியாவில் ஹாக்கி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதைக் குறிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், 550 மாவட்டங்களில் 1400-க்கும் மேற்பட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. ஒலிம்பிக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, "நவீன கால ஹாக்கி விளையாட்டின் முதல் வடிவம் ஆங்கிலேயர்களால் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. இது அப்போது பிரபலமான பள்ளி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1850-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய இராணுவத்தில் இடம்பிடித்தது."


2.  1876-ஆம் ஆண்டில், முதல் அதிகாரப்பூர்வ விதிகளின் தொகுப்பை வழங்கிய முதல் ஹாக்கி சங்கம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கம் ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது என்றாலும் பின்னர் ஒன்பது நிறுவன உறுப்பினர் அடங்கிய சங்கங்களால்  மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.



3. இந்தியர்கள், சுதந்திர நாடு உருவாகும் முன்பே ஹாக்கி விளையாட ஆரம்பித்து வெற்றியும் பெற்று வந்துள்ளனர். 1885-ஆம் ஆண்டு முதல் சங்கம் உருவாக்கப்பட்டதன் மூலம் கல்கத்தா முன்னிலை வகித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பம்பாய் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் வந்தன. அங்கு 'கிடோ குந்தி ' (‘Khido Khundi’)  (பருத்தி பந்து மற்றும் முறுக்கப்பட்ட குச்சி) வடிவத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டது.  


4. நவம்பர் 7-ஆம் தேதி 1925-ஆம் ஆண்டு தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஹாக்கி ஒரு முறையான கட்டமைப்பைப் பெற்றது. 2009-ஆம் ஆண்டில், அது 'ஹாக்கி இந்தியா' என்று மாற்றப்பட்டது.  நாடு முழுவதும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு ஹாக்கி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடும் அதிகாரப்பூர்வ நிர்வாகக் குழுவாக உள்ளது. இந்த அமைப்பானது, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation (FIH)), இந்திய ஒலிம்பிக் சங்கம் (Indian Olympic Association (IOA)) மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (Asian Hockey Federation (AHF)) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.



5. சுதந்திரத்திற்கு முன்பும் அதற்குப் பிறகும் சில ஆண்டுகள், சர்வதேச மற்றும் ஒலிம்பிக் அரங்கில் இந்தியா தொடர்ந்து சிறந்து விளங்கிய ஒரே விளையாட்டு ஹாக்கி மட்டுமே. உண்மையில், 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) தொடங்கி, இந்தியா அந்த விளையாட்டுப் போட்டிகளில் எட்டு ஹாக்கி தங்கப் பதக்கங்களில் ஏழு பதக்கங்களைக் கைப்பற்றியது. 1952-ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் (Helsinki) ஒலிம்பிக்கில் கே.டி. ஜாதவ் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். பிறகு, இந்தியா ஹாக்கி அல்லாத வேறு விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல 1996-ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பதக்கம் வெல்லும் வரை  காத்திருக்க வேண்டியிருந்தது.


ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி


6. ஒலிம்பிக்கில் ஹாக்கி தொடர்ந்து விளையாடப்படவில்லை. இது 1908 மற்றும் 1920-ஆம் ஆண்டுகளில் மட்டுமே விளையாடப்பட்டது. மற்ற ஆண்டுகளில் இந்த விளையாட்டு கைவிடப்பட்டது. 1924-ஆம் ஆண்டில், பால் லியூட்டி உலக நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பை  (International Hockey Federation (FIH))  நிறுவினார். இதன் மூலம், 1928-ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்ஸ் முதல் ஹாக்கி நிரந்தரமாக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.


— இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1927-ஆம் ஆண்டு விண்ணப்பித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உறுப்பினராகச் சேர்ந்தது, இதனால் இந்திய ஹாக்கி அணி 1928-ஆம் ஆண்டில் தனது முதல் ஒலிம்பிக் போட்டி பங்கேற்பை உறுதி செய்தது.


7. 1928-ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி தனது முதல் முயற்சியிலேயே ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. இதுவரை, இந்திய அணி 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 13 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 


தியான் சந்த் - ஹாக்கியின் மாயாஜாலக்காரர்.


8. தியான் சந்த் ஹாக்கியின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார், அவர் ஹாக்கியின் சூத்திரதாரி அல்லது மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார். இந்தியா தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் ஹாக்கி தங்கப் பதக்கங்களை (ஆம்ஸ்டர்டாம் 1928, லாஸ் ஏஞ்சல்ஸ் 1932, மற்றும் பெர்லின் 1936) வென்றதற்கு அவரே முக்கியக் காரணமாக இருந்தார். அவரது நுட்பமான திறமைகள், சிக்கலான பந்துச் சறுக்கு (dribbling) மற்றும்  கோல் அடிக்கும் திறன் ஆகியவற்றால் அவர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது.


9. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டுகளில், உள்ளூர் மக்களை ஆளும் ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்த காலத்தில் தியான் சந்த் விளையாடினார். ஐரோப்பியர்கள் கண்டுபிடித்த விளையாட்டில் ஒரு இந்தியர் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்த்தது அவர்களிடம் மிகுந்த பெருமையைத் தூண்டியது.


கே.டி. சிங் 'பாபு', ரூப் சிங், பல்பீர் சிங் போன்ற சிறந்த சமகால வீரர்களும் இருந்தனர். ஆனால், தியான் சந்தின் பெயர் எப்போதும் முதலில் கூறப்பட்டது.


10. தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது அர்ஜுனா விருதுகள் மற்றும் பிற மரியாதைகளுடன் சேர்த்து தியான் சந்த் பெயரிடப்பட்ட விருதுகளும் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது.


ஹாக்கியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள்


1. ஒலிம்பிக் வெற்றி மேடையை இலக்காகக் கொண்ட திட்டம் (Target Olympic Podium Scheme (TOPS)): ஒலிம்பிக் வெற்றி மேடையை இலக்காகக் கொண்ட திட்டம் என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும். இது இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளுக்கான நிதி, சர்வதேச அனுபவம், பயிற்சி மற்றும் போட்டி சார்ந்த அனைத்து  ஆதரவையும்  வழங்கி வருகிறது.


2. அஸ்மிதா ஹாக்கி லீக்: பெண்களிடையே ஹாக்கி விளையாட்டைப்  பரப்புவதற்காக விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் இளம் வயதினர் (ஜூனியர்) மற்றும் மிக இளம் வயதினர் (சப்-ஜூனியர்) மட்டங்களில் அஸ்மிதா ஹாக்கி லீக்கை ஏற்பாடு செய்கிறது.


3. கேலோ இந்தியா திட்டம் (Khelo India Scheme): இந்தத் திட்டம் ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு விரிவான ஆதரவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வீரர்களுக்கு உதவித்தொகை, சிறப்புப் பயிற்சி மற்றும் பயிற்சியாளர் வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் வழங்கப்படுகின்றன. திருத்தப்பட்ட இந்தத் திட்டம் விளையாட்டு உள்கட்டமைப்பு, கேலோ இந்தியா மையங்கள் மற்றும் விளையாட்டுக் கூடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், மற்றும் விளையாட்டு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பகிர்வுத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.


4. இந்திய விளையாட்டு ஆணையம் | விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள்: இந்தத் திட்டங்களில் தேசிய சிறப்பு மையங்கள் (National Centres of Excellence (NCOEs)) நிறுவுதல், பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டுத் திறன் போட்டிகளை நடத்துதல் ஆகியவை அடங்கும். அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகள், பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட தனிப்பட்ட உணவு மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள், தகுதிவாய்ந்த துணை ஊழியர்கள் மற்றும் உயர் செயல்திறன் இயக்குநர்களின் மேற்பார்வையின்கீழ் ஹாக்கி வீரர்கள் உட்பட நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதை இந்த ஆணையத்தின் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. 


மொத்தத்தில், தியான் சந்த் 12 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி 33 கோல்களை அடித்தார்.



Original article:

Share: