தன்னார்வமாக தனிமையில் வாழும் பழங்குடி மக்கள், தொந்தரவு இல்லாமல் வாழவும், தங்கள் மூதாதையர் நிலங்களை நிர்வகிக்கவும், தொடர்பைத் தவிர்க்கவும், சுதந்திரமான, முன்கூட்டிய, மற்றும் தகவலறிந்த சம்மதத்தைப் (Free, Prior, and Informed Consent (FPIC)) பயன்படுத்தவும் உரிமை உண்டு.
ஜனவரி மாதம் 1778-ஆம் ஆண்டு, கவுவாய் (Kaua‘i), ஹவாய் தீவுகள். மாலுமி கேப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல்கள் அடிவானத்தில் தோன்றியபோது, ஹவாய் தீவுவாசிகள் வியப்பிலும் பயத்திலும் உறைந்தனர். அவர்கள் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைக் கண்டனர். உள்ளூர் பூசாரி ஒருவர் அந்தக் கப்பல்களை 'கடவுள்களின் மிதக்கும் கோவில்கள்'—அதாவது ஹெயாஸ்—என்று அறிவித்தார். கப்பலில் இருந்த அந்நியர்கள் அதேபோல் வேற்று உலகத்தவர்களாகத் தெரிந்தனர். ஹவாய் மக்கள் அவர்களின் முக்கோண வடிவ தொப்பிகளை சிதைந்த மண்டை ஓடுகளாகவும், சீருடைகளைத் தொய்வான சருமமாகவும், சட்டைப் பைகளைத் தங்கள் உடலுக்குள் திறக்கும் சிறு கதவுகளாகவும், அவற்றில் புதையல்கள் இருப்பதாகவும் புரிந்து கொண்டனர். "வெளியுலகத் தொடர்பு இல்லாத" பழங்குடி மக்கள் ஐரோப்பியர்களுடனான தங்கள் முதல் தொடர்பை எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதற்கான சில பதிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
குக் “கண்டுபிடித்தார்” என்று கூறப்படும் ஹவாய் தீவுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அந்தமான் தீவுகள் ஏற்கனவே புராணக்கதைகளுக்கும் பயத்திற்கும் உரியவையாக மாறியிருந்தன. இரண்டாம் நூற்றாண்டு கி.பி.யிலேயே, பயணிகள் அதன் குடியிருப்பாளர்கள் பற்றி பயங்கரமான கதைகளை உருவாக்கினர் — மார்கோ போலோ அவர்களை “பெரிய மாஸ்டிஃப் இன நாய்கள்” என்று அழைத்தார், பிரியர் ஒடோரிக் “நாய் முகம் கொண்ட மனித உண்ணிகள்” என்றார், மற்றும் சர் ஜான் மாண, “ஒரு கண் கொண்ட ராட்சதர்கள்” என்றார். பிரிட்டிஷ் ஆய்வாளர் ஜான் ரிச்சி இறுதியாக 1771இல் தீவுக்கூட்டத்தை வரைபடமாக்கியபோது, புராணம் “நாகரிகம்” என்று அழைக்கப்படும் புதிய வன்முறைக்கு வழிவகுத்தது.
நீண்ட கால இனப்படுகொலை
ஐரோப்பியர்களுக்கும் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் "தொடர்பு இல்லாத" பழங்குடி சமூகங்களுக்கும் இடையிலான சந்திப்புகள் காலனித்துவம், நோய், மதமாற்றம் மற்றும் நிர்மூலமாக்கல் போன்ற பேரழிவைக் கட்டவிழ்த்துவிட்டன. ஐரோப்பாவின் "ஆராய்ச்சி யுகம்" என்று அழைக்கப்பட்ட காலத்தில், கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் அமெரிகோ வெஸ்பூசி ஆகியோரின் பயணங்கள் இதேபோன்ற பேரழிவைத் தூண்டின. இது "கண்டுபிடிப்பு" என்ற போர்வையில் வெற்றி பெற்றது. மேலும் வலிமைமிக்க ஆஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்கள் உட்பட கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டனர்.
ஆனாலும், இந்த இனப்படுகொலை வரலாற்றின் ஒரு மூடிய அத்தியாயம் அல்ல. அது நம் காலத்தில் அமைதியாக நீடிக்கிறது. சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) "தொடர்பு கொள்ளப்படாத பழங்குடியினர் : உயிர் வாழ்வின் விளிம்பில்" (Uncontacted Indigenous Peoples: At the Edge of Survival) என்ற தலைப்பிடப்பட்டு வெளியான அறிக்கையில், குறைந்தபட்சம் "வெளியுலகத் தொடர்பில்லாத" 196 பழங்குடி குழுக்கள் இன்னும் இருப்பதாகவும் ஆனால், அவற்றில் பாதி குழுக்கள் உலகம் அவர்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்வதற்கு முன்பே, இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மறைந்து போகக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளது.
"சுதந்திரமான," "கண்ணுக்குத் தெரியாத," அல்லது "மறைக்கப்பட்ட" சமூகங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த "தொடர்பு இல்லாத" மக்கள், நவீன அரசுகள் தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்த தங்கள் மூதாதையர் நிலங்களில் தாங்களாகவே விரும்பித் தனிமையில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 95 சதவீதம் பேர் அமேசானில் வாழ்கின்றனர். 124 குழுக்கள் பிரேசிலிலும், 64 குழுக்கள் கொலம்பியா, பெரு, வெனிசுலா, பராகுவே, பொலிவியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் பரவியும் உள்ளனர். நான்கு குழுக்கள் இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்கா தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் மேற்கு பப்புவாவில் தலா இரண்டு குழுக்களும் பிழைத்து வாழ்கின்றன என்று கூறப்படுகிறது.
அவர்கள் தங்கள் காடுகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தைப் பற்றி அறியாதவர்கள் அல்ல. ஆனாலும், அவர்கள் அதை வெறுமனே நிராகரித்துள்ளனர். நோய், அடிமைத்தனம் மற்றும் மரணத்தை மட்டுமே கொண்டு வந்த சந்திப்புகளின் நினைவிலிருந்து அவர்களின் இந்த மறுப்பு மனப்பான்மை பிறந்தது. வெளிப்புற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், ஒரு புதிய தொடர்பும்கூட முழு மக்களையும் அழித்துவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே வெளியுலகத்தொடர்பைத் தவிர்த்து வருகின்றனர். பிரேசிலிய அமேசானில், புதிதாகத் தொடர்பு கொண்ட பழங்குடியினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் நோயால் இறக்கின்றனர். "என் குழந்தைகள் இறந்தனர், என் அம்மா இறந்தார். என் கணவர் இறந்தார். என் சகோதரர்கள், என் சகோதரிகள், என் அத்தைகள் மற்றும் மாமாக்கள்," என்று தொடர் உயிர் இழப்புகளை ஒரு மாடிஸ் இனப்பெண் நினைவு கூர்ந்தார். நீண்ட வீட்டிற்குள் அழுகிய சடலங்களிலிருந்து எலும்புகள் வெளியே ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை அடக்கம் செய்ய முடியாத அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தோம் என்றும் தான் இரண்டு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டேன் என்றும் என் குடும்பத்தினர் அனைவரும் இறந்தனர் என்றும் அந்தப் பெண் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியாதாகக் கூறுகின்றனர்.
வன்முறையின் புதிய எல்லைகள்
தாமாக முன்வந்து பொதுச் சமூகத்தில் இருந்து விலகி தனிமையில் வாழும் அனைத்துப் பழங்குடி மக்களும் இப்போது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் அல்லது குற்றவியல் அமைப்புகளிடமிருந்து தங்கள் நிலங்கள் மற்றும் வளங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். "முன்னேற்றம்", "தேசிய நலன்" அல்லது "வளர்ச்சி" என்ற பதாகைகளின் கீழ், காடுகள் அழிக்கப்படுகின்றன, ஆறுகள் நஞ்சாக்கப்படுகின்றன, மக்கள் கட்டாயாமாக இடம்பெயர்க்கப்படுகிறார்கள், உலகின் பாரம்பரியங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில், கிரேட் நிக்கோபாரில் 92,000 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டம், ஷோம்பென் (Shompen) மக்களை அச்சுறுத்துகிறது.
சமயப் பிரச்சார நடவடிக்கைகள் இந்த வன்முறையை அதிகரிக்கிறது. “இன்று தொடர்பு கொள்ளப்படாத மக்களில் ஆறில் ஒரு பகுதியினர், கிறிஸ்தவத்திற்கு, சில இடங்களில் இஸ்லாமிற்கு மாற்றவும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் மத போதாகர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
"ஜான் ஆலன் சாவ் 2018-ஆம் ஆண்டில் வடக்கு சென்டினல் (Sentinel) தீவில் அத்துமீறி நுழைந்ததற்கு உத்வேகம் அளித்த ஜோசுவா திட்டம் (Joshua Project) மற்றும் அனைத்து நாடுகள் சர்வதேச அமைப்பு போன்ற அமைப்புகள், இரட்சிப்பு (salvation) குறித்த ஆழமான இனவெறி மற்றும் காலனித்துவ தர்க்கங்களின் அடிப்படையில் செயல்படுகின்றன. அவை பழங்குடி உலகங்களை தங்கள் சொந்த பிம்பத்தில் மாற்றியமைக்க முயல்கின்றன. ஆல் நேஷன்ஸ் அமைப்பின் தலைவரான மேரி ஹோ “ஒரு நாள், ஒவ்வொரு நாவும், ஒவ்வொரு கோத்திரமும், ஒவ்வொரு தேசமும் கடவுளை அவரது சிம்மாசனத்தைச் சுற்றி வணங்கும்.” என்று கூறினார்.
மதப் பிரச்சாரங்களைத் தாண்டி, டிஜிட்டல் யுகத்தின் சாகச விரும்பிகள் ஒரு புதிய வகையினர், பழங்குடி சமூகங்களின் பரபரப்பான சித்தரிப்புகளால் தூண்டப்பட்டு, புகழுக்காகத் தொடர்பைத் தேடுகிறார்கள். அமெரிக்க எழுத்தாளர்களான ஆடம் குட்ஹார்ட், ரேச்சல் குஷ்னர் மற்றும் சுஜித் சரஃப் ஆகியோரின் தி லாஸ்ட் ஐலேண்ட் ஆஃப் தி சாவேஜஸ் (2000) (The Last Island of the Savages - 2000), தி பாம் அட் தி எண்ட் ஆஃப் தி மைண்ட் (2024) (The Palm at the End of the Mind - 2024), மற்றும் ஐலேண்ட்-2024 (Island - 2024) போன்ற இலக்கியப் படைப்புகள் சென்டினிலீஸ் மீதான இந்த ஈர்ப்பை சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளன. இதுபோன்ற விவரிப்புகள், அறிவுசார் வன்முறை செயல்கள் (acts of epistemic violence). கடந்த மார்ச் மாதம் சென்டினல் மக்களுடன் சட்டவிரோதமாகத் தொடர்பு கொள்ள முயன்ற நான்காவது அமெரிக்க குடிமகனான உக்ரைனிய அமெரிக்க யூடியூபர் மைக்கைலோ போலியாகோவ் போன்றவர்களின் பொறுப்பற்ற முயற்சிகளை ஊக்குவிப்பதாக அமைகின்றன..
அறியப்படாமல் இருப்பதற்கான உரிமை
பழங்குடி இனத்தொடர்பு என்பது இதுவரை சந்திப்பு, சுரண்டல் மற்றும் இறுதியில் அழித்தல் என்கிற வரலாற்றையே சொல்கிறது. 2009-ஆம் ஆண்டு பிரேசிலில் முதன்முதலில் தொடர்பு கொள்ளப்பட்ட அவா (Awá) இனமக்களில் ஒருவரான வாமாக்சுவா அவா கூறியாதவது, “நான் காட்டில் வாழ்ந்தபோது, எனக்கு நல்ல வாழ்க்கை இருந்தது... இப்போது காட்டில் தொடர்பு கொள்ளப்படாத அவாக்களில் ஒருவரைச் சந்தித்தால், ‘வெளியேறாதே! காட்டிலேயே இரு. வெளியுலகில் உனக்கு எதுவும் இல்லை.’ என்று தன் இனமக்களிடம் கூறுவேன் என்று தன் மனவேதனையை வெளிப்படுத்தினார்.
தன்னார்வமாக தனிமையில் வாழும் பழங்குடி மக்கள், தொந்தரவு இல்லாமல் வாழவும், தங்கள் மூதாதையர் நிலங்களை நிர்வகிக்கவும், தொடர்பை மறுக்கவும், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பயன்படுத்தவும் உரிமை உண்டு. இந்த பாதுகாப்பு உரிமைகள் சர்வதேச குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (1966), சர்வதேச பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை (1966), சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு எண். 169 (1989), மற்றும் பழங்குடிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனம் (2007) ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், இந்த உறுதிமொழிகள் நடவடிக்கை இல்லாமல் வெற்றுத்தனமானதாக இருக்கின்றன. சென்டினிலீஸ் (Sentinelese) மீதான இந்தியாவின் "கண்காணி, கை வைக்காதே" (“eyes-on, hands-off”) கொள்கை, அவர்களின் தொடர்பை நிராகரிப்பதற்கான உரிமையை மதித்து, அவர்களின் உலகின் மீதான இறையாண்மையைப் பாதுகாக்கும் கொள்கை ஒரு அரிய கட்டுப்பாட்டுச் செயலாக உள்ளது. ஆனால், ஷோம்பன் மக்கள் மீது திணிக்கப்பட்ட கிரேட் நிக்கோபாரில் ஒரு மெகா திட்டத்திற்கான ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி, இந்த மிக முக்கியமான கொள்கைமீறலுக்கு வழிவகுக்கிறது. இது அவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இப்போது அவர்களைப் பற்றிக்கொள்ளத் துடிக்கும் பேராசையால் இதுவரையில் வெளியுலகத் தொடர்பில்லாத, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பழங்குடிகளின் வாழ்வுலகையும் அச்சுறுத்துகிறது.
அரசாங்கங்கள் சொல்லாட்சியைக் கடந்து செயல்படவில்லை என்றால், சட்டங்கள் வெறும் காகித மையாகவே இருந்தால், இந்த உலகம் அதன் கடைசி சுதந்திரமான மக்கள் - அதாவது தனியாக விடப்பட வேண்டும் என்று மட்டுமே கேட்டவர்கள் விரைவில் அழிவதைக் காணும் என்கின்றனர். அவர்களின் மறைவு கலாச்சாரங்களை மட்டும் அழிக்காது. அது மற்றொரு வாழ்க்கை முறையின் கடைசி உயிருள்ள நினைவை அழித்துவிடும். கண்காணிப்பு, முதலாளித்துவம், பேராசை மற்றும் கண்மூடித்தனமான நுகர்வு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட உலகம் அது அல்ல. மாறாக, சுயாட்சி, சமநிலை, தன்னிறைவு மற்றும் ஆழமான சொந்தம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டது அவர்களின் உலகம். அது போன்ற ஒரு இனங்களை இழப்பது என்பது ஒரு காலத்தில் சுதந்திரம் என்றால் என்ன என்பதை மறந்துவிடும் அளவிற்கான துயர நிலைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
சைனி, IIT டெல்லியின் ஊரக மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தொலைதூர பழங்குடி சமூகங்களுடன் பணிபுரிகிறார். நான்சி தற்போது IIT டெல்லியின் மக்கள் ஆய்வகத்தில் (People's Lab) ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.