சுதேசிப் பொருட்கள் மீதான வளர்ந்துவரும் விருப்பம் தற்சார்பு இந்தியா (Atmanirbhar Bharat) இலக்குகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது? — ரித்விகா பட்கிரி

 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகரித்துவரும் விருப்பமும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஆத்மநிர்பர் பாரத் மற்றும் சுதேசி தொலைநோக்கு பார்வைகளில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன? தொழில் புரட்சியின் வரலாறு, இந்தியாவின் உற்பத்தித் துறையின் எதிர்காலப் போக்கையும், சுதேசிப் பொருட்களின் நீடித்த மதிப்பையும் புரிந்துகொள்ள ஏன் இன்றியமையாதது?


அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீது அதிக வரி மற்றும் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போட்டி காரணமாக அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'சுதேசி' பார்வை ஆகியவை புதுப்பிக்கப்பட்ட வேகத்தைப் பெறுவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான அதிகப்படியான விருப்பத்திலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிகாட்டி செயலியான மேப்பில்ஸ் (Mappls) போன்ற உள்நாட்டு கண்டுபிடிப்புகளின் இது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த மாதம் நாட்டு மக்களிடையே தீபாவளியையொட்டி ஆற்றிய 'மன் கி பாத்' உரையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுகையில், பண்டிகைக் காலத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அல்லது சுதேசி பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (Confederation of All India Traders (CAIT)) கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக் காலத்தில், இதுவரை இல்லாத அளவில் 6.05 டிரில்லியன் விற்பனைப் பதிவாகியுள்ளது. இதில் 87 சதவீத வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களைவிட இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) இயக்கம் 2014-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது. இது, தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்க ஈர்க்கும் நோக்கம் கொண்டது. இருப்பினும், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) உற்பத்தியின் பங்கு 2013-14 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுக்கு இடையில் தேக்கமடைந்துள்ளது. இது 17.2 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக மட்டுமே சற்று அதிகரித்துள்ளது. 


இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் சுதேசிப் பொருட்களின் வரலாற்றை, தொழிற்புரட்சியின் வரலாறு மற்றும் அதன் பின்விளைவுகள் மூலம் மேலும் புரிந்துகொள்ளலாம்.


1750-ஆம் ஆண்டுகளில், கிரேட் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், டச்சு குடியரசு மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஐந்து முக்கிய ஐரோப்பிய காலனித்துவ சக்திகளாக இருந்தன. இருப்பினும், 1850-ஆம் ஆண்டு காலகட்டதில், பிரிட்டன் தன்னை "உலகின் தொழில் பட்டறையாக (workshop of the world)" மாற்றிக் கொண்டு, நிகரற்ற காலனித்துவ பேரரசாக உருவெடுத்தது.


இந்தக் காலகட்டத்தை இரண்டு முக்கிய முன்னேற்றங்கள் வரையறுத்தன. முதலாவது, சுமார் 1750 முதல் 1914-ஆம் ஆண்டு வரை நடந்த தொழில் புரட்சி ஆகும். இந்தக் காலகட்டம், கிரேட் பிரிட்டனில் தொடங்கிய விரைவான தொழில்நுட்ப மாற்றத்தால் குறிக்கப்பட்டது. 1750-ஆம் ஆண்டுக்குமுன், பிரிட்டனின் பொருளாதாரம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.  அங்கு சுமார் 80-சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் உள்ள சிறிய பண்ணை வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.


உற்பத்தி சிறிய அளவிலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட தன்மையுடன் இருந்தது. இது வண்டிகள், ஆலைகள், தறிகள் போன்ற அடிப்படைக் கருவிகளைச் சார்ந்து இருந்தது. இந்தக் கருவிகள் மனிதர்கள், விலங்குகள் அல்லது நீராழிகளால் (waterwheels) இயக்கப்பட்டன. பிறப்பால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் செல்வம் மற்றும் சமூகநிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கடுமையான வர்க்க அமைப்பில் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 


தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரே ஒரு நிகழ்வு என்று எதுவும் இல்லை. இருப்பினும், நிலக்கரி, இரும்பு, பருத்தி மற்றும் கம்பளி ஆகிய தொழில்கள் புரட்சியின் முதல் அலையைக் கண்டன. நீராவி சக்தி மற்றும் மின்சாரத்தின் பயன்பாடு தொழிற்சாலைகளில் வேலையின் தன்மையையும் மாற்றியது. மேம்பட்ட வாழ்க்கை தரம் மற்றும் குறைந்த இறப்பு விகிதங்களின் விளைவாக இக்காலத்தில் பிரிட்டனின் மக்கள் தொகையும் பெருமளவு அதிகரித்தது.


ஜவுளி ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதுடன், உற்பத்தியையும் குறிப்பிட்ட இடங்களில் குவித்தது. வேலை தேடி தொழிலாளர்கள் இந்தப் பகுதிகளுக்கு நகர்ந்ததால், மான்செஸ்டர் மற்றும் லண்டன் போன்ற நவீன நகரங்கள் மற்றும் பட்டணங்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இதன் விளைவாக, தொழில்துறைக்கு முந்தைய கிராமப்புற பிரிட்டன் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டது.


'செல்வச் சுரண்டல்'  பிரிட்டனின் மாற்றத்திற்கு உதவியது


பிரிட்டனின் மாற்றத்தை வடிவமைத்த மற்றுமொரு குறிப்பிடத்தக்க செயல்முறை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் வெளிநாட்டு வர்த்தகமுமாகும். மேற்கு ஐரோப்பிய சக்திகள் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள தங்கள் காலனிகளிலிருந்து பெரும் பொருளாதார உபரியை அபகரித்துக் கொண்டன. இது அவற்றின் சொந்த தொழில்துறை மாற்றத்திற்கு கணிசமாக உதவியது. இந்தச் செல்வச் சுரண்டல் ஐரோப்பிய குடியேற்றங்கள் முழுவதும் முதலாளித்துவத்தின் பரவலுக்கும் வழிவகுத்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த செயல்முறையானது "செல்வச் சுரண்டல்" (Drain of Wealth) என்று வரையறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆர்.சி. தத் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட இந்த "செல்வச் சுரண்டல்" என்ற சொல் இந்தியாவின் கூடுதல் செல்வங்கள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டதைக் குறிக்கிறது.


பொருளாதார வல்லுநர்களான பிரபாத் பட்நாயக் மற்றும் உத்சா பட்நாயக் ஆகியோரும் இந்தச் சுரண்டலுக்கு உள் மற்றும் வெளிப் பரிமாணங்கள் இரண்டையும் கோடிட்டுக் காட்டினர். உள் பரிமாணம் என்பது நிலவரி உட்பட வாடகை மற்றும் வரிகள் மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து பொருளாதார உபரியைப் பிரித்தெடுப்பதைக் குறிக்கிறது. சுதந்திரமான இந்திய உற்பத்தியாளர்கள் நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். அதேசமயம், குத்தகைதார வேளாண் தொழிலாளர்கள், ஜமீன்தாரர்கள் அல்லது நிலப்பிரபுக்களுக்கு வரியைச் செலுத்தினர். பின்னர், அவர்கள் அதை காலனித்துவ அரசுக்குச் செலுத்தினர். மறுபுறம், வெளிப் பரிமாணம் என்பது ஏற்றுமதிகள் மூலம் இந்தியாவின் பொருளாதார உபரியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் கொண்டு செல்லப்படுவதை உள்ளடக்கியது.


இந்தியாவின் கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்களின் சரிவு


இருப்பினும், இந்த ஏற்றுமதிகளின் மூலம் கிடைத்த வருமானம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு, நிர்வாக மற்றும் இராணுவச் செலவுகள் போன்ற "தாய்நாட்டுச் செலவினங்களுக்காக" (home charges) பயன்படுத்தப்பட்டது. இதனால், இந்திய ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் சொந்த வரிப் பங்களிப்பிலிருந்தே பணம் வழங்கப்பட்டதால், இந்தக் காலனித்துவ வர்த்தக முறைமை தனித்துவமானதாக இருந்தது. மேலும், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட துணி வகைகளைப் போன்ற மலிவான பிரிட்டிஷ் உற்பத்திப் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் பெரிதும் விற்கப்பட்டன. இது உள்ளூர் கைவினைஞர்களான நூல் நூற்பவர்கள் மற்றும் நெசவாளர்களைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அமியா குமார் பாக்சி போன்ற அறிஞர்கள் கூற்றின்படி, இதன் விளைவாக உள்ளூர் கைவினைக் கலைகள் பெரிய அளவிலான தொழில்மயமாக்கலை இழந்தன என்றும் கூறப்படுகிறது. 

இவ்வாறாக, இந்தியாவின் கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் சுரண்டல் நிறைந்த காலனித்துவக் கொள்கைகளின் சுழற்சியின் கீழ் வீழ்ச்சியடைந்தன. ஒருபுறம், இந்திய உற்பத்தியாளர்கள் காலனித்துவ அரசுக்கு அதிக வரிகளைச் செலுத்தினர் மற்றும் அதே வரிகளில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களின் ஏற்றுமதிக்கான தொகையைப் பெற்றனர். ஆனால், உண்மையில் பலன்கள் அனைத்தும் காலனித்துவ அரசுக்கே சென்றன.


மறுபுறம், மலிவான பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தையில் நிறைந்து, உள்ளூர் உற்பத்தியாளர்களைப் இடம்பெயரச் செய்தது. "செல்வச் சுரண்டல்" அல்லது திரட்டப்பட்ட உபரி, பிரிட்டனின் தொழில்மயமாக்கலுக்கு உதவியது. ஏறக்குறைய 150 ஆண்டுகளாக ஆசிய ஜவுளிகளுக்கு எதிரான பிரிட்டனின் கடுமையான பாதுகாப்புவாதக் கொள்கை, பிரிட்டிஷ் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமை மற்றும் இறக்குமதி மாற்றீட்டைத் (import substitution) தூண்டியது என்று பிரீட்ரிக் லிஸ்ட் போன்ற அறிஞர்கள் வாதிட்டனர். எனவே, பிரிட்டனின் வெளிநாட்டுக் காலனித்துவக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாமல், தொழில் புரட்சியின் வரலாறு  முழுமையடையாது.


காலனித்துவ இந்தியாவில் பாரம்பரிய கைவினைத் தொழில்துறையின் வீழ்ச்சி கிராமப்புற பொருளாதாரத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார வரலாற்றாசிரியர் தீர்த்தங்கர் ராய் (Tirthankar Roy) கூற்றுப்படி, 1800-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் உழைக்கும் மக்கள் தொகையில் சுமார் 15-20 சதவீதம் பேர் நூற்பு மற்றும் நெசவு, தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, உலோக வேலை, தரை விரிப்புகள் மற்றும் கம்பளம் தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தொழில்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தவில்லை. பெரிய அளவிலான தொழிற்சாலைகளாகவும் ஒழுங்கமைக்கப்படவில்லை. மாறாக, அவை வீடுகளுக்குள்ளேயே குவிந்திருந்தன மற்றும் குடும்ப உழைப்பால் நடத்தப்பட்டன. இதனால், அவை இயல்பில் பாரம்பரியமானவையாக இருந்தன என்றும் கூறப்படுகிறது. 


காலனித்துவ ஆட்சியின்போது இந்தியப் பொருளாதாரத்தின் தொழில்துறை நீக்கம் என்பது, தொழில்நுட்ப பழமை மற்றும் காலனித்துவ கொள்கைகளால் ஏற்பட்ட பாரம்பரிய தொழில்களின் வீழ்ச்சியாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பிரிட்டனுடனான நெருங்கிய பொருளாதார உறவு, இந்தியாவில் ஜவுளி ஆலைகள் போன்ற சில நவீன தொழில்களை நிறுவ உதவியது என்றாலும், ஒட்டுமொத்த தாக்கம் எதிர்மறையாகவே இருந்தது. பல கைவினைஞர்கள் தங்கள் கைத்தொழில்களைக் கைவிட்டு, வேளாண்மையில் நிலையற்ற வேலையைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. 


இருப்பினும், பாரம்பரிய தொழில்களில் வேலைவாய்ப்பு குறைந்தமைக்குக் காரணம் தொழில்துறை நீக்கம் மட்டுமல்ல என்று சில பொருளாதார வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வர்த்தகமயமாக்கல் செயல்முறையின் விளைவாக பாரம்பரிய தொழில்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டதாகவும், அது குறைந்த செயல்திறன் கொண்ட தொழில்களை வெளியேற்றியதாகவும், அதேசமயம் உற்பத்தித்திறன் கொண்டவை பிழைத்துக்கொண்டன என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.


வேலைவாய்ப்பில் ஏற்பட்ட பாலின ரீதியான மாற்றத்தின் மூலமாகவும் இது விளக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள தொழில்களில் பெண்களின் வேலைவாய்ப்பு 1881-ஆம் ஆண்டில் 40 சதவீதத்திலிருந்து 1971-ஆம் ஆண்டில் 13 சதவீதமாகக் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. வர்த்தகமயமாக்கல்  கொள்கையின்படி, குடும்பம் ஒரு உற்பத்தி அலகாகத் தனது முக்கியத்துவத்தை இழந்தபோது, பெண்கள் தொழிலாளர்கள் பாரம்பரியத் தொழில்களில் இருந்து வெளியேறினர். மேலும், அவர்களுக்குப் பதிலாக ஆண் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் விளக்கப்படுகிறது.

 

விடுபட்டுள்ள நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்


இந்தியாவுக்குரிய கிராமப்புறப் பொருளாதாரத்தின் தன்மையை, தொழிற்புரட்சி, பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் மற்றும் உள்நாட்டுச் சந்தைச் சக்திகள் ஆகியவை மாற்றியமைத்தன. இதனால், பாரம்பரியத் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன, மேலும் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு அதிகரித்தது. இந்த மாற்றத்தின் விளைவு இன்றும் இந்தியாவின் உற்பத்தித் துறையை வடிவமைக்கிறது. இது ஒரு கட்டமைப்பு இரட்டைவாதத்தால் வகைப்படுத்தப்படுகிறது: அதாவது, பெரிய முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஏராளமான சிறிய, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட முறைசாரா அலகுகள் ஆகியவை இணைந்து இருப்பதுடன், மிகச் சில நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இதுவே "காணாமல் போன நடுத்தர நிறுவனங்கள்" (missing middle) என்ற நிகழ்வாக அறியப்படுகிறது. 

'மேக் இன் இந்தியா' போன்ற முயற்சிகள் இருந்தபோதிலும், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) உற்பத்தியின் பங்கு பெரும்பாலும் தேக்கமடைந்துள்ளது. இந்த காலனித்துவ மற்றும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவைச் சமாளிக்க, "விடுபட்டுள்ள நடுத்தர நிறுவனங்களை" வலுப்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டை வளர்த்தல் மற்றும் இந்தியாவின் தொழில்துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறை இணைப்புகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில் கொள்கைக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


ரித்விகா பட்கிரி, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.



Original article:

Share: