தற்போது நடைபெற்று வரும் 30வது சர்வதேச காலநிலை மாநாட்டின் (Conference of the Parties (30th Session) (COP30)) இரண்டாவது நாளில், பான் (Bonn) நகரைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான ஜெர்மன்வாட்ச் (Germanwatch), காலநிலை இடர் குறியீட்டு (Climate Risk Index (CRI)) அறிக்கையை வெளியிட்டது. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை தொடர்பான பேரிடர்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2023-ல் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையைவிட தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. 2006-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் காலநிலை இடர்க் குறியீடு (CRI), காலநிலை தாக்கங்கள் தொடர்பான மிக நீண்டகாலமாக இயங்கி வரும் வருடாந்திர குறியீடுகளில் ஒன்றாகும். இந்தக் குறியீடு, காலநிலை தொடர்பான தீவிர வானிலை நிகழ்வுகளின் விளைவுகளை நாடுகளின் மீது அளவிடுகிறது. பொருளாதார மற்றும் மனிதத் தாக்கங்களின் (உயிரிழப்புகள் மற்றும் மொத்த பாதிப்பு உட்பட) அடிப்படையில் நாடுகளை இது தரவரிசைப்படுத்துகிறது. மேலும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடு முதல் வரிசையில் தரவரிசைப்படுத்தப்படுகிறது.
2. இந்த அறிக்கையின்படி, 1995 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் உலகளவில் தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக 8.32 இலட்சம் (8,32,000) உயிர்கள் பலியாகியுள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 80,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது உலகளாவிய எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 9.6% ஆகும்.
3. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி, புயல், வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம் போன்ற 430 தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக 170 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. "வெள்ளம், வெப்ப அலைகள், புயல்கள் மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது. பருவமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், வேளாண்மையும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல்கள் கடலோரப் பகுதிகளைச் சீரழித்துள்ளன. இது இந்தியாவின் பலதரப்பட்ட காலநிலை இடர்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
5. "1998 குஜராத் மற்றும் 1999 ஒடிசா புயல்கள், 2014 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் ஹுட்ஹுட் மற்றும் ஆம்பன் புயல்கள், 1993-ஆம் ஆண்டு வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளம், 2013-ஆம் ஆண்டு உத்தரகண்ட் வெள்ளம் மற்றும் 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளம் ஆகியவை அதிக உயிரிழப்புகள் மற்றும்/அல்லது பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையுடன் கூடிய தொடர்ச்சியான மற்றும் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலைகள் 1998, 2002, 2003 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பல உயிர்களைப் பறித்தன" என்று அறிக்கை தெரிவிக்கிறது.
6. அனைத்து நாடுகளும் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால், அவை உலகளவில் தெற்குப் பகுதிகள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் தெற்குப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. 2024-ஆம் ஆண்டில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் எட்டு நாடுகள் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானக் குழுவைச் சேர்ந்தவை.
7. இந்த நாடுகளில் சமாளிக்கும் திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக உள்ளது. 1995 மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில், அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் ஆறு நாடுகள் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்டவையாக இருந்தன. இதில் இந்தியாவும் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் எதுவும் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் குழுவில் இல்லை.
8. மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் தீவிர வானிலை நிகழ்வுகளை அடிக்கடி நிகழவும், மேலும் தீவிரமடைகிறது. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எல் நினோ (El Nino) பல தீவிர நிகழ்வுகளை பாதித்தது. இருப்பினும், காலநிலை மாற்றம் அவற்றை இன்னும் மோசமாக்கியதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 2024-ஆம் ஆண்டில், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் 41 நாட்கள் ஆபத்தான வெப்பத்தைச் சேர்த்தது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் மேலும் தீவிர பாதிப்புக்கு உள்ளாக்கியது மற்றும் தீவிரமான சூறாவளி மற்றும் காட்டுத்தீ போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் வழிவகுத்தது.
பேரிடர் மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பில் இந்தியாவின் முன்முயற்சிகள்
2019-ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்முயற்சியின் பேரில், பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure(CDRI)) என்கிற ஒரு சர்வதேச அமைப்பானது அமைக்கப்பட்டது.
இது தேசிய அரசாங்கங்கள், ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள், தனியார் துறை மற்றும் அறிவுசார் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பு ஆகும். இது நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு அமைப்புகளின் காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களுக்கான எதிர்ப்புத் திறன்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பின் (Coalition for Disaster Resilient Infrastructure(CDRI)) மதிப்பீடுகளின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்கட்டமைப்பை மேலும் மீள்தன்மைக் கொண்டதாக மாற்றுவதில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும், பேரழிவு ஏற்படும்போது $4-க்கும் அதிகமான இழப்புகளைத் தவிர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பின் (Coalition for Disaster Resilient Infrastructure(CDRI)) முக்கிய முயற்சிகளில் ஒன்று, 2021-ஆம் ஆண்டு 26-வது சர்வதேச காலநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் மீள்திறன் கொண்ட தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு (Infrastructure for Resilient Island States - (IRIS)) தொடங்கப்பட்டதாகும். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு சிறிய தீவு நாடுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. கடல் மட்டம் உயரும்போது, அவை நிலப்பரப்பில் இருந்து அழிக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பின் அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் பல சிறிய தீவு நாடுகள் ஒரே பேரிடரின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு மீள்திறன் முடுக்க நிதி (Infrastructure Resilience Accelerator Fund - (IRAF)) 2022-ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்த 27-வது சர்வதேச காலநிலை மாநாட்டில் பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாய குறைப்பு அலுவலகத்தின் (United Nations Office for Disaster Risk Reduction (UNDRR)) ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ளது. இது உள்கட்டமைப்பு அமைப்புகளின் பேரிடர் மீள்திறன் குறித்த உலகளாவிய நடவடிக்கையை ஆதரிப்பதற்காக, குறிப்பாக வளரும் நாடுகள் மற்றும் சிறிய தீவு வளரும் நாடுகளில் (Small Island Developing States (SIDS)) உருவாக்கப்பட்டது.
COP30 மாநாட்டுக்கான உலக வானிலை அமைப்பின் (WMO) காலநிலை குறித்த சமீபத்திய அறிக்கை
1. ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பு 30வது மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)), இரண்டு வார கால வருடாந்திர காலநிலை பேச்சுவார்த்தையானது, பிரேசிலின் பெலெம் (Belem) நகரில் நடைபெறுகிறது. இந்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டின் தலைவர்கள் உச்சிமாநாட்டில், உலக வானிலை அமைப்பானது (World Meteorological Organization (WMO)) 30-வது சர்வதேச காலநிலை மாநாட்டிற்கான உலகளாவிய காலநிலை நிலைமை குறித்த சமீபத்திய அறிக்கையை வெளியிட்டது.
2. உலகளாவிய காலநிலை நிலைமை குறித்த இந்தச் சமீபத்திய தகவலானது, முக்கிய காலநிலை குறிகாட்டிகளையும், கொள்கை உருவாக்கத்தை ஆதரிப்பதற்கான அவற்றின் பொருத்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது அதிக விரிவான, ஆனால் குறைந்தகால இடைவெளியில் வெளியாகும் அறிவியல் அறிக்கைகளுக்கான ஒரு பாலமாகவும் செயல்படுகிறது.
3. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பதிவு செய்யப்பட்ட, மேற்பரப்புக்கு அருகிலுள்ள வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்தைவிட 1.42 டிகிரி செல்சியஸ் (0.12 டிகிரி செல்சியஸ் விலகல்) அதிகமாக இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளது. 2025-ஆம் ஆண்டுதான், இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான முதல் மூன்று ஆண்டுகளில் ஒன்றாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. 2025-ஆம் ஆண்டில் வெப்பத்தைத் தக்கவைக்கும் பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகளும், கடல் வெப்ப உள்ளடக்கமும் கடந்த ஆண்டு காணப்பட்ட நிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 176 ஆண்டுகால கண்காணிப்புப் பதிவில் 2015 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டமே வெப்பமான 11 ஆண்டுகளாக இருந்திருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.