உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை அமெரிக்கா வடிவமைத்துள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் நடவடிக்கைகள் இப்போது அந்த ஒழுங்கின் முடிவுக்கு ஒரு வினையூக்கியாக மாறினால் அது முரண்பாடாக இருக்கும்.
இன்று, உலக அணுசக்தி ஒழுங்குமுறை ஒரு விசித்திரமான முரண்பாட்டை வழங்குகிறது. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஏற்பட்ட அணுகுண்டுவீச்சுக்குப் பிறகு, கடந்த 80 ஆண்டுகளாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. உலகளாவிய அணு ஆயுதக் களஞ்சியங்கள் 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்த அதிகபட்ச எண்ணிக்கையான 65,000 குண்டுகளில் இருந்து இன்று 12,500-க்கும் கீழாகக் குறைந்துவிட்டன. மேலும், 1960-ஆம் ஆண்டில் இருந்து 1980-ஆம் ஆண்டுக்குள் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இன்று மொத்த எண்ணிக்கை ஒன்பதாகவே உள்ளது. அவற்றில் ஐந்து (அமெரிக்கா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ் மற்றும் சீனா) அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) நடைமுறைக்கு வருவதற்கு முன்பே சோதனை செய்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர். மற்ற நான்கு நாடுகள் (இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வட கொரியா) பின்னர் தங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கின.
பின்னோக்கிப் பார்க்கையில், இவை ஈர்க்கக்கூடிய சாதனைகளாகத் தோன்றலாம். ஆனால், யாரும் கொண்டாடத் தகுந்த ஒன்றல்ல. உண்மையில், உலக அணுசக்தி ஒழுங்கு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது என்பதே பரவலான உணர்வு. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் உலக அணுசக்தி ஒழுங்கின் மூன்று கூறுகளையும் பலவீனப்படுத்தக்கூடும் என்கின்றனர்.
'அணுசக்தி சோதனைகள்' மீண்டும் தொடங்குதல்
அக்டோபர் 30-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டு, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்குடனான பூசான் சந்திப்பிற்குச் செல்லும் வழியில், டிரம்ப் 'ட்ரூத்’ சமூக வளைத் தளத்தில் (Truth) தளத்தில் "மற்ற நாடுகளின் சோதனைத் திட்டங்கள் காரணமாக, நமது அணு ஆயுதங்களைச் சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு நான் போர் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்தச் செயல்முறை உடனடியாகத் தொடங்கும்" என்று அறிவித்தார். "ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது, சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் 5 ஆண்டுகளுக்குள் சமமாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்தச் செய்தி ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கியது என்பது தெளிவாக இருந்தாலும், டிரம்ப் 'அணு வெடிப்பு சோதனை'யைக் குறிப்பிடுகிறாரா அல்லது அணு ஆயுத அமைப்புகளைச் சோதிப்பதைக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகவில்லை. இரண்டாவதாக, அணு ஆய்வகங்கள் (லாஸ் அலமோஸ் (Los Alamos), லாரன்ஸ் லிவர்மோர் (Lawrence Livermore) மற்றும் சாண்டியா (Sandia) மற்றும் நெவாடா (Nevada) சோதனை வசதிகள் போர் துறையின் கீழ் இல்லாமல், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை புதிய அணு ஆயுதங்களை வடிவமைத்து உருவாக்கி வருகின்றன என்பது இரகசியம் அல்ல. அக்டோபர் மாத இறுதியில், ரஷ்யா ஒரு அணுசக்தி மூலம் இயங்கும் க்ரூஸ் ஏவுகணையை (பியூரெவெஸ்ட்னிக் - Burevestnik) சோதனை செய்தது. அது 14,000 கிலோமீட்டர் பயணித்து இலக்குகளைத் தாக்கக்கூடியது என்ற தகவல் வெளியானது. அதையடுத்து ஒரு வாரம் கழித்து, நீருக்கடியில் இயங்கும் அணுசக்தி மூலம் இயங்கும் டார்பிடோவை (torpedo) (போஸிடான் - Poseidon) சோதனை செய்தது. சீனா தற்போது அதிவேக ஏவுகணைகளைச் சோதித்து வருகிறது. மேலும் 2021-ஆம் ஆண்டில், ஒரு அணுசக்தி திறன் கொண்ட அதிவேக சறுக்கு வாகனத்தை (hypersonic glide vehicle) ஒரு ராக்கெட்டில் சுமந்து சென்று சோதனை செய்தது. அது பூமியைச் சுற்றி வந்து எதிர்பாராத திசையில் இருந்து இலக்கை அணுகும் திறன் கொண்டது. ஆனால், அது ஒரு செயற்கைக்கோள் ஏவுகணையாக அனுப்பப்பட்டது.
அமெரிக்கா புதிய போர்க்கப்பல்களைத் தயாரித்து வருகிறது - ஒரு மாறுபடும் விளைச்சல் கொண்ட B61-13 ஈர்ப்பு குண்டு (gravity bomb), ட்ரைடென்ட் II D-5 ஏவுகணைக்கான குறைந்த விளைச்சல் கொண்ட W76-2 போர்க்கப்பல், அதேநேரத்தில் அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய கப்பல் ஏவுகணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இருப்பினும், அவை வெடிப்புச் சோதனையைத் தவிர்த்துவிட்டன. ரஷ்யா கடைசி வெடிப்புச் சோதனை 1990-ஆம் ஆண்டில் நடத்தியது. அதேசமயம் அமெரிக்கா 1992-ஆம் ஆண்டில் சோதனைகளுக்குத் தடை விதித்தது. 1993-ஆம் ஆண்டில், அமெரிக்கா தேசிய அணுசக்தி பாதுகாப்புக் கழகத்தின் (National Nuclear Security Administration) கீழ் போர்க்கப்பல் நவீனமயமாக்கல், ஆயுட்கால நீட்டிப்பு மற்றும் போர்க்கப்பல் வடிவமைப்பில் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக இருப்பு பராமரிப்பு மற்றும் மேலாண்மை திட்டம் (Stockpile Stewardship and Management Programme) என்கிற அமைப்பை உருவாக்கியது. அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், ஒரு விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்திற்கான (CTBT - Comprehensive Test Ban Treaty) பேச்சுவார்த்தைகளை ஜெனிவாவில் தலைமை தாங்கினார். சீனா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக, 1996-ஆம் ஆண்டில் தங்கள் அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளை முடித்துக்கொண்டன.
முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தத்திற்கு (CTBT) ஏன் ஒரு வரையறை இல்லை?
இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், 187 நாடுகள் கையெழுத்திட்ட போதிலும் CTBT நடைமுறைக்கு வரவில்லை. தேவையான ஒப்புதல்களில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், எகிப்து மற்றும் ஈரான் அவ்வாறு செய்யவில்லை. ரஷ்யா 2023-ஆம் ஆண்டில் அதன் ஒப்புதலை திரும்பப் பெற்றுக்கொண்டது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா அதில் கையெழுத்திடவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் 1998-ல் அணு ஆயுதச் சோதனை நடத்தி, அதன் பிறகு தாமாக முன்வந்து தற்காலிகத் தடையைக் கடைப்பிடிக்கின்றன. மேலும், வடகொரியா 2006 மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆறு சோதனைகளை நடத்தியது. இன்றைய புவிசார் அரசியலைக் கருத்தில் கொண்டு, முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருண்டதாகவே தெரிகின்றன.
இரண்டாவதாக, முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் "எந்தவொரு அணு ஆயுத சோதனை வெடிப்பு அல்லது வேறு எந்த அணு வெடிப்பையும் மேற்கொள்ளக்கூடாது" என்று கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்கா இந்த விதிமுறைகளை வரையறுப்பதை எதிர்த்தது. அதற்குப் பதிலாக, ரஷ்யா மற்றும் சீனாவுடன் 'விளைவில்லா அணு பரிசோதனை' (zero-yield-tests) குறித்து தனிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டது. இது, தன்னிறைவான மீத்திறன் சங்கிலித் தொடர் வினை (self-sustaining supercritical chain reaction) உருவாக்காத ஹைட்ரோ-அணு சோதனைகளை அனுமதித்தது.
அமெரிக்கா ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு சோதனைகளையும், ரஷ்யா 727 சோதனைகளையும் நடத்தியதால், அவற்றுக்கு போதுமான தரவுத் தளம் இருந்தது. ஆனால், வெறும் 47 சோதனைகள் நடத்திய சீனாவும் இந்தப் புரிதலுடன் ஒத்துழைத்தது. இதனால், முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தமானது அணு ஆயுதங்களை அல்லாமல், அணு-வெடிப்பு சோதனைகளை மட்டுமே சட்டவிரோதமானதாக்கியது. இதுவே, இந்தியா அதில் ஒருபோதும் சேராததற்குக் காரணம் என்கின்றனர்.
2019–20 ஆகிய காலக்கட்டத்தில், ரஷ்யா மற்றும் சீனா ‘அமெரிக்காவின் விளைவற்ற (zero-yield) தரத்துக்கு ஒவ்வாத வகையில் குறைந்த அளவு அணு பரிசோதனைகளை (low-yield nuclear tests) நடத்தி இருக்கலாம்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பிட்டது. இருப்பினும், CTBT அமைப்பால் இது மறுக்கப்பட்டது. 89 நாடுகளில் பரவியுள்ள 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களைக் கொண்ட அவர்களின் கண்காணிப்பு வலையமைப்பு எந்த சீரற்ற செயல்பாட்டையும் கண்டறியவில்லை என்று அறிவித்தது.
நவம்பர் 2-ஆம் தேதி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக இருந்தார், இந்த முறை சோதனையிடும் நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவையும் சேர்த்தார். அதே நாளில் ஃபாக்ஸ் நியூஸில் (Fox News) அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) ஒரு விளக்கம் அளித்தார். அமெரிக்க சோதனைகளை அமைப்பு சோதனைகள் (systems-tests) என்று அழைத்தார். "இவை அணு வெடிப்புகள் அல்ல. இவற்றை நாம் அணுக்கரு சாரா வெடிப்புகள் என்று அழைக்கிறோம்," என்று அவர் கூறினார். இருப்பினும்,ல் டிரம்ப்பின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
வடிவமைக்கப்பட்டு வரும் புதிய குறைந்த-உற்பத்தி திறன் கொண்ட போர்க்குண்டுகள் அவற்றை அதிக அளவில் பயன்படுத்தக்கூடியதாக ஆக்குகின்றன மற்றும் புதிய அமைப்புகள் (ஹைப்பர்சோனிக்ஸ், க்ரூஸ் மற்றும் ஆளில்லா அமைப்புகள்) இரட்டைத் திறன் கொண்ட அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' (golden dome) போன்ற ஏவுகணைப் பாதுகாப்புகளுக்கான புதிய ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. இதற்கிடையில், சைபர் மற்றும் விண்வெளி களங்களில் உள்ள புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை சமாளிக்க கொள்கை மாற்றங்கள் பரிசீலனையில் உள்ளன. இது வரும் காலங்களில் அணு ஆயுதத் தடை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்கின்றனர்.
அமெரிக்க-ரஷ்யா ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான புதிய இராஜதந்திர ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New Strategic Arms Reduction Treaty (START), அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராஜதந்திரப் படைகளை 700 ஏவுகணைகள் மற்றும் 1,550 போர்முனைகளாகக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 4, 2026-ஆம் ஆண்டு காலாவதியாக உள்ளது. பேச்சுவார்த்தைக்கும் எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. சீனா எந்த ஆயுதக் கட்டுப்பாட்டிற்கும் ஒரு தரப்பாக இல்லை, மேலும் அதன் அணு ஆயுதக் களஞ்சியம் 300-க்குக் குறைவாக இருந்த நிலையில், தற்போது 600 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் 1,000-ஐத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆரம்பகால அணு ஆயுதப் போட்டி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வெடிப்புச் சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
ரகசிய சோதனைகள் தொடர்பான டிரம்பின் குற்றச்சாட்டுகளை ரஷ்யாவும் சீனாவும் மறுத்துள்ளன. ஆனால், அமெரிக்கா வெடிப்புச் சோதனைகளை மீண்டும் தொடங்கினால் அவர்களும் பின்பற்றுவார்கள். சீனா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும். ஏனெனில் வெறும் 47 சோதனைகளுடன் (அமெரிக்காவால் நடத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில்), மீண்டும் தொடரப்படும் சோதனைகள் புதிய வடிவமைப்புகளைச் சரிபார்க்கவும் தரவுகளைச் சேகரிக்கவும் உதவலாம்.
இந்தியா ஒரு தன்னார்வ தடையைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் வெடிப்புச் சோதனை மீண்டும் தொடங்கினால், 1998-ல் ஒரு முறை மட்டுமே சோதிக்கப்பட்ட அதன் அதிகரித்த பிளவு மற்றும் வெப்ப அணுசக்தி வடிவமைப்புகளைச் சரிபார்க்க இந்தியா நிச்சயமாக சோதனையை மீண்டும் தொடங்கும். சந்தேகத்திற்கு இடமின்றி பாகிஸ்தான் பின்பற்றும், ஆனால் ஆபரேஷன் சிந்தூரின் (Operation Sindoor) போது காணப்பட்ட சீனாவுடனான அதன் வளர்ந்துவரும் ராஜதந்திர ரீதியான தொடர்புகளைக் கருத்தில் கொண்டால், இது இந்தியாவிற்கு எந்தவிதச் சிக்கலையும் ஏற்படுத்தாது என்கின்றனர்.
முழுமையான அணு ஆய்வு–தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) நடைமுறையில் இல்லாவிட்டாலும், அது ஒரு விதிமுறையை உருவாக்கியது. ஆனால் வெடிப்புச் சோதனையை மீண்டும் தொடங்குவது அதன் அழிவுக்கு வழிவகுக்கும். இது அணு ஆயுத ஆர்வலர்களைப் பின்பற்றவும், (Nuclear Non-Proliferation Treaty (NPT)) தலைமையிலான அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்பாட்டு விதிகளின் சரிவைக் குறிப்பதாக அமைந்துவிடும்.
பயன்பாட்டிற்கு எதிரான தடை அப்படியே இருக்க வேண்டும்.
உலகளாவிய அணுசக்தி ஒழுங்கை வடிவமைப்பதில் அமெரிக்கா மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால், டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகள் அதன் அழிவுக்கு வினையூக்கியாக மாறினால் அது முரண்பாடாக இருக்கும். தற்போதைய உலகளாவிய அணு ஆயுத ஒழுங்குமுறை 20-ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் மூலம் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை. 21-ஆம் நூற்றாண்டின் பிளவுபட்ட புவிசார் அரசியலைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய அணுசக்தி ஒழுங்கை உருவாக்குவதும், அவற்றின் பயன்பாட்டிற்கு எதிரான தடை அப்படியே இருப்பதை உறுதி செய்வதும் தற்போதைய சவாலாக இருந்து வருகிறது.
"தற்போதைய அணு ஆயுத அபாயங்கள் ஏற்கனவே ஆபத்தான அளவில் உள்ளன" என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தவறான கணிப்புகள் அல்லது பதற்றமடைவதற்கு (escalation) வழிவகுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். ஆனால், எந்த நாடும் உடன்படுவதாயில்லை.
ராகேஷ் சூட் ஒரு முன்னாள் தூதர் ஆவார் மற்றும் தற்போது கவுன்சில் ஃபார் ஸ்ட்ராட்டஜிக் அண்ட் டிஃபென்ஸ் ரிசர்ச் (CSDR)-ல் தகைசால் பேராசிரியர் ஆவார்.