'ஜன கண மன' விவகாரம் : தாகூர் ஏன் இயற்றினார்? எப்படி தேசிய கீதமாக மாறியது? -தீபனிதா நாத்

 இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில், கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, ‘ஜன கண மன’ பாடலை ‘பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான வரவேற்புப் பாடல்’ என்று கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்தப் பாடலுடன் கடந்த 100 ஆண்டுகளாக தொடர்புடைய ஒரு கட்டுக்கதையை தெளிவுபடுத்துவோம்.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பிரிட்டிஷ் அதிகாரிகளை வரவேற்க ‘ஜன கண மன’ எழுதியதாகக் கூறினார். அவரது கருத்து பலரை வருத்தப்படுத்தியது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தது.


ஆனால், ஹெக்டே இதை முதலில் சொல்லவில்லை. தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வில், சில அரசியல்வாதிகள், ஒரு சில அறிஞர்கள் மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு கூறிய கூற்றுகளை விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி  மீண்டும் கூறினார். இந்தியாவின் தேசிய கீதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்து எழுதப்பட்டது என்றும், ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து பேசுவதாகவும் அவர்கள் வாதிட்டனர்.


பத்தாண்டுகளுக்கு முன்பு, அப்போது ராஜஸ்தான் ஆளுநராக இருந்த பாஜக தலைவர் கல்யாண் சிங், ‘ஜன கண மன அதிநாயக்’ என்ற சொற்களை ‘ஜன கண மன மங்களதாயக்’ என மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார், முன்னது “ஆட்சியாளருக்கு ஜே” என்று மொழிபெயர்க்கப்படுவதாகவும், பிந்தையது “செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருபவரை” நினைவூட்டுவதாகவும் வாதிட்டார்.


படைப்பாளருக்கான பாடல்


மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், இந்தியாவின் தேசிய கீதம் 'Bharoto Bhagyo Bidhata' என்ற பெரிய கவிதையின் ஒரு பகுதியாகும். இது முதன்முதலில் 1911ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த டெல்லி தர்பார் என்ற பெரிய நிகழ்வில் பாடப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் துணைவியார் ராணி மேரி ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.


இந்தப் பாடல் பிரிட்டிஷ் மன்னருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்ற வதந்திகளுக்கு தாகூர் பதிலளித்தார். தெளிவுபடுத்த விரும்பிய தனது ஆசிரியர் புலின் பிஹாரி சென்னுக்கு எழுதிய கடிதத்தில், "ஐந்தாவது, ஆறாவது அல்லது எந்த ஜார்ஜும் காலங்காலமாக மனிதகுலத்தின் விதியை வடிவமைக்க முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.

“இந்தியாவின் விதியை நிர்ணயிப்பவரை, உயர்வு தாழ்வு அனைத்திலும் வழிகாட்டியை, மக்களுக்கு வழி காட்டுபவரை… ‘ஜன கண மன’ பாடலில் நான் வாழ்த்தினேன்” என்று நவம்பர் 20, 1937 அன்று எழுதப்பட்டு, காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டது.


உண்மையில், கவிதையின் சில பகுதிகள் ஒரு மனிதனை நோக்கி அல்ல. மாறாக, ஒரு தெய்வீக சக்தியை தெளிவாக நோக்கிச் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. காலங்கள் தோறும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த கடினமான பாதையில் மனித வரலாற்றை வழிநடத்தும் நித்திய சாரதியே நீங்கள் என்று கவிதையின் மூன்றாவது சரணம் கூறுகிறது.


ஒரு கட்டுக்கதையை முடிவுக்குக் கொண்டுவருதல்


நாட்டின் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான மறைந்த பேராசிரியர் சப்யசாச்சி பட்டாச்சார்யா, 2011ஆம் ஆண்டு வெளியிட்ட தமது Rabindranath Tagore: An Interpretation’ என்ற நூலில், தாகூரிடம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்புப் பாடல் எழுதுமாறு கேட்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அவர் மறுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்தக் கவிதையை எழுதினார் என்று குறிப்பிடுகிறார்.


இந்தியாவின் எதிர்காலத்தை பாதித்த மன்னராக ஐந்தாம் ஜார்ஜை மதிப்பதற்குப் பதிலாக, அவரை கடவுள் போன்ற நபராகக் கருதுவது தாகூருக்கு அபத்தமானது மட்டுமல்ல, அவரை அவமதிப்பதாகவும் இருந்தது என்று பட்டாச்சார்யா எழுதுகிறார்.

இந்தப் பாடலைப் பற்றிய தவறான கதையை நிறுத்த வேண்டும் என்று பட்டாச்சார்யா கூறுகிறார். “இந்தப் பாடல் டிசம்பர் 11, 1911 அன்று எழுதப்பட்டது என்பது பதிவில் உள்ளது. டிசம்பர் 12, 1911 அன்று, டெல்லி தர்பார் கிங் ஜார்ஜ் V ஐ கௌரவிக்க மாநாடு கூடியது. வெளிப்படையாக, டிசம்பர் 11 அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை அடுத்த நாள் நிகழ்வுக்காக எழுதப்பட்டிருக்க முடியாது,” என்று பட்டாச்சார்யா எழுதுகிறார்.


‘ஜன கண மன’ பாடல் முதன்முதலில் டிசம்பர் 28, 1911 அன்று இந்திய தேசிய காங்கிரஸின் 27-வது அமர்வில் பாடப்பட்டது. அடுத்ததாக, இந்தப் பாடல் 1912ஆம் ஆண்டு ஆதி பிரம்ம சமாஜத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பாடப்பட்டது.


“பாடல் அவர்களது சங்கீத சுவடியான பிரம்ம சங்கீத் பட்டியலில் சேர்க்கப்பட்டது,” என்று பட்டாசாரியா எழுதுகிறார். “அவர் அதை காங்கிரசுக்காகவும் எழுதவில்லை. அது அவரது படைப்பாளருக்கு, நாட்டின் விதியின் பாதுகாவலருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்ப்பா” என்று வரலாற்றாசிரியர் கூறுகிறார்.


ஒரு கீதம் பிறக்கிறது


1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்லினில் நடந்த சுதந்திர இந்தியா மையத்தின் தொடக்க விழாவில் தாகூரின் இசையமைப்பான ஜன கண மனவைப் பயன்படுத்த முதலில் முடிவு செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.


அந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸின் மூவர்ணக் கொடி சுதந்திர இந்தியாவின் கொடியாக மாறும் என்றும், தாகூரின் 'ஜன கண மன' தேசிய கீதமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தாகூரின் பாடலையும் முகமது இக்பாலின் 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' பாடலையும் நேதாஜி விரும்பினார். இருந்த போதிலும், நேதாஜிக்கு எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்ததாக கூறப்படுகிறது.


 இந்தியாவின் அனைத்து பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'ஜன கண மன' தேசிய கீதத்திற்கு சிறந்த தேர்வாகக் கருதப்பட்டு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்று அப்போது அங்கிருந்த நேதாஜியின் நெருங்கிய நண்பரான என்.ஜி. கன்புலே, ‘Ganpuley’s Memoirs: Author of Netaji in Germany’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.


1942ஆம் ஆண்டு ஹாம்பர்க்கில் நடந்த இந்தோ-ஜெர்மன் கலாச்சார சங்கத்தின் தொடக்க விழாவில் தேசிய கீதம் முதன்முதலில் முழு இசைக்குழுவுடன் பாடப்பட்டது என்று அவர் மேலும் கூறுகிறார். இது குறித்த கிராமபோன் பதிவுகளும் தயாரிக்கப்பட்டன. அவை இன்னும் கிடைக்கின்றன.


தாகூரின் பாடல் ஜனவரி 24, 1950 அன்று அரசியலமைப்பு சபையில் இறுதி அங்கீகாரத்தை அடைந்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், 'ஜன கண மன' இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் என்றும், தேவைப்பட்டால் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் வார்த்தை மாற்றங்களுடனும் இருக்கும் என்றும் அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலுக்கு 'ஜன கண மன’ பாடலுக்கு  இணையான மரியாதை  வழங்கப்படும் என்று டாக்டர் ராஜேந்திர பிரசாத்  கூறினார்.



Original article:

Share: