வழக்கறிஞர் உரிமை புனிதமானது. அதனால்தான் வழக்கறிஞர் அழைப்பாணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானது. -குமார் கார்த்திகேயா

 வழக்கறிஞரின் கடமை வாதாடுவது. அரசின் கடமை உண்மையை விசாரணை செய்வது. எந்த ஒரு நபரும் மற்ற நபரின் அதிகாரத்தை பறிக்க (usurp)  முடியாது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியபோது, அது வழக்கறிஞர் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அரவிந்த் தாதர் மற்றும் வேணுகோபால் இருவரும் அனுபவம் வாய்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆவர். சில நாட்களுக்குள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர் கவுன்சில் ஆகியவற்றின் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணைகளை திரும்பப் பெற்றது மற்றும் அமலாக்க இயக்குநரின் முன் அனுமதி இல்லாமல் எந்த வழக்கறிஞரையும் அழைக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டது. ஆனால், அழைப்பாணைகள் அனுப்பப்பட்டிருப்பது, ஏற்கனவே வழக்கறிஞர் மற்றும் கட்சிக்காரர் இடையே இருந்த (attorney-client privilege) ரகசியங்கள் இனி பாதுகாப்பாக இருக்காது என்ற கவலையை உருவாக்கியுள்ளது.


இதனால் உச்சநீதிமன்றம் இந்த பிரச்சினையை தானாக (suo motu) எடுத்துக் கொண்டு, ஒரு வழக்கறிஞர் சட்ட ஆலோசனை வழங்கியதாலோ அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்காக ஆஜரானதாலோ அவரை விசாரணைக்கு அழைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியது. அக்டோபர் 31 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வழக்கறிஞர் தொழில் அமைதியாக இழந்து வந்த சமநிலையை மீட்டெடுத்தது. வழக்கறிஞர்களின் சுதந்திரம் என்பது அவர்களின் தொழிலுக்கான சிறப்பு உரிமை மட்டுமல்ல - அரசியலமைப்பையும் நீதியையும் பாதுகாப்பதற்கு அவசியமான ஒன்று என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.


வெளிப்படையாக தாதர் மற்றும் வேணுகோபாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளுக்காக இருந்த போதிலும், தானாக முன்வந்து (suo motu) தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் அகமதாபாதில் தொடங்கின. அந்த நகரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒரு பணக்கடன் தகராறில் ஜாமீன் மனு மட்டுமே தாக்கல் செய்த ஒரு வழக்கறிஞருக்கு அறிவிக்கை அனுப்பினார். "வழக்கின் உண்மையான விவரங்கள் மற்றும் சூழ்நிலைகளை தெரிந்துகொள்வதற்காக" அவர் காவல்துறையால் அழைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் தலையிட மறுத்தபோது, இந்த விவகாரம்  தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் என் வி அஞ்சாரியா கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்பதை நீதிமன்றம் உணர்ந்தது. காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்வதற்காக ஒரு வழக்கறிஞரை அழைக்க முடிந்தால், பாதுகாப்பு உரிமை (right to defence) என்பது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையாக இல்லாமல் அரசால் வழங்கப்படும் ஒரு சலுகையாக மாறும்.


இந்த தீர்ப்பு ஷேக்ஸ்பியரின் ‘ஹென்றி VI’ நாடகத்திலிருந்து “நாம் முதலில் செய்ய வேண்டியது, எல்லா வழக்கறிஞர்களையும் கொன்றுவிடுவோம்” என்ற ஒரு வரியுடன் தொடங்குகிறது. உச்ச நீதிமன்றம் அந்த வார்த்தைகள் வழக்கறிஞர்களுக்கு அவமதிப்பு அல்ல, மாறாக ஒரு எச்சரிக்கை என்று விளக்கியது. அவற்றைச் சொல்லும் கிளர்ச்சியாளன் சட்டமின்மையை கனவு காண்கிறான். அதை அடைய, அவன் முதலில் சட்டத்தைப் பாதுகாப்பவர்களை அமைதிப்படுத்த வேண்டும்.


பாரதிய சாக்ஷய ஆதினியத்தின் (Bharatiya Sakshya Adhiniyam) பிரிவு 132, வழக்கறிஞருக்கும் அவரது கட்சிக்காரருக்கும் இடையேயான உறவின் ரகசியத்தன்மையை பாதுகாக்கிறது. இந்தப் பிரிவு 1872-ன் இந்திய சாட்சிய சட்டத்தின் (Indian Evidence Act) பிரிவு 126-ல் முதலில் எழுதப்பட்ட கொள்கையை தொடர்கிறது. ஒரு கட்சிக்காரர் தொழில்முறை சேவையின்போது வழக்கறிஞரிடம் ரகசியமாகத் தெரிவிப்பது, அது சட்டவிரோதச் செயலை மேலும் தூண்டுவதற்காகவோ அல்லது வழக்கறிஞரின் ஈடுபாட்டுக்குப் பிறகு நிகழ்ந்த குற்றத்தை வெளிப்படுத்துவதற்காகவோ இருந்தால் தவிர, வெளியிடப்பட முடியாது. இந்த ரகசிய உரிமை வழக்கறிஞருக்கு அல்ல, கட்சிக்காரருக்கே சொந்தமானது. இந்த சட்டம் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிப்படையாக பேச அனுமதிக்கிறது. தங்கள் சொந்த வார்த்தைகள் தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்று நம்புவதற்கு இந்த சட்டம் உதவியாக உள்ளது.


விசாரணை அமைப்பு ஒரு வழக்கறிஞரை வெறுமனே அவர் ஒரு கட்சிக்காரருக்கு ஆலோசனை வழங்கியதற்காக அல்லது பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அவ்வாறு செய்வது "முழுமையாக ஏற்க முடியாதது" (completely untenable) என்று உச்சநீதிமன்றம் கூறியது. இத்தகைய நடத்தை பிரிவு 19(1)(g)-ன் கீழ் தொழில் செய்ய உள்ள உரிமை (right to practise) மற்றும் பிரிவு 21-ன் கீழ் வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமை (right to life and liberty) ஆகிய இரண்டையும் மீறுகிறது. ஒரு வழக்கறிஞர் ஒரு குற்றத்தில் பங்கேற்றால் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படலாம். அப்போதுகூட, சட்டத்தால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


விஷாகா அல்லது ஜேக்கப் மேத்யூ போன்ற வழக்குகளைப் போல் இல்லாமல், நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவில்லை. சட்டபூர்வமான கட்டமைப்பு ஏற்கனவே போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. பிரிவு 132-ன் கீழ் சலுகை தெளிவாக உள்ளது மற்றும் விசாரணை அமைப்புகள் அதன்படி கட்டுப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றம் ஒரே ஒரு நடைமுறை பாதுகாப்பை மட்டும் சேர்த்தது. ஒரு அதிகாரி ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க விரும்பினால், முதலில் காவல்துறை கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத உயர் அதிகாரியின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதிகாரி சம்மனுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் பிரிவு 132-ன் கீழ் எந்த விதிவிலக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். வழக்கறிஞர் அல்லது கட்சிக்காரர் பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita) பிரிவு 528-ன் கீழ் உயர்நீதிமன்றத்தில் அழைப்பாணையை சவால் செய்யலாம்.


ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பற்றிய கேள்வியையும் நீதிமன்றம் பரிசீலித்தது. வழக்கறிஞர்-கட்சிக்காரர் உரையாடல்கள் தனிப்பட்டவை. ஆனால், ஆவணங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதில்லை. அவற்றை நீதிமன்றத்தால் மட்டுமே அழைக்க முடியும், காவல்துறையால் நேரடியாக அழைக்க முடியாது. ஒரு டிஜிட்டல் சாதனம் சரிபார்க்கப்பட்டால், அது வழக்கறிஞர் மற்றும் கட்சிக்காரர் இருவரும் இருக்கும்போது செய்யப்பட வேண்டும். மேலும், பிற கட்சிக்காரருடன் தொடர்புடைய அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த சட்டம் சட்டபூர்வமான விசாரணையை அனுமதிக்கும் அதே வேளையில் தேவையற்ற விசாரணைகளைத்  (Fishing inquiries) தடுக்கிறது.

 

பின்னர் அமர்வு, நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட உள்-நிறுவன ஆலோசகர்கள் (in-house counsels) அதே பாதுகாப்பை பெறுகிறார்களா என்பதை பரிசீலித்தது. அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியது. சம்பளம் பெறும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சட்டத்தின் (Advocates Act) கீழ் ஒரு "வழக்கறிஞர்" அல்ல. எனவே, பிரிவு 132-ன் கீழ் சலுகையை கோர முடியாது. முதலாளிகளுடனான அவர்களின் தொடர்புகள் இன்னும் பிரிவு 134-ன் கீழ் ரகசியமாக இருக்கலாம். ஆனால், அந்த ரகசியத்தன்மையின் நோக்கம் வரம்புக்குட்பட்டது. சுதந்திரம், சலுகையின் அடித்தளம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயரை மேற்கோள் காட்டி, நீதிமன்றம் வழக்கறிஞர்கள் நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அமைப்புகளைப் போன்றவர்கள் என்றும் சிலர் தவறு செய்யலாம். ஆனால், அது அனைத்து வழக்கறிஞர்களையும் வரையறுக்காது. ரகசியத்தன்மை என்பது குற்றங்களை மறைப்பதற்காக அல்ல. அது இருப்பதால் அனைவரும், அவர்கள் யாராக இருந்தாலும், ஒரு வழக்கறிஞரிடம் பயமின்றி பேச முடியும். மக்கள் வழக்கறிஞர்களை நம்புவதை நிறுத்தினால், முழு சட்ட அமைப்பும் வீழ்ச்சியடையும்.


தீர்ப்பு பிரிவு 20(3)-ன் கீழ் சுய குற்றச்சாட்டுக்கு (self-incrimination) எதிரான அரசியலமைப்பு பாதுகாப்புடன் சலுகையை இணைக்கிறது. ஒரு குடிமகன் ஒரு வழக்கறிஞரிடம் பேசுவது என்பது அமைதியாக இருப்பதற்கான ஒரு நபரின் உரிமையின் ஒரு பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக, வழக்கறிஞர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்காரர்கள் மற்றும் அவர்கள் தரும் கருத்துகளுக்காக அதிகரித்துவரும் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய நடைமுறைகள் தொழில்முறை சுதந்திரத்தை மட்டுமல்ல, நீதி நியாயமாக இருக்கும் என்ற குடிமகனின் நம்பிக்கையையும் குறைத்து விடுகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த நம்பிக்கையை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறது. விசாரணையும் அச்சுறுத்தலும் ஒன்றல்ல என்று உச்சநீதிமன்றம் அரசுக்கு தெரிவிக்கிறது.


இத்தகைய செயல்கள் சட்டபூர்வ சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல் அடிப்படை உரிமைகளையும் (fundamental rights) மீறுகின்றன என்று உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இந்தத் தீர்ப்பு புதிய கோட்பாட்டை கண்டுபிடிக்கவில்லை. மறைக்கப்பட்டிருந்த ஒரு உண்மையை மீட்டெடுக்கிறது. வழக்கறிஞரின் கடமை பாதுகாப்பது ஆகும். அரசின் கடமை விசாரிப்பது ஆகும். எந்த ஒரு தனி நபரும் மற்றவரின் அதிகாரத்தை பறிக்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழக்கறிஞர்களுக்கான உரிமை மட்டும் அல்ல. மாறாக, வழக்கறிஞர் உரிமைக்கான குடிமகனின் உரிமையின் மீண்டும் உறுதிப்படுத்தலாகும். தாதர் மற்றும் வேணுகோபால் ஆகியோருக்கு அனுப்பிய அறிவிக்கைகளை அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) திரும்பப் பெற்றபோது, ​​அது அழுத்தத்தின் பேரில் திரும்பப் பெற்றது. உச்சநீதிமன்றம் இப்போது அந்த திரும்பப்பெறுதலை அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. சட்டத்தை பிரதிநிதித்துவத்திற்கான உரிமை, கருணை சார்ந்தது அல்ல என்று உச்சநீதிமன்றம் நமக்கு நினைவூட்டுகிறது. அது சுதந்திரத்தின் முதல் நிபந்தனையாகும்.


எழுத்தாளர் டெல்லியைச் சேர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சட்ட ஆராய்ச்சியாளர்.



Original article:

Share: