இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (Indian Space Research Organisation (ISRO)) சமீபத்தில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-03 CMS-03 என்ற சக்திவாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்த ஏவுதல் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது? இஸ்ரோவின் மூன்றாம் தலைமுறை ஏவுதல் வாகனக் குறி (Launch Vehicle Mark (LVM3)) என்ற ஏவுதள வாகனத்தில் செய்யப்பட்டுள்ள புதிய 'பாகுபலி' மேம்பாடுகள் என்னென்ன?
ஏன் செய்திகளில்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (ISRO) LVM3-M5 என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது. தற்போது இந்திய மண்ணிலிருந்து மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளது. இது இஸ்ரோவின் சீராக மேம்பட்டு வரும் திறன்களின் நிரூபணமாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள் :
1. 4,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை (LVM3-M5) இந்திய மண்ணிலிருந்து தொலைதூரப் புவிநிலைச் சுற்றுப்பாதையில் (Distant Geosynchronous Transfer Orbit (GTO)) இஸ்ரோ முதன்முறையாக நிலைநிறுத்தியுள்ளது.
2. CMS-03 என்ற இந்தச் செயற்கைக்கோள், 4,410 கிலோ எடை கொண்ட, பல-அலைவரிசை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் (multi-band communication satellite) ஆகும். இது இந்திய நிலப்பரப்பு உட்பட பரந்த கடல் பகுதியிலும் சேவைகளை வழங்கும். இந்தச் செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்குச் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. GSAT-7R என்றும் அழைக்கப்படும் CMS-03 செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டு ஏரியன்-5 ராக்கெட்டில் ஏவப்பட்ட GSAT-7 செயற்கைக்கோளுக்கு மாற்றாக உள்ளது. இது அதன் ஆயுட்காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
4. இந்தச் செயற்கைக்கோள் முக்கியமாக இந்திய கடற்படையின் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் எல்லை குறித்த விழிப்புணர்வு திறன்களை பகுப்பாய்வு செய்யும்.
5. GSAT-7R இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் வலுவான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும். இந்தச் செயற்கைக்கோளில் பல தகவல் தொடர்பு அலைவரிசைகளின் வழியாக குரல், தரவு மற்றும் காணொளி இணைப்புகளை ஆதரிக்கும் திறன் கொண்ட கருவிகள் (transponders) உள்ளன. இந்தச் செயற்கைக்கோள் அதிகத் திறன் கொண்ட அலைவரிசையுடன் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படையின் கடல்சார் செயல்பாட்டு மையங்களுக்கு இடையே தடையற்ற மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தும், ”என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
6. குறிப்பிடத்தக்க வகையில், இஸ்ரோ இதை விட கனமான செயற்கைக்கோளை ஏவியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட GSAT-11 5,800 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக இருந்தது. ஆனால், அதற்காக ஐரோப்பாவின் ஏரியன்-5 (Ariane-5) என்கிற விண்கலம் பயன்படுத்தப்பட்டது. 3,000 கிலோவுக்கு மேல் எடையுள்ள அதன் அனைத்து கனமான செயற்கைக்கோள்களையும் அனுப்புவதற்கு இஸ்ரோ ஐரோப்பிய நாட்டின் விண்காலத்தையே நம்பியிருந்தது.
7. CMS-03 ஏவுதலின் மூலம், LVM3 ராக்கெட்டின் அதிக எடையைத் தூக்கிச் செல்லும் திறனை இஸ்ரோ நிரூபித்துள்ளது. எனவே, LVM3-M5 ஏவுதல் விண்வெளி திட்டங்களுக்கு வெளிநாட்டு சார்புநிலையைக் குறைப்பதற்கும் வரவிருக்கும் பணிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும். மேலும் சிக்கலான பணிகளைச் செயல்படுத்துவதில் இஸ்ரோவின் வளர்ந்து வரும் இராஜதந்திர சுயாட்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.
ஏவு வாகனம் மார்க்-3 (LVM3)
8. முன்னர் GSLV Mk-3 என அழைக்கப்பட்ட LVM3, இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த விண்கலம் ஆகும். இது 8,000 கிலோ வரை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கும், 4,000 கிலோ வரை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கும் கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டது.
9. LVM3 திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் இயந்திரங்களின் கலவையைப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் OneWeb செயற்கைக்கோள்கள் போன்ற முக்கியப் பணிகளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, அதிக எடை கொண்ட செயற்கைக்கோளுக்கு இடமளிக்க, இலக்கு வைக்கப்பட்ட சுற்றுப்பாதை குறைவாக இருந்தது (அதன் மிக உயர்ந்த புள்ளியில் சுமார் 29,970 கி.மீ).
10. சந்திரயான்-3 ராக்கெட்டை சுமந்து சென்ற LVM3-M4 ஒப்பிடும்போது இதன் சுமை தாங்கும் திறனை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ விண்கலத்தை மாற்றியமைத்தது. அதன் எடை திறனுக்காக இந்த வாகனம் அதன் எடை தாங்கும் திறனுக்காக 'பாகுபலி' என்று அழைக்கப்பட்டது. இந்த வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை C25 நிலையாக இருந்தது. இது 28,000 கிலோ எரிபொருளை சுமந்து 20 டன் உந்துதலை உற்பத்தி செய்தது. இப்போது இது 32,000 கிலோ எரிபொருளை சுமந்து 22 டன் உந்துதலை உற்பத்தி செய்யும் C32 நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ஏவுதள வாகனங்கள்
1. செயற்கைக்கோள்கள் தாங்களாகவே விண்வெளிக்குச் செல்வதில்லை. அவை விண்கலங்கள் அல்லது துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) போன்ற விண்கலங்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. பூமியின் ஈர்ப்பு விசையை மீறி, செயற்கைக்கோள்கள் போன்ற கனமான பொருட்களை விண்வெளியில் செலுத்துவதற்குத் தேவையான மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உருவாக்கும் சக்திவாய்ந்த உந்துவிசை அமைப்புகளை விண்கலங்கள் கொண்டுள்ளன.
2. இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Small Satellite Launch Vehicle (SSLV)) என்பது மூன்று திட உந்துவிசை நிலைகளுடன் கட்டமைக்கப்பட்ட மூன்று-நிலை ஏவுதள வாகனமாகும். இது ஒரு முனைய நிலையில் (terminal stage) திரவ உந்துவிசை அடிப்படையிலான வேகச் சீரமைப்புத் தொகுதியைக் (Velocity Trimming Module (VTM)) கொண்டுள்ளது. இது செயற்கைக்கோளை நிலைநிறுத்தத் தயாராகும் போது அதன் வேகத்தை சரிசெய்ய உதவுகிறது.
3. துருவ செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் (Polar Satellite Launch Vehicle (PSLV)) என்பது இந்திய செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களின் மூன்றாம் தலைமுறை ஆகும். முதன்முதலில் 1994ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இன்றுவரை 50-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான PSLV ஏவுதல்கள் நடந்துள்ளன. அதிக வெற்றி விகிதத்துடன் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் (2,000 கி.மீ.க்கும் குறைவான உயரத்தில்) பல்வேறு செயற்கைக்கோள்களை தொடர்ந்து செலுத்துவதால் இது "இஸ்ரோவின் வேலைத்திறன்மிகு குதிரை" (the workhorse of ISRO) என்றும் அழைக்கப்படுகிறது.
4. புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள், புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் (geosynchronous transfer orbit) தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் பொதுவாக புவி சுற்றுப்பாதையில் (geostationary Earth orbit) வைக்கப்படுகின்றன. இது பூமியின் பூமத்திய ரேகைக்கு மேலே 35,786 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுற்றுப்பாதையாகும்.
5. புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்கள் (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)) அதிக திறன் கொண்டவை. ஏனெனில், செயற்கைக்கோள்களை விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்கு அனுப்புவதற்கு இவை உதவுகிறது. பழைய ஏவுதள வாகனங்களை விட, புதிய ஏவுதள வாகனங்ளில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜனைக் கொண்ட கிரையோஜெனிக் இயந்திரங்கள் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுதள வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை அதிக உந்துசக்தியை வழங்குகின்றன.