அமெரிக்காவில் தானியங்கி வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண (EAD) நீட்டிப்புகள் முடிவுக்கு வந்ததால், இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஏற்படக்கூடிய தாக்கம். -விதீஷா குந்தமல்லா

 பணி அங்கீகாரம் காலாவதியான பிறகும் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற புலம்பெயர்ந்தோரை அனுமதித்த விதியை இந்த மாற்றம் ரத்து செய்கிறது. எந்த நுழைவனுமதி (விசா) பிரிவுகள் அதிகம் பாதிக்கப்படலாம், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


அமெரிக்காவில் சிறப்புத் தொழிலாளர்களுக்கான H-1B நுழைவனுமதி (விசா)  கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக பல வாரங்களுக்கு முன் உயர்த்தியது. இப்போது  டிரம்ப் தலைமையிலான நிர்வாகமானது, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents (EADs)) தானியங்கி நீட்டிப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.


அக்டோபர் 30 முதல், தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, புதுப்பித்தல் நிலுவையில் இருக்கும்போது, ​​இனி தானியங்கி பணி அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security (DHS)) கடந்த அக்டோபர் 29-ஆம் நாள் அறிவித்தது.


ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின்போது நிறுவப்பட்ட விதியானது புலம்பெயர்ந்தோர் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால், காலாவதியான பிறகு 540 நாட்கள் வரை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் பழைய விதியை ரத்து செய்கிறது. இது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய நிபுணர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. 


அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் என்றால் என்ன?


அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, குடியுரிமை அல்லது தேசிய வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், அனைத்து ஊழியர்களும் நாட்டில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பணியமர்த்துவோர் உறுதிசெய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் (படிவம் I-766/EAD) வைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்கும் வழியாகும்.


முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களைப் (Employment Authorization Documents) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களைச் சரியான நேரத்தில் தாக்கல் செய்த விண்ணப்பதாரர்களுக்கு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் (US Citizenship and Immigration Services (USCIS)) செயலாக்க தாமதங்களை ஈடுசெய்யும் வகையில் அவர்களின் ஆவணங்கள் நிலுவையில் இருக்கும்போது, ​​540 நாட்கள் வரை பணி அங்கீகாரம் தானாகவே வழங்கப்பட்டது.


ஹூஸ்டனைச் சேர்ந்த குடியுரிமை வழக்கறிஞரான ராகுல் ரெட்டி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியது பின்வருமாறு, "உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகிவிட்டால், நீட்டிப்பு செயல்படுத்தப்படும்வரை நீங்கள் 180 நாட்கள் தொடர்ந்து பணியாற்றலாம். ஆனால், நீண்ட தாமதங்கள் காரணமாக, இது 540 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது." என்று கூறினார்.


புதிய விதிமுறை பல விசா வகைகளுக்குப் பொருந்தும், அவற்றில் H-4 (H-1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள்), L-2 (L-1 விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், அல்லது அவர்களின் வெளிநாட்டு கிளையிலிருந்து அமெரிக்க நிறுவனத்தால் மாற்றப்பட்டவர்கள்), மற்றும் குடியேற்ற நிலையைச் சரிசெய்ய வேண்டிய சில விண்ணப்பதாரர்கள் (கிரீன் கார்டுகள்) ஆகிய விசா வகைகள் அடங்கும்


"இந்த விதி இரண்டு முக்கியப் பிரிவு மக்களை பாதிக்கிறது - ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள், தகுதி நிலைக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் H-4 விசா வைத்திருப்பவர்கள்" என்று வழக்கறிஞர் ரெட்டி கூறினார்.


வர்ஜீனியாவைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர் ராஜீவ் கன்னா மேலும் கூறுகையில், இந்தக் கொள்கை ஏற்கனவே பலவீனமாக இருந்த "H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் பாதுகாப்பை முற்றிலுமாக நீக்குகிறது". "மிகவும் பாதிக்கப்பட்ட H-4 வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு, பிரச்சனை என்னவென்றால், உங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் போதெல்லாம், உங்கள் தகுதியும் காலாவதியாகிறது. இது உண்மையில் பலருக்கு உதவவில்லை. ஆனால் எங்களுக்கு கூடுதல் நேரம் கிடைத்தது என்ற நிம்மதியாவது இருந்தது. அதுவும் இப்போது போய்விட்டது." "இந்திய நாட்டினருக்கு, இது மிகவும் கடுமையானது," என்று கூறினார். "பெரும்பாலான பிற நாடுகளுக்கு, கிரீன் கார்டு வரிசை தற்போது உள்ளது. இந்தியர்கள் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர், எனவே இந்த 540 நாள் பாதுகாப்பு ஒரு முக்கியமான கால அவகாசமாக இருந்தது." என்று கருத்து தெரிவித்துள்ளார்


H-4 விசா வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கிறார்கள், ஆனால் கொள்கை மாற்றம் பெரிய இடையூறுக்கு வழிவகுக்கும் என்று வழக்கறிஞர் கன்னா கூறினார். சரியான நேரத்தில் நீட்டிப்பு இல்லாமல், அவர்கள் வேலை செய்வதை நிறுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, ஒப்புதல் எப்போது வரும் என்று தெரியாததால், அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்பதை பணியமர்த்துவோர்களிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நிறுவனங்கள் அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்களை பணியமர்த்தும் என்று ரெட்டி கூறினார்.


இதனை ஒப்புக்கொண்ட கன்னா, “இந்திய H-4 மனைவிமார்களில் கணிசமான துணைப்பிரிவு உள்ளது. அவர்களுக்கு வேலை செய்யும் திறன் இல்லாவிட்டால், நிறைய திறமையும் கல்வியும் வீணாகின்றன. தாக்கம் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, ஒரு தொகுப்பு உளவியல் தாக்கமும் உள்ளது, ஆயிரம் வெட்டுகளால் ஏற்படும் மெதுவான மரணம் போன்றது.” என்று கூறினார்.

மாற்றத்திற்கான காரணம் என்ன?


ஒரு வெளிநாட்டவரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிப்பதற்கு முன்பு சரியான "சரிபார்ப்பை" உறுதி செய்ய தானியங்கி நீட்டிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது, ஆனால், பல வழக்கறிஞர்கள் இந்தக் கருத்தில் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


"H-4 விசாவில் உள்ளவர்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவொரு பின்வாசல் வழியாகவும் அமெரிக்காவிற்குள் வரவில்லை. எனவே, எந்தவொரு உண்மையான சிக்கலைத் திருத்துவதற்கான முயற்சி என்பதைவிட, ஒரு சாக்குப்போக்காகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது" என்று கன்னா கூறினார். தேசியப் பாதுகாப்பை ஒரு கவலையாக மேற்கோள் காட்டுவது ஆதாரமற்றது என்று கூறினார். “வன்முறையில் ஈடுபடக்கூடியவர். "வன்முறையில் ஈடுபடக்கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகாரத்தைத் தடுக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். அது அபத்தமானது, ஏனென்றால் குற்றங்களைச் செய்ய மக்களுக்கு வேலை அனுமதி தேவையில்லை." என்றும் அவர் வாதிடுகிறார்.


இந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளுமா?


பொதுவாக, இந்த அளவிலான மாற்றங்களுக்குப் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக ஒரு அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் கால அவகாசம், 60 நாட்கள் ஆகும். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த செயல்முறையைத் தவிர்த்து, இதை "இடைக்கால இறுதி விதியாக" (Interim Final Rule) வெளியிட்டது.


"மாற்றப்பட வேண்டிய ஒவ்வொரு ஒழுங்குமுறையும் அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் காலத்தைக் கடந்து செல்ல வேண்டும்," என்று கன்னா கூறினார். "இந்த இடைக்கால இறுதி விதி அதை முற்றிலுமாகத் தவிர்க்கிறது, இல்லாத ஒரு அவசரநிலையை உருவாக்குகிறது. அவர்கள் அக்டோபர் 29 அன்று  இந்தத் திருத்த விதியை அறிவித்தனர். அடுத்த நாளிலிருந்து உங்களுக்கு இந்தப் பாதுகாப்பு இருக்காது என்று கூறினர். சட்டத்தின்படி நிர்வாகம் இப்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார்.


ரெட்டி இதை "தெளிவான நடைமுறை மீறல்" என்று அழைத்தார். மேலும், அவரது குழு நீதிமன்றத்தில் இந்த விதியை எதிர்த்து வாதம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். "அவர்கள் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் விண்ணப்பங்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு வேலை அங்கீகார ஆவணத்தை மதிப்பாய்வு செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு முன்பே  கூறியுள்ளது. அவர்களின் திறமையின்மை காரணமாக, இப்போது மாதங்கள் ஆகின்றன. எனவே, அவர்களின் வேலை அங்கீகார ஆவண புதுப்பித்தல் தாமதமானால் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின்மீது வழக்குத் தொடருமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஏனெனில், நீங்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், குடியேற்றத்துறை வழக்கமாக நீதிபதியை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வழக்கை அவசரமாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. 


இது பரந்த குடியேற்றப் போக்குகளுக்கு எவ்வாறு பொருந்துகிறது?


டிரம்ப் நிர்வாகத்தின் அரசியல் சித்தாந்தம் மற்றும் வாக்குறுதிகளுக்கு ஏற்ப, சட்ட மற்றும் சட்டவிரோத குடியேற்றம் இரண்டையும் கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு அங்கீகார ஆவண பின்வாங்கல் பார்க்கப்படுகிறது.


தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பே புதுப்பித்தல்களுக்கு விண்ணப்பிப்பதும், ஏற்படக்கூடிய வேலை இடையூறுகளுக்குத் தயாராக இருப்பதுமே பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிறந்த நடவடிக்கையாக இருக்குமென்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், செயலாக்கத்தை விரைவுபடுத்த சிலர் வழக்குத் தொடர வேண்டியிருக்கலாம் என்றும்  ரெட்டி கூறினார்.



Original article:

Share: