குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்? -ஷமிம் ஹக் மொண்டல்

 குண்டுவெடிப்பு அல்லது வெடிப்புச் சம்பவங்களில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான பணி என்ன? ஒரு வெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது விபத்தா என்பதை அவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்? சம்பவ இடத்திலிருந்து அவர்கள் சேகரிக்கும் மாதிரிகளில் அவர்கள் மேற்கொள்ளும் சில சோதனைகள் யாவை? தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல பிரிவுகள் இணைந்து செயல்படுகின்றனவா?


கடந்த நவம்பர் 10-ஆம் தேதி  புது டெல்லியில் உள்ள செங்கோட்டை வளாகம் அருகே ஒரு பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. வளாகத்தின் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  i20  கார் வெடித்ததில், அருகில் இருந்த பல கார்கள், பேருந்துகள் சேதமடைந்தன. மேலும், தற்போது வரை, 13 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


தடயவியல் நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்?


டெல்லி தடயவியல் ஆய்வகத்தின் வெடிபொருள் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், காவல்துறையினருடன் சம்பவ இடத்துக்கு அரை மணி நேரத்திற்குள் வந்தனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் தடயவியல் நிபுணர்களின் முதன்மையான வேலை, அறிவியல் கண்ணோட்டத்தில் காரணத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்கின்றனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளத்தை அறிவியல் அடிப்படையில் சரிபார்க்கவும், அவர்கள் தேவையான மாதிரிகளைச் சேகரித்து, விரைவான ஆய்வக சோதனைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.


தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளைச் சேகரிப்பதாகப் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எந்தவொரு திறமையான தடயவியல் நிபுணருக்கும், அந்த இடம் ஏராளமான தகவல்களை வழங்குகிறது. இருப்பினும், ஒரு வெடிப்பு என்பது மற்ற குற்றங்களிலிருந்து வேறுபட்டது. இங்கு அனைத்தும் ஒரு நொடியில் சிதறுண்டு போகிறது. வெடிப்புகள் தீவிரமான அழுத்தம் மற்றும் வெப்பத்தை உருவாக்குவதால், சம்பவ இடத்தில் உள்ள அனைத்தும் சாம்பலாகிவிடுகின்றன. இதனால், நிபுணர்களின் பணி மேலும் கடினமாகிறது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்கிறார்கள். லோக்கார்ட்டின் கொள்கை (Locard’s principle) என்ன கூறுகிறது என்றால், ஒரு குற்றவாளி சம்பவ இடத்தில் ஏதோ ஒன்றை விட்டுச் செல்வான், மற்றும் வரும்போது ஏதோ ஒன்றைத் தன்னுடன் எடுத்து வருவான் என்று குறிப்பிடுகிறது. தடயவியலில் இவை இரண்டும் சாட்சியங்களாகச் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சந்தேக நபரைச் சம்பவ இடத்துடன் இணைக்கும் ஒரு மாதிரி இருக்க வேண்டும். அதன் மூலம் வெடிப்பின் தீவிரம், ஆதாரம், மற்றும் என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் ஊகிக்க முடியும் என்கின்றனர்


புகைப்படக் கலைஞர்களும் சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் இருந்து தளத்தின் படங்களை எடுக்கிறார்கள். மேலும், நிபுணர்கள் அதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரிக்கிறார்கள். இவை பல்வேறு பகுப்பாய்வு நிலைகளுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகின்றன. இவற்றுடன், சம்பவ இடத்தில் இருந்து எரிந்த பல்வேறு துண்டுகள் (இவற்றை நிபுணர்கள் எச்சங்கள் (debris) என்று அழைக்கிறார்கள்), உடைந்த காரின் பாகங்கள், கார்பன் தூள் போன்றவையும் சேகரிக்கப்படுகின்றன. இந்த மாதிரிகள் பின்னர் வெடிபொருள் நிபுணர்களால் ஆய்வகத்தில், பயன்படுத்தப்பட்ட வெடிபொருளுக்கான இரசாயனங்களின் வகையைத் தீர்மானிக்க, ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் (spectroscopic) மற்றும் குரோமடோகிராஃபிக் (chromatographic) நுட்பங்களைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.


சம்பவம் நிகழந்த இடத்தை ஆய்வு செய்யும்போது, ஏதேனும் மின்னணு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிவது அவசியமாகிறது.  ஏனெனில், ரிமோட் கண்ட்ரோல் வெடிப்புகளில், பொதுவாகச் சிறந்த செயல்பாட்டு நுட்பமான ஆட்டோ-டைமர் (auto-timer) பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், டெல்லி சம்பவத்தில் டைமர் (timer) அல்லது மின்னணு சுற்றோ (electronic circuit) எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.


என்ன மாதிரியான சோதனைகள் செய்யப்படுகின்றன?


ஆரம்பத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்த பிறகு, பின்னர் வெடிப்பு நிகழ்ந்த நேரத்தை நன்கு புரிந்துகொள்ள நிபுணர்கள் குற்றம்  நிகழந்த இடத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்கின்றனர். இதற்காக, நிபுணர்கள் Fourier Transform Infrared Spectroscopy (FTIR) ஆய்வு மற்றும் Attenuated Total Reflectance – Fourier Transform Infrared Spectroscopy (ATR-FTIR) ஆய்வு ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இந்தச் சோதனைகளில், தடயவியல் நிபுணர்கள் (forensic experts) சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எவ்வாறு அகச்சிவப்பு ஒளியுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கண்டறிய spectrum of the absorbed light பகுப்பாய்வு செய்கின்றனர்.


வெடிபொருட்களின் இரசாயன கலவை குறிப்பிட்ட துறைக்குரிய ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பியைப் (Raman spectroscopy) பயன்படுத்தி கண்டறியப்படுகிறது. வெடிப்புக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட துண்டுகளின் உருவ அமைப்பைப்  பகுப்பாய்வு செய்ய Advanced Scanning Electron Microscopy SEM பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம், எச்சங்களின் அடிப்படை பகுப்பாய்விற்காக Energy Dispersive X-ray - EDX நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிபொருட்கள் பற்றிய இரசாயன செயல்பாடு மற்றும் நிலைத்தன்மை போன்ற தகவல்களைத் தீர்மானிக்க விஞ்ஞானிகள் வெப்பப் பகுப்பாய்வையும் (thermal analysis) பயன்படுத்துகின்றனர்.


கூடுதலாக, எந்தவொரு வெடிப்பிலும் தீ ஒரு முக்கிய காரணியாகின்றது. அது எவ்வாறு பரவுகிறது, எவ்வளவு தூரம் பரவுகிறது, மற்றும் தீயினால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஆகியவை அனைத்தும் புள்ளிவிவரத் தரவுகளைச் சார்ந்துள்ளன. அதனால் தான், தீயின் மூலத்தையும், தீ இவ்வளவு அதிகமாகப் பரவக் காரணமான எந்தவொரு எரியக்கூடிய பொருளின் இருப்பையும் கண்டறிய நிபுணர்கள் லேசர் அடிப்படையிலான நிகழ்விட வரைபடமாக்கம் (laser-based scene mapping), flashpoint testing போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா  என்பதை நிபுணர்கள் தீர்மானிக்கின்றனர்.


வெடிபொருள் நிபுணர்கள் மட்டும்தான் இதில் ஈடுபட்டுள்ளார்களா?


தற்போதைய சம்பவத்தில், வாகனங்களின்  பங்கு மிக முக்கியமானது. எனவே, தாக்குதலில் ஈடுபட்டவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர, காரில் யாரேனும் ஏறியுள்ளார்களா அல்லது இறங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறிய, காரின் சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்ய ஒரு சைபர் தடயவியல் நிபுணரின் பங்கு அவசியாமகிறது.


மீண்டும், ஏதேனும் ஒரு விபத்தில், குறிப்பாக வெடிகுண்டு போன்ற திட்டமிட்ட கொடூரமான குற்றங்களில், குற்றச் செயலுக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கார்களின் எஞ்சின் எண் மற்றும் சேஸ் (வாகனத்தின் மற்ற பாகங்கள் பொருத்தும் உலோகச் சட்டகம்) எண் மாற்றப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.  எனவே, பொதுவாக எட்சிங் (etching) என்று அழைக்கப்படும் ‘வெப்ப வேதியியல் பரிசோதனையின்’ (‘thermochemical examination,’) உதவியுடன் காரின் உண்மையான எஞ்சின் எண் மற்றும் சேஸ் எண்ணைக் கண்டறிவது அவசியமாகிறது. பொதுவாக, புலனாய்வு நிறுவனம் இதற்காக ஒரு தடயவியல் இயற்பியலாளரைப் பயன்படுத்துகிறது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ பகுப்பாய்வு கட்டாயமாகின்றது. ஏனெனில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.


எனவே, ஒரு வெடிப்புச் சம்பவம் நடந்தால், புலன்விசாரணையாளர்களுக்குக் குற்றத்தைக் கண்டறிய உதவுவதற்கும் பல்வேறு ஆதாரங்களின் அறிவியல் பகுப்பாய்வு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஒரு தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் பல்வேறு பிரிவுகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகின்றது. 


ஷமீம் ஹக் மொண்டல், கொல்கத்தா மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சியாளர் ஆவார்.



Original article:

Share: