வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் குறைபாடுகள்… -பி.டி.டி. ஆச்சாரி

 வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன


தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா, குஜராத், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட சிறப்பு தீவிர திருத்தமானது (Special Intensive Revision (SIR)) சில மாநில அரசுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது. சிலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். முன்னதாக, ஜூன் மாதம் தொடங்கி பீகாரில் இதேபோன்ற ஒரு சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு சட்டமன்றத் தேர்தல் தற்போது தான் நிறைவடைந்துள்ளது.


இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் நடவடிக்கையை அவசரமாகச் செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்தன. 2024-ம் ஆண்டு சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு சுருக்கமான திருத்தத்திற்குப் பிறகு, விரைவில் மற்றொரு விரிவான திருத்தத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) உள்ள அதிகாரம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் சில இடைக்கால கருத்துகணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தாலும், அரசியலமைப்பு சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.


பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நியாயப்படுத்தும் அதே வேளையில், கடைசி திருத்தம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2002-03 ஆண்டில் பெரிய அளவிலான நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக மக்கள்தொகை மாற்றங்களுடன் நடத்தப்பட்டது. எனவே, மாநிலத்தின் தற்போதைய மக்கள்தொகை விவரக்குறிப்பை துல்லியமாகக் காட்ட ஒரு விரிவான திருத்தம் தேவை என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கூறியது.


நேரத்தின் பிரச்சினை


வாக்காளர் பட்டியலை விரிவாகத் திருத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. தீவிர திருத்தம் என்பது ஒரு பெரிய அளவிலான கணக்கெடுப்பை உள்ளடக்கியது. இதற்கு கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தரவுகளைச் சேகரித்து, உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைக் கையாள்வது மற்றும் மேல்முறையீடுகள் குறித்து முடிவு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். உண்மையில், 2003 மற்றும் 2024 ஆண்டுக்கு இடையில், மக்களவைக்கு ஐந்து பொதுத் தேர்தல்களும், மாநிலங்கள் மற்றும் ஓன்றியப் பிரதேசங்களில் பல தேர்தல்களும் நடந்துள்ளன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தவில்லை. இது விவரிக்க முடியாதது. எனவே, பீகார் தேர்தலுக்கு சற்று முன்பும், இப்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்பும் இந்திய தேர்தல் ஆணையம் ஏன் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்தத் தேர்ந்தெடுத்தது என்பது புதிராக உள்ளது.


நாட்டில் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950 இன் (Representation of the People (RP) Act) பிரிவு 21 இன் கீழ் கையாளப்படுகின்றன. இந்தப் பிரிவு மக்களவை அல்லது மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலுக்கு முன் பட்டியலைத் திருத்துவதற்கும், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் "எந்த வருடத்திலும்" திருத்துவதற்கும் ஆணையை வழங்குகிறது.


திருத்தங்கள் மற்றும் வாக்காளர் குடியுரிமை குறித்து


இந்திய தேர்தல் ஆணையம் (ECI) எந்தத் தொகுதியிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ சிறப்புத் திருத்தத்தை உத்தரவிட சட்டம் அனுமதிக்கிறது. இந்த விதியை கவனமாகப் படித்தால், பொதுத் தேர்தலுக்கு முன் திருத்தம் கட்டாயமாகும் என்பதைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையம் வழிகாட்டும் போது மட்டுமே மற்ற திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேர்தல் ஆணையம் அத்தகைய திருத்தங்களை உத்தரவிடுவதற்கான காரணங்களையும் பதிவு செய்ய வேண்டும்.


மேலும், 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) விதி 25 ஐ கவனித்தால், பிரிவு 21(2)(a) இன் கீழ் தேர்தலுக்கு முன் செய்யப்பட்ட பட்டியல் திருத்தம் சுருக்கமான தன்மை கொண்டது. ஆனால், பிரிவு 21(2)(b) இன் கீழ் எந்த வருடத்திலும் செய்யப்படும் திருத்தம் ஒரு புதிய பட்டியலைத் தயாரிப்பது போன்ற விரிவான அல்லது தீவிரமான செயல்முறையாகும்.


தீவிர திருத்தம் என்பது ஒரு விரிவான மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும். இது பொதுவாக பொதுத் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படாத ஆண்டுகளில் செய்யப்படுகிறது. ஏனெனில் தேர்தலுக்கு முன் செய்யப்படும் திருத்தம் அந்தத் தேர்தலுடன் தொடர்புடையது. எனவே, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் கீழ் அனுமதிக்கப்படவில்லை.


சிறப்பு தீவிர திருத்த (SIR) சூழலில் எழுந்துள்ள மற்றொரு முக்கியமான பிரச்சினையானது, வாக்காளர்களின் குடியுரிமையை நிரூபிக்க இந்திய தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களின் தன்மையாகும். அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ், ஒரு வாக்காளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். எனவே, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கும் நேரத்தில் குடியுரிமை பிரச்சினை முக்கியமானது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக இல்லை என்று ECI கருதுவதால், விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் கோரிய ஆவணங்களில் ஆதார் சேர்க்கப்படவில்லை.


இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவின் மூலம், வாக்காளரின் அடையாளத்தை நிறுவுவதற்கான ஆவணமாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டதன் மூலம் தீர்த்து வைத்தது. உண்மையில், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்திய குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தீர்மானிக்க அவற்றிற்கான அதிகாரங்கள் என்ன என்பதுதான்.


அரசியலமைப்பின் 5 முதல் 11 வரையிலான பிரிவுகள் மற்றும் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் (Citizenship Act) ஆகியவற்றால் குடியுரிமை நிர்வகிக்கப்படுகிறது. இவற்றின் கீழ், இந்திய குடியுரிமை பிறப்பு, வம்சாவளி, பதிவு மற்றும் இயற்கைமயமாக்கல் மூலம் பெறப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) சூழலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குடியுரிமை தொடர்பான சட்டம் உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) அல்ல. அரசியலமைப்புப் பிரிவு 326, ஒரு குடிமகன் மட்டுமே வாக்காளராக இருக்க முடியும் என்று கூறுகிறது. எனவே சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலுக்கான பட்டியலைத் தயாரிக்க பிரத்யேக அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்போது வாக்காளரின் குடியுரிமை பற்றிய கேள்வி மிக முக்கியமானது. ஆனால், தேர்தல் ஆணையம் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிக்கிறது? மேலும், குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியுமா?


குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைக் குறிப்பிடும் அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அல்ல. இதை, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். உண்மையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆவணங்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால்  சரிபார்க்க முடியும். குடியுரிமை தொடர்பான கேள்விகளை தீர்க்கவும் அல்லது இந்த நோக்கத்திற்காக சில ஆவணங்களை நிராகரிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுவது சட்டப்பூர்வமாக சரியானதல்ல. ஆனால் பிரச்சனை என்னவென்றால், உள்துறை அமைச்சகம் இதுவரை வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களின் விரிவான பட்டியலை அறிவிக்கவில்லை. உண்மையில், அரசியலமைப்புப் பிரிவு 326 மறைமுகமாக அரசாங்கம் அத்தகைய ஆவணங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கோருகிறது. அத்தகைய பட்டியல் இல்லாத நிலையில், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்கிறது. உள்துறை அமைச்சகத்திடம் உள்ள அதிகாரத்தை தேர்தல் ஆணையம் எவ்வாறு பயன்படுத்த முடியும்?


ஒரு முக்கிய முடிவு


சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு (SIR) பீகாரில் எத்தனை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது இன்னும் தெரியவில்லை. இவர்கள் 2024ஆம் ஆண்டு வரை ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள். ஆனால், பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேவைப்படும் ஆவணங்களைக் காட்ட முடியாததால் குடிமக்கள் அல்லாதவர்களாகக் குறிக்கப்பட்டனர். இந்த சூழலில், லால் பாபு ஹுசைன் மற்றும் பிறர் vs தேர்தல் பதிவு அதிகாரி மற்றும் பிறர்-1995 (Lal Babu Hussein and Others vs. Electoral Registration Officer and Others) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. ஒரு நபரின் பெயர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தால், அந்தப் பெயரைச் சேர்ப்பதற்கு முன்பு ஒர் அதிகாரி அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றியதாகக் கருத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


அரசியலமைப்புப் பிரிவு 14, அரசு அல்லது அதன் நிறுவனங்களின் எந்தவொரு தன்னிச்சையான நடவடிக்கையையும் தடை செய்கிறது. பிரிவு 21, எந்தவொரு தனி  நபரின் சுதந்திரத்தையும் பறிப்பதைத் தடை செய்கிறது. எனவே, சட்ட மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகள் இந்த அரசியலமைப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.


P.D.T. ஆச்சாரி, மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.



Original article:

Share: