இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள்: அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சிறுபான்மையினம்

 அரசியல் கட்சிகள் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த நீதிபதி நாகரத்னாவின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.


2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி நாகரத்னா சொல்வது சரிதான். மக்கள்தொகையில் ஏறக்குறைய 48 சதவீதம் பெண்கள் உள்ளனர். மேலும், ஒட்டுமொத்தமாக, பல சமூக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாட்டை அவர்களும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, நீதித்துறை உட்பட பொது அமைப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக, இதுவரை உச்ச நீதிமன்றத்தின் 284 நீதிபதிகளில் 11 பேர் மட்டுமே பெண்களாக இருந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் அரசியல் சமத்துவத்தை உறுதியளிக்கிறது. இது வாக்களிக்கும் உரிமையைத் தாண்டி, வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கியதாக விரிவடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இந்த இரண்டு அம்சங்களிலும் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதை நீதிபதி சுட்டிக்காட்டுகிறார். பாலின சமத்துவம் குறித்து பெண்கள் சமத்துவம் மற்றும் அதிகாரமளிப்புக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தரவுகளின்படி, உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்கில் சராசரி விகிதம் 27 சதவீதமாக  இருக்கும்போது, இந்தியாவில் அது 14 சதவீதம் மட்டுமே உள்ளது.


நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா (Nari Shakti Vandan Adhiniyam) நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இந்தச் சட்டம் தொகுதிகளின் மறுவரையறைக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனையுடன் முன்மொழியப்பட்டுள்ளது.  ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னரே மறுவரையறை நடைபெறும். மேலும், அந்தக் கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டில் மட்டுமே நிறைவடையும் என்பதால், நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். சட்டத்தின் இந்த நடைமுறை அம்சத்தை பிடித்துக் கொண்டிருப்பது, சட்டமன்றங்களில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாறாக, அரசியல் கட்சிகள் தாங்களாகவே அதிகப் பெண் வேட்பாளர்களை நிறுத்த முற்படலாம் என்று வலியுறுத்துகிறார். உண்மையில், பிஜு ஜனதா தளம் (BJD) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் இந்தப் பாதையைப் பின்பற்றி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன: 18-வது மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 சதவீதம் பேர் (30-ல் 11 பேர்) பெண்கள் ஆவர். 17-வது மக்களவையில் பிஜு ஜனதா தளத்தின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 42 சதவீதம் பேர் (11-ல் 5 பேர்) பெண்கள் ஆவர். (2024 பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை). அதேபோல, நிதிஷ் குமார் அவர்கள் 2006ஆம் ஆண்டில் பீகாரில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். ஆனால், அவரும் அந்தக் கொள்கையை சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் செயல்படுத்துவதில் தயக்கம்காட்டி வருகிறார்.  


சிறப்பு சலுகைகளுக்கு பெண் வாக்காளர்கள் நன்றாக வாக்களிப்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. எனவே, அவர்கள் இப்போது பெண்களை ஒரு வாக்கு வங்கியாகப் பார்க்கிறார்கள். ஆனால், இது மட்டும் போதுமான நடவடிக்கையாக இருக்காது. அரசியலில் பெண்களுக்கு உண்மையான அதிகாரத்தையும் சமமான பிரதிநிதித்துவத்தையும் வழங்குவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இது பெண்களின் அரசியல் சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதற்கான அவர்களின் உரிமை பற்றியது என்றும் ஆண் அரசியல் தலைவர்கள் அதிக வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதி நாகரத்னா வலியுறுத்துகிறார்.



Original article:

Share: