வழக்கறிஞர்கள் கட்சிக்காரரின் ரகசியத்தை வெளிப்படுத்த முடியுமா? -கார்த்திகேய் சிங், முகுலா ஷர்மா

 ஒரு வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்கும்  இடையிலான ஆலோசனை ஒரு சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்பா? ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கூறியதை வெளியிடக்கூடிய மூன்று சூழ்நிலைகள் எவை? இந்த சாட்சியச் சிறப்புரிமையாகப் பாதுகாப்பது ஏன் முக்கியம்? ஒரு வழக்கறிஞர் அரசியலமைப்புச் செயல்பாட்டாளரா?


தற்போதைய செய்தி: அக்டோபர் 31 அன்று, உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வழக்கறிஞர்களின் முக்கிய பங்களிப்பை உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய், மற்றும் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு வழக்கறிஞர், ஒரு குற்றத்தைச் செய்ய அல்லது மறைக்க சட்ட ஆலோசனை பயன்படுத்தப்படும் சூழல்களைத் தவிர, ஒரு கட்சிக்காரர் என்ன சொன்னார் என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அழைக்கப்பட முடியாது என்று கூறியது. அகமதாபாத் உதவி காவல் ஆணையர், ஒரு வழக்கறிஞருக்கு அறிவிப்பாணைஅனுப்பியதை தொடர்ந்து, நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்தது. அவர் வாதிடும் ஒரு குற்றவியல் வழக்கு பற்றிய தகவலை வழங்குமாறு காவல்துறை வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது. இந்த நடவடிக்கை 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டது.


சிறப்புரிமை பெற்ற தகவல் தகவல்தொடர்புகள் (privileged communications) என்றால் என்ன?


சிறப்புரிமை பெற்ற தகவல்தொடர்புகள் (Privileged Communications) என்பது, வழக்கறிஞர்-கட்சிக்காரர், கணவன்-மனைவி போன்ற சில பாதுகாக்கப்பட்ட உறவுகளுக்கு இடையிலான ரகசிய பரிமாற்றங்களைக் குறிக்கும். இவை சட்டத்தால் நீதிமன்றத்தில் சாட்சியமாக வெளிப்படுத்தப்படுவதிலிருந்து அல்லது கட்டாயப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதன் அடிப்படைக் கொள்கை, நேர்மையையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதாகும், இதன்மூலம் நீதியையும் நெறிமுறைப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது. 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்த பாதுகாப்புகளை பிரிவு 128 முதல் 134 வரை கோடிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, பிரிவு 128 'திருமண தொடர்புகளை' பாதுகாக்கிறது. திருமண உறவை முறித்துக் கொண்டபிறகும், அதைச் செய்த நபரின் அனுமதியின்றி, 'திருமணத்தின் போது' செய்யப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும் வெளிப்படுத்தும்படி வாழ்க்கைத் துணைவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதையோ அல்லது அனுமதிக்கப்படுவதையோ தடுக்கிறது. ஒருவர் மீது மற்றொருவருக்கு எதிரான குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு இடையேயான வழக்குகளிலோ தவிர, அதைச் செய்த நபரின் அனுமதியின்றி கருத்து கூறுவதை தடுக்கிறது. அதேபோல், தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக, துறை ஒப்புதல் இல்லாமல் மாநில விவகாரங்கள் தொடர்பான வெளியிடப்படாத அதிகாரப்பூர்வ பதிவுகளை வெளியிடுவதை பிரிவு 129 தடை செய்கிறது. மேலும், பிரிவு 132-ன் கீழ் உள்ள வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை (advocate-client privilege) வழக்கறிஞர்கள் தொழில்முறைத் தகவல்தொடர்புகளை வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது.


உச்சநீதிமன்றம் என்ன கூறியது?


மாநிலம் வழக்கறிஞர்-கட்சிக்காரர் உறவில் தலையிடும்போது, அது குடிமகனின் சமமான பிரதிநிதித்துவ உரிமையை (right to equitable representation) ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் நீதி முறையின் நியாயமான விசாரணை மற்றும் சட்டத்தின் ஆட்சி (rule of law) ஆகியவற்றின் அமைப்பு நேர்மையை பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது. பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் சட்டத்தின் பிரிவு 132, ஒரு வழக்கறிஞர் தொழில்முறை பணியின்போது அவருக்கு அளிக்கப்பட்ட எந்தவொரு தகவல்தொடர்பையும், பணி முடிந்த பிறகும், வெளியிடக் கூடாது என்று கூறுகிறது. ஆனால், அதில் மூன்று விதிவிலக்குகள் உள்ளன: (1) வாடிக்கையாளர் அதற்கு ஒப்புதல் அளித்தால்; (2) தகவல்தொடர்பு சட்டவிரோத நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருந்தால்; (3) வேலைவாய்ப்பின்போது நடத்தப்படும் குற்றச் செயல்பாட்டை வழக்கறிஞர் கவனித்தால் தகவலை வெளிப்படுத்தலாம். இருப்பினும், தகவல்தொடர்புகளை தனிப்பட்டதாக வைத்திருக்கும் உரிமை கட்சிக்காரருக்கு சொந்தமானது என்றாலும், வழக்கறிஞர் அமைதியாக இருந்தால் மட்டுமே அதைப் பாதுகாக்க முடியும். இந்த அமைதி பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களை மட்டுமல்ல, - பாலியல் வன்முறைக்கு  எதிராக புகாரளிக்கும் பெண்கள், கடுமையான காப்பீட்டு நிறுவனங்களுடன் விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் காவலில் உள்ள மக்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களையும் பாதுகாத்துள்ளது 3.9 லட்சம் குடிமக்கள் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஒரு நீதி அமைப்பில், தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும் இந்த உரிமை, அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள நியாயமான வாய்ப்பைப் (fair defence alive) பெறுவதை உறுதி செய்ய உதவுகிறது.


ஒரு வழக்கில் பணியாற்றியதற்காகவோ அல்லது ஆலோசனை வழங்கியதற்காகவோ காவல்துறையினரோ அல்லது புலனாய்வாளர்களோ ஒரு வழக்கறிஞரை விசாரணைக்கு அழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிவு 132-ல் உள்ள சிறப்பு விதிகளுக்கு வழக்கு பொருந்துகிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் இருந்தால் மட்டுமே அவர்கள் இதைச் செய்ய முடியும். இது சில தகவல்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும் வழக்கறிஞரின் உரிமையைப் பாதுகாக்கிறது.


மேலும், பிரிவு 132-ன் பாதுகாப்பை, பிரிவு 20(3)-ன் சுய குற்றச்சாட்டிற்கு எதிரான உத்தரவாதத்துடன் இணைப்பதன் மூலம், தீர்ப்பு ஒரு வழக்கறிஞரின் செயல்பாட்டின் முக்கிய அங்கமான அரசியலமைப்பின் சிறப்புரிமையை உறுதிப்படுத்துகிறது. ஒரு குடிமகனை வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்த முடியாவிட்டால், அதே தகவலைப் பெறுவதற்காக அரசாங்கமும் அவரது வழக்கறிஞரை தனிப்பட்ட தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்த முடியாது.


வழக்கறிஞரின் பங்கு பற்றி?


தீர்ப்பின் மூலம், ஒரு வழக்கறிஞர் ஒரு தனியார் முகவர் மட்டுமல்ல, சட்ட பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாக்க உதவும் ஒரு 'அரசியலமைப்பு பாதுகாவலர்' என்று உச்சநீதிமன்றம் கூறியது. வழக்கறிஞர்-கட்சிக்காரர் சிறப்புரிமை என்பது வழக்கறிஞர்களுக்கு ஒரு நன்மையோ அல்லது சட்டத்திற்கு மேலே அவர்களை வைப்பதற்கான ஒரு வழியோ அல்ல -இது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாதுகாப்பாகும். நீதிமன்றம் இதை தெளிவுபடுத்தியது: இந்த சிறப்புரிமை "குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது." அரசாங்கம் ஒரு வழக்கறிஞரை கட்சிக்காரர் தகவல்களை வெளியிட கட்டாயப்படுத்தினால், அது அந்த வழக்கறிஞரை விருப்பமில்லாத சாட்சியாக மாற்றுகிறது, தற்காப்பு மற்றும் வழக்குத் தொடர்தலுக்கான இடையிலான பிரிவை நீக்குகிறது. நீதிமன்றம் இதை ரகசிய தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கும் விதியின் தெளிவான மீறல் என்று கூறியது. இது பிரிவு 21-ன் கீழ் நியாயமான தற்காப்புக்கான உரிமை (fair defence) மற்றும் பிரிவு 14-ன் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமம் (equality before law) என்ற வாக்குறுதி இரண்டையும் பாதிக்கிறது.


தீர்ப்பு ஏன் முக்கியம்?


இந்தத் தீர்ப்பு மறைமுகமாக பயனுள்ள சட்டப் பிரதிநிதித்துவ உரிமையை வலுப்படுத்துகிறது. இது உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக பிரிவு 21 மற்றும் பிரிவு 22(1)-ல் வாசித்து வரும் உரிமையாகும். எம்.ஹெச். ஹோஸ்கோட் vs மகாராஷ்டிரா மாநிலம் (1978) மற்றும் ஹுசைனாரா கட்டூன் vs பீகார் மாநிலம் (1980) போன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி, ஆலோசனை இல்லாத சுதந்திரம் பெயர்  அளவிலான சுதந்திரம் என்பதை நினைவூட்டுகிறது. விசாரணை அமைப்புகள் பத்திரிகையாளர்கள், வரி ஆலோசகர்கள், வழக்கறிஞர்களையும் “விசாரணைக்கு உதவ” வழக்கமாக அழைக்கும் காலத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்திற்கு அதன் புலனாய்வு அதிகாரத்திற்கு வரம்புகள் உள்ளன என்பதை நினைவுப்படுத்துகிறது. பாரதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)) சட்டத்தின் பிரிவு 179, சாட்சிகளை அழைக்க காவல்துறைக்கு அனுமதி அளித்தாலும், கட்சிக்காரரின் ரகசிய தகவல்களை வெளியிட ஒரு வழக்கறிஞரை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது.


கார்த்திகே சிங் மற்றும் முகுலா சர்மா ஆகியோர் புது டெல்லியை தளமாகக் கொண்ட வழக்கறிஞர்கள்.



Original article:

Share: