தீர்ப்பாயங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேயான முரண்பாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? -வினீத் பல்லா

 தொடரும் வழக்கு இந்தியா முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை பாதித்துள்ளது, இதற்கு முன்பு உச்சநீதிமன்றம் நீதித்துறை சார்ந்த அமைப்புகள் (quasi-judicial bodies) “கிட்டத்தட்ட செயலிழந்து” விட்டதாக கருத்து தெரிவித்திருந்தது.


தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், 2021-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் விசாரணையில், கடந்த வாரம் கடுமையான விவாதங்கள் நடந்தன. தீர்ப்பாயங்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் மோதலை இந்த விவாதம் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.


கடந்த வியாழக்கிழமை, நவம்பர் 6-ஆம் தேதியன்று  இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்த நடவடிக்கையை "நீதிமன்றத்திற்கு மிகவும் நியாயமற்றது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை சட்ட ஆலோசகர் (Attorney General) ஆர். வெங்கடரமணிக்கு இதற்கு முன்பு இரண்டு முறை இடமளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.


நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த தலைமை நீதிபதி, இந்தக் கோரிக்கையின் நேரத்தையும் கேள்வி எழுப்பினார். "(நவம்பர்) 24-ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் அதைத் தொடர விரும்பினால், நீங்கள் வெளிப்படையாக எங்களிடம் சொல்லுங்கள்," என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர், கடந்த திங்கட்கிழமை நடந்த விசாரணையின்போது, வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஒன்றிய அரசு விடுத்த கோரிக்கையை, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கே.வி. சந்திரன் அடங்கிய அமர்வைத் தவிர்ப்பதற்கான ஒரு "தந்திரம்" என்று விவரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு அவசரச் சட்டம், ஒரு சட்டம் மற்றும் ஒரு சவால்


தற்போது நடந்துவரும் வழக்கு, நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களைப் பாதித்துள்ளது. தீர்ப்பாயங்கள் என்பவை வரிவிதிப்பு மற்றும் பெருநிறுவனச் சட்டம் முதல் நிர்வாக விஷயங்கள் வரையிலான பல்வேறு துறைகளில் உள்ள சர்ச்சைகளுக்கு விரைவான மற்றும் சிறப்புத் தீர்வை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த (quasi-judicial) அமைப்புகளாகும். இதன் மூலம் மற்ற நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் பணிச்சுமை குறைக்கப்படுகிறது.


செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில், மதராஸ் வழக்கறிஞர் சங்கம் (Madras Bar Association (MBA)), தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை "சட்டமன்ற ரீதியாக மீறுவதற்கான" நேரடி முயற்சி என்றும், அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் தெரிவித்தது. 


ஒரு முந்தைய அவசரச் சட்டத்தின் அதே விதிகளின் மீது இந்தச் சவால் கவனம் செலுத்தியது. அந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ஜூலை 2021-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது. தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்தது மற்றும் அவர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச வயதை 50 ஆண்டுகளாக நிர்ணயித்தது ஆகியவைதான் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 


நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கண்டறிந்த அதே சட்டவிதிகளை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம், நீதிமன்றம் சுட்டிக்காட்டிய சட்ட அடிப்படையையோ அல்லது "குறைபாட்டையோ" நீக்காமல், நாடாளுமன்றம் ஒரு நீதித்துறை தீர்ப்பை ரத்து செய்துள்ளது என்று சங்கம் வாதிட்டது. இது நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப் பிரிவினையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகிறது என்றும்  வலியுறுத்தியுள்ளது


தீர்ப்பாயங்கள் மீதான நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின்னால்


இந்த வழக்கு, 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்துடன் தொடங்கிய சட்டமன்ற மற்றும் நீதித்துறை விவாதத்தின் சமீபத்திய அத்தியாயமாகும்.  தீர்ப்பாயங்களுக்கான விதிகளை வகுக்க அந்தச் சட்டம் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளித்தது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விதிகள், நீதித்துறை சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக்கூறி, 2019-ஆம் ஆண்டு ரோஜர் மேத்யூ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் அந்தச் சட்டவிதிகள் ரத்து செய்யப்பட்டன.


2020-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு புதிய விதிகளை அறிவித்தபோது, அவை மீண்டும் மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின்  (Madras Bar Association (MBA)) சார்பில் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், தீர்ப்பாய உறுப்பினர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஐந்து ஆண்டு பதவிக்காலம் உட்பட உச்சநீதிமன்றம் பல திருத்தங்களைப் பரிந்துரைத்தது. குறுகிய பதவிக்காலம் தகுதியான வேட்பாளர்களை ஊக்கப்படுத்தாது என்றும் நிர்வாகத் தலையீட்டை அதிகரிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 


இருப்பினும், ஒன்றிய அரசு ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டில் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அந்தச் சட்டமானது, பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்ததுடன், நியமனத்திற்கான குறைந்தபட்ச வயதை 50 ஆண்டுகளாகவும் நிர்ணயித்து சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த இரண்டு விதிகளையும் “தன்னிச்சையானவை” மற்றும் அதிகாரப் பிரிவினைக்கு முரணானவை என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்ததும் தீர்ப்பாயம் குறித்த விதிமுறைகளில் மோதலுக்கு வழிவகுத்தது.


இதற்குப் பதிலடியாக, நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த அதே விதிகளை மீண்டும் சட்டமாக்கி, நாடாளுமன்றம் ஒரு மாதம் கழித்து தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டத்தை (Tribunals Reforms Act) நிறைவேற்றியது மீண்டும் விவாதத்தைக்  கிளப்பியது.


வாதங்கள்


மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கம் தலைமையிலான மனுதாரர்கள், நான்கு ஆண்டு பதவிக்காலம் தீர்ப்பாய உறுப்பினர்களை பாதுகாப்பற்றவர்களாகவும், நிர்வாக அழுத்தத்திற்கு ஆளாகக்கூடியவர்களாகவும் ஆக்குகிறது என்று வாதிட்டனர். மேலும், 50 வயது வரம்பு வெற்றிகரமான இளைய வழக்கறிஞர்களை பரிசீலிப்பதில் இருந்து தன்னிச்சையாக விலக்குகிறது என்றும், ஒருவர் குறைந்த வயதில் உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.


ஒன்றிய அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியதாவது, வயது வரம்பு வேட்பாளர்களுக்குப் போதுமான அனுபவம் இருப்பதை உறுதி செய்கிறது என்றும், நான்கு வருட பதவிக்காலம், மீண்டும் நியமனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் இணைந்து, போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


மேலும், இந்தச் சட்டம் பாராளுமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்ட “முழுமையான கொள்கை” விஷயம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த விதிகளை ரத்து செய்வதன் மூலம், நீதித்துறை அதிகாரப் பிரிவினையை மீறுவதாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பின்விளைவு


நியமனங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள் குறித்த மோதல்கள் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதில் நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டின் முதல் அரசாங்க தரவு, முக்கிய தீர்ப்பாயங்களில் குறிப்பிடத்தக்க காலியிடங்களைக் காட்டியது: அனுமதிக்கப்பட்ட 32 நபர்களைக் கொண்ட தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திலும், அனுமதிக்கப்பட்ட 34 நபர்களைக் கொண்ட ஆயுதப்படை தீர்ப்பாயத்திலும் தலா 24 காலியிடங்கள் இருந்தன.


வருமான வரி மேல்முறையீட்டுச் சட்டத் தீர்ப்பாயத்தில், 63 நீதித்துறை உறுப்பினர் பதவிகளில் 18 பதவிகள் காலியாக இருந்தன. ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தில், துணைத் தலைவர் (நீதித்துறை) பதவிகள் இரண்டும் நிரப்பப்படவில்லை, அதேபோல் 20 நீதித்துறை உறுப்பினர் பதவிகளில் 16 பதவிகளும் நிரப்பப்படவில்லை. இதேபோல், ஒன்றிய அரசு தொழில் தீர்ப்பாயம், தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய தொழில் தீர்ப்பாயங்களில், அனுமதிக்கப்பட்ட பலமான 22 பதவிகளுக்கு எதிராக 13 தலைமை அலுவலர்கள் மட்டுமே இருந்தனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 

 

நியமனங்களில் ஏற்படும் தாமதங்கள் தீர்ப்பாயங்களை "நடைமுறையில் செயலற்றதாக" ஆக்கியுள்ளதாக உச்சநீதிமன்றமே முன்பு கருத்து தெரிவித்துள்ளது.



Original article:

Share: