இந்திய வாக்காளர் பட்டியலில் உள்ள கடுமையான சிக்கல்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது, ஆனால் அதன் சிகிச்சைமுறை நோயின் பாதிப்பைவிட மோசமாக இருக்கக்கூடாது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இரண்டு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான பதிவு எண் இல்லை. அதேபோல், இந்தியாவில் 20 கோடி நபர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். எந்த இரண்டு நபருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிம எண் இல்லை. ஒவ்வொரு எண்ணும் தனித்துவமானது. ஒரே நபரிடம் பல ஓட்டுநர் உரிமங்கள் இருக்கலாம் (சட்டவிரோதமானது என்றாலும்), ஆனால் ஒவ்வொரு ஓட்டுநர் உரிம எண்ணும் தனித்துவமானது.
ஒவ்வொரு வாகனப் பதிவு எண் அல்லது ஓட்டுநர் உரிம எண் அல்லது எந்த அடையாள அட்டை எண்ணும் தனித்துவமானது என்பதும், இரண்டு பதிவுகளும் ஒரே எண்ணைக் கொண்டிருக்க முடியாது என்பதும் வெளிப்படையான ஒன்று. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாக்காளர் பட்டியல்களில் இந்த எளிய மற்றும் அடிப்படைக் கொள்கை மீறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில வாக்காளர்களைப் போலவே வங்காளத்தில் உள்ள வாக்காளர்களுக்கும் அதே வாக்காளர் அடையாள எண் உள்ளது. இந்தப் போக்கு பல மாநிலங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 2008-ஆம் ஆண்டில், அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகளை (Electoral Photo Identity Card (EPIC)) வழங்கியதாக பெருமையாகக் கூறினார். எந்தவொரு அடையாள அமைப்பிற்கும் மிக அடிப்படையான விதி, அடையாள எண் தனித்துமானதாக இருக்க வேண்டும், பலருக்கு ஒரே எண் இருக்கக்கூடாது என்பதை அவர் அறியவில்லை போலிருக்கிறது என்று விமர்சிக்கப்படுகின்றனர்.
பெரும் கவலைக்கு காரணம்
இது இன்னும் மோசமாகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை, படிவம் 8-ஐப் பயன்படுத்தி வேறு எண்ணாக மாற்ற முடியும். பின்னர், மாற்றபட்ட எண்ணையும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கான ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி, உங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இது அவ்வளவு எளிமையானது. இப்படித்தான் கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் 6,000 உண்மையான வாக்காளர்களை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்ற தகவலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2025, செப்டம்பர் 18-ஆம் தேதி அம்பலப்படுத்தினார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவரது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த தேர்தல் ஆணையம், அமைதியாகவும் மறைமுகமாகவும் இந்த செயல்முறையை மாற்றியது. இப்போது ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணை மட்டுமே பயன்படுத்துகிறது. இது வரவேற்கத்தக்க மற்றும் நேர்மறையான மாற்றமாக இருந்தாலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இந்த நடவடிக்கை எந்தவிதமான முன்னறிவிப்பு அல்லது விவாதமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது இந்திய தேர்தல் ஆணையம் அதன் வாக்காளர் பட்டியல் மேலாண்மை அமைப்பில் உள்ள குறைபாடுகளைத் தெளிவான மற்றும் உள்ளார்ந்த முறையில் ஒப்புக்கொள்வதாகும். இந்தக் குறைபாடுகள் தேர்தல் முடிவுகளைக் கையாளவும் திரித்துப் பாதிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
நவம்பர் 5-ஆம் தேதி 2025, அன்று ராகுல் காந்தி கூறியுள்ளபடி, இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் நகல், போலி மற்றும் உண்மையில் இல்லாத வாக்காளர்களால் நிறைந்துள்ளன என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. தனித்துவமான வாக்காளர் அடையாள எண்கள் இல்லாதது மற்றும் வாக்காளர் விவரங்களை யாரையும் மாற்ற அனுமதிப்பது என்பது தரவுத்தளங்கள் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட இளம் வயது மென்பொறியாளர்கூட செய்யாத அடிப்படை அமைப்பு பிழைகள் என்று கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் அதன் தரவுத்தள மேலாண்மை திறன்களில் மிகவும் திறமையற்றது என்பது தெளிவாகிறது. வாக்காளர் பட்டியல் இந்தியாவின் மிக முக்கியமான தரவுத்தளமாக இருப்பதால் இது கவலைக்குரிய ஒன்றாகும். இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் சரிசெய்யப்பட்டு, மிகவும் திறமையான நபர்கள் மற்றும் செயல்முறைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டியது என்பது தெளிவாகிறது.
பீகார் வழியில் சிறப்பு தீவிர திருத்தம் மோசமானது.
இந்தச் சூழலில், வாக்காளர் பட்டியல்களைத் சரிசெய்ய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR) என்ற நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்தியாவின் வாக்காளர் பட்டியல்களைத் சரிப்படுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஆரம்பத்தில் இருந்து பட்டியலைச் சிக்கலாக்கிய அதே அதிகாரிகளிடமே, அதே நடைமுறையின்கீழ் இந்தச் சரிசெய்யும் பணியை ஒப்படைக்க முடியுமா?. தலைமைத் தேர்தல் ஆணையர் நடத்திய செய்தியாளர் சந்திப்புகளில் காணப்படுவது போல், இந்தியத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவே ஒருபக்கச் சார்புடையதாகவும் மற்றும் கட்சி சார்ந்ததாகவும் செயல்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல்களைச் சுத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்துவதற்குகெனச் சொந்த நடைமுறைகள் மற்றும் விதிகளைக் கொண்டுவரத் தேவையான நம்பிக்கையும் தகுதியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இந்தப் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒவ்வொரு அடியிலும் ஈடுபடுத்தி, ஒரு கூட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, பீகார் பாணியிலான சிறப்பு தீவிர திருத்தம் மற்ற மாநிலங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வழி அல்ல என்கின்றனர். பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கை தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இருந்தது என்றும் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீக்குதல் என்ற தவறான காரணத்தின் அடிப்படையில் உண்மையான வாக்காளர்களை நீக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரப்படுத்தப்பட்டது.
இரண்டாவதாக, தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கு ஆதார் அடையாள அட்டை அடிப்படையாகவும் ஒருங்கிணைந்ததாகவும் உள்ளது. ஆனால், ஆதார் பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே குழப்பத்தையும் தவறான கருத்துகளையும் உருவாக்கி வருகிறது. ஆதார் குடியுரிமைக்கு ஆதாரமல்ல எனவும், எனவே அதைப் பயன்படுத்த முடியாது எனவும் கூறுகிறது. இது உண்மைதான். ஆதார அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒவ்வொரு வாக்காளரும் ஆதார் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதார் இணைப்பு மூலம் வாக்காளர் பட்டியலில் நகல், போலி மற்றும் உண்மையற்ற பதிவுகளை நீக்குவது மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த முறையாகும். ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான மற்றும் மாற்ற முடியாத ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்கும் சிறந்த முறையாகும். ஆதார் மற்றும் நகல் நீக்கத்திற்கான தேவையை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதன் மூலம், தேர்தல் ஆணையம் தொழில்நுட்பரீதியாக அறியாமையாகவோ அல்லது வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்தோடோ செயல்படுகிறது என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.
மூன்றாவதாக, உண்மையான வாக்காளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைப் பதிவுசெய்ய வேண்டும். வாக்காளர்களை இணையவழியில் படிவங்களைப் பதிவிறக்கம் செய்யச் சொல்வதன் மூலமோ அல்லது ஒரு மையத்திலிருந்து அவற்றைச் சேகரித்து தாங்களாகவே பதிவு செய்யும் முறையிலோ நடந்திடக்கூடாது. வாக்காளர்கள் தங்களிடம் வரச் சொல்வதற்குப் பதிலாக, பீகாரில் செய்தது போல, இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர்களைத் தேடிச் செல்ல வேண்டும். தெலுங்கானா போன்ற ஒரு மாநிலம், இரண்டு மாதங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 3.5 கோடி மக்களுக்கு முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பைச் செய்ய முடியுமென்றால், இந்தியத் தேர்தல் ஆணையமும் இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும். எந்தவொரு உண்மையான வாக்காளரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான். பீகாரில் செய்தது போல, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த வேலையை ஒரு மாதத்தில் அவசர அவசரமாக முடிக்க முடியாது என்பதையும் இது குறிக்கிறது. பீகாரில் செய்தது போல் ஒரு மாதத்தில் இந்தப் பயிற்சியை ECI அவசரமாகவும் மோசமான முறையிலும் செய்ய முடியாது என்பதையும் இது குறிக்கிறது. தூய்மையான வாக்காளர் பட்டியல்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் அடிப்படையானவை என்பதால் இந்தத் தீவிர திருத்தப் பணியை அவசரமாகவும், மோசமான முறையிலும் தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது.
எதிர்க்கட்சிகள் சொல்வதைக் கேளுங்கள்
சிறப்பு தீவிர திருத்தப்பணி செயல்முறையில் அரசியல் கட்சிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் புகார்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் வாக்களிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அனைத்து எதிர்க்கட்சிகளும் போலி வாக்காளர்கள் பெருமளவில் சேர்க்கப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்குக் கூட்டுக்கடிதம் ஒன்றை எழுதின. ஆனால், இது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் 75 லட்சம் புதிய மற்றும் மர்மமான வாக்குகள் எவ்வாறு பதிவானது என்பது புதிராக உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக, பெரும்பான்மையைப் பெற மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குச் சரியாக 75 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் புகாரை இன்னும் தீவிரமாக பரிசீலித்திருந்தால் மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும்.
தேர்தல் ஆணையம் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் ஒரு கேலிக்கூத்தாக இருக்கின்றன. அங்குத் தேர்தல் ஆணையம் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்பதாகக் கூறி, பின்னர் அதன் சொந்த விதிகள் மற்றும் நடைமுறைகளை மட்டுமே வெளியிடுகிறது. மாநிலத் தலைநகரில் உள்ள மாநிலத் தலைமையிலிருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சாவடியிலும் - அனைத்து மட்டங்களிலும், ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்கப்படும் ஒரு செயல்முறையாக சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை இருக்க வேண்டும். இந்தக் கூட்டங்கள் காணொளிப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் அளிக்கும் பரிந்துரைகள், புகார்கள் மற்றும் யோசனைகள் தெளிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் மிக முக்கியமான மற்றும் வலுவான கோரிக்கை என்னவென்றால், சிறப்பு தீவிர திருத்த செயல்முறைக்குப் பிறகு, புகைப்பட வாக்காளர் பட்டியலின் இறுதி, ஒருங்கிணைந்த மற்றும் இயந்திரம் படிக்கக்கூடிய டிஜிட்டல் நகலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கை.
தேர்தல் ஆணையம் திடீரென ஒரு நாள் விழித்தெழுந்து, சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. 2024-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் ஹரியானாவில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தெளிவான முரண்பாடுகளை அம்பலப்படுத்திய பிறகு, தேர்தல்களை பாதிக்கும் வகையில் இந்தியாவின் வாக்காளர் பட்டியல்கள் கையாளப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. நாட்டின் வாக்காளர் பட்டியலில் உள்ள கடுமையான சிக்கல்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய நடவடிக்கையெடுப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் சிகிச்சைமுறை என்பது நோயின் பாதிப்பைவிட மோசமானதாக இருக்கக்கூடாது. பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு மோசமான யோசனை என்பதை தலைமைத் தேர்தல் ஆணையர் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய வல்லுநர் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வுத் தலைவராக உள்ளார்.