வரவிருக்கும் வருமான கணக்கெடுப்பு எதிர்கொள்ளும் சவால்கள் -விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 வரவிருக்கும் குடும்ப வருமான கணக்கெடுப்பு (Household Income Survey), இந்திய குடும்பங்களின் வருமானம், செலவுகள் மற்றும் மாறிவரும் இயக்கவியல் ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், துல்லியமான வருமானத் தரவுகளைச் சேகரிப்பது என்பது சவாலாகவே உள்ளது. ஏனெனில், கேள்விகளின் உணர்ச்சிகரமான தன்மை காரணமாக, பலர் அவற்றை பதிலளிக்க கடினமான ஒன்றாகக் கருதலாம்.


குடும்ப வருமான கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்படவுள்ளது. இது இந்தியாவில் உள்ள குடும்பங்கள் எவ்வாறு செலவுகளைச்  சமாளிக்கின்றன, எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றன என்பதைப் பற்றிய மிகத்தெளிவான கண்ணோட்டத்தை அளிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இத்தகைய கணக்கெடுப்பின் சவால் என்னவென்றால், தனிநபர் வருமானம் பற்றிய கேள்விகள் மிக உணர்ச்சிப்பூர்வமானவை ஆகும். பலர் தனிநபர் வருமானம் குறித்து பதிலளிக்க தயக்கம் காட்டுவர்.  ஒரு கொள்கை வகுப்பாளரின் பார்வையில் கணக்கெடுப்பு வடிவமைப்பு மதிப்புமிக்கதாக இருந்தாலும், வருமானம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்களுக்கு, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதாகத் தோன்றலாம். மேலும், பல சமயங்களில் இது குறித்த கேள்விகளுக்குத்  துல்லியமாகப் பதிலளிப்பது  கடினமாகவும் இருக்கலாம் என்கின்றனர்


கடந்த கால ஆய்வுகள் குறித்து


இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடம் குடும்ப வருமானம் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) போன்ற ஆய்வுகள் வருவாயைக் கணக்கிட முயற்சிக்கிறது. ஆனால், இது ஊதியங்களை தொழில்சந்தை இயக்கவியல் மூலம் பார்க்கிறது. மேலும் குடும்ப பண்புகள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்குவதில் குறைபடுகிறது. குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey (HCES)) குடும்ப வருமானத்தை ஊகிக்க, செலவு முறைகளை நம்பியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு மிகவும் நம்பகமானதாகக் கருதப்பட்டாலும், நுகர்வுத் தரவை வருமானத்திற்கான பதிலியாகப் (proxy) பயன்படுத்துவது நடைமுறையில் எப்போதும் நிலையற்றத் தன்மையை உள்ளடக்கியது. பின்னர், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு (Consumer Confidence Survey) உள்ளது, இது நகர்ப்புற மற்றும் ஊர்ப்புற நுகர்வோரிடையே காலப்போக்கில் வருமான நிலைகள் எவ்வாறு உயர்கின்றன அல்லது குறைகின்றன என்பதைக் கண்காணிக்கிறது. இந்த கணக்கெடுப்புக் கருவிகள் வருமான மாற்றங்களில் பரந்த போக்குகளைப் பதிவு செய்துள்ளன. அவற்றை அளவிடுவதற்கு பதிலிகளை நம்பியுள்ளன, அல்லது குறிப்பிட்ட பகுப்பாய்வு கோணங்கள் மூலம் வருமானத்தை ஆய்வு செய்துள்ளன.


இருப்பினும், வரவிருக்கும் குடும்ப வருமானக் கணக்கெடுப்பு, வருமானத்தையும் அதன் பிற குடும்ப பண்புகளுடனான தொடர்பையும் புரிந்து கொள்ள வருமானத் தரவைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய கணக்கெடுப்பானது சமூகக் குழு, மதம் மற்றும் தொழில் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரிக்கிறது. குடும்பங்கள் வேளாண் தொழில்கள் அல்லது பிற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனவா என்பதை உள்ளடக்கியது. இது நில உரிமை மற்றும் பயன்பாடு, வசிப்பிடத்தின் அளவு மற்றும் வகை போன்ற சொத்து விவரங்கள் மற்றும் பெறப்பட்ட கடன்களையும் பதிவு செய்கிறது.


இந்தக் கணக்கெடுப்பு, முதன்முறையாக, கூடுதல் நேர ஊதியம், செயல்திறன் அடிப்படையிலான போனஸ் (bonuses), பங்கு விருப்பங்கள், விடுப்பை பணமாக மாற்றுதல் மற்றும் பணிநீக்க கொடுப்பனவுகள் போன்ற கொடுப்பனவுகள் உட்பட வழக்கமான ஊதியங்கள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்கிறது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு, இந்தக் கணக்கெடுப்பு வேலைசெய்த நாட்களின் எண்ணிக்கை, சராசரி தினசரி ஊதியம் மற்றும் பெறப்பட்ட உதவிக்குறிப்புகளைக்கூட பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. சுயதொழில் செய்பவர்களைப் பொறுத்தவரை, விற்கப்பட்ட பயிர்களின் வகை, அளவு மற்றும் அந்த விற்பனையின் மதிப்பு பற்றிய விவரங்களையும் சேகரிக்கும் என்று தெரிவிக்கின்றனர். வேளாண் அல்லாத தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு, கணக்கெடுப்பு வணிகத் துறை மற்றும் சம்பாதித்த ரசீதுகளின் மொத்த மதிப்பை ஆய்வுக்கு உட்படுத்தும் என்கின்றனர்.


இத்தகைய தகவல்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளில் வகுப்பு இயக்கவியலைப் புரிந்துகொள்வதையும், சில வேலைகள் குறிப்பிட்ட சமூகக் குழுக்களுக்குள் குவிந்துள்ளதா என்பதை அறிய உதவும். ஒருகுடும்பத்தின் மொத்த வருமானத்தில் எவ்வளவு பங்கு கடன் திருப்பிச் செலுத்துதலுக்குச் செல்கிறது என்பதையும் வெளிக்காட்டக்கூடும். இது நகர்ப்புறக் குடும்பங்களிடையே, குறிப்பாக, சம அளவிலான மாதத்தவணை (Equated Monthly Instalment (EMI)) முறையை அடிப்படையாகக் கொண்ட செலவினங்களால் இயங்கும் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அளவீடு ஆகும். வேளாண்மையைப் பொறுத்தவரை, விரிவான கேள்விகள் இந்தக் கணக்கெடுப்பை "உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" போன்ற கூற்றுக்களை சோதிக்கவும், அதனுடன் தொடர்புடைய அரசாங்கத் திட்டங்களை மதிப்பிடுவதற்கும் ஒரு சிறந்த நேரடி கருவியாக இதனை ஆக்குகின்றன.


பதிவு செய்யப்பட்ட செலவுகள்


வருமானத்தை அளவிடுவது முக்கியம் என்றாலும், செலவு முறைகளைக் கருத்தில் கொள்வதும் முக்கியமாகும்.  எனவே, இந்தக் கணக்கெடுப்பு குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பின் சில கேள்விகளை மீண்டும் கேட்கிறது. உதாரணமாக, விதைகள், உழைப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளீட்டு செலவுகளைப் பதிவு செய்ய உழவர்களைக் கேட்கிறது. பிற துறைகளில் சுயதொழில் செய்பவர்களுக்கு, மூலப்பொருள் செலவுகள், வாடகைக் கட்டணங்கள், மற்றும் பழுது மற்றும் பராமரிப்புச் செலவுகள் பற்றிய விவரங்களையும் கேட்கிறது. ஒரே குடும்பங்களிடமிருந்து இருந்து செலவு மற்றும் வருமானத் தரவுகளை சேகரிப்பதன் மூலம், இந்தக் கணக்கெடுப்பு லாப வரம்புகளைத் துல்லியமாக அளவிட உதவுகிறது.


மேலும், இது ஓய்வூதிய பலன்கள், ஜீவனாம்சம் அல்லது குழந்தை ஆதரவு போன்ற குடும்ப ஆதரவு பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவற்றையும் அளவிடுகிறது. மிக முக்கியமாக, முதல் முறையாக, இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டம் போன்ற மாநில அரசின் திட்டங்கள் மற்றும் பல மத்திய அரசு திட்டங்கள் மூலம் பெறப்பட்ட நிதிகள் பற்றிய தரவுகளையும்  சேகரிக்கிறது.

சோதனை சிக்கல்கள்


இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், முன்மொழியப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சிலவற்றைத் தோராயமாகத் தேர்ந்தெடுத்து, அதன் கேள்விகளுக்கு பதிலளிக்க, சோதனை முறையில் நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாடு கவலை அளிக்கும் சில கருத்துக்களை உருவாக்கியது. பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 95 சதவீதம் மக்கள் இந்தத் தகவலை உணர்வுப்பூர்வமானதாகக் கருதினர். பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமானத்தை வெளியிடுவதில் சங்கடமாக உணர்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் வருமான வரி செலுத்தப்படுவது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். எனவே, பெரும்பாலானவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்புக் குழு இந்தச் சவாலை அறிந்திருக்கிறது. எனவே, பொது விழிப்புணர்வை அதிகரிப்பது, தவறான கருத்துக்களை நீக்குவது மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்வது ஆகியவற்றின் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்கிறது. நம்பிக்கையை வளர்க்க உள்ளூர் மொழிகள் தெரிந்த களப்பணியாளர்களை நியமிப்பதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஊர்ப்புறங்களில் பதிலளித்தவர்கள் குறைவான விளக்கங்களையே கேட்கிறார்கள், அதே நேரத்தில், வசதியான வீடுகளில் உள்ளவர்கள் அதிகமான விளக்கங்களைக் கேட்கிறார்கள் என்பதை சோதனைக்குழு கவனித்தது. இந்தத் தயக்கம் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, வசதியான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சுய-தொகுப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த அமைப்பின்கீழ், கணக்கெடுப்பின் நோக்கங்கள் மற்றும் துல்லியமான வருமானத்தரவுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளக்கும் எழுத்துப்பூர்வ கோரிக்கையை பதிலளிப்பவர்கள் பெறுவார்கள்.


மேலும், கள வருகைகளின்போது, ​​பல குடும்பங்கள் தங்கள் செலவுகளை மிகைப்படுத்திக் கூறினர் அல்லது தங்கள் வருமான அளவுகளைத் தவறாகத் தெரிவித்தனர். பதிலளித்தவர்கள் தங்கள் நிதி சொத்துக்கள் பற்றிய விவரங்களை நினைவு கூர்வது கடினமாக இருப்பதையும் கண்டனர். மேலும், சேமிப்பு அல்லது நிலையான வைப்புத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை என்று நடத்தப்பட்ட சோதனைக் கணக்கெடுப்பின் மூலம் தெரியவருகிறது. 



Original article:

Share: