செயல்மிகு உணவுகள் (Functional Foods) மற்றும் திறன்மிகு புரதங்கள் (Smart Proteins) என்றால் என்ன? ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது ஏன் அவசியம்? வணிக ரீதியான முறையில் வளர்க்கப்பட்ட கோழியை (cultivated chicken) அங்கீகரித்த முதல் நாடு எது? திறன்மிகு புரத சுற்றுச்சூழல் அமைப்பு (Smart Protein Ecosystem) எவ்வாறு செயல்படுகிறது? 'ஆய்வக உணவு' (lab-food) பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்வது?"
உணவு மற்றும் ஊட்டச்சத்துடனான சமூகத்தின் தொடர்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த மாற்றம் செயல்பாட்டு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
செயல்மிகு உணவுகள் என்றால் என்ன?
செயல்மிகு உணவுகள் என்பவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது நோயைத் தடுக்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட உணவுகள் ஆகும். உதாரணத்திற்கு, வைட்டமின் செறிவூட்டப்பட்ட அரிசி அல்லது ஒமேகா-3 சத்து சேர்க்கப்பட்ட பால் போன்றவற்றைக் குறிப்பிடலாம். செயல்பாட்டு உணவுகள், ஊட்டச்சத்து மரபியல் (nutrigenomics) (ஊட்டச்சத்து மரபணுக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய ஆய்வு), உயிரி-செறிவூட்டல் (bio-fortification), 3D உணவு அச்சிடுதல் (3D food printing), மற்றும் உயிரி செயலாக்கம் (bioprocessing) போன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
திறன்மிகு புரதங்கள் என்பவை, பாரம்பரிய உற்பத்தி முறையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்குடன் உயிரித் தொழில்நுட்பத்தைப் (biotechnology) பயன்படுத்திப் பெறப்படும் புரதங்களைக் குறிக்கின்றன. இவற்றில் தாவர அடிப்படையிலான புரதங்கள் (பருப்பு வகைகள், தானியங்கள் அல்லது எண்ணெய் விதைகளிலிருந்து மறுசீரமைக்கப்பட்ட சாறுகள் விலங்கு இறைச்சி மற்றும் பால் பொருட்களைப் பிரதிபலிக்கின்றன). நொதித்தல் மூலம் பெறப்பட்ட புரதங்கள் (நுண்ணுயிர் அமைப்புகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன). வளர்க்கப்பட்ட இறைச்சி (cultivated meat) (உயிர்வதைச் செய்யாமல் உயிரி உலைகளில் வளர்க்கப்படும் விலங்கு செல்கள்) ஆகியனவாகும்
இந்தியாவிற்கு அவை ஏன் தேவை?
இந்தியாவின் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் சீரற்றதாகவே உள்ளது. இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வளர்ச்சிக் குன்றியவர்களாக உள்ளனர். மேலும், பெரியவர்களுக்கான புரத உட்கொள்ளல் மேம்பட்டிருந்தாலும், நகர்ப்புறம்-ஊரகப்புறம் என்கிற அடிப்படையில் இன்னும் வேறுபாடு நீடிக்கிறது. பொருளாதாரம் வளர்ந்து, குடும்ப வருமானம் அதிகரிக்கும் போது, உணவின் மீதான சமூகத்தின் எதிர்பார்ப்புகள் வெறும் பசியாற்றுவதிலிருந்து உண்மையிலேயே ஊட்டமளிப்பதாக மாறுகிறது. இந்த மாற்றம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய இந்தியாவின் கொள்கையில் ஒரு மறுசீரமைப்பைக் கோருகிறது. ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி இலக்குகளை பூர்த்தி செய்ய புரதங்கள், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் (Antioxidants) மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை வழங்குகிறது.
இந்த ஊட்டச்சத்து மாற்றத்தை அடைவதில் உள்ள சவால் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்துவதாகும். சுற்றுச்சூழல் சீரழிவை மோசமாக்காமல் அல்லது காலநிலை மாற்ற தாக்கங்களை ஆழப்படுத்தாமல் இந்தியா உணவு உற்பத்தி முறைகளை அளவிட வேண்டும். எனவே, மீள்தன்மை கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் காலநிலை உணர்வுள்ள உணவு அமைப்பை உருவாக்குவது என்பது நாட்டின் மிகமுக்கியமான கொள்கை அவசியங்களில் ஒன்றாக இருக்குகிறது. செயல்பாட்டு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் நடைமுறைக்கு ஏற்ற மற்றும் அளவிடக்கூடிய தீர்வை வழங்கும் பல முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவை இயற்கை உணவுகளை கூடுதலாக வழங்குவதன் மூலமாகவும் உற்பத்தி செயல்முறையை மறுவடிவமைப்பதன் மூலமாகவும் தினசரி உட்கொள்ளும் உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகின்றன.
இன்று இந்தியா எந்த நிலையில் உள்ளது?
செயல்மிகு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் என்பது இந்தியாவின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம் (BioE3) கொள்கையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கருப்பொருள் பகுதிகளாகும். உயிரித்தொழில்நுட்பவியல் துறை (Department of Biotechnology (DBT)) மற்றும் அதன் பொதுத்துறையான உயிரித்தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவி கூட்டமைப்பு (Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) ஆகியவை இந்தத் திட்டம் சார்ந்த நிதியுதவித் திட்டங்களைத் தொடங்கியுள்ளன.
செயல்மிகு உணவுத் துறையில், விஞ்ஞானிகள் துத்தநாகம் செறிவூட்டப்பட்ட அரிசி (IIRR, ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டது) மற்றும் இரும்புச்சத்து நிறைந்த கம்பு (சர்வதேச வறண்ட வெப்பமண்டலப் பகுதிகளுக்கான பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து) போன்ற உயிரி-செறிவூட்டப்பட்ட பயிர்களை உருவாக்கி வருகின்றனர். பல தனியார் நிறுவனங்கள் - டாடா நுகர்வோர் தயாரிப்புகள், ஐடிசி மற்றும் மாரிகோ - செறிவூட்டப்பட்ட பிரதான உணவுகள் மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவு வகைகளில் முதலீடு செய்து வருகின்றன. திறன்மிகு புரத சுற்றுச்சூழல் அமைப்பும் வளர்ந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட திறன்மிகு புரத தயாரிப்பு நிறுவனங்களால் 377-பொருட்கள் (இறைச்சி, முட்டை அல்லது பால்) விற்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குட் டாட் (GoodDot), ப்ளூ ட்ரைப் ஃபுட்ஸ் (Blue Tribe Foods) மற்றும் ஈவோ ஃபுட்ஸ் (Evo Foods) போன்ற தொடக்க நிறுவனங்கள் தாவர அடிப்படையிலான இறைச்சி மற்றும் முட்டை மாற்றுகளை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. 2024-ஆம் ஆண்டில், சைடஸ் லைஃப் சயின்சஸ் (Zydus LifeSciences) ஸ்டெர்லிங் பயோடெக்கில் 50 சதவீதப் பங்குகளை வாங்கியது. இது நொதித்தல் அடிப்படையிலான புரதப் பிரிவில் அந்நிறுவனம் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்த ஆராய்ச்சிக்காக உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology) உயிரித்தொழில்நுட்பவியல் துறையிடமிருந்து 4.5 கோடி ரூபாய் அளவிலான மானியத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் இவ்விரண்டு பிரிவுகளும் வளர்ந்து வந்தாலும், பல இடைவெளிகள் உள்ளன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஒழுங்குமுறைத் தெளிவு இல்லாமை குறிப்பிடப்படுகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) வளர்க்கப்பட்ட இறைச்சி அல்லது துல்லியமான நொதித்தல் புரதங்கள் போன்ற புதிய ஆய்வகரீதியான உணவுகளுக்கு உறுதியான வழிகாட்டுதலை இன்னும் வெளியிடவில்லை. பெரிய அளவிலான நொதித்தல், தரச் சான்றிதழ் மற்றும் நுகர்வோர் சோதனைக்கான உள்கட்டமைப்பு குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மற்ற நாடுகள் எப்படிச் செயல்படுகின்றன?
1980-ஆம் ஆண்டுகளில், செயல்மிகு உணவுகளின் கருத்தை முதலில் முன்வைத்து, அதன் ஒழுங்குமுறைக்கான கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடாக ஜப்பான் இருந்தது. மறுபுறம், திறன்மிகு புரதங்கள் மிகவும் புதுமையான உணவு வகையாகும். 2020-ஆம் ஆண்டில், வளர்க்கப்பட்ட கோழியின் வணிக விற்பனையை அங்கீகரித்த முதல் நாடாக சிங்கப்பூர் இருந்தது. சீனா அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றுப் புரதங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தனது "பண்ணையிலிருந்து முட்கரண்டிக்கு" (Farm to Fork) என்ற உத்தியின் மூலம் நிலையான புரத உற்பத்தியில் அதிக முதலீடு செய்து வருகிறது.
முன்னோக்கிச் செல்லும் வழி என்னவாக இருக்க வேண்டும்?
சுகாதார முன்னணியில், செயல்மிகு உணவுகள் மற்றும் திறன்மிகு புரதங்கள் ஆகியவை இந்தியாவின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு முக்கியப் பங்களிப்பாளர்களாக இருக்கும். பொருளாதாரரீதியாக, உலகளாவிய தாவர அடிப்படையிலான உணவுச் சந்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 85 பில்லியன் டாலர் (ஸ்விட்சர்லாந்து ஒன்றிய வங்கியின் படி (Union Bank of Switzerland)) முதல் 240 பில்லியன் டாலர் (ஸ்விட்சர்லாந்து கடன் வங்கியின்படி (Credit Suisse)) வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வலுவான வேளாண் அடிப்படை மற்றும் விரிவடைந்து வரும் உயிரித்தொழில்நுட்பத் துறையுடன் இந்தியா ஒரு முக்கிய வழங்குநராக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடந்தால், இந்தத் தொழில்கள் இந்தியாவில் வேளாண்மை, உற்பத்தி மற்றும் தளவாடங்கள் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். சுற்றுச்சூழல் ரீதியாக, உயிரி அடிப்படையிலான புரத உற்பத்திக்கு மாறுவது கார்பன் வெளியேற்றத்தை, நிலச் சீரழிவை மற்றும் நீர் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தியா புதுமைகளில் பின்தங்கியிருக்கும் அல்லது சரிபார்க்கப்படாத, தவறாக பெயரிடப்பட்ட தயாரிப்புகளின் மிகுதியான வருகையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. உயிரி உற்பத்திக்கு மாறுவது வேளாண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பெரிய அளவிலான பணியாளர் திறன் மேம்பாட்டைக் கோரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், மோசமான செயல்படுத்தல் முறை ஒரு சில பெரிய நிறுவனங்களிடையே வணிகச் சக்தியைக் குவிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுமக்களின் கருத்து மற்றொரு சவாலாக உள்ளது. மேலும், “ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட” உணவு குறித்த சந்தேகம் வெளிப்படையான தகவல்தொடர்பு மற்றும் பொது நம்பிக்கையின் மூலம் மட்டுமே சமாளிக்க வாய்ப்புள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) கீழ் உள்ள புதிய உணவுகளுக்கான தேசிய ஒழுங்குமுறை கட்டமைப்பு செயல்பாட்டு மற்றும் மாற்று புரத தயாரிப்புகளுக்கான வரையறைகள், பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் குறியிடுதல் குறித்து தெளிவான வழிமுறைகளை வழங்க வேண்டும் என்கின்றனர். ஒருங்கிணைந்த கொள்கை ஆதரவை உறுதிசெய்ய அமைச்சகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. உயிரி உற்பத்தி உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், துல்லியமான நொதித்தல் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கவும் பொது-தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சி அவசியமாகிறது. இறுதியாக, உயிரி தொழில்நுட்பத்தின் நன்மைகள் சமூகம் முழுவதும் சென்றடைய உறுதி செய்வதற்கு பொதுக் கல்வி மற்றும் புதிய மதிப்புச் சங்கிலிகளில் வேளாண் தொழிலாளர்களைச் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது.
ஷாம்பவி நாயக் தக்ஷஷிலா (Takshashila) நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கை அமைப்பின் தலைவராகவும், கிளவுட் கிரேட் (CloudKrate) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.