சுஷாந்த் ரோஹில்லா தற்கொலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன நிபந்தனையை விதித்தது?
டெல்லி உயர் நீதிமன்றத்தின் சுஷாந்த் ரோஹில்லா தற்கொலை வழக்கு (2025) குறித்த தீர்ப்பு, பல்கலைக்கழகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் நியாயம் மற்றும் பகுத்தறிவு என்ற கட்டமைப்புக்குள் எவ்வாறு ஒழுங்குமுறை அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்கிறது. போதிய வருகைப்பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத ஒரு சட்டக் கல்லூரி மாணவர் 2016-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து இந்த வழக்கின் தீவிரத்தன்மை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. வருகைப்பதிவுக் கொள்கைகள் நியாயமாகவும் விகிதாசாரமாகவும் உள்ளதா என்பது குறித்து ஆராய நீதிமன்றம் இந்தச் சம்பவத்தை ஒரு பொதுநல விசாரணையாக மாற்றியது. மாணவர்களின் நலன் குறித்த அக்கறை அதிகரித்துவரும் வேளையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு, கல்விசார் சுயாட்சி (Academic Autonomy) அரசியலமைப்புச் சட்டத்தின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
உயர்நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கியப் பிரச்சினை என்ன?
வழக்கு வெறும் வருகைப் பதிவு பற்றியது மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்துவது பற்றியதும்கூட என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் வருகைப்பதிவு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே குறைந்தவுடன், எச்சரிக்கை, ஆலோசனை அல்லது விவாதம் இன்றி, அவர்களைத் தகுதி நீக்கம் செய்தன. இத்தகைய இயந்திரத்தனமான நடைமுறை, செயல்முறை நியாயத்தையும் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் தரநிலைகளையும் மீறுவதாகும்.
இந்தத் தீர்ப்பு, பிரிவு 14-ன் தன்னிச்சையற்ற தன்மைக் கோட்பாடு (doctrine of non-arbitrariness) மற்றும் செயல்முறை நியாயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தும் பல்கலைக்கழகங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்புக்கு உட்பட்ட பொது அதிகார அமைப்புகளாகும். அவற்றின் முடிவுகள் நியாயமானதாகவும், சமச்சீரானதாகவும் மற்றும் நீதி தவறாததாகவும் இருக்க வேண்டும். இங்கு நியாயம் என்பது வெறும் நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, பிரிவு 21-ன் கண்ணியம் மற்றும் மனநலப் பாதுகாப்புடன் இணைக்கப்பட்ட அரசியலமைப்பாகும். உரிய நடைமுறை மற்றும் மாணவர்களின் நலனை, கண்ணியத்துடன் கூடிய வாழ்வுக்கான அரசியலமைப்பு உறுதிமொழியின் ஒரு பகுதியாகப் பாதுகாக்கிறது.
வருகை விதிகளைச் செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்ததா?
நீதிமன்றம் வருகை விதிமுறைகளை உறுதி செய்தது. ஆனால், கடுமையான அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விதிவிலக்கான வழக்குகளில் 70% வருகை, 65% வரை தளர்த்தப்படலாம் என்ற இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் (Bar Council of India (BCI)) சட்டக்கல்வி விதிகள் 2008 விதி 12-ன் கீழ் உள்ள கருத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், இந்தக் கட்டமைப்பை "மிகவும் கடுமையானது" என்று அழைத்ததுடன், தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), 2020 மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) விதிகள் 2003 ஆகியவற்றின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியது. இந்த இரண்டுமே நெகிழ்வுத்தன்மை மற்றும் கற்றலை மையமாகக் கொண்ட கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. வருகைப் பதிவு கட்டாயமாகப் பின்பற்றப்படும்போது, அது ஒரு விலக்கல் தடையாக (exclusionary barrier) மாறக்கூடுமென்றும் தெரிவித்தது. அந்த விதி செல்லுபடியாகும் என்றாலும், அதை வளைந்துகொடுக்காமல் நடைமுறைப்படுத்தியது விகிதாச்சாரமற்றதாகக் கருதப்பட்டது. நீக்கம் என்பது கடுமையான கல்வி விளைவுகளைக் கொண்ட ஒரு தீவிர நடவடிக்கையாக நீதிமன்றம் கருதியது.
பல்கலைக்கழகங்கள் இப்போது எதை பின்பற்ற வேண்டும்?
தீர்ப்புக்குப் பிறகு, வாராந்திர வருகைப் பதிவுகள் இணையதளங்கள் அல்லது அறிவிப்புப் பலகைகள் மூலமாகவோ அல்லது மாதாந்திர குறைபாடு அறிவிப்புகள் மாணவர்களுக்கும் அவரது பெற்றோர் / பாதுகாவலர்களுக்கும் தெரிவித்தல்; ஆரம்பகட்ட நடவடிக்கை, ஆலோசனை மற்றும் கூடுதல் வகுப்புகள், வீட்டுப் பணிகள் அல்லது சட்ட உதவிப் பணி போன்ற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மூலம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வாய்ப்புகள் வழங்குதல் வேண்டும். மருத்துவ அல்லது மனநலப் பிரச்சினைகள் அல்லது சிரமங்களைப் பதிவு செய்தல் மற்றும் அறிவிப்பு மற்றும் தரப்பு நியாயத்தை சொல்வதற்கான வாய்ப்பு வழங்குதல் போன்ற சில நடைமுறைப் படிநிலைகளை வருகை அடிப்படையில் தேர்வு மறுப்புக்கு முன் கடைப்பிடிக்க வேண்டும். நியாயம் என்பது இறுதி முடிவுக்கு முன் முன்னறிவிப்பு மற்றும் பதிலளிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திருத்தும் முயற்சிகளுக்குப் பிறகும் ஒரு மாணவர் தேவையான வருகையைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் தேர்வு எழுதத் தடை செய்யப்படலாம் என்று உத்தரவிடப்பட்டது.
இதன் தாக்கங்கள் என்னென்ன?
இந்தத் தாக்கங்கள் நிறுவன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கற்பித்தல் ரீதியாகவும் உள்ளன. பல்கலைக்கழகங்கள் ஆதரவான சூழல்களை வளர்க்க வேண்டும், ஆலோசனையை ஒருங்கிணைக்க வேண்டும் மற்றும் மாணவர் பிரதிநிதித்துவத்துடன் குறை தீர்க்கும் குழுக்களை நிறுவ வேண்டும். விலக்குதல் (Debarment) என்பது இனி முறையற்றதாகவோ அல்லது தானாகவோ இருக்க முடியாது. அவை நியாயமானதாகவும் மற்றும் பிரதிநிதித்துவத்துக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். வழக்கு ஒத்திகைகள், பயிற்சிகள், ஆராய்ச்சி அல்லது சட்ட உதவிப் பணிகள் மூலம் அனுபவமிக்க கற்றல் ஈடுபாட்டிற்காகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். வருகைப்பதிவு என்பது கண்டிப்புக் காட்டுவதாக இல்லாமல், பங்கேற்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். மேலும், தேசிய கல்விக் கொள்கையைக் (National Education Policy-2020) கருத்தில் கொண்டு இந்திய வழக்குரைஞர் மன்றம், விதி 12-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. எந்தவொரு சட்டக் கல்லூரியும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைவிட கடுமையான விதிமுறைகளை விதிக்கக்கூடாது என்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சுஷாந்த் ரோஹில்லா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, உயர் கல்வி நிர்வாகத்தை அரசியலமைப்பு விழுமியங்களுடன் சீரமைப்பதில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
ஆசிரியர், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.