பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்களின் நடவடிக்கைகளால் மத்திய, மாநிலங்களுக்கு இடையிலான உறவில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாறாக, நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு அதிகக் கேடு ஏற்படுகின்றது.
உதாரணமாக, தமிழக சட்டப்பேரவையின் தொடக்கக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசு தயாரித்த உரையைப் படிக்க மறுத்துவிட்டார். மாறாக, அரசாங்கத்தின் கருத்துக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி அவர் வெளிநடப்பு செய்தார். நிறைவேற்று அதிகார பிரிவுக்குள் (executive branch of the government) இந்த மோதல் அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார் மேலும் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். நவீன ஜனநாயக அமைப்புகளில் ஆளுநரின் பங்கு இனி பயனளிக்காது என்பதை இந்த நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் நிர்வாக விஷயங்களில் தலையிடுவது அதிகரித்து வருகிறது. கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதுபோன்ற அரசியலமைப்பு மோதல்களை எதிர்கொண்டுள்ளதால், அம்மாநிலங்களில் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு கட்டமைப்பின்படி மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர்களுக்கு உத்தரவிடக்கோரி சில மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. உதாரணமாக, தெலுங்கானாவில், 2022 சட்டமன்றக் கூட்டத்தொடர் வழக்கமான ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், முந்தைய ஆண்டு ஆளுநர் உரையின் அங்கீகரிக்கப்படாத மற்றும் சுருக்கப்பட்ட பதிப்பை ரவி வாசித்ததற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டு அமர்வில், சட்டசபை நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் போது, அவர் இதேபோன்று வெளியேறினார், கவர்னர் உரையில் "தவறான கூற்றுக்கள் மற்றும் உண்மைகள் கொண்ட பல பத்திகள் உள்ளன" என்றும் அவற்றைப் படிப்பது "அரசியலமைப்பு கேலிக்கூத்து" (constitutional travesty) ஆகும் என்றும் கூறினார்.
உரையாற்றுவதற்கு முன்பு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் விரும்பியதாகவும், ஆனால் அது நடைபெறவில்லை என்றும் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலாவதாக, உண்மை விஷயங்கள் குறித்து ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று மாநில சட்ட அமைச்சர் தெளிவுபடுத்தினார். இரண்டாவதாக, தமிழ்நாட்டில், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிவடைவது வழக்கம். நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த நெறிமுறை பின்பற்றப்பட்டது. இருப்பினும், ஆளுநர் மாநில அரசை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதாகத் தெரிகிறது, அவர்கள் ஒரு தார்மீக கடமையில் தவறிவிட்டனர் அல்லது தேசிய கீதத்திற்கு எதிராக மறைமுக செயல் திட்டத்தைக் கொண்டுள்ளனர். இந்த கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை மற்றும் ஆளுநரின் அரசியலமைப்பு பாத்திரத்திற்கு பொருத்தமற்றவை.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும், தனிப்பட்ட விருப்பத்திற்கு இடமில்லை. ஆளுநர் உரைகள் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான அறிமுக அறிக்கைகள் மட்டுமே, மாநில அரசின் சார்பில் சம்பிரதாய அறிக்கைகள் என்பதைத் தாண்டி அதிக முக்கியத்துவம் அதற்க்கு இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் ஒன்றிய அரசுகளை இணைப்பதே ஆளுநர்களின் பணியாக இருந்தது. ஆரம்பத்தில், ராஜ் பவனில் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ராஜதந்திரம் கொண்ட ஒருவரை நியமனம் செய்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகள் சில ஆளுநர்கள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவித்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றது.
இந்த சம்பவங்கள் அரசியலமைப்பிற்குள் ஆளுநர்களின் பங்கு மற்றும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. நிர்வாக விஷயங்களில் ஆளுநர்களுக்கு விருப்புரிமை அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. அண்மையில் பேரறிவாளன் vs மாநில அரசு (2022) (Perarivalan vs State (2022)) என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆளுநரை ”மாநில அரசின் சுருக்கமான வெளிப்பாடு" என்று அழைத்தது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்கள் மீது உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது. இந்தச் சூழ்நிலைகளில் ஆளுநர்கள் தங்கள் பங்கை மீறக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் கவர்னர் பதவி நமக்கு இன்னும் தேவையா என்ற பெரிய கேள்வி எழுகிறது. அரசியலமைப்பு அமைப்பில் கவர்னர் அலுவலகத்தின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே தோன்றுகிறது.