சட்டக் கல்வியை வலுப்படுத்த உதவும் ஒரு தலையீடு -பிரபாஷ் ரஞ்சன்

 பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய விஷயங்கள் குறித்த பரிந்துரைகள் சரியான நேரத்தில் உள்ளது. 


பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (Parliamentary Standing Committee) சமீபத்தில் இந்தியாவில் சட்டக் கல்வி குறித்து ஒரு அறிக்கையை அளித்தது. சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல புதிய யோசனைகளை அவர்கள் பரிந்துரைத்தனர். மருத்துவம் மற்றும் பொறியியல் போலல்லாமல், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்திய தலைவர்கள் சட்டக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.


1990களில், இந்தியாவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (national law universities) நிறுவப்பட்டதன் மூலம் ஒரு நேர்மறையான மாற்றம் ஏற்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக, வழக்கறிஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. இது பல பிரகாசமான இளம் மாணவர்கள் பள்ளி முடிந்த உடனேயே சட்டக்கல்வியை தொடர வழிவகுத்தது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இருந்து பல பட்டதாரிகள் சட்ட நிறுவனங்களில் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெற்றனர், மற்றவர்கள் மதிப்புமிக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்ந்தனர். சிலர் ரோட்ஸ் (Rhodes) மற்றும் செவனிங் (Chevening)  போன்ற மதிப்புமிக்க உதவித்தொகைகளையும் பெற்றனர்.


இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பல சட்டப் பள்ளிகள் உயர்ந்த தரத்தை எட்டவில்லை. அவை சாதாரண நிறுவனங்களாகவே பார்க்கப்படுகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (NLUs) நல்ல மாணவர்களைக் சேர்த்தாலும், அவை மாணவர்களை சட்ட ஆராய்ச்சியில் சிறந்தவர்களாக மாற்றவில்லை. ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல் (Jindal Global Law School) மற்றும் இந்தியா பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி (National Law School of India University) ஆகிய இரண்டு இந்திய சட்டப் பள்ளிகள் மட்டுமே உலகளவில் உள்ள முதல் 250 சட்டப் பள்ளிகளின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.


ஒரு புதிய சீர்திருத்தம்


இந்த நிலையில், சட்டக் கல்வி மீதான இந்திய பார் கவுன்சிலின் (Bar Council of India (BCI)) கட்டுப்பாட்டை குறைக்குமாறு குழு பரிந்துரைக்கிறது. நீதிமன்றங்களில் யார் பயிற்சி செய்யலாம் என்பதற்கான தரநிலைகளை அமைப்பதில் இந்திய பார் கவுன்சிலின் பங்கு மிகவும் முக்கியமானது.


சட்டக் கல்வியானது நீதிமன்றத்திற்குச் செல்லாத பல அம்சங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக உயர் மட்டங்களில். சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (National Council for Legal Education and Research (NCLER)) என்ற புதிய தண்னாட்சிக் குழு இந்த அம்சங்களை மேற்பார்வையிட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (National Council for Legal Education and Research (NCLER)) சட்டக் கல்விக்கான உயர் தரங்களை அமைக்கும். பிரபல சட்ட அறிஞர்கள் இந்த யோசனையை நாடாளுமன்றக் குழுவின் முன் ஆதரித்துள்ளனர். சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலானது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, புகழ்பெற்ற சட்டப் பேராசிரியர்களையும் சேர்க்க வேண்டும். இந்த பேராசிரியர்கள் சட்டக் கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புக்கான வலுவான வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆராய்ச்சியை ஊக்குவித்தல்


இந்தியாவில் சுமார் 1,700 சட்டப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பெரும்பாலானவை முக்கியமாக கற்பித்தலில் கவனம் செலுத்துகின்றன ஆனால் ஆராய்ச்சியில் மிகக் குறைவாக கவனம் செலுத்துகின்றன. இதன் விளைவாக, இந்தியா தனது சட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக மேற்கத்திய நாடுகளின் சட்ட அறிவைப் பயன்படுத்துகிறது. இந்தச் சிக்கலைச் சிறப்பிக்கும் ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், ஸ்கோபஸில் (Scopus) பட்டியலிடப்பட்டுள்ள 800க்கும் மேற்பட்ட சட்டப் ஆராய்ச்சி இதழ்களில் எல்லாப் பகுதிகளிலும் உள்ள முன்னணி ஆராய்ச்சி இதழ்களுகளுக்கான உலகளாவிய தரவுத்தளமானது ஒரு சில மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவை. இது இந்திய சட்டப் பள்ளிகளில் ஆராய்ச்சியின் மிகக் குறைந்த தரத்தைக் குறிக்கிறது.


சட்டக் கல்வியில் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் குழு வலியுறுத்துகிறது. இது சிறந்த கற்பித்தல் விளைவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் மாணவர்களின் ஆராய்சி கண்ணோட்டத்தை வளர்க்க உதவும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், "கல்லூரிக் கல்வியின் மதிப்பு பல உண்மைகளைக் கற்றுக்கொள்வது அல்ல, ஆனால் சிந்திக்க மனதைப் பயிற்றுவிப்பது" ஆராய்ச்சியை வலுப்படுத்த, "உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாக" நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதைச் செய்வதை விட சொல்லுவது  எளிதானது என்றாலும், குழு இந்த அம்சத்தை முன்னிலைப்படுத்தியிருப்பது நல்ல வளர்ச்சியாகும்.


சட்டப் பள்ளிகளில் ஆராய்ச்சியை மேம்படுத்த அரசு நிதியுதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு எடுத்துக்காட்டுகிறது, இது உலகமயமாக்கப்பட்ட உலகிற்கு அவர்களைத் தயார்படுத்தும். உலகளாவிய பாடத்திட்டத்தை உருவாக்குதல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சர்வதேச பரிமாற்ற திட்டங்களை ஒழுங்கமைத்தல், அதிக சர்வதேச சட்ட படிப்புகள் உட்பட பல்வேறு சட்ட அமைப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


மாறும் மனநிலைகள்


நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் பல சட்ட பேராசிரியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இதேபோன்ற யோசனைகள் இதற்கு முன்பும் முன்மொழியப்பட்டுள்ளன, ஆனால் உயர் கல்வி அனைவருக்கும் முதன்மையான முன்னுரிமையாக மாறாத வரை அவை செயல்படுத்தப்படாது.


சட்டக் கல்வி சீர்திருத்தத்திற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகள் தலைமையில் ஆர்வமுள்ள, திறமையான மற்றும் தொலைநோக்கு தலைவர்கள் தேவை. இந்த தலைவர்கள் இளைய கல்வியாளர்கள் ஆசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளித்து ஆதரவான சூழலை அவர்களுக்கு  உருவாக்கித்தர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் இந்தப் பொறுப்பை திறம்பட நிறைவேற்றவில்லை. அவர்களின் தொழில்முறை தலைமையின் பற்றாக்குறை திறமையான பேராசிரியர்களைத் தடுக்கிறது மற்றும் சிறந்து விளங்குவதற்கான முயற்சிகளையும் தடுக்கிறது, நிதி ஊக்குவிப்புகள் இருந்தபோதிலும் நிறுவன முன்னேற்றம் என்பது சவாலாக உள்ளது.


இரண்டாவதாக, நமது சட்டப் பள்ளிகளில் சட்ட ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்த, முழுமையான கல்வி சுதந்திரம் மற்றும் சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியதைப் போல, பல்கலைக்கழகங்கள் மனிதநேயம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, கருத்துக்களைப் பின்தொடர்தல் மற்றும் உண்மையைத் தேடுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதை அடைவதற்கு கல்வியாளர்கள் தங்களின் நன்கு ஆராயப்பட்ட கருத்துக்களை,  சமூகத்தில் உள்ள பிரபலமான நம்பிக்கைகள் அல்லது மேலாதிக்கக் கருத்துக்களுக்குச் சவால் விட்டாலும் கூட, அச்சமின்றி சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும்.  


நாடாளுமன்றக் குழுவின் ஈடுபாடு நேர்மறையானது, மேலும் இந்தியாவில் சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.    

பிரபாஷ் ரஞ்சன்  சட்ட ஆய்வு பேராசிரியர் தெற்காசிய பல்கலைக்கழம்




Original article:

Share: