கச்சத்தீவு பிரச்சனை -எல் ஸ்ரீகிருஷ்ணா

 மீனவர்கள் கச்சத்தீவில் மீண்டும் மீன்பிடிக்க விரும்பினாலும், இந்தியா அதை அனுமதிக்க முடியாது.


தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் ஒரு பகுதியான கச்சத்தீவு, எதிர்மறையான காரணங்களுக்காக தற்போது மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது. 


பிப்ரவரி 17 அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்கள், பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில், ஆள் நடமாட்டம் இல்லாத கச்சத்தீவுப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெரும் இரண்டு நாள் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்வு இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் விரிகுடாவின் இருபுறமும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.




அணுகுமுறையில் மாற்றம்


எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்கிறார்கள். ஆனால், அவர்களின் நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை எவ்வாறு கையாளுகின்றன என்பதில் மாற்றம் உள்ளது. பிப்ரவரி மாதம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பிற இந்திய பகுதிகளைச் சேர்ந்த 42 மீனவர்கள் இரண்டு நிகழ்வுகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் பிடிபட்டால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையுடன் மற்ற மீனவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இச்செய்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவ சமுதாய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மீனவ தலைவர் பி.ஜேசு ராஜா கூறினார்.


கச்சத்தீவுப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மறைமாவட்டத்தால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இலங்கை கடற்படை பதிவுகளின்படி 1901 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக உள்ளது. 1974 ஆம் ஆண்டில் இந்தியா இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கிய பின்னர், இது யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் கீழ் வந்தாலும், இரு நாடுகளும் இன்னும் விழாவை ஏற்பாடு செய்கின்றன. சமீபத்தில், கர்நாடகா போன்ற பிற இந்திய மாநிலங்களிலிருந்தும் மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.


கடந்த 15 ஆண்டுகளாக, தேவாலயம் வேர்கோடு திருச்சபையை அழைக்கிறது, பின்னர் இது பக்தர்கள் விண்ணப்பிக்கும்படி கேட்கிறது. சரியான ஆவணங்களை வழங்கும் பக்தர்கள் படகுகளைப் பயன்படுத்தி பாக் ஜலசந்தியைக் கடக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுங்க மற்றும் காவல் துறையினர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்காக இரு தரப்பிலிருந்தும் பக்தர்கள் வாழ்த்துகள், பரிசுகள் மற்றும் பரிமாறிக் கொள்கின்றனர். மேலும் இரு நாட்டின் உறவுகள் மேம்பட பிரார்த்தனை செய்கின்றனர். 


இந்த ஆண்டு, ராமநாதபுரத்தில் உள்ள மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் சக மீனவர்கள் சிறையில் இருக்கும்போது எங்களால் இலங்கையில் திருவிழாவில் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்று கருதினர். ஒற்றுமையைக் காட்ட கொண்டாட்டங்களைத் தவிர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.


தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படும்போது, கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகமும் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக உதவுவதுடன், அவர்களை விடுவிக்க தூதரக உதவிகளையும் செய்கின்றன. மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்றும் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா  இலங்கையை வலியுறுத்தி வருகிறது. இலங்கை தொடர்ந்து மீனவர்களை விடுவித்தாலும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை திருப்பிதராமல் வைத்திருப்பது ராமநாதபுரம் மீனவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த முறையும் அவர்களின் படகுகள் திரும்ப கிடைக்கவில்லை.


சுமார் 10 ஆண்டுகளாக, மீனவர்கள் தீர்வு கிடைக்கும் என்று நம்பியுள்ளனர். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரு நாட்டு மீனவர்களுக்கிடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் அரசியல் காரணங்களால் அது முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் ஜேசு ராஜா கூறினார்.


கச்சத்தீவில் முன்பு போல் மீன்பிடிக்க அனுமதிக்கவும், தீவை திரும்பப் பெறவும் இலங்கையை இந்திய அரசு கேட்க வேண்டும் என்று சில மீனவர்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டை விட இலங்கை மீனவர்கள் பால்க் வளைகுடாவை நம்பியிருப்பது குறைவு என்று அவர்கள் வாதிடுகின்றனர். எவ்வாறாயினும், இழுவை படகுகள் (bottom trawlers) பயன்படுத்துவதை படிப்படியாக நிறுத்துவதாக இலங்கைக்கு இந்திய அரசு உறுதியளித்தது. ஆழ்கடல் மீன்பிடித்தல், கடற்பாசி வளர்ப்பு, திறந்த கடல் கூண்டு வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் மாறுவார்கள் என இந்திய அரசு நம்புகிறது.  இதை சாத்தியமாக்க, இன்னும் சரியாகத் தொடங்காத ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தில், அதிகமான மீனவ மக்கள் பங்கேற்கும் வகையில் மாற்றங்கள் தேவை.




Original article:

Share: