2024-25 இடைக்கால பட்ஜெட்டில் சிறுமிகளுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிக்கான (Human Papillomavirus (HPV) vaccine) திட்டமானது இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (International Women’s Day), இந்தியாவின் இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25, பெண்களின் ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற படியாக பார்க்கப்படுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு (cervical cancer) எதிராக ஒன்பது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாகும்.
'90-70-90' இலக்குகள், உலகளாவிய திட்டங்கள்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (cervical cancer) இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோய் வகையாகும். இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.27 லட்சம் புதிய நோய் வழக்குகள் மற்றும் சுமார் 80,000 இறப்புகள் பதிவாகின்றன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு (cervical cancer) முக்கிய காரணம் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகும். இந்த குறிப்பிடத்தக்க சுகாதார பிரச்சினையை சமாளிக்க, HPV தடுப்பூசியானது, நோயைத் தடுப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) 2030 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளது, இது '90-70-90' இலக்குகள் என அழைக்கப்படுகிறது. 90% பெண்கள் 15 வயதிற்குள் முழு HPV தடுப்பூசியைப் பெறுவதையும், 70% பெண்கள் 35 முதல் 45 வயதிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் கண்டறியப்பட்ட 90% பெண்கள் சிகிச்சை பெறுவதையும் உறுதிப்படுத்துவது இதில் அடங்கும். இந்த இலக்குகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்றுவதற்கான உலகளாவிய பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்கள் மற்றும் இந்த நோக்கத்தை அடைவதில் HPV தடுப்பூசிக்கான இந்தியாவின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் HPV தடுப்பூசி திட்டங்களைத் தொடங்கியுள்ளன. இந்த திட்டங்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுத்துள்ளன. ஸ்காட்லாந்தில் இருந்து ஓர் ஆய்வு, இந்த HPV தடுப்பூசிகளின் செயல் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 1988 மற்றும் 1996 க்கு இடையில் பிறந்த பெண்கள், 12 முதல் 13 வயதிற்குள் முழுமையான HPV தடுப்பூசியைப் பெற்றவர்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா 2007 இல் HPV க்கு எதிராக சிறுமிகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது மற்றும் 2013 இல் சிறுவர்களையும் திட்டத்தில் சேர்த்தது. இந்த முயற்சியின் காரணமாக, 2035 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்கும் பாதையில் ஆஸ்திரேலியா முன்னேறி வருகிறது.
அதேபோல், ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவும், அதன் HPV தடுப்பூசி பிரச்சாரத்தின் மூலம் பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. மேலும், தடுப்பூசியால் திட்டமிடப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளின் நிகழ்வை இந்த திட்டம் வெகுவாகக் குறைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் கேட்ச்-அப் திட்டத்தின் (catch-up program) ஒரு பகுதியாக இருந்த பெண்கள் மத்தியில் இந்த குறைப்பு குறிப்பாக குறிப்பிடத்தக்கது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், தடுப்பூசி எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 11 நாடுகளில், ஆறு நாடுகள் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தின. இந்த நாடுகளில் பூட்டான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை அடங்கும். 2010 ஆம் ஆண்டில் 12 முதல் 18 வயதுடைய சிறுமிகளுக்கு நாடு தழுவிய HPV தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கிய முதல் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு (low-middle income country (LMIC)) பூட்டான் ஆகும். மேலும், இந்த திட்டத்தின் மூலம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பெண்களில் அவர்கள் கிட்டதட்ட 95% பூர்த்தியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிய சில குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (LMIC) பூட்டானும் ஒன்றாகும். திம்புவில் தொடர்ச்சியான திட்ட மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) வகைகளின் பரவலில் சரிவைக் குறிப்பிட்டுள்ளன. இது சமூகத்தில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பரவலைக் குறைப்பதில் திட்டத்தின் பரந்த செல்வாக்கைக் குறிக்கிறது.
மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி என்றால் என்ன?
சிக்கிம் மாடல்
எந்தவொரு தடுப்பூசி பிரச்சாரத்தின் வெற்றியும் சமூகங்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் வலுவான தகவல் தொடர்பு உத்தியை நம்பியுள்ளது. இந்தியாவில், HPV தடுப்பூசிக்கு சிக்கிமின் பாராட்டத்தக்க அணுகுமுறை பயனுள்ள பொது சுகாதார உத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் நன்மைகள் பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெண்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்குக் குறிப்பாகக் கற்பித்ததன் மூலம், சிக்கிம் 2018 இல் அதன் பிரச்சாரத்தின் போது, கிட்டத்தட்ட 97% தடுப்பூசி விகிதத்தை எட்டியுள்ளது. நல்ல தகவல்தொடர்பு எவ்வாறு செயல்பட முடியும் என்பதை இது காட்டுகிறது. இது தவறான புரிதல்களை நீக்கியது மட்டுமல்லாமல் தடுப்பூசி செயல்பாட்டில் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. அதன் சொந்த நாற்கர தடுப்பூசியான (own quadrivalent vaccine) செர்வாவாக்கை (Cervavac) உருவாக்குவதில் இந்தியாவின் சமீபத்திய சாதனை, அணுகல் மற்றும் மலிவுத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India), ஒன்றிய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறையுடன் (Department of Biotechnology) இணைந்து உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு டோஸுக்கு ₹2,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போதுள்ள தடுப்பூசிகளை விட செர்வாவாக் (Cervavac) மிகவும் சிக்கனமானது மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான சவாலுக்கு உறுதியளிக்கிறது.
இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தும்போது, மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) பரவுதல் மற்றும் தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் HPV தடுப்பூசியின் தாக்கத்தை அதிகரிக்க இளம் பருவ சிறுவர்களைச் சேர்க்க ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும், HPV தடுப்பூசியின் ஒரு டோஸ், இரண்டு அல்லது மூன்று அளவுகளுக்கு ஒத்த பாதுகாப்பை வழங்குகிறது என்பதை சமீபத்திய சான்றுகள் காட்டுகின்றன.
HPV தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் உத்வேகம் பெற உலகளாவிய மற்றும் உள்ளூர் வெற்றிகளை இந்தியா எதிர்பார்க்கிறது. கோவிட்-19 தடுப்பூசியின் பரவலான ஏற்றுக்கொள்ளல் மூலம் நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி பிரச்சாரங்களில் இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட சாதனை, HPV தடுப்பூசி முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தொலைதூர மற்றும் பின்தங்கிய மக்களைச் சென்றடையும் வகையில் இந்தியாவின் திட்டமானது, அதன் தடுப்பூசி திட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் அணுகலை வலியுறுத்துகிறது. இது, HPV தடுப்பூசி முயற்சியின் வெற்றிக்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.
HPV தடுப்பூசி என்பது தனிநபர் ஆரோக்கியத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் சமூக மற்றும் பொருளாதார சுமையை குறைப்பதற்கும் உதவுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெரும்பாலும் பெண்களை அவர்களின் ஆரம்பகட்ட ஆண்டுகளில் பாதிக்கிறது. இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு நிறைய தீங்கு விளைவிக்கிறது. இளம் தாய்மார்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறக்கும் போது, அது அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை பாதிக்கிறது. இதனால், இந்த தடுப்பூசியானது, HPV நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார செலவுகளைக் குறைக்கிறது. இறுதியில் பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துகிறது.
சவால்களை எதிர்கொள்ளுங்கள்
இருப்பினும், அனைவருக்கும் HPV நோய்க்கு எதிராக, சரியான முறையில் தடுப்பூசி போடுவதிலும், மக்களின் தயக்கங்களை சமாளிப்பதிலும் சில சவால்கள் உள்ளன. இந்த தடைகளை கடக்க, சமூகங்களை ஈடுபடுத்தவும், தவறான தகவல்களை அகற்றவும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் U-WIN-ஐ தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோவிட் -19 தடுப்பூசிகளைக் கண்காணிப்பதற்கான Co-WIN போலவே, U-WIN நாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் மின்னணு பதிவையும் கண்காணிக்கிறது மற்றும் மேலும், தடுப்பூசி திட்டங்கள் மூலம் விரைவாக பதிலளிக்க உதவுகிறது. அனைவரும், குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்கள் எளிதாக தடுப்பூசி போட முடியும் என்பதை உறுதி செய்வது மிக முக்கியம். தடுப்பூசிக்கான தேவையை அதிகரிக்க சமூகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் பல இடங்களில் ஒரு பெரிய தடையாக உள்ளன. கலாச்சார மற்றும் சமூக நெறிமுறைகள் தடுப்பூசி போடுவதற்கான மக்களின் விருப்பத்தையும் பாதிக்கின்றன. எனவே, அதற்கேற்ப அறிக்கைகளை வடிவமைக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம், இதன் அறிக்கையை பரப்ப உதவும். அதே சமயத்தில், பள்ளிகளில் HPV பற்றி கற்பிப்பது இளைஞர்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும். HPV தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செய்ய, அரசாங்க நிறுவனங்கள், சமூக குழுக்கள், சுகாதார வழங்குநர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையே குழுப்பணி தேவை. பரவலான டிஜிட்டல் மற்றும் வெகுஜன தவறான தகவல்களால் நிரப்பப்பட்ட நிலப்பரப்பை வழிநடத்தும் கோவிட்-19 தடுப்பூசிகளின் வெற்றிகரமான நாடு தழுவிய வெளியீட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். கூடுதலாக, பொது-தனியார் கூட்டாண்மை தடுப்பூசி சேவைகளுக்கான நியாயமான அணுகலை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் கூட்டு இலக்கை மேம்படுத்துகிறது.
எனவே, 2024-25 இடைக்கால மத்திய பட்ஜெட்டில் HPV தடுப்பூசியை இந்தியா சேர்ப்பது பெண்களின் ஆரோக்கியத்தில் ஒரு புதிய நூற்றாண்டாக அறிவிக்கிறது.
டாக்டர் ரம்யா பின்னமனேனி Harvard T.H. Chan School of Public Healt இல் Research Associate ஆக பணிபுரிகிறார்.
டாக்டர் அனன்யா அவஸ்தி அனுவாத் சொல்யூஷன்ஸின் நிறுவனர்-இயக்குநர் மற்றும் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
டாக்டர் த்ரிதி தவான் டானா-ஃபார்பர் புற்றுநோய் நிறுவனத்தில் தரவு (Dana-Farber Cancer Institute) புரோகிராமர் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.
பேராசிரியர் கே.விஷ்வநாத் ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் சுகாதார தகவல்தொடர்பு பேராசிரியராகவும், ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் - இந்தியா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்.