கர்நாடகா ஏன் சில உணவுப் பொருட்களில் வண்ணம் சேர்க்கும் நிறமிகளைத் தடை செய்துள்ளது? -சரத் எஸ்.ஸ்ரீவத்ச

 இந்த தீங்கு விளைவிக்கும் நிறமிகள் எங்கே காணப்பட்டன? எந்தெந்த நிறமூட்டும் காரணிகள் தீங்கு விளைவிக்கின்றன? உற்பத்தியாளர்கள் இந்த இரசாயனங்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அபராதங்கள் என்ன?


தென்னிந்தியாவில், பஞ்சு மிட்டாய் (cotton candy) மற்றும் கோபி மஞ்சூரியன் (gobi manchurian) போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் சில வண்ணம் சேர்க்கும் நிறமிகளை (colouring agents) பயன்படுத்துவதைத் தடை செய்த கர்நாடகா மாநிலம், தமிழ்நாடு மற்றும் கோவாவுடன் இணைந்து மூன்றாவதாக உள்ளது. பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் உணவு மாதிரிகளில் இந்த இரசாயனங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தீங்கு விளைவிக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தாத வரை பஞ்சு மிட்டாய் தயாரிப்பது இன்னும் அனுமதிக்கப்படுகிறது.


கணக்கெடுப்பு முடிவுகள் காட்டியது என்ன?


பிப்ரவரி 12 முதல், மாநிலத்தில் பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஆய்வக சோதனைகள் சுட்டிக் காட்டின. பஞ்சு மிட்டாய்களின் 25 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், அவற்றில் 15 இராசாயன வண்ணங்கள் சேர்க்கப்பட்டதால் பாதுகாப்பற்றவையாகவும், மற்ற மாதிரிகள் பாதுகாப்பாகவும் இருந்தன. ஏனெனில், அவற்றில் கூடுதல் வண்ணங்கள் எதுவும் இல்லாதாக குறிப்பிடுகிறது. 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளில், 107 மாதிரிகள் கூடுதல் இரசாயன வண்ணங்களைக் கொண்டிருந்ததால் அவை பாதுகாப்பற்றவை. மற்ற 64 கோபி மஞ்சூரியன் மாதிரிகள் கூடுதல் வண்ணங்கள் இல்லாததால் பாதுகாப்பாக உள்ளன.


தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எவை?


பஞ்சு மிட்டாய்களில், பாதுகாப்பற்ற மாதிரிகளில் சன்செட் மஞ்சள் (sunset yellow), டார்ட்ராசின் (tartrazine) மற்றும் ரோடமைன்-பி (rhodamine-b) ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், கோபி மஞ்சூரியனில் பாதுகாப்பற்ற மாதிரிகளில் டார்ட்ராசின் (tartrazine), சன்செட் மஞ்சள் (sunset yellow) மற்றும் கார்மோய்சின் (carmoisine) ஆகியவை இருந்தன. ரோடமைன்-பி (Rhodamine-B), ஒரு புற்றுநோயாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், ஏற்கனவே இது தடை செய்யப்பட்டுள்ளது. டார்ட்ராசின் (Tartrazine) ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயற்கை உணவு வண்ணம். ஆனால், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறினார். மேலும், குறிப்பிட்ட அளவுகளில், சில பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளில் டார்ட்ராசைன் இருக்க முடியாது. செயற்கை வண்ணங்களைக் கொண்ட தின்பண்டங்களை நீண்ட காலமாக உட்கொள்வது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளனர்.


அபராதங்கள் என்ன?


உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் (Food Safety and Standards Act) 2006ன் விதி 16-ன்படி, கோபி மஞ்சூரியன் செயற்கை வண்ணங்களை கொண்டிருக்கக்கூடாது. இருப்பினும், சில உணவு வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் வண்ணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. உதாரணமாக, பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட நிறமான ரோடமைன்-பி (rhodamine-b) போன்ற நிறங்கள் பயன்படுத்தப்படக்கூடாது.


இந்த விதிகளை மீறுபவர்கள் தங்கள் வணிக உரிமத்தை ரத்து செய்தல், அதிக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி (Food Safety and Standards Act), உணவுப் பொருட்களில் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகளுக்கு குறைந்தது ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.


அடுத்து என்ன?


தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருட்களுக்கான தடை, இப்போது அமலில் இருப்பதாக சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகள் (Health safety officials) கூறுகின்றனர். இந்த தடை குறித்து, உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், நுகர்வோர் தங்கள் நுகர்வு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இராசாயன வண்ணங்களைக் கொண்ட உணவுப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க அல்லது குறைக்க அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அனைவரும் விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் சீரற்ற சோதனைகளை மேற்கொள்வார்கள். கோபி மஞ்சூரியன் தவிர மற்ற பிரபலமான உணவுப் பொருட்களான கபாப்ஸ் (kebabs) ஆகியவற்றிலும் வண்ணம் சேர்க்கும் நிறமிகள் (colouring agents) பயன்படுத்தப்படுகின்றன. 




Original article:

Share: