டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான தாக்குதல் ஏப்ரல் 1 அன்று நடந்தது. அக்டோபர் 7, 2023 முதல் மேற்கு ஆசியா முழுவதும் நடந்து வரும் மோதலில் இது ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகும். தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியது. சிரியாவில் குத்ஸ் படை (Quds Force’s Syria) நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உயர்மட்ட தளபதி முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 ஈரானியர்கள் தாக்குதலில் இறந்தனர். இத்தகைய தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபட்டதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. இருப்பினும், ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி வீரர்களை குறிவைத்து இஸ்ரேல் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது என்பது பரவலாக அறியப்படுகிறது. டிசம்பர் 25 அன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (Islamic Revolutionary Guard Corps (IRGC)) மூத்த ஆலோசகரான ராசி மௌசவி, சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய தாக்குதலில் சிரியாவில் கொல்லப்பட்டார். ஏப்ரல் 1 தாக்குதல் பொதுவாக சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் தூதரக வளாகத்தை குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பதால் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, விரோத சக்திகள் கூட இராஜதந்திர வளாகங்களைத் தவிர்த்துவிட்டன. 1999 இல், பெல்கிரேடில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது அமெரிக்கா தற்செயலாக குண்டுவீசித் தாக்கியபோது, ஜனாதிபதி பில் கிளிண்டன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். தாக்குதல் நடத்தியவர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில் உள்ள நபர்களை துல்லியமாக குறிவைத்தார். இது ஒரு போர் நடவடிக்கையாக ஈரானில் பலரால் பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னரே, இஸ்ரேலும் ஈரானும் மேற்கு ஆசியாவில் ஒரு இரகசிய மோதலில் ஈடுபட்டிருந்தன. தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் இரட்டை தாக்குதலைத் தொடங்கியது 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசா மீது ஒரு பெரிய அளவிலான படையெடுப்பு, மற்றும் ஈரான் மற்றும் அதன் கூட்டணி போராளிகளை இலக்கு வைத்து சிரியா மற்றும் லெபனானில் எண்ணற்ற வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ், ஹெஸ்பொல்லா, ஹௌதிகள் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத் உட்பட பிராந்தியத்தில் உள்ள பல்வேறு அரசு சாரா போராளிகளின் மைய ஆதரவாளராக ஈரானை இஸ்ரேல் பார்க்கிறது.
காசா மீதான இஸ்ரேலின் போர் இஸ்ரேல் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஆறு மாதங்களில் 33,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், காசா ஒரு கல்லறை போல் மாறிவிட்டது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலின் காரணமாக சண்டையை நிறுத்தவும் பதவி விலகவும் அதிக அழுத்தங்களை எதிர் கொண்டார். ஆனால் விஷயங்களை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் நிலைமையை மோசமாக்க விரும்புவதாகத் தெரிகிறது. இஸ்ரேலும் ஈரானும் பெரிய போரில் ஈடுபட்டால், அது அமெரிக்காவையும் இழுக்கக்கூடும். அது முழு பிராந்தியத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் மிகவும் மோசமாக இருக்கும். இஸ்ரேலின் வலையில் ஈரான் சிக்கக்கூடாது. அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் மிகப்பெரிய நண்பராக இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் பொறுப்பற்ற முறையில் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.