புதிய அரசாங்கத்திற்கான விஞ்ஞானிகளின் கோரிக்கைகள் -பினய் பாண்டா

 ஒரு பெரிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான இந்தியாவின் தேடலில் அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளை ஆதரிப்பது அவசியம்.   


நடந்து கொண்டிருக்கும் பொதுத் தேர்தலில் 970 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் செயல்முறையில் உள்ள நிலையில், விஞ்ஞானிகள் கருத்துக்கணிப்புகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்  செயல்படுத்த விரும்பும் அடிப்படை பிரச்சினைகள் என்ன?


புதிய அரசாங்கம் ஐந்து முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உடனடி கவனம் தேவை. 


செலவை அதிகரிக்கவும் 


முதலாவதாக, நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (research and development) செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இது, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% க்கும் குறைவாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறை இரண்டும் இந்த செலவினங்களுக்கு பங்களிப்பு செய்கின்றன. ஆனால், தனியார் துறையின் பங்களிப்பு 40% க்கும் குறைவாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அரசாங்கம் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவினங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 4%ஐ எட்டுவதை நோக்கமாகக் கொள்ளல் வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தனியார் துறை செலவினங்களை அதிகரிக்க, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு (Anusandhan National Research Foundation (ANRF)) ஆதரவளிப்பது ஒரு விருப்பமாகும். ஐந்து ஆண்டுகளில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு தனியார் துறை ₹36,000 கோடி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதை எளிதாக்குவதற்கு ஒரு சட்டமன்றப் பாதையை திட்டமிடப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் அரசாங்கம் இன்னும் விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் நிதிக்கு உத்தரவாதம் அளிக்க எஸ்க்ரோ கணக்குகளைப் (escrow accounts) போன்ற வழிமுறைகளை அமைக்க வேண்டும். அதிகரித்த நிதியை திறம்பட நிர்வகிக்க, திறமையான அறிவியல் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். புதிய திறமைசாலிகளை பணியமர்த்துவதும், தற்போதைய மனித வளங்களை பயன்படுத்துவதும், நிதிகள் புத்திசாலித்தனமாகவும், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதும் இதில் அடங்கும்.


இரண்டாவதாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் சிறப்பு ஆராய்ச்சி நிறுவனங்களை நவீனப்படுத்துவதும் இதில் அடங்கும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதிக ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்த வேண்டும். இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய எண்ணிக்கையை விட இரட்டிப்பாக்கும். இருப்பினும், விஞ்ஞான முயற்சிகளுக்கான சிறந்த நபர்ககளைத் தேர்ந்தெடுப்பதற்கான நியாயமான மற்றும் வலுவான அமைப்பு இல்லாமல் அதிகமான நபர்களை பணியமர்த்துவது போதுமானதாக இருக்காது.


தகுதியில் கவனம் செலுத்துங்கள்


 மூன்றாவதாக, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியமர்த்தல் செயல்முறையானது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வெளிப்படையானதாகவும், விரைவாகவும், வெளிப்புற தாக்கங்களிலிருந்து விடுபடவும் வேண்டும். தேர்வு நிலைகள் புற தலையீடும் இல்லாமல் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு திறமையான குழுவால் நிர்வகிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் முதல் பணி நியமனக் கடிதம் வழங்குவது வரையிலான முழு செயல்முறையும் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது. தரமான ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பணியமர்த்துவதற்கான உலகளாவிய நெறிமுறைகள் நிறுவப்படுவது முக்கியம்.


நான்காவதாக, ஆராய்ச்சியை திறம்பட ஆதரிக்க ஒரு வலுவான அறிவியல் மானிய மேலாண்மை அமைப்பு (science grant management system) அவசியம். இந்த அமைப்பு மானியங்களுக்கு விண்ணப்பிக்கும் போது குறைவான அதிகாரத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும், நிதி மற்றும் மாணவர் பெல்லோஷிப்களை விரைவாக விநியோகிக்க வேண்டும், மின்னணு முறையில் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவர்களின் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்க அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டும்.   இதை அடைய, அறிவியல் அமைச்சகங்களுக்குள் உள்ள பல்வேறு துறைகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டு முடிவதற்குள் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களைச் செலவழிக்க அதிகப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது செயல்முறையை நெறிப்படுத்தவும், விஞ்ஞானிகளுக்கு உரிய நேரத்தில் நிதி சென்றடைவதை உறுதி செய்யவும் உதவும்.


விஞ்ஞானிகள் திறம்பட செலவழிக்க உதவ, அரசாங்கத்தின் மின்னணு சந்தையை தவிர வேறு இடங்களிலிருந்து வாங்க அனுமதிப்பது முக்கியம். சில நேரங்களில், மின்னனு சந்தை குறைந்த தரமான "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" தயாரிப்புகளை வழங்குகிறது. ஏனெனில், அவை மலிவானவை. தேவைப்பட்டால் நிதி விதிகளை மாற்றும் சுதந்திரமும் விஞ்ஞானிகளுக்கு இருக்க வேண்டும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிப்பது என்பது ஆராய்ச்சிக்கு தேவையானதை வாங்குவது, மலிவான விருப்பம் மட்டுமல்ல. விஞ்ஞானிகள் அவர்கள் எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதற்கு பொறுப்பேற்க வேண்டும்.


சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்


ஐந்தாவதாக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியைப் பற்றி எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் சுதந்திரமாக பேசவும் எழுதவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இது கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமானது. ஒரு செழிப்பான தொடக்க சூழல் இல்லாமல், கல்வித்துறை அனைவருக்கும் புதுமைகளை உருவாக்காது. கடந்த கால அரசாங்கங்கள் இந்திய வளாகங்களில் புதுமைகளை ஊக்குவித்தாலும், புதிய அரசாங்கம் விஞ்ஞானிகளுக்கு தன்னாட்சி வழங்கும்போது உண்மையான கண்டுபிடிப்புகள் செழிக்கும். நிறுவனங்களைத் தொடங்குவதற்கும், ஊழியர்களை எளிதாக வேலைக்கு அமர்த்துவதற்கும், நிதிகளை நிர்வகிப்பதற்கும், மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான  சுதந்திரமும் இதில் அடங்கும். விஞ்ஞானிகள் தங்கள் வேலையின் தரம் மற்றும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அறிவுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.  

 

2050 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு, புதிய அரசாங்கம் அறிவியல் செயல்முறைகளை எளிமைப்படுத்தி, விஞ்ஞானிகளுக்கு முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும். இதன் பொருள் அதிகாரத்துவம் மற்றும் நிர்வாக ஆவணங்களை குறைப்பதாகும். அடிப்படை அறிவியலில் முதலீடு செய்வதைப் போலவே, கண்டுபிடிப்புகள் மூலம் செல்வத்தையும் வேலைகளையும் உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பது அவசியம். விஞ்ஞானிகள், குறைவாக இருந்தாலும், அதிக நன்மைக்கான முடிவுகளில் செல்வாக்கு செலுத்த முடியும்.    


பினய் பாண்டா, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.




Original article:

Share: