அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நல்லதோர் வாய்ப்பு, ஆனால் இது சீன தயாரிப்புகள் நாட்டிற்குள் வருவதையும் குறிக்கிறது.
18 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக சமீபத்தில் அமெரிக்கா கூறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையக்கூடும். பைடன் நிர்வாகம் எஃகு, அலுமினியம், குறைக்கடத்திகள், மின்சார கார்கள், லித்தியம் அயன் பேட்டரிகள், சோலார் பேட்டரிகள், கிரேன்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் போன்ற சில பொருட்களின் மீதான கட்டணத்தை அதிகரிக்க விரும்புகிறது. தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவுசார் சொத்து மற்றும் புதுமை தொடர்பான சீனாவின் நியாயமற்ற நடைமுறைகள் மற்றும் பெரிய உற்பத்தி திறன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அமெரிக்காவால் சுட்டிக்காட்டப்படும் காரணங்களாகும்.
இந்த வரி உயர்வுகளின் தாக்கம் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்காது. ஏனெனில், இந்த இறக்குமதிகள், சீனாவிலிருந்து நாட்டின் மொத்த இறக்குமதியில் வெறும் 4 சதவீதம் மட்டுமே. இருப்பினும், பாதிக்கப்பட்ட சீன பொருட்கள் மற்ற நாடுகளுக்கு செல்வதால் உலகளவில் வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். சீனா கட்டண உயர்வுகளுடன் பதிலடி கொடுத்தால், இது 2018-ல் டொனால்ட் டிரம்பின் கீழ் செய்ததைப் போல ஒரு வர்த்தகப் போராக மாறினால், இந்தியா உட்பட பிற நாடுகள் கடுமையான பாதிப்புகளை வர்த்தக ரீதியாக சந்திக்கும்.
நேர்மறை விளைவுகள்
வர்த்தகப் போரால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசங்கள், மருந்து உறிஞ்சுகுழாய்கள் (syringes) மற்றும் ஊசிகள், மருத்துவக் கையுறைகள் மற்றும் இயற்கைக் கடுங்கரி (Natural graphite) ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள் சமீபத்திய சுற்று அமெரிக்கக் கட்டண உயர்வுகளிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. இந்த வகைகளில் சீனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்தாலும், இந்தத் தயாரிப்புகளுக்கான அமெரிக்கச் சந்தையிலும் இந்தியா நல்ல இருப்பைக் கொண்டுள்ளது.
எதிர்மறை விளைவுகள்
குறைந்த விலையில் சீனப் பொருட்கள் இந்தியாவுக்கு திருப்பி விடப்படுவதை இந்திய அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இது இந்திய உற்பத்தியை கடுமையாகப் பாதிக்கும். 2018-ல், கட்டண உயர்வுகள் சீனாவின் ஏற்றுமதியைக் குறைக்கவில்லை. அவர்கள் வேறு இடங்களுக்கு அல்லது மூன்றாம் நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் சென்றனர். அமெரிக்காவில் மின்வாகனங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்வாகனங்களுக்கான வரிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்துவரும் நிலையில், மலிவானத் தரம் குறைந்த மின்வாகனங்கள் இந்தியாவுக்குள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், இந்திய வணிகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியாவின் மின்சார வாகனக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சீனாவில் இருந்து லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் குறைக்கடத்திகள் போன்ற அதிக அமெரிக்க வரிகளைக் கொண்ட தயாரிப்புகளும் இந்தியாவுக்கு திருப்பி விடப்படலாம். சீனா ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 2024-ஆம் ஆண்டு நிதியாண்டில் மொத்தம் $101.7 பில்லியன் ஆகும்.
உற்பத்தி செய்யப்பட்ட நாட்டில் விற்பனை விலையை விட குறைவான விலையில் இறக்குமதியை அடையாளம் காணும் செயல்முறையை இந்தியா கொண்டுள்ளது. வர்த்தகத் தீர்வுகளுக்கான இயக்குநரகம் (Directorate General of Trade Remedies) அத்தகைய தயாரிப்புகளுக்கு குவிப்பு-எதிர்ப்பு வரியை (anti-dumping duty) விதிக்கிறது. இருப்பினும், வர்த்தகத் தரவை அணுகுவதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. நடவடிக்கைகளை விரைவுபடுத்த முக்கிய இறக்குமதிகள் குறித்த வர்த்தக தரவுகளை தினசரி பகுப்பாய்வு செய்ய ஒரு துறையை அமைப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கலாம். இந்தியாவின் சமீபத்திய உற்பத்தி ஊக்கத்தை ஆதரிக்கும் சீனாவுடனான ஒரு வர்த்தகக் கொள்கை கவனத்திற்குரியது. குறிப்பாக, 'சீனா பிளஸ் ஒன்' (China plus one) மையமாக இருக்க இந்தியா ஆர்வமாக உள்ளது.