கொச்சியில் அண்டார்டிக் நாடாளுமன்றக் கூட்டம் : என்ன விவாதிக்கப்படுகிறது? - அஞ்சலி மரார்

 அண்டார்டிக் நாடாளுமன்றம் என்றும் அழைக்கப்படும் 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை (Antarctic Treaty Consultative Meeting  (ATCM (46)) மே 20 முதல் 30 வரை கொச்சியில் இந்தியா நடத்துகிறது. கோவாவில் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences (MoES)) மூலம் இந்தக் கூட்டத்தை  நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அண்டார்டிக் ஒப்பந்தத்தின் 56 உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா கடைசியாக 2007-ல் புதுதில்லியில் அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.


அண்டார்டிக் ஒப்பந்தம் (The Antarctic Treaty)


அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய 12 நாடுகள் டிசம்பர் 1, 1959 அன்று கையெழுத்திடப்பட்ட அண்டார்டிக் ஒப்பந்தத்தில் முதலில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் 1961-ல் நடைமுறைக்கு வந்தது. 1983ஆம் ஆண்டில் இந்தியா உட்பட மொத்தம் 56 நாடுகள் இதில் இணைந்துள்ளன.


கொச்சிக் கூட்டத்தின் போது, மைத்ரி-2 (MAITRI-2) கட்டுவதற்கான திட்டத்தை உறுப்பினர்கள்முன் இந்தியா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யும். அண்டார்டிகாவில் எந்தவொரு புதிய கட்டுமானம் அல்லது முயற்சிக்கும் ATCM-இன் ஒப்புதல் தேவை.


பனிப்போரின் போது கையெழுத்திடப்பட்ட அண்டார்டிகா ஒப்பந்தம், சர்வதேச புவிசார் அரசியல் போட்டிக்கு வெளியே அண்டார்டிகாவை "மனிதர்கள் இல்லாத நிலம்" (“no man’s land”) என்று உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- அண்டார்டிகா அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இராணுவமயமாக்கல் (militarisation) அல்லது பலப்படுத்துதல்  (fortification) அனுமதிக்கப்படாது. கையொப்பமிட்ட அனைத்து நாடுகளும் விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்ளலாம். திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், ஒத்துழைப்பை நீட்டிக்கலாம் மற்றும் தரவுகளை இலவசமாகக் கிடைக்கச் செய்யலாம்.


- அண்டார்டிகாவில் அணுசக்தி சோதனை (Nuclear testing) அல்லது கதிரியக்கக் கழிவுகளை அகற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐந்தாவது பெரிய கண்டமான அண்டார்டிகாவின் அனைத்து ஆட்சி மற்றும் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது.


அண்டார்டிகாவில் இந்தியா


1983 முதல், அண்டார்டிகா ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒரு ஆலோசனைக் கட்சியாக இருந்து வருகிறது. இது அண்டார்டிகா தொடர்பான முக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளில் வாக்களிக்கவும் பங்கேற்கவும் அனுமதிக்கிறது. அண்டார்டிகா ஒப்பந்தத்தில் உள்ள 56 நாடுகளில், 29 நாடுகள் ஆலோசனை கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளன.


1981 முதல் அண்டார்டிகாவில் அறிவியல் ஆராய்ச்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. தக்ஷின் கங்கோத்ரியில் முதல் இந்திய அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையம், (first Indian Antarctica research station, Dakshin Gangotri), 1983-ஆம் ஆண்டில், தென் துருவத்திலிருந்து சுமார் 2,500 கி.மீ தொலைவில் குயின் மவுட் லேண்டில் அமைக்கப்பட்டது. இந்த நிலையம் 1990 வரை செயல்பட்டது.


1989-ஆம் ஆண்டில், இந்தியா தனது இரண்டாவது ஆராய்ச்சி நிலையமான மைத்ரியை (Maitri) ஷிர்மேக்கர் சோலையில் (Schirmacher Oasis) அமைத்தது. இது 100-க்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகளைக் கொண்ட பனி இல்லாத பீடபூமியாகும். இது இன்னும் செயல்பாட்டில் உள்ளது மற்றும் ரஷ்யாவின் நோவோலாசரேவ்ஸ்கயா நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், தக்ஷின் கங்கோத்ரியிலிருந்து 90 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மைத்ரியில் கோடையில் 65 பேரும், குளிர்காலத்தில் 25 பேரும் தங்க முடியும்.

2012-ஆம் ஆண்டில், மைத்ரிக்கு கிழக்கே 3,000 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்ஸ் விரிகுடா கடற்கரையில் இந்தியா தனது மூன்றாவது ஆராய்ச்சி நிலையமான பாரதியை (Bharati) திறந்தது. இந்த நிலையம் கடலியல் மற்றும் புவியியல் ஆய்வுகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் (Indian Remote sensing Satellite (IRSS)) தரவைப் பெற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் (Indian Space Research Organisation (ISRO)) பயன்படுத்தப்படுகிறது. கோடையில் 72 பேருக்கும், குளிர்காலத்தில் 47 பேருக்கும் பாரதி ஆதரவளிக்க முடியும்.


மைத்ரி நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மைத்ரி II என்ற புதிய நிலையத்தைத் திறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் 2029-க்குள் தொடங்க உள்ளன. 2022ஆம் ஆண்டில், இந்தியா அண்டார்டிக் சட்டத்தை இயற்றியது. அண்டார்டிக் ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.


அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு (Antarctic Treaty Consultative Meeting  (ATCM))  முன்னிருக்கும் நோக்கம் 


அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டமானது சட்டம், தளவாடங்கள், ஆளுகை, அறிவியல், சுற்றுலா மற்றும் தெற்குக் கண்டத்தின் பிற அம்சங்கள் குறித்த உலகளவில் கலந்துரையாடலுக்கு உதவுகிறது. இந்த மாநாட்டின்போது, அண்டார்டிகாவில் அமைதியான ஆட்சிக்கான யோசனையை இந்தியா ஊக்குவிக்கும். மேலும் பிற இடங்களில் புவிசார் அரசியல் பதட்டங்கள் கண்டத்தையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தும்.


வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன்  (DrMRavichandran) தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், கண்டத்தில் சுற்றுலாவை (tourism) ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியா ஒரு புதிய பணிக்குழுவை அறிமுகப்படுத்தும் என்றார். "2016 முதல் அண்டார்டிகாவில் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், விதிமுறைகளை வகுக்கவும், சுற்றுலா நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், விதிகளை வகுக்கவும் ஒரு அர்ப்பணிப்புள்ள பணிக்குழு செயல்படுவது இதுவே முதல் முறை" என்று ரவிச்சந்திரன் கூறினார்.


அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துவது குறித்த இந்தியாவின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நெதர்லாந்து, நார்வே மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் இந்த பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும். இது செயல்படக்கூடிய வழிகாட்டுதல்களை ஒப்புக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, அண்டார்டிகாவுக்கு சுற்றுப்பயண வழிக்காட்டிகளால் (tour operator) இயக்கப்படுகிறது. மேலும், அண்டார்டிகாவின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புக்கு சுற்றுலாப் பயணிகள் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் பற்றி அதிகம் அறியப்படவில்லை.


அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (Antarctic Treaty Consultative Meeting  (ATCM)) அண்டார்டிகாவின் நிலையான மேலாண்மை மற்றும் அதன் வளங்கள், பல்லுயிர் எதிர்நோக்கம், ஆய்வுகள் மற்றும் தகவல் மற்றும் தரவு பரிமாற்றம், ஆராய்ச்சி, ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, மற்றும்  அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து விவாதிக்கும்.




Original article:

Share: