வெளிறிப்போதல் (Bleaching) பவளப்பாறைகளை நோய் மற்றும் உணவூட்டத்தை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. இந்த வெளிறிப்போதல் நீண்ட காலத்திற்கு பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (Central Marine Fisheries Research Institute (CMFRI)) ஒரு ஆய்வை நடத்தியது. லட்சத்தீவு கடலில் உள்ள பவளப்பாறைகளில் தீவிரமான வெளிறிப்போதல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்டோபர் 2023 இல் தொடங்கி நீண்டகால கடல் வெப்ப அலைகளால் இந்த வெளிறிப்போதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநாத் மற்றும் டாக்டர் ஷெல்டன் படுவா ஆகியோர் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) மூத்த விஞ்ஞானிகள். அவர்கள் பவளப்பாறையின் வெளிறிப்போதல் பற்றிய ஆராய்ச்சியை வழிநடத்துகிறார்கள். பவளப்பாறை வெளிறிப்போதல் லட்சத்தீவின் பல்வேறு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பவளப்பாறை வெளிறிப்போதல் பற்றி சில முக்கியமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது
1. வெளிறிப்போதல் என்றால் என்ன
2. வெளிறிப்போதல் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள்
3. சுற்றுச்சூழலில் வெளிறிப்போதலின் விளைவுகள்
பவளப்பாறைகள் என்றால் என்ன?
பவளப்பாறைகள் இடம்பெயராத விலங்குகள், அவை கடல் பகுதியின் தரையில் நிரந்தரமாக தங்களை இணைத்துக் கொள்கின்றன. அவை இரண்டு வகைகளில் வளருகின்றன 'கடினமானவை' மற்றும் 'மென்மையானவை'. கடினமான பவளப்பாறைகள் சுண்ணாம்பு ஓடுகளை கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (United States’ National Oceanic and Atmospheric Administration) விளக்குகிறது. இந்த ஓடு பவளச் சதைவளர்ச்சிகளால் (coral polyps) உருவாக்கப்படுகின்றன. இந்த சதைவளர்ச்சிகள் இறக்கும் போது, அவற்றின் ஓடுகள் மட்டும் இருக்கும். புதிய சதைவளர்ச்சிகள் இந்த ஓடுகளை வளர்வதற்கான தளங்களாகப் பயன்படுத்துகின்றன.
பவளப்பாறையின் ஓடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டு முதல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக சிக்கலான பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. இந்த திட்டுகள் பெரும்பாலும் "கடலின் மழைக்காடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. அவை ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்களுக்கு ஒரு வீட்டை வழங்குகின்றன மற்றும் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குகின்றன.
கிட்டத்தட்ட லட்சத்தீவின் அனைத்து தீவுகளும் வட்டப் பவளத்திட்டுகள் (coral atolls). அவற்றின் மண் முக்கியமாக பவளப்பாறைகளிலிருந்து வருகிறது, மேலும் அவற்றைச் சுற்றி வாழும் பவளப்பாறைகளும் உள்ளன.
தண்ணீர் மிகவும் சூடாக இருக்கும்போது பவள வெளுப்பு ஏற்படுகிறது. இத்தகைய நிலைமைகளில், பவளப்பாறைகள் அவற்றின் திசுக்களில் வாழும் நுண்ணிய பாசிகளை வெளியேற்றும். இந்த பாசிகள் பவளப்பாறைகளுக்கு உணவை உற்பத்தி செய்கின்றன.
இந்த பாசிகள் இல்லாமல், பவளங்களின் திசுக்கள் வெள்ளை நிறமாக மாறும். இது அவைகளின் வெள்ளை நிற ஓட்டை வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு பவளம் வெளிறிப்போதல் (Coral bleaching) என்று அழைக்கப்படுகிறது. வெளிறிப்போன பவளப்பாறைகள் இறக்கவில்லை. இருப்பினும், அவை பட்டினி மற்றும் நோய் அபாயத்தில் உள்ளது. பாசிகள் இல்லாமல், பவளப்பாறைகள் சுமார் இரண்டு வாரங்கள் வரை உயிர் வாழ முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அக்டோபர் 2023 முதல் லட்சத்தீவு கடல் வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பவளப்பாறை வெளுப்பு கடந்த வாரம்தான் கவனிக்கப்பட்டது. தண்ணீர் சூடாக இருந்தால், வெளுப்பு இறுதியில் லட்சத்தீவின் பவளப்பாறைகளின் மரணத்தை ஏற்படுத்தும்.
இதற்கு முன்பு, குறிப்பாக 1998, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லட்சத்தீவு கடலில் பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. இருப்பினும், தற்போதைய வெளுப்பு நிகழ்வு முந்தைய நிகழ்வுகளை விட பெரியது.
லட்சத்தீவு கடல் இப்போது எவ்வளவு சூடாக இருக்கிறது?
கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அதிகபட்ச சராசரி வெப்பநிலையை விட 1 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும்போது பவளப்பாறைகள் வெப்ப அழுத்தத்தை அனுபவிக்கின்றன. இந்த அதிக வெப்பநிலை சில காலம் நீடித்தால் இந்த வெப்ப அழுத்தம் அதிகமாகும்.
கடந்த 12 வாரங்களில் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள வெப்ப அழுத்தத்தைக் கண்காணிக்க விஞ்ஞானிகள் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை (Degree Heating Week (DHW)) குறிகாட்டியைப் பயன்படுத்துகின்றனர். இந்த காலகட்டத்தில் வெப்ப நிலை வரம்பை மீறும் போது வெளுப்பு ஏற்படும்.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) கண்டறிந்தபடி, லட்சத்தீவு பவள வெளுப்பு வரம்பை கடந்துள்ளது, ஏனெனில் அதன் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை (DHW) மதிப்புகள் 4 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளது. அக்டோபர் 27, 2023 முதல் லட்சத்தீவு கடல் வழக்கத்தை விட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதல் காற்றில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் தண்ணீரை மிகவும் வெப்பமாக்குகின்றன.
கடல் வெப்ப அலைகள், பவளப்பாறைகள் வெளுத்தல் லட்சத்தீவுகளுக்கு மட்டும் ஒரு பிரச்சனையா?
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) 2022 இல் நடத்திய ஆய்வில், இந்தியப் பெருங்கடலில் அதிக கடல் வெப்ப அலைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு ராக்ஸி மேத்யூ கோல் (Roxy Mathew Koll) என்பவரால் நடத்தப்பட்டது மற்றும் ஜேஜிஆர் பெருங்கடல்கள் (JGR Oceans) என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்தியப் பெருங்கடல் விரைவாக வெப்பமடைந்து வருவதையும், வலுவான எல் நினோக்கள் அதை மோசமாக்குவதையும் அவர்கள் கண்டறிந்தனர். இந்த வெப்ப அலைகள் முன்பு அரிதாகவே இருந்தன, ஆனால் இப்போது அவை ஆண்டுதோறும் நிகழ்கின்றன.
மேற்கு இந்தியப் பெருங்கடல் கடல் வெப்ப அலைகளில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டது, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் சுமார் 1.5 செல்சியஸ் வெப்பம் அதிகமாகும், அதைத் தொடர்ந்து வடக்கு வங்காள விரிகுடா ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் 0.5 செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. 1982 முதல் 2018 வரை மேற்கு இந்தியப் பெருங்கடலில் 66 மற்றும் வங்காள விரிகுடாவில் 94 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளன. மே 2020 இல், கடல் வெப்பத்திற்குப் பிறகு, தமிழகத்திற்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடாவில் உள்ள 85% பவளப்பாறைகள் வெளுத்துவிட்டதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.
இதன் தாக்கம் என்ன?
வெப்ப அலைகள் கடலோர சமூகங்கள், சுற்றுலா, மீன்வளம் மற்றும் கடல் புல்வெளிகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. பவளப்பாறைகளைப் போலவே, கடல் புல்வெளிகள் மற்றும் கெல்ப் காடுகளும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படுகின்றன, அவை வளரும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் திறனை பாதிக்கின்றன. லட்சத்தீவில், தீவுகளின் கட்டமைப்பிற்கு பவளப்பாறைகள் இன்றியமையாதவை. பவளப்பாறைகள் இறந்தால், அது கரிமப் பொருட்களை உருவாக்கி, புதிய பவளபாறைகள் உருவாவதை நிறுத்தும்.