ஒரே நகரத்திற்குள் வெப்பநிலை ஏன் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது? -அலிந்த் சௌஹான்

 டெல்லியில் உள்ள ஒரு வானிலை மையத்தில் மே-29 அன்று வழக்கத்திற்கு மாறாக 52.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.  இருப்பினும், அதே நகரத்தில் உள்ள மற்றொரு நிலையத்தில் 45.2 டிகிரி பதிவாகியுள்ளது. இது மே மாத இறுதியில் மிகவும் சாதாரணமானது. காரைக் கட்டிடம் அதிகம் உள்ள இடங்களை விட மரங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஏன் குளிர்ச்சியாக இருக்கின்றன. இது ஏன் நடக்கிறது?


டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை  மையத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.


இருப்பினும், டெல்லியின் பிற பகுதிகளில் பதிவான வெப்பநிலை முங்கேஷ்பூரில் உள்ளதைவிட குறைந்தது 6 அல்லது 7 டிகிரி குறைவாக இருந்தது. உதாரணமாக, ராஜ்காட் மற்றும் லோதி சாலையில், புதன்கிழமை வெப்பநிலை 45.2 மற்றும் 46.2 டிகிரி செல்சியஸ் ஆக அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரே நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை ஏன் மாறுபடுகிறது?


ஒரே நகரத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலை இருக்கலாம். டெல்லியில் பல வானிலை நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பநிலையைப் பதிவு செய்கின்றன. முழு நகரத்திற்கும் சராசரி வெப்பநிலையை வழங்கும் எந்த ஒரு நிலையமும் இல்லை.


பாலம், லோதி சாலை, ரிட்ஜ், ஆயாநகர், ஜாபர்பூர், முங்கேஷ்பூர், நஜாப்கர், நரேலா, பிதாம்புரா, பூசா, மயூர் விஹார் மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொலைபேசியில் உள்ள வானிலை பயன்பாடு அருகிலுள்ள நிலையத்தில் வெப்பநிலையைக் காட்டுகிறது. இது அதிகாரப்பூர்வ இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)) தரவாக இருக்காது. எனவே, நகரம் முழுவதும் பயணம் செய்தால், தொலைபேசியில் வெவ்வேறு வெப்பநிலைகளைக் காட்டும்.


ஆனால் ஒரே நகரத்தில் வெவ்வேறு இடங்களில் வெப்பநிலை ஏன் வேறுபடுகிறது?

 

ஒரே நகரத்திற்குள் வெவ்வேறு இடங்களில் மாறுபட்ட வெப்பநிலை பதிவாவதற்கு பல காரணிகள் உள்ளன. வானிலை ஒரு முக்கிய காரணியாக இருந்தாலும், குறிப்பாக டெல்லி போன்ற ஒரு பெரிய நகர்ப்புற மையத்தில் மனித நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்தக் காரணிகளில் நடைபாதைகள், கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களின் செறிவு அடங்கும். கடினமான மற்றும் உலர்ந்த மேற்பரப்புகள் குறைந்த நிழல் மற்றும் ஈரப்பதத்தை வழங்குகின்றன. இது அதிக வெப்பநிலைக்கு வழிவகுக்கிறது. காரைக் கட்டிடம் போன்ற உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிக வெப்பத்தை சேமித்து வைத்திருக்க முடியும். பல கட்டிடங்களைக் கொண்ட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள் வெப்பத்தைத் தக்க வைக்கும், இதனால் இந்த பகுதிகள் "பெரிய வெப்ப பொருட்கள்" (“large thermal masses”) ஆகும். குறுகிய தெருக்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் பொதுவாக வெப்பநிலையைக் குறைக்கும் குளிர்ந்த காற்றைத் தடுக்கலாம்.


வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் உள்ள குளிரூட்டி (air conditioners) வெளியில் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் உள்ளூர்ப் பகுதிகளை வெப்பமாக்குகின்றன. இந்தக் காரணிகள் அனைத்தும் சேர்ந்து 'நகர்ப்புற வெப்ப தீவுகளை' (‘urban heat islands’) உருவாக்குகின்றன. அருகிலுள்ள பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும்.


மரங்கள், தாவரங்கள் மற்றும் நீர்நிலைகள் இல்லாவிட்டால் ஒரு பகுதி நகர்ப்புற வெப்பத் தீவாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம். மரங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கை அம்சங்கள் நிழலை வழங்குவதன் மூலமும் ஈரப்பதத்தை காற்றில் வெளியேற்றுவதன் மூலமும் ஆவியாக்குவதன் மூலமும் குளிர்விக்கின்றன.


டெல்லியில் உள்ள பெரிய பூங்காக்கள் அல்லது காடுகளுக்கு அருகில் இந்த குளிர்ச்சி விளைவைக் காணலாம்.




Original article:

Share: