இஸ்ரேல் மீதான பல்வேறு குற்றச்சாட்டு காரணமாக பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
அடுத்த வாரம், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளன. இது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை புறக்கணிக்க இயலாது என்ற உலகளாவிய கருத்தை மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க, இந்தியா உட்பட, 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.
இந்த வார தொடக்கத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court (ICC)) வழக்கறிஞர், அக்டோபர் 7-க்குப் பிறகு காசாவில் நடந்த நடவடிக்கைகளுக்காக நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இஸ்ரேலில் 1,200 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஹமாஸ் தலைமையையும் கைது செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். இதை "போர் குற்றங்கள்" (“war crimes”) என்று முத்திரை குத்தியது. மே 24 அன்று, "இனப்படுகொலை" (“genocide”) தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க அழைப்பு விடுத்த தென்னாப்பிரிக்காவின் மனு மீது சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) தீர்ப்பு வழங்க உள்ளது.
அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றின் இந்த முடிவு பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த எட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் இணைந்துள்ளது. இது கள நிலைமையை மாற்றாது என்றாலும், இது குறிப்பிடத்தக்க அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஐரிஷ் தாவோசீச் சைமன் ஹாரிஸ் இதை இஸ்ரேலுக்கு "சக்திவாய்ந்த அரசியல் மற்றும் அடையாள மதிப்புள்ள செயல்" என்றும், இந்த நடவடிக்கைகள் ரஃபா மீதான கடைசி தாக்குதலாக இருக்கலாம் என்று கூறினார். மேற்குக் கரையில் உள்ள சட்டபூர்வமான பாலஸ்தீன அரசாங்கத்தை புறக்கணித்ததன் தவறை அவர் சுட்டிக்காட்டினார். "ஹமாஸ் பாலஸ்தீனிய மக்கள் அல்ல" (“Hamas is not the Palestinian people”) என்று குறிப்பிட்டார். பல நாடுகள் ஹமாஸின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நர்வேயின் பிரதமர் கர் ஸ்டோர் (Jonas Gahr Store), நீண்ட மற்றும் கடுமையான மோதலில் "மிதவாத சக்திகளை" ஆதரிக்க விரும்புவதாக கூறினார். இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை ஏற்றிச் செல்லும் கொடி பொறிக்கப்பட்ட கப்பலுக்கு துறைமுக வசதிகளை வழங்க ஸ்பெயின் மறுத்துவிட்டது. இஸ்ரேல் தனது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து, மூன்று நாடுகளின் தூதர்களை அழைத்து தனது கண்டங்களை தெரிவித்தது.
பல நாடுகள் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியை தெரிவிக்கின்றன. ரஃபாவில் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும். மேலும், தடைகள் இல்லாமல் காசாவில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் நெதன்யாகுவிடம் நீண்ட நாட்களாக இந்த செய்தியை கூறி வருகின்றனர். அவர் இரு நாடுகளின் தீர்வை நிராகரித்த போதிலும், உலகம் அதை அமைதிக்கான பாதையாகப் பார்க்கிறது. இந்தச் செய்திகளைப் புறக்கணிப்பது, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச சமூகத்திடம் இருந்து தனிமைபடுத்தும். சர்வதேச சமூகம் அக்டோபர் 7-ஆம் தேதி வரை இஸ்ரேலுக்கு அனுதாபம் காட்டியது. ஆனால், அதன் பின்னர் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.