பிரதமர் மோடி அவர்களின் சமீபத்திய இரஷ்யா பயணம், இரஷ்யாவுடனான இந்தியாவின் வலுவான உறவுகளைக் காட்டுகிறது. இந்த உறவை சீனா பாதிக்காமல் தடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க ரஷ்யா செல்கிறார். மோடி பிரதமரானதில் இருந்து இரு தலைவர்களும் மொத்தம் 16 முறை சந்தித்துள்ளனர். ஆனால், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து பரந்த அளவிலான மேற்கத்திய தடைகளைத் தூண்டியது. மோடி கடைசியாக 2019 செப்டம்பரில் விளாடிவோஸ்டோக்கில் (Vladivostok) நடந்த கிழக்கு பொருளாதார மன்றத்திற்காக (Eastern Economic Forum) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதே நேரத்தில், விளாதிமீர் புடின் கடைசியாக 2021 டிசம்பரில் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார்.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு தனது முதல் இருதரப்பு பயணமாக இரஷ்யாவுக்கு பயணம் செய்ய முடிவு செய்திருப்பது, இந்திய பிரதமர்கள் மத்தியில் முதலில் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வழக்கத்தை உடைத்துள்ளார். முன்னதாக, அவர் ஜூன் 2014-ல் பூட்டானுக்கும், பதவியேற்ற பிறகு ஜூன் 2019-ல் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கும் பயணம் செய்தார். கடந்த மாதம் ஜி-7 தலைவர்கள் பலதரப்பு கூட்டத்திற்காக இத்தாலி சென்றார்.
ரஷ்யாவுடனான இந்த பயணமானது, மாஸ்கோவுடனான அதன் உறவில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும், வெளியுறவுக் கொள்கை முன்னுரிமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இரஷ்ய எதிர்ப்பு இராணுவ கூட்டணியின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஜூலை 9-11 தேதிகளில் வாஷிங்டன் டி.சி.யில் (Washington DC) 32 நாடுகளைச் சேர்ந்த வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organisation (NATO)) தலைவர்கள் ஒன்றுகூடும் அதே நேரத்தில் நரேந்திர மோடி, விளாதிமீர் புடினை சந்திக்க உள்ளார்.
இரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் தாராள மனப்பான்மை மற்றும் இருநாடுகளுக்கிடையேயான நட்பை அன்புடன் நினைவுகூருகிறார்கள். இது ரஷ்யாவுடனான தற்போதைய உறவுக்கு எடுத்துச் சென்றுள்ளது. இருப்பினும், இன்று, ரஷ்யாவின் அணுகுமுறை சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் பரந்த உலகக் கண்ணோட்டம் மற்றும் முன்னுரிமைகளைப் போலல்லாமல், மிகவும் பரிவர்த்தனை மிக்கதாக உள்ளது.
பல ஆண்டுகளாக, இந்தியா தனது உறவுகளை பல-துருவ உலகில் (multi-polar world) விரிவுபடுத்தியுள்ளது. இதனால், இந்தியா-ரஷ்யா உறவு சில பகுதிகளில் தேக்கமடைந்தும், சில பகுதிகளில் பலவீனமாகவும் உள்ளது. பாதுகாப்பு என்பது, இருநாடுகளின் கூட்டாண்மையின் வலுவான தூணாகும். மேலும், அணுசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பனிப்போர் காலத்தில், சோவியத் ஒன்றியம் இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு உபகரணங்களின் ஆதாரமாக இருந்து வந்தது. இன்று, இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்களில் 60 முதல் 70 சதவீதம் இரஷ்யாவிடமிருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, காலப்போக்கில், பாதுகாப்பு ஒத்துழைப்பு இயல்பாக மாறிவிட்டது. வாங்குவோர்-விற்பவர் பரிவர்த்தனை (buyer-seller framework) என்பதிலிருந்து கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவும் ரஷ்யாவும் பல இராணுவப் பொருட்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. S-400 Triumf ஏவுகணைகள், MiG-29 போர் விமானங்கள், Kamov ஹெலிகாப்டர்கள் மற்றும் T-90 டாங்கிகள், Su-30MKI போர் விமானங்கள், AK-203 துப்பாக்கிகள் மற்றும் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உரிமங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளை உள்ளடக்கும் வகையில் இந்தியா தனது பாதுகாப்பு உபகரணங்களின் ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், மாஸ்கோவின் ஆதரவை இந்தியா இழக்க முடியாது. குறிப்பாக, இப்போது கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) சீனாவுடனான பதட்டங்களுடன், ரஷ்யாவிடமிருந்து வழக்கமான மற்றும் நம்பகமான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களைப் பெறுவது இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில் மாஸ்கோ பெய்ஜிங்குடன் முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளாது என்பதை உறுதி செய்கிறது.
2022-ம் ஆண்டில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதருமான பி.எஸ்.ராகவன், "இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை வேறு எந்த நாட்டுடனும் பகிர்ந்து கொள்ளாத ரஷ்யாவின் உறுதிப்பாட்டை அதிபர் விளாதிமீர் புடின் வலியுறுத்தினார்" என்று கூறினார். பெய்ஜிங்கிற்கு மாஸ்கோ வழங்கும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் உளவுத்துறை பகிர்வு ஏற்பாடுகள் குறித்த இந்த உத்தரவாதத்தை இந்தியா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
போர் மற்றும் எண்ணெய் வர்த்தகத்திற்கான ஊக்கம்
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க பாதிப்பைத் தணிக்க, இந்தியா அதிக அளவில் இரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கி வருகிறது. இதன் காரணமாக, சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோர் நலன் கருதி இந்தியா தொடர்ந்து இரஷ்ய எண்ணெயை வாங்கும் என்று 2022 நவம்பரில் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட போது வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தினார்.
இரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில் இருந்த எழுச்சி இருதரப்பு வர்த்தகத்திற்கான முந்தைய எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகளை மீறியுள்ளது. இந்த மோதலுக்கு முன்னர், இருதரப்பு நாடுகளின் வர்த்தக இலக்கு 2025-க்குள் 30 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், 2023-24 நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 65.70 பில்லியன் டாலரை எட்டியது என்று வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், கனிம வளங்கள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் ஆகியவை இந்தியாவின் இறக்குமதியான 61.44 பில்லியன் டாலர் ஆகும்.
நுட்பமான இராஜதந்திர சூழ்நிலைகளை வழிநடத்துதல்
எவ்வாறாயினும், போர் காரணமாக இந்தியாவை அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் ஒரு நுட்பமான இராஜதந்திரமான நிலையில் வைத்துள்ளது. இதில், இந்தியாவானது இரஷ்ய படையெடுப்பை வெளிப்படையாகக் கண்டிக்காமல், போரின் ஆரம்பகால வாரங்களில் நடந்த புச்சா படுகொலை (Bucha massacre) குறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து. மேலும், இரஷ்ய தலைவர்களால் வெளியிடப்பட்ட அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தும் இராஜதந்திரமான சூழ்நிலையில் வழிநடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council) பல தீர்மானங்களில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
நவம்பர் 2022-ல் தனது பயணத்தின் போது, ஜெய்சங்கர் "அமைதி, சர்வதேச சட்டத்தை மதித்தல் மற்றும் ஐ.நா சாசனத்திற்கான ஆதரவு" (peace, respect for international law and support for the UN Charter) குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். இருநாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த கொள்கைகளை இரஷ்யா மீறுவதை நிவர்த்தி செய்வதாக பரவலாக விளக்கப்படுகிறது.
செப்டம்பர் 2022-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடந்த கடைசி சந்திப்பில், நரேந்திர மோடி விளாதிமீர் புடினிடம் "இது போர் சகாப்தம் அல்ல" (this is not the era of war) என்று கூறினார். இந்த அறிக்கை பின்னர் ஜி-20 இன் பாலி பிரகடனத்திலும் (Bali declaration) மற்றும் மேற்கத்திய தலைவர்களாலும் எதிரொலிக்கப்பட்டது. நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரஷ்யாவை மீண்டும் வலியுறுத்தியது.
மாஸ்கோ மற்றும் கியேவ் இடையே உள்ள தொடர்பு திறக்கப்பட்டுள்ளது
இரு தரப்புக்கும் இடையில் ஒரு நடுநிலையாளராக இந்தியா தன்னை நிலைநிறுத்துகிறது என்ற கருத்து உள்ளது. விளாதிமீர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இருவருடனும் பேசிய சில உலகத் தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர். இத்தாலியில் நடந்த ஜி-7 மாநாட்டில் நடந்த சந்திப்பின் போது, ஜெலன்ஸ்கி மோடியை கியேவுக்கு வருமாறு அழைத்தார். மேலும் பிரதமர் கீவ் நாட்டிற்குச் செல்லலாம் என்று சில பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், கடந்த மாதம் சுவிட்சர்லாந்து நடத்திய உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவில்லை. மேலும், நாடுகளின் கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. ரஷ்யா இந்த உச்சிமாநாட்டை "நேரத்தை வீணடிப்பது" (waste of time) என்று விமர்சித்ததுடன் அதில் பங்கேற்கவும்வில்லை. அதேவேளையில், இந்தியா "இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்" என்ற நிலைப்பாட்டை எடுத்துக்காட்டியது.
செப்டம்பர் 2022-ல், நெருக்கடியில் நடுநிலை வகிக்க நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை மெக்சிகோ முன்மொழிந்தது. இந்த நெருக்கடியான நிலைமையைத் தீர்க்க குட்டெரெஸ் தனித்தனியாக இந்தியாவின் உதவியைக் கோரினார். செப்டம்பர் 2022-ல், கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியில் இந்தியா ரஷ்யாவுடன் ஈடுபட்டதாகவும், உக்ரைனில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த உலகளாவிய கவலைகளை மாஸ்கோவுக்கு தெரிவித்ததாகவும் ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார்.
மேற்கு மற்றும் சீனா இரண்டின் மீதும் ஒரு பார்வை
இந்தியாவுக்கும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான சந்திப்புகளைத் தொடர்ந்து மோடியின் இரஷ்ய பயணம் நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் உக்ரைன் தலைவருடன் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்தார். இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இநதியா வருகை தந்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் மெக்கால் மற்றும் முன்னாள் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழு, தலாய் லாமா மற்றும் இந்தியாவின் உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க தர்மசாலாவுக்கு வருகை தந்தனர்.
இந்தியாவின் பார்வையில், மோடியின் வருகை 2000-ம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாடுகளைத் தொடர்கிறது. இந்தியாவிலும் ரஷ்யாவிலும் மிக உயர்ந்த நிறுவனமயமாக்கப்பட்ட பேச்சுவார்த்தையான 21 உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன.
2021 டிசம்பரில் நடந்த கடைசி உச்சிமாநாட்டிலிருந்து, மோடியும் புதினும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் குறைந்தது 10 தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
உக்ரைன் போரில் ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக நம்பப்படுவது கவலையாக உள்ளது. இதில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் திரும்பி வந்தனர், சுமார் 40 பேர் ரஷ்யாவில் உள்ளனர். அவர்களை விரைவாக திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது மோடியின் வருகையின் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய கவலையானது ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகள் ஆகும். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வரலாற்று உறவை வலுப்படுத்தும் நோக்கில் மோடியின் பயணம் அமைந்துள்ளது. இந்தியாவின் இராஜதந்திர நலன்களுக்கு எதிரான மாஸ்கோவிற்கும், பெய்ஜிங்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளைக் கருத்தில் கொண்டு, பெய்ஜிங் இந்த உறவைப் பாதிக்காமல் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.