3 ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா? -பி.சி.மோகனன், ஆர்.ராமகுமார்

 இந்தியா-KLMES [மூலதனம் (Capital (K)), தொழிலாளர் (Labour (L)), ஆற்றல் (Energy (E)), பொருள் (Material (M)) மற்றும் சேவைகள் (Services (S))] தரவுத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவில்  8 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.  இந்த எண்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்று சில நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆண்டுகளில் தேவையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

 

இந்தியாவில் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே சமீபகாலமாக வேலை வாய்ப்புகள் போதிய அளவு இல்லாதது  பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ரிசர்வ் வங்கி வழங்கும் இந்தியா-KLEMS தரவுத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியா 8 கோடி பேருக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 


இந்தியாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21-ல் 56.6 கோடி பேரிலிலிருந்து 2023-24ல் 64.3 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 7.8 கோடி தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக KLEMS தரவின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுக் குழு இந்தத் தரவை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்டது. இந்தியா-KLEMS தரவுத்தளத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2022-2023 சிறு, பதிவு செய்யப்படாத வணிகங்களின் கணக்கெடுப்பில் (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) காணப்பட்ட எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது.  


ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் வேலை விகிதங்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், கோவிட்-19 ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்குப் பின்னரும் இந்தியாவின் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று சர்வதேச தொழிலாளர் (International Labour Organization (ILO)) அமைப்பு கூறியுள்ளது. 2019 மற்றும் 2023-க்கு இடையில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. மற்ற இடங்களில் இந்த போக்குகள் இருப்பதால், இந்தியாவின் வேலை வளர்ச்சி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதைக் காட்ட இந்தியா-KLEMS தரவுத்தளத்தை நம்புவது குறித்து நிபுணர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.


இந்தியா-KLEMS திட்டம் 2009-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி நிதியுதவியுடன் ஒரு ஆராய்ச்சித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. 2022 முதல், ரிசர்வ் வங்கி தரவுத்தளத்தை நிர்வகித்து வருகிறது. KLEMS என்பது மூலதனம் (Capital (K)), தொழிலாளர் (Labour (L)), ஆற்றல் (Energy (E)), பொருள் (Material (M)) மற்றும் சேவைகள் (Services (S)) ஆகியவற்றைக் குறிக்கிறது. தொழில் மட்டத்தில் "மொத்த காரணி உற்பத்தித்திறனை" (total factor productivity" (TFP)) அளவிடுவதற்கு இந்தியா-KLEMS கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. முக்கிய பொருளாதார வல்லுநர்கள் தொழில்கள் எவ்வளவு திறமையாக செயல்படுகின்றன என்று மதிப்பிடுவதற்கு மொத்தக் காரணி உற்பத்தித்திறனைப் பயன்படுத்துகின்றனர். 


KLEMS கட்டமைப்பானது வேலைவாய்ப்பு தரவை வழங்க வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அதன் மாதிரியின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அல்லது பிற உள்ளீடுகள் குறித்த தரவுகளை நேரடியாக சேகரிப்பதில்லை. மாறாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office), இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு மற்றும் காலமுறை தொழிலாளர் படை ஆய்வுகள் (Periodic Labour Force Surveys (PLFS)) போன்ற அதிகாரப்பூர்வ ஆய்வுகள் மூலம் இந்தத் தகவலைப் பெறுகிறது. மற்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து ரிசர்வ் வங்கியால் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு சில சமயங்களில் வேலை உருவாக்கம் பற்றிய அரசியல் உரிமைகோரல்களைச் செய்ய "ரிசர்வ் வங்கி வேலைகள் தரவு" என்று அழைக்கப்படுகிறது.


 இந்தியாவில் (India-KLEMS) முறை

 

இந்தியா-KLEMS காலமுறை தொழிலாளர் படை ஆய்வுகளில், வேலைவாய்ப்புத் தரவைப் பயன்படுத்துகிறது. ஆனால், இது தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் (Worker Population Ratio (WPR)) எனப்படும் மக்கள்தொகையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதத்தை மட்டுமே வழங்குகிறது. தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பெற, இந்த சதவீதம் மொத்த மக்கள்தொகையால் பெருக்கப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், இந்தியாவில் 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தபடவில்லை. இது இந்தக் கணக்கீட்டைக் கடினமாக்குகிறது.


மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக மக்கள்தொகையை மதிப்பிடுவதற்கு, மக்கள்தொகை ஆய்வாளர்கள் வழக்கமாக கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து இடைக்கணிப்பைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்தியா-KLEMS தரவு ஒரு மாறுபாடான அணுகுமுறையை எடுத்தது. இது 2017-18, 2018-19 மற்றும் 2019-20க்கான பொருளாதார ஆய்வு (Economic Survey (ES)) 2021-22-ன் மக்கள்தொகை மதிப்பீடுகளைப் பயன்படுத்தியது. பொருளாதார ஆய்வு 2001 முதல் 2011 வரையிலான வளர்ச்சி விகிதங்கள் அதே விகிதத்தில் தொடர்ந்ததாகக் கருதி, 2011-க்குப் பிறகு ஆண்டுகளுக்கான மக்கள் தொகையை மதிப்பிட்டுள்ளது. தொழிலாளர் மக்கள்தொகை விகிதங்கள் (Worker Population Ratios (WPRs)) ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய இந்த மக்கள்தொகை மதிப்பீடுகளால் பெருக்கப்பட்டது.

 

2020-21 மற்றும் 2023-24-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், இந்தியா-KLEMS தரவு வேறுபட்ட முறையைப் பயன்படுத்தியது. இது 2020-ல் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (Ministry of Health & Family Welfare (MoHFW)) வெளியிடப்பட்ட 2011 முதல் 2036 வரையிலான மக்கள்தொகை கணிப்புகளை நம்பியுள்ளது. இந்த கணிப்புகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன மற்றும் மாதிரி பதிவு முறையிலிருந்து (Sample Registration System (SRS)) பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதங்களைக் கருத்தில் கொண்டு மக்கள்தொகை மாதிரிகளைப் பயன்படுத்தியது. 2017-ஆம் ஆண்டு. பிரச்சனை என்னவென்றால், 2020-21-க்கு முந்தைய ஆண்டுகளில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  கணிப்புகளை இந்தியா-KLEMS பயன்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கி புதிய ஆண்டுகளுக்கான தரவைப் புதுப்பிக்கும் போது, ​​பழைய மதிப்பீடுகளைத் திருத்தவில்லை என்று தெரிகிறது. 


  இரண்டு முக்கிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக, பொருளாதார ஆய்வு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் மக்கள்தொகை கணிப்புகள் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கருவுறுதல் விகிதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கணக்கிடவில்லை. வழக்கமான மொத்த கருவுறுதல் விகிதம் (Total fertility rate) ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் ஆகும். ஆனால், சமீபத்திய தரவு 2019-21-க்குள் இந்தியாவின் விகிதம் 2.0 ஆகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 2027-ஆம் ஆண்டளவில் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கருவுறுதல் விகிதங்கள் 1.75-க்கு கீழே குறையக்கூடும் என்றும் 2024-ஆம் ஆண்டு ஆய்வு கணித்துள்ளது. இந்த சரிவுகள் பொருளாதார ஆய்வு அல்லது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பயன்படுத்தும் மக்கள்தொகை கணிப்புகளில் பிரதிபலிக்கவில்லை.


இரண்டாவதாக, பொருளாதார ஆய்வு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மக்கள்தொகை கணிப்புகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கான தரவைப் பிரிக்கவில்லை. எனவே, இந்தியா-KLEMS தேசிய மக்கள்தொகை எண்களைப் பயன்படுத்தியது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கான வளர்ச்சி விகிதங்களைக் கணித்து, தனித்தனி கணிப்புகளை உருவாக்கியது. ஆனால், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்கள் மெதுவாக வளர்ந்து வருகின்றன. எனவே, இரண்டிற்கும் ஒரே வளர்ச்சி விகிதத்தைப் பயன்படுத்துவது கிராமப்புற மக்களை குறைத்து மதிப்படுவதற்கு வழிவகுக்கும். இந்தச் சிக்கல்கள் காரணமாக, இந்தியா-KLEMS தரவு மூலம் கணக்கிடப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.

 

வேலைவாய்ப்பு கட்டமைப்பில் மாற்றங்கள் 


காலமுறை தொழிலாளர் வள ஆய்வுகளில் (In Periodic Labor Force Surveys (PLFS)) தரவு  உடனடியாகக் கிடைக்கும் நிலையில், வேலைவாய்ப்புப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு ஏன் இந்தியா-KLEMS தரவை நம்பியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவின் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் 2011-12-ல் 38.6% ஆக இருந்து 2017-18-ல் 34.7% ஆகக் குறைந்துள்ளது. பின்னர், 2022-23-ல் 41.1% ஆக அதிகரித்துள்ளது என்று காலமுறை தொழிலாளர் வள ஆய்வுகளின் தரவு காட்டுகிறது. 2017-18-ல் 17.5%-ஆக இருந்த கிராமப்புற பெண்களுக்கான தொழிலாளர் மக்கள்தொகை விகிதத்தின் அதிகரிப்பு, 2022-23-ல் 30% ஆக அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு முக்கியமாகும். மற்ற குழுக்களும் தொழிலாளர் மக்கள்தொகை விகித அதிகரிப்பைக் கண்டன. ஆனால், கிராமப்புறப் பெண்களைப் போல் இல்லை.

 

இந்த மாற்றங்கள் இரண்டு அரசாங்க கூற்றுக்களுக்கு அடிப்படையாக அமைகின்றன: முதலாவதாக, தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்குப் பிறகு கோடிக்கணக்கான புதிய வேலைகள் உருவாக்கப்பட்டன. இரண்டாவதாக, இந்த வேலைகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் ஆண்கள் விட்டுச்சென்ற பணிகளை பெண்கள் மேற்கொள்கின்றனர். இது பாலின (gender friendly) இணக்கமாகும்.


இரண்டு கூற்றுக்களும் தவறானவை. கிராமப்புற பெண்கள் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணம் விவசாயத்தில் கிராமப்புற பெண்களிடையே ஊதியம் பெறாத சுயவேலைவாய்ப்பு அதிகரித்ததே ஆகும். 2018-19 மற்றும் 2022-23 க்கு இடையில், விவசாயத்தில் பணிபுரியும் கிராமப்புற பெண்களின் பங்கு 71.1% முதல் 76.2% ஆகவும், சுயதொழில் செய்யும் கிராமப்புற பெண்களின் பங்கு 67.8% முதல் 78.1% ஆகவும் அதிகரித்துள்ளது. பெண் விவசாயத் தொழிலாளர்களிடையே, முற்றிலும் துணை அடிப்படையில் பணிபுரிபவர்களின் பங்கு (ஒழுங்கற்ற முறையில் மற்றும் சிறிய அளவில் வேலை செய்பவர்கள்) 2018-19 ஆம் ஆண்டில் 15.6% ஆக இருந்து, 2022-23ஆம் ஆண்டில் 27.7% ஆக அதிகரித்தது. விவசாயத்தில் உள்ள அனைத்து துணை வேலைகளிலும், ஊதியம் பெறாத குடும்ப வேலைகளின் பங்கு 2022-23ஆம் ஆண்டில் சுமார் 65% ஆக இருந்தது. 


 போதுமான முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறதா? 


ஊதியம் பெறாத, ஒழுங்கற்ற பணியின் அதிகரிப்பு பெண்களுக்கான தொழிலாளர் மக்கள்தொகை விகிதத்தை அதிகமாகக் காட்டலாம். இந்த உயர் தொழிலாளர் மக்கள்தொகை விகிதங்கள் அதிகரித்து வரும் மக்கள்தொகை மதிப்பீட்டில் பயன்படுத்தப்படும்போது, ​​மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் நிலையான உயர்வைக் காட்டுகிறது. தொழிலாளர் மக்கள்தொகை விகிதங்கள் அப்படியே இருந்தாலும், பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இது இந்தியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் எண்ணிக்கையை KLEMS தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.  2017-18-க்குப் பிறகு, இந்தியாவில் அர்த்தமுள்ள, ஊதியம் பெறும் வேலைகளில் சிறிதளவு வளர்ச்சியே இருந்தது. மேலும், விவசாயத்திலிருந்து ஆண்கள் வெளியேறுவது கிராமப்புற வேலை செய்யும் பெண்களின் நிலைமையை கணிசமாக மேம்படுத்தவில்லை.

 

இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) கணக்கெடுப்பு ஒப்பீடு 


  இந்திய KLEMS-தரவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை ASUSE 2022-23 தரவுகளுடன் பொருந்துகிறது என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையின் கூற்றில் ஒரு முக்கிய சிக்கல் உள்ளது. பல துறைகளைத் தவிர்த்து, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகளில் பதிவு செய்யப்படாத விவசாயம் அல்லாத வணிகங்களை மட்டுமே ASUSE உள்ளடக்கியது. இது 2022-23ல் 11 கோடி தொழிலாளர்களை அறிவித்தது. இருப்பினும், பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை ASUSE-ன் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 56.8 கோடி என மதிப்பிடுகிறது மற்றும் அது இந்தியா-KLEMS தரவுகளுடன் பொருந்துவதாகக் கூறுகிறது.


பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையானது விவசாயம், கட்டுமானம், பதிவுசெய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்க வேலைகள் போன்ற ASUSE-ன் கீழ் இல்லாத துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஆய்வுகளைப் பயன்படுத்தி உள்ளடக்கியதாகத் தெரிகிறது. இந்த முறைக்கு அறிவியல் ஆதரவு இல்லை மற்றும் 56.8 கோடி தொழிலாளர் மதிப்பீட்டிற்கு வழிவகுக்கிறது, இது நம்பகமான சரிபார்ப்பு அல்ல. ஆனால், இந்த மறைமுக முறையைப் பயன்படுத்துவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. குறிப்பாக இது ஒரு சார்பான வழியில் தரவை நியாயப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது.

 

சுருக்கமாக, இந்தியா-KLEMS [மூலதனம் (Capital (K)), தொழிலாளர் (Labour (L)), ஆற்றல் (Energy (E)), பொருள் (Material (M)) மற்றும் சேவைகள் (Services (S)] தரவு என்பது, வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட மற்றும் கேள்விக்குரிய முறைகளைப் பயன்படுத்துகிறது. இது வேலை உருவாக்கம் குறித்த ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வையை ஆதரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் இந்திய அரசு தவறியதன் முக்கியப் பிரச்சினை, பொருளாதார விவாதங்களை அரசியல் வாதங்களாக மாற்றி, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியப் போக்குகளை முறையாகப் படிப்பதை கடினமாக்குகிறது.

 

பி.சி.மோகனன், முன்னாள் உறுப்பினர், தேசிய புள்ளியியல் (National Statistical Commission) ஆணையம். ஆர்.ராமகுமார், பேராசிரியர், மும்பை டாடா சமூக அறிவியல் (Tata Institute of Social Sciences) நிறுவனம்.



Original article:

Share: