மருத்துவக் காப்பீடு மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவாதம் -ஜார்ஜ் மேத்யூ

 ஆயுள் காப்பீடு (life insurance) மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் (health insurance premiums) மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திரும்பப் பெறக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற மகர துவாரில் (Makar Dwar) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த ஆண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான (health and life insurance policies) பிரீமியத்தை அதிகரித்துள்ளன. 18% சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்கப்பட்டுள்ளதால், நாட்டின் மக்கள்தொகையில் பல பிரிவினருக்கு மருத்துவக் காப்பீடு அணுக முடியாததாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.  


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மகர் த்வாரில் (Makar Dwar) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் (life insurance and health insurance premiums) மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். திங்களன்று, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பினார். மேலும், அவரது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் "மக்கள் விரோத" (anti-people) வரிக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்தார்.


ஜூலை 28 அன்று, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விதிப்பது "வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு" (uncertainties of life) வரி விதிப்பது போன்றது என்று கடிதத்தில் கட்கரி கூறினார். இந்த வரி "தொழில்துறையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார். 


ஜூலை 1, 2017 முதல் சேவை வரி மற்றும் செஸ் போன்ற அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக GST உருவாகியுள்ளது. தற்போது, சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் மீதான ஜிஎஸ்டி 18% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டிக்கு முன், ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு 15% சேவை வரி இருந்தது. இதில் அடிப்படையான சேவை வரி (service taxes), ஸ்வச் பாரத் செஸ் (Swachh Bharat cess) மற்றும் கிரிஷி கல்யாண் செஸ் (Krishi Kalyan cess) ஆகியவை அடங்கும். ஜிஎஸ்டியில் சேவை வரியும் உள்ளதால், இந்த மாற்றம் அதிக பிரீமியங்களுக்கு வழிவகுத்தது. 15% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் பாலிசிதாரர்கள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 


சிகிச்சைக்கான அதிக செலவு பலருக்கு மருத்துவக் காப்பீட்டை வாங்குவதை கடினமாக்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவ பணவீக்கம் (Medical inflation) 14% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீள்காலக் காப்பீடு (term insurance)   கொள்கைகளுக்கும் இதே பிரச்சினை பொருந்தும்.


திங்கட்கிழமை, அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கோரிக்கைகளை பெற்றதாக ஒப்புக்கொண்டது. இந்தக் கோரிக்கைகள் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தில் விலக்கு அல்லது குறைப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.


ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்களின் பரிந்துரைகளின்படி, ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலக்குகளை நிர்ணயிக்கிறது. காப்பீடு ஒரு சேவையாக கருதப்படுவதால் ஜிஎஸ்டி அனைத்து காப்பீட்டு கொள்கைகளுக்கும் பொருந்தும். கடந்த மூன்று நிதியாண்டுகளில் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி மூலம் ரூ.21,256 கோடியும், மருத்துவ கொள்கைகளை மறுவெளியீடு செய்ததன் மூலம் ரூ.3,274 கோடியும் வசூலிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இது வருவாயை ஈட்டித் தருகிறது.


காப்பீடு பாலிசிகள் வருமான வரியைக் கணக்கிடும்போது சில விலக்குகளை அனுமதிக்கின்றன. மிகவும் பிரபலமான வரி-சேமிப்பு விலக்குகள் (tax-saving deduction), குறிப்பாக ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில், வருமான வரி சட்டம், 1961-ன் (Income Tax Act) பிரிவுகள் 80C மற்றும் 80D ஆகும். பிரிவு 80C இன் கீழ், ஒரு வாடிக்கையாளர் ஒட்டுமொத்த காப்பீட்டு பிரீமியத்தில் ரூ.1.5 லட்சம் வரை விலக்குகளைப் பெறலாம். அவர்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுடன் மருத்துவ காப்பீட்டையும் தேர்வுசெய்தால், பிரிமியத்தில் கூடுதல் விலக்குகளை பிரிவு 80D வழங்குகிறது.


ஜிஎஸ்டியைக் குறைப்பது பாலிசிதாரர்களுக்கு பயனளிக்குமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். காப்பீட்டு நிறுவனங்கள் பலனை பாலிசிதாரர்களுக்கு வழங்குவார்களா என்பதைப் பார்க்க வேண்டும் என்று காப்பீட்டு துறையினர்  கூறிகின்றன.


சில்லறை பணவீக்கம் (retail inflation) அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த செலவுகளும் அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.08% ஆக இருந்த சில்லறை பணவீக்கத்தை விட மருத்துவ பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த ஆண்டு சுகாதார காப்பீடு பாலிசிகளின் பிரீமியங்கள் பெரிய அளவில் அதிகரித்திருப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஒரு முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் பிரீமியத்தை 50% உயர்த்தியுள்ளது. மக்களின் நலனுக்காக சுகாதார காப்பீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இருப்பினும், பாலிசிகளின் புதுப்பித்தல் விகிதம் கடுமையான முறையில் குறைந்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் பிரீமியம் உயர்வு மற்றும் மருத்துவ பணவீக்கம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு அல்லாத முகவர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Confederation of General Insurance Agents) இதனைத் தெரிவித்துள்ளது.


உலகளவில் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது என்று கூட்டமைப்பு எடுத்துரைத்தது. காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India(IRDAI)) "2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு" (Insurance for All by 2047) என்ற இலக்கை அடைய இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அது கூறியது. நிதிக்கான நிலைக்குழு பிப்ரவரி 2024-ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது 66-வது அறிக்கையில் இந்த இலக்கை அங்கீகரித்தது.


காப்பீட்டு திட்டங்கள், குறிப்பாக சுகாதார மற்றும் கால காப்பீடு (health and term insurance) மீதான ஜிஎஸ்டி விகிதங்களை பகுப்பாய்வு செய்ய அறிக்கை பரிந்துரைத்தது. அதிக ஜிஎஸ்டி விகிதம் அதிக பிரீமியம் செலவுகளுக்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டது. இந்த அதிக விலையானது, மக்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளைப் பெறுவதைத் தடுக்கிறது. இந்த காப்பீட்டை மிகவும் மலிவானதாக மாற்ற ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) ரூ.5 லட்சம் வரை கீழ் நுண் காப்பீடு பாலிசிகள் (microinsurance policies) மற்றும் நீள்காலக் காப்பீடுகள் (term insurance) ஆகியவற்றில் கவனம் செலுத்தினர்.


தனியார் துறை காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது: சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற சந்தைகளில், காப்பீட்டில் ஜிஎஸ்டி அல்லது வாட் வரி எதுவும் இல்லை. காப்பீடு என்பது விற்பதற்கு கடினமான தயாரிப்பாக உள்ளதால், மக்கள் காப்பீடு வாங்க விரும்பவில்லை. அதற்கு மேல், அவர்கள் எடுக்கும் எந்தக் காப்பீட்டிற்கும் அரசாங்கம் 18% வரி விதிக்கிறது. இந்த வரியை அரசு குறைக்க வேண்டும்” என்றார்.


பொதுக் காப்பீட்டுத் துறை 2023-24 நிதியாண்டில் மருத்துவப் பிரிவின் கீழ் ரூ.1,09,000 கோடியை பிரீமியமாக வசூலித்துள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 2024 நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடமிருந்து பிரீமியமாக ரூ.3,77,960 கோடி வசூலித்துள்ளன. இந்தத் தொகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மட்டும் ரூ.2,22,522 கோடி பங்களிக்கிறது.


மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்கள் 2022-23 ஆம் ஆண்டில் மொத்த சுகாதார காப்பீட்டு பிரீமியங்களில் சுமார் 64% பங்களித்துள்ளன. மீதமுள்ள 36% பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.


சுவிஸ் ரீ சிக்மா அறிக்கையின் (Swiss Re Sigma report) படி, இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் காப்பீட்டு ஊடுருவல் குறைந்துள்ளது. இது 2021-22ல் 3.2% ஆக இருந்தது 2022-23ல் 3% ஆக இருந்தது. ஆயுள் காப்பீடு அல்லாத துறையில், அது 1% ஆக தேக்க நிலையிலேயே இருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் காப்பீட்டு ஊடுருவல் 2021-22 இல் 4.2% இல் இருந்து 2022-23 இல் 4% ஆகக் குறைந்துள்ளது.  


2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்குக்கு ஏற்ப, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டை மிகவும் மலிவானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்காக சாமானிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று காப்பீட்டு ஊழியர் CoverYou-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபங்கர் மகாஜன் கூறினார்.



Original article:

Share: