ஊட்டச்சத்து குறைபாடுள்ள 'ஏழைகளைக்' கணக்கிடுதல் -ஜி.சி.மன்னா, டி.முகோபாத்யாய்

 ஏழை மக்களை இலக்காகக் கொண்ட ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும்.


தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) 2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பின்

(Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மக்கள் உட்கொள்ளும் உணவு  பொருட்களின் அளவுகள் மற்றும் மதிப்புகள் பற்றிய தரவுகளை  வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு (HCES) சேகரித்தது. இந்த பகுப்பாய்வு உட்கொள்ளும் உணவின் அளவை அவற்றின் மொத்த கலோரி மதிப்பாக மாற்றுகிறது மற்றும் ஏழை குடும்பங்களின்  சராசரி தனிநபர் கலோரி உட்கொள்ளலை (per capita per day calorie intake)  ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான சராசரி தனிநபர் தினசரி கலோரியுடன் ஒப்பிடுகிறது.  


அளவீட்டு அணுகுமுறை


இந்த பகுப்பாய்வு யார் 'ஏழை' என்பதை வரையறுத்தல் மற்றும் ஊட்டச்சத்து அளவை அளவிடுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்களை சரி செய்கிறது.


இந்தியாவில், லக்டவாலா (Lakdawala), டெண்டுல்கர் (Tendulkar,) மற்றும் ரங்கராஜன் குழுக்கள் (Rangarajan Committees) போன்ற குழுக்கள் ஏழைகளை 'வறுமைக் கோட்டிற்கு' (poverty line’ (PL)) கீழே உள்ளவர்கள் என்று வரையறுத்துள்ளன. வறுமைக் கோடு  என்பது வறுமைக் கோட்டுக் கூடையில் (poverty line basket (PLB)) உள்ள உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களை ஒரு குடும்பம் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் தொகையாகும்.


லக்டவாலா குழு (Lakdawala Committee) வறுமைக் கோட்டின் நிலையை கிராமப்புறங்களுக்கு ஒரு நாளைக்கு தனிநபருக்கு 2,400 கிலோகலோரி மற்றும் நகர்ப்புறங்களுக்கு ஒரு நாளைக்கு 2,100 கிலோகலோரி என்ற கலோரி அளவுகோல்களின் அடிப்படையில் நிர்ணயித்தது. டெண்டுல்கர் கமிட்டி (Tendulkar Committee) வறுமைக் கோட்டினை  வரையறுக்க கலோரி விதிமுறைகளைப் பயன்படுத்தவில்லை. ரங்கராஜன் குழு (Rangarajan Committee) உணவு, உடை, வீட்டுவசதி, போக்குவரத்து, கல்வி மற்றும் பிற உணவு அல்லாத செலவுகளுக்கான நெறிமுறை நிலைகளின் அடிப்படையில் வறுமைக் கோட்டினை வரையறுத்தது.


இந்த பகுப்பாய்வு முறை முதலில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தேவையான சராசரி தினசரி தனிநபர் கலோரி தேவையை (per capita calorie requirement (PCCR)) கணக்கிடுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR))ன் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய (2020) அறிக்கையிலிருந்து, வெவ்வேறு வயது-பாலின-செயல்பாட்டு (age-sex-activity) வகைகளைச் சேர்ந்த இந்தியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. 


தினசரி தனிநபர் கலோரி தேவையானது வெவ்வேறு வயது-பாலின-செயல்பாட்டு வகைகளில் சாரசரி கலோரி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (periodic labour force survey), 2022-23லிருந்து மதிப்பிடப்பட்ட நபர்களின் விகிதத்தை இவை பிரதிபலிக்கின்றன.


ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை மாதாந்திர தனிநபர் செலவு (monthly per capita expenditure (MPCE)) அடிப்படையில் மக்கள் 20 பிளவுபட்ட வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் மக்கள்  உள்ளனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் வீட்டு உபயோகம் மற்றும் செலவு ஆய்வுகளை (Household Consumption and Expenditure Surveys (HCES)) பயன்படுத்தி, 2022-23-ஆம் ஆண்டிற்கான தரவைப் பயன்படுத்தி சராசரி தனிநபர் தினசரி கலோரி உட்கொள்ளல் மற்றும் சராசரி மாதாந்திர தனிநபர் செலவு  ஆகியவற்றை பகுப்பாய்வு மதிப்பிடுகிறது. இந்த நாடு தழுவிய தரவுகளிலிருந்து, பரிந்துரைக்கப்பட்ட தினசரி கலோரியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.


உணவுக்கான சராசரி தனிநபர் செலவு என்பது  ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க, ஒரு குடும்பம் உணவுக்காக செலவிட வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் குறிக்கிறது. இந்த வரம்பு, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் குறிப்பிட்ட மாதாந்திர தனிநபர் செலவு (monthly per capita expenditure (MPCE) வரம்புகளைப் பெற நுகர்வோர் விலைக் குறியீட்டைப் (Consumer Price Index) பயன்படுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விலை வேறுபாடுகள்  சரிசெய்யப்படுகிறது.


ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 'ஏழைகள்' அல்லது பின்தங்கிய மக்களின் விகிதம் இந்த மொத்த மாதாந்திர தனிநபர் செலவு (MPCE)  வரம்புகளுக்குக் கீழே உள்ளவர்களை அடிப்படையாகக் கொண்டது. தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் ஜூலை 2020-ஆம் ஆண்டு, மார்ச் 1, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, 'ஏழை' அல்லது பின்தங்கிய மக்களின் தேசிய சராசரி விகிதம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  விகிதங்களின் சராசரியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இந்த ஆய்வு வீட்டு கலோரி உட்கொள்ளலைக் கணக்கிட (HCES) சில தோராய மதிப்புகளைப் பயன்படுத்துகிறது. 


தனிநபர் கலோரி தேவை, இந்தியாவில் கிராமப்புறங்களில் 2,172 கிலோ கலோரி மற்றும் நகர்ப்புறங்களில் 2,135 கிலோகலோரி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டு விலைகளில், அகில இந்திய மாதாந்திர தனிநபர் செலவு (MPCE) வரம்பு கிராமப்புறங்களில் ₹2,197 ரூபாய் மற்றும் நகர்ப்புறங்களில் ₹3,077  ரூபாய் ஆகும். ஏழைகளின் விகிதம் கிராமப்புறங்களில் 17.1% ஆகவும், நகர்ப்புறங்களில் 14% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


உணவு அல்லாத செலவினங்களின் மதிப்பு, ஏழைகளுக்கு  5% க்கு பதிலாக 10% என எடுத்துக்கொண்டால், செலவின வரம்பு கிராமப்புறங்களுக்கு ₹2,395 ஆகவும், நகர்ப்புறங்களுக்கு ₹3,416 ஆகவும் செல்கிறது. இந்த மாற்றம் கிராமப்புற இந்தியாவில் 23.2% ஆகவும் நகர்ப்புற இந்தியாவில் 19.4% ஆகவும் அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டைப் பொறுத்தவரை, கிராமப்புற இந்தியாவில் மிக ஏழ்மையான ஐந்து சதவீதத்தினரின் சராசரி தனிநபர் கலோரி 1,564 ஆகும். அடுத்த ஐந்து சதவீதத்தினருக்கு இது 1,764 கிலோகலோரி ஆகும். நகர்ப்புற இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஏழ்மையான ஐந்து சதவீதத்தினருக்கு 1,607 கிலோகலோரி மற்றும் அடுத்த ஐந்து சதவீதத்தினருக்கு 1,773 கிலோ கலோரி ஆகும். இவை அனைத்தும் தனிநபர் கலோரி தேவையை விட குறைவாக உள்ளன. ஏழைகளுக்கான சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல நலத்திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. ஏழைகளை இலக்காகக் கொண்ட ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த முடியும்.


ஜி.சி. மன்னா,  Institute for Human Development, New Delhi இல் பேராசிரியராக உள்ளார்.  முகோபாத்யாய், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் ஆவார்.


Original article:

Share: