வேளாண் துறையில் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure (DPI)) உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் விளைச்சல் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் சேகரிக்கும். இது தனிப்பட்ட விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த பண்ணை பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2 அன்று, மத்திய அமைச்சரவை 2,817 கோடி ரூபாய், டிஜிட்டல் வேளாண் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
வேளாண் துறையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure) உருவாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மிஷன் என்றால் என்ன? அது விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI))
விவசாயத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கம் மற்ற அரசின் மின்-ஆளுமை முயற்சிகளைப் போன்றது. இந்த முயற்சிகள் ஆதார், டிஜிலாக்கர், டிஜிட்டல் கையொப்பம், ஒருங்கிணைந்த கட்டண முறை (Unified Payments Interface (UPI)) மற்றும் மின்னணு சுகாதார பதிவுகள் போன்ற டிஜிட்டல் தீர்வுகளுக்கு வழிவகுத்தது.
டிஜிட்டல் வேளாண் இயக்கம் மூன்று முக்கிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) கூறுகளைக் கொண்டுள்ளது:
1. அக்ரிஸ்டாக் (AgriStack)
2. வேளாண் முடிவு ஆதரவு அமைப்பு (Krishi Decision Support System (Krishi DSS))
3. மண் விவர வரைபடங்கள் (Soil Profile Maps)
இந்த கூறுகள் விவசாயிகளுக்கு பல்வேறு சேவைகளை அணுகவும் பயன்படுத்தவும் உதவும்.
டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டு கணக்கெடுப்பை (Digital General Crop Estimation Survey (DGCES)) நிறுவுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பு விவசாய உற்பத்தியின் துல்லியமான மதிப்பீடுகளை வழங்கும்.
திட்டத்திற்க்கான நிதி
இந்த இயக்கத்திற்காக 2,817 கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ₹1,940 கோடி ரூபாயை வழங்கும். மீதமுள்ள தொகைக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிதியளிக்கும்.
பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களுக்கான வேளாண் அமைச்சகத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2025-26-ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டம் ஆரம்பத்தில் 2021-22-ஆம் ஆண்டு நிதியாண்டில் திட்டமிடப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் இந்த திட்டங்களை தாமதப்படுத்தியது. பின்னர் 2023-24-ஆம் ஆண்டு மற்றும் 2024-25-ஆம் ஆண்டு ஆம் ஆண்டுகளுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அரசாங்கம் அறிவித்தது.
தனது நிதிலை அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சோதனை திட்டத்தின் (pilot project) வெற்றியின் காரணமாக, மூன்று ஆண்டுகளில் விவசாயத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு முறையை செயல்படுத்த அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து செயல்படும் என்று கூறினார்.
இந்த ஆண்டு, காரீஃப் பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு 400 மாவட்டங்களில் நடத்தப்படும். 6 கோடி விவசாயிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் விவரங்கள் விவசாயி மற்றும் நில பதிவேடுகளில் சேர்க்கப்படும்.
மூன்று தூண்கள்
விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை அமைத்து செயல்படுத்த மாநில அரசுகளுடன் ஒப்பந்தங்கள் குறித்து வேளாண் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இதுவரை பத்தொன்பது மாநிலங்கள் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.
மூன்று டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைகளில் (DPI) ஒன்றான அக்ரி ஸ்டாக் (AgriStack) க்கான அடிப்படை தகவல் தொழில்நுப்ப உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு சோதனை திட்டத்தில் சோதிக்கப்பட்டுள்ளது.
(i) அக்ரிஸ்டாக் (AgriStack)
உழவர் பதிவேடு: (FARMERS’ REGISTRY)
இந்த பதிவேடு ஆதார் போன்ற டிஜிட்டல் அடையாளத்தை விவசாயிகளுக்கு வழங்கும். இந்த 'விவசாயிகளுக்கான குறியீடு' (‘Farmer ID’) நிலம், கால்நடைகள், பயிர்கள், மக்கள்தொகை விவரங்கள், குடும்ப விவரங்கள் மற்றும் பெறப்பட்ட நன்மைகளின் பதிவுகளை இணைக்கும். ஃபரூக்காபாத் (உத்தரபிரதேசம்), காந்திநகர் (குஜராத்), பீட் (மகாராஷ்டிரா), யமுனா நகர் (ஹரியானா), ஃபதேகர் சாஹிப் (பஞ்சாப்) மற்றும் விருதுநகர் (தமிழ்நாடு) ஆகிய ஆறு மாவட்டங்களில் முன்னோடி திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆதாரங்களின்படி, 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. அவர்களில் 6 கோடி பேர் நடப்பு (2024-25) நிதியாண்டிலும், மேலும் 3 கோடி பேர் 2025-26-ஆம் ஆண்டு மற்றும் மீதமுள்ள 2 கோடி விவசாயிகளுக்கு 2026-27-ஆம் ஆண்டு வழங்க முடிவு.
கடந்த மாதம், 2024-25-ஆம் ஆண்டுக்கான மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவேட்டை உருவாக்க மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை டிஜிட்டல் வேளாண்மைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து வேறுபட்டது.
நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 9 அன்று திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு வழங்கியது. பதிவேடு உருவாக்கப்பட்டவுடன், தனிப்பட்ட விவசாயிகள் தங்களை டிஜிட்டல் முறையில் அடையாளம் கண்டு, பலன்கள் மற்றும் சேவைகளை அணுகவும், சிக்கலான ஆவணங்களைத் தவிர்க்கவும், அங்கீகரிக்கவும் முடியும்.
பயிர் விதைப்பு பதிவேடு:(CROP SOWN REGISTRY)
இந்த பதிவேட்டில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்புகள் மூலம் விவசாயிகள் நடவு செய்த பயிர்களின் விவரங்களை பதிவு செய்யும். 2023-24-ஆம் ஆண்டில் 11 மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முழு கணக்கெடுப்பு 2024-25-ஆம் ஆண்டில் 400 மாவட்டங்களையும், மீதமுள்ள 2025-26-ஆம் ஆண்டில் மாவட்டங்களையும் உள்ளடக்கும்.
புவி-குறிப்பிடப்பட்ட கிராம வரைபடங்கள்(GEO-REFERENCED VILLAGE MAPS):
இந்த வரைபடங்கள் நிலப் பதிவுகளை இயற்பியல் இருப்பிடங்களுடன் இணைக்கும்.
(ii) வேளாண் தீர்வு உதவி முறைமை (Krishi Decision Support System (Krishi DSS))
வேளாண் தீர்வு உதவி முறைமை (Krishi Decision Support System (Krishi DSS)) பயிர்கள், மண், வானிலை மற்றும் நீர் வளங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஒரு புவிசார் அமைப்பை உருவாக்கும்.
இது பயிர் வரைபடம், வறட்சி மற்றும் வெள்ள கண்காணிப்பு மற்றும் காப்பீட்டு கோரிக்கைகளுக்கான பயிர் விளைச்சலை மதிப்பிடுதல் ஆகியவற்றிற்கு உதவும்.
(iii) மண் விவர வரைபடங்கள் (Soil Profile Maps)
சுமார் 142 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கான விரிவான மண் விவர வரைபடங்கள் தயாரிக்கப்படும். 29 மில்லியன் ஹெக்டேர் சரக்கு ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டு ஆய்வு (Digital General Crop Estimation Survey (DGCES))
தற்போதுள்ள பயிர் மகசூல் மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் விவசாய உற்பத்தி மதிப்பீடுகளின் துல்லியம் குறித்து சில சமயங்களில் எழுப்பப்படும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும், தரவுகளை மேலும் வலுவாக மாற்றுவதற்கும் இது ஒரு முக்கிய உந்துதலாக இருக்கும்.
காகிதமில்லா குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) அடிப்படையிலான கொள்முதல், பயிர்க் காப்பீடு மற்றும் கடன் அட்டைகள் இணைக்கப்பட்ட பயிர்க் கடன்கள் போன்ற திட்டங்கள் மற்றும் சேவைகளை மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் உருவாக்க பயன்படும்.
டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டு ஆய்வு (DGCES) அடிப்படையிலான மகசூல் மற்றும் ரிமோட் சென்சிங் தரவுகளுடன், பயிர்-விதைக்கப்பட்ட பகுதியின் டிஜிட்டல் முறையில் கைப்பற்றப்பட்ட தரவு, பயிர் உற்பத்தி மதிப்பீடுகளின் துல்லியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பயிர் பல்வகைப்படுத்தலை எளிதாக்கவும், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்ப நீர்ப்பாசனத் தேவைகளை மதிப்பிடவும் தரவு உதவும்.
டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டு ஆய்வு (DGCES) அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் மகசூல் மதிப்பீடுகளை வழங்கும். இது விவசாய உற்பத்தியின் துல்லியமான மதிப்பீடுகளைச் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.