பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதாவில் உள்ள சிக்கல்கள் - பிரதிக்ஷா உல்லால், சினேகா பிரியா யானப்பா

 அறிமுகபடுத்தப்பட்ட மசோதா கூட்டுறவு கூட்டாட்சியை (cooperative federalism) பாதிக்கும். மேலும், இந்த மசோதா ஒன்றிய அரசிற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


ஆகஸ்ட் 1, 2024 அன்று, ஒன்றிய அரசு மக்களவையில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதாவை (Disaster Management (Amendment) Bill) அறிமுகப்படுத்தியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (Disaster Management Act), முன்பை இருந்ததை விட இப்போது அதிக அளவில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல இருப்பதை  மசோதா காட்டுகிறது.


ஒன்றிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும் என்று தற்போது உள்ள சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மசோதா தற்போதுள்ள தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு (National Crisis Management Committee)  மற்றும் உயர்மட்டக் குழு (High-Level Committee) போன்ற அமைப்புகளுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது. இந்த மாற்றம் பேரிடர் காலங்களில் சிக்கலை ஏற்படுத்தும். இது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராகவும் உள்ளது. 


இந்த மசோதா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (State Disaster Management Authorities) வலுப்படுத்தும் என்று புதிய மசோதா கூறுகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் திட்டங்களை தயாரிப்பதற்கு இந்த அதிகாரிகள் பொறுப்பு. இந்த மசோதா மாநில தலைநகரங்கள் மற்றும் நகராட்சிகளைக் கொண்ட நகரங்களுக்கு 'நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தை' (Urban Disaster Management Authority’) உருவாக்குகிறது.

இருப்பினும், திட்டத்தை மேம்படுத்துவதற்கு தேவையான  நிதி ஒதுக்கப்படாமல் இருந்தால், இந்தத் திட்டம் அதிகமான சிக்கல்களை உருவாக்ககூடும்.


அதிகாரக்குவிப்பு (Centralisation)  ஒரு கவலையாக உள்ளது  


இந்த திருத்த மசோதா, தேசிய பேரிடர் நிவாரண நிதியை (National Disaster Response Fund) மாற்றியமைத்து, நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விவரங்களை நீக்குகிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் ஒரு பெரிய பிரச்சினை, பேரிடர்களின் போது மாநில அரசுகள் நிதி தேவைகளுக்காக ஒன்றிய அரசை சார்ந்து உள்ளன. தேவைப்படும் போது உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று இந்த பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி மறுக்கப்பட்டது. கர்நாடகாவிற்கு பேரிடர் மேலாண்மை நிதி  மிகவும் தாமதமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது.  


தற்போதைய ஏற்பட்டுள்ள காலநிலை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 படி பேரழிவுகள் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 

பேரழிவு' (‘disaster’) என்பதற்கான  வரையறை 


  ஜூலை 25, 2024 இல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் இணை அமைச்சர் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் வெப்ப அலைகளை அறிவிக்கப்பட்ட பேரழிவாக வகைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிடவில்லை என்று அமைச்சர் கூறினார். அறிவிக்கப்பட்ட பேரிடர்களின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டிய தேவை இல்லை என்ற 15-வது நிதி ஆணையத்தின் கருத்துடன் இந்த அறிக்கை உடன்படுகிறது.

 

புயல், வறட்சி, பூகம்பங்கள், தீ, வெள்ளம், சுனாமிகள், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், மேக வெடிப்புகள், பூச்சி தாக்குதல்கள், உறைபனி மற்றும் குளிர் அலைகள்  போன்ற பேரிடர்கள் தேசிய பேரிடர் நிவாரண நிதியம் மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ்  பட்டியலில் உள்ளன.  

இந்தியாவில் "பேரழிவு" என்பதன் கடுமையான வரையறை உலகளாவிய பார்வைகளுடன் முரண்படுகிறது. உலகம் முழுவதும், வெப்ப அலைகளை காலநிலை தொடர்பான பேரழிவுகளாக வகைப்படுத்த உடன்பாடு உள்ளது. ஏனெனில், அவை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் 536 நாட்கள் வெப்ப அலைகள் பதிவாகின. இது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவான உட்சபட்ச வெப்ப நிலையாகும். 2013-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் வெப்ப அலையின் காரணமாக 10,635 பேர் இறந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்ப அலைகள் வளர்ந்து வரும் பேரழிவு அபாயத்தைக் குறிக்கிறது. 


பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் தற்போது முன்மொழியப்பட்ட மசோதா ஆகியவை பேரிடராகக் கணக்கிடுவதற்கு போதுமான வரையறையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், சட்டத்தின் கீழ் ஏற்படும் பேரழிவுகளின் பட்டியலில் வெப்ப அலைகள் போன்ற காலநிலை நிகழ்வுகள் குறிப்பிடப்படவில்லை. அவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உதாரணமாக, சில வட இந்திய மாநிலங்களில் 40°C வெப்பநிலை சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இமயமலையில் அது வெப்ப அலையாக கருதப்படுகிறது. 


இந்தச் சட்டம், நீண்ட வெப்ப அலைகளை இயற்கைப் பேரிடர்களான வெள்ளம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட, அவை பேரிடர்களாக குறிப்பிடப்படவில்லை. சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள பேரழிவுகளின் பாரம்பரிய வரையறையுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் சரியாக பொருந்தாததால் இது ஒரு பிரச்சனையாக உள்ளது.  காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட  பேரழிவுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட பகுதிகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன. இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.


தொடர்புடைய சிக்கல்கள் 


இருப்பினும், சில முக்கியமான கேள்விகள் உள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள சமச்சீரற்ற அதிகாரத்தால் ஏற்படும் தற்போதைய பிரச்சினைகளை முன்மொழியப்பட்ட மசோதா சரிசெய்யுமா? மாநிலங்கள் நிதிக்காக ஒன்றிய அரசையே நம்பியிருக்க வேண்டுமா?  பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று இந்த மசோதா கூறினால், கடந்த கால பேரழிவுகளில் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது செய்யப்பட்ட தவறுகளிலிருந்து அது கற்றுக்கொள்ளத் தவறிவிட்டது. பேரிடர் மேலாண்மை நிதியை உறுதி செய்வதில் ஒன்றிய அரசின் முயற்சிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஒன்றிய அல்லது மாநில அரசு காரணமா என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பேரழிவுகளை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது மற்றும் எதிர்கால நிகழ்வை எவ்வாறு கணிப்பது என்பதைக் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவது உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை (cooperative federalism) அடைவதில் இருந்து திசைதிருப்பும்.


பிரதிக்ஷா உல்லால் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.



Original article:

Share: