அடுக்குநிலை பாகுபாட்டின் கலவை -சேலம் தரணிதரன், கர்கா சட்டர்ஜி

 தற்போதைய எல்லை நிர்ணய முறையின் கீழ், சரியாக செயல்படாத சில மாநிலங்கள் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மாநிலங்கள் சக்திவாய்ந்த மாநிலங்களாக மாறலாம். சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு இது ஆபத்தை உருவாக்குகிறது. 


இந்திய ஒன்றியத்தில், எல்லை நிர்ணயம் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. எல்லை நிர்ணய முறை எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற தலைவர்கள் புரிந்து கொண்டனர். அடுத்த தலைமுறையினர் கையாளும் வகையில் எல்லை நிர்ணய முறையை  தங்களது ஆட்சிக் காலத்தில் நடத்தாமல் ஒத்திவைத்தனர். 


இப்போது, ​​இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் தலைமுறையாக நாம் இருக்கிறோம். மீண்டும் தாமதிக்க வேண்டுமா? அல்லது நாம் தீர்க்க வேண்டுமா? இந்திய மக்களாகிய நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இந்தியா ஒரு கூட்டாட்சி ஒன்றியமாக நீடிக்குமா? அல்லது சிறுபான்மைக் குழுக்களின் கிளர்ச்சிகளுடன், ஒரு இன-மொழிக் குழு ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை அரசாக மாறுமா?


கூட்டாட்சி (Federalism) என்பது இந்திய அரசியலமைப்பின் முக்கிய பகுதியாகும். இந்திய ஒன்றியம் ஒரு கூட்டாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இதில் பல மாநிலங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குறிப்பிட்ட இன மற்றும் மொழியியல் குழுக்களின் தாயகமாக உள்ளன. இதன் காரணமாக, உச்ச நீதிமன்றம் மாநிலங்களை தன்னிச்சையான நிர்வாக அலகுகள் (arbitrary administrative units)  என்று அழைக்காமல் அரசியல் அலகுகள் (political units) என்று அழைக்கிறது.


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இந்திய ஒற்றுமை உருவாக்கப்பட்டது. இந்த ஒற்றுமை மாநிலங்களுக்கிடையேயான அதிகார பகிர்வு மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் பலதரப்பட்ட மக்களிடையே நடந்துகொண்டிருக்கும் தொடர்பின் மூலம் சுதந்திர இந்தியாவில் தொடர்கிறது.


எல்லை நிர்ணயம் என்றால் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் இது எல்லை நிர்ணய ஆணையத்தால் (Delimitation Commission) நடத்தப்படுகிறது. கடைசியாக 1971-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. 


1976-ல், இந்திரா காந்தி அரசாங்கம் 2001 வரை 25 ஆண்டுகளுக்கு எல்லை நிர்ணய செயல்முறையை தற்காலிகமாக நிறுத்திவைத்து. பின்னர், வாஜ்பாய் அரசாங்கம் இடைநிறுத்தத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. இந்த இடைநீக்கம் 2026-ல் முடிவடையும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடிந்த மாநிலங்களை பாதுகாப்பதற்காக  இந்த இடைநீக்கம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், 2029 தேர்தலுக்கு முன்னர் புதிய எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளலாம் என்று நரேந்திர மோடி அரசு பரிந்துரைத்துள்ளது.


எல்லை நிர்ணயம் ஒரு அச்சுறுத்தலாகும்


மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate (TFR)) ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.6-1.8 உள்ளது. இது தேவையான அளவு 2.1-ஐ விட குறைவாக உள்ளது. பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 3.5 அதிகமாக உள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.  


இப்போது, ​​எல்லை நிர்ணய கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், மக்களவையில் இந்தி அல்லாத மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும். எடுத்துக்காட்டாக, தென் மாநிலங்களின் இடங்களின் பங்கு 25%-லிருந்து 17%-ஆகக் குறையும். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ள இந்தி பகுதியில் உள்ள மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை 40%-லிருந்து 60%-ஆக உயரும்.


கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மொத்த நிதியில் 30% மட்டுமே நேரடி வரிகளிலிருந்து பெறுகின்றன. அதே நேரத்தில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் அவர்கள் பங்களிப்பதிலிருந்து 250% முதல் 350% வரை பெறுகின்றன. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பதிலாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நிதியை பகிர்ந்தளிக்கும் 16-ஆவது நிதிக் குழுவின் முடிவு வளர்ந்த மாநிலங்களுக்கு இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும். இந்த முறை தொடர்வது இந்தி மொழி பேசாத மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சத்தை அதிகரிக்கும் என்பது கவலைக்குரியது.


பாகுபாட்டை வளர்ப்பது


இந்தியா ஒரு நிரந்தர, பல இன, பல மொழிகள் கொண்ட கூட்டாட்சி ஒன்றியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை இன-மொழி பெரும்பான்மை நாடாக அது வடிவமைக்கப்படவில்லை. 80%-க்கும் அதிகமான இனப் பெரும்பான்மையைக் கொண்ட சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல, இந்தியாவில் ஒரு பெரும்பான்மை இனம் அல்லது மொழிக் குழு இருந்ததில்லை. இந்தியா பல்வேறு இன-மொழிக் குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும், எந்த ஒரு குழுவும் பெரும்பான்மையாக இல்லை. 


இருப்பினும், பெரிய குழுக்கள் மொழிவாரி மாநிலங்களின் அடிப்படையை உருவாக்குகின்றன. அங்கு அவை பெரும்பான்மையாக உள்ளன. ஆனால், மாநிலங்களுக்கும் அவற்றின் இன-மொழியியல் குழுக்களுக்கும் இடையிலான மொத்த கருவுறுதல் விகிதங்களில் நீண்டகால வேறுபாடுகள் காரணமாக, இந்த தீர்வு முறை ஆபத்தில் உள்ளது. 


1947 முதல், பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளைப் பேசும் மக்களின் விகிதம் குறைந்துள்ளது. மாறாக, இந்தி பேசுபவர்களின் விகிதம் எதிர்பாராத விதமாக 36%-லிருந்து 43%-ஆக அதிகரித்துள்ளது. 


ஒரு மாநிலம் பெறும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை, மொத்த இடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஒன்றிய அரசின் விவகாரங்களில் மாநிலத்தின் செல்வாக்கைக் காட்டுகிறது. இது பங்குதாரர் குறியீடு (Stakeholdership Index) என்று அழைக்கப்படுகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படாத மாநிலங்களுக்கு எல்லை நிர்ணயம் பயனளிக்கும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படாத மாநிலங்களுக்கு எல்லை நிர்ணயம் அதிக அதிகாரத்தைக் கொடுக்கும். 


இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளை தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் குறைவான செல்வாக்கைக் கொண்டிருக்கும் மற்றும் முக்கியமாக வருவாயை வழங்கும். இந்தி அல்லாத மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகை அளவைவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருவாயில் பெரும் பங்கை வழங்குகின்றன. அதே நேரத்தில் இந்தி  மாநிலங்களின் வருவாய் விகிதம் அவர்களின் மக்கள்தொகை சதவீதத்தை விட குறைவாக உள்ளது. 


எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, பிஜேபி ஆதிக்கம் செலுத்தும் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பங்குதாரர் குறியீட்டு எண் இருமடங்காக இருக்கும். அதேசமயம், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், பாஜகவுக்கு சில இடங்களில்  செல்வாக்கு இல்லை, அவற்றின் செல்வாக்கு 30% - 40% வரை குறையும். இந்த நிலைமை இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை கடுமையாக பாதிக்கும். மற்ற மாநிலங்கள் தங்கள் தேர்தல் செல்வாக்கை இழக்கும். போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல், இந்தி அல்லாத மாநிலங்கள் ஒதுக்கப்பட்டதாக உணரப்படும்.


இவ்வாறு, வரைமுறைப்படுத்தல் பல நிலைகளில் நியாயமற்ற செயல்முறையை உருவாக்கும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு தேசிய அளவில் தங்களது கருத்துகளை தெரிவிப்பதில் குறைவான அதிகாரம் இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளங்கள் மற்றும் வரிகள் மூலம் அதிகப் பணத்தை வழங்கும் இந்தி அல்லாத மாநிலங்கள் தங்கள் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் குறைவான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். மோசமான செயல்திறன் கொண்ட மாநிலங்கள் இந்த வெற்றிகரமான மாநிலங்களிலிருந்து பணத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமான மாநிலங்களுக்கான விதிகளை உருவாக்கும்.


பாஸ்டன் தேநீர் விருந்தின் போது, ​​மக்கள் "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு இல்லை" என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், எல்லை நிர்ணயம் அதிக வரி செலுத்தும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும். இது ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். சில மாநிலங்கள் ஆட்சியாளர்களைப் போலவும், மற்றவை காலனிகளாகவும் நடத்தப்படும் ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சமமான வாக்குரிமை மற்றும் கூட்டாட்சி முறை என்ற இரண்டு முக்கிய அரசியலமைப்பு மதிப்புகளை சமநிலைப்படுத்துவது முக்கியம்.


சாத்தியமான தீர்வுகள்


பல தீர்வுகள் இருக்கலாம். முதலில், இந்திரா காந்தி மற்றும் ஏ.பி. வாஜ்பாய் எல்லை நிர்ணயத்தை நீட்டித்தனர். இதை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்து, முடிவை எதிர்கால தலைமுறையினரிடம் விட்டுவிடலாம்.


இரண்டாவதாக, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இடையே இடங்களை மறுபகிர்வு செய்வதற்கான எல்லை நிர்ணயத்தை நிரந்தரமாக முடக்கலாம்.


மூன்றாவதாக, திட்டமிட்டபடி எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளுதல் மூலம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய கூட்டாட்சி ஒப்பந்தத்தை கூடுதலாக வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில், பொதுபட்டியல் நீக்கப்பட்டு, மாநிலப் பட்டியலை விரிவுபடுத்துவதன் மூலம், மீதமுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.


 இதன் அடிப்படையில், பட்டியலில் உள்ள அதிக எண்ணிக்கையிலான துறைகளின் வகைகளை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதில் குறிப்பிடும்படி, வெளிநாட்டு பாதுகாப்பு (external defence), வெளியுறவு மற்றும் நாணயம் (external affairs and currency)  போன்ற முக்கிய பகுதிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை ஒரு குழுவின் ஆதிக்கத்தைக் குறைத்து, அதிகாரப் பரவலாக்கத்துடன் எல்லை நிர்ணயத்தை சமநிலைப்படுத்தும்.


நான்காவதாக, மக்களவையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள இடங்களின் தற்போதைய விகிதத்தைப் பாதுகாக்கவும். இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்தின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இது வளர்ந்து வரும் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் உள்ள பிரதிநிதித்துவ இடைவெளியை குறைக்க உதவும்.


இந்தியா ஒரு தனித்துவமான நாடு. இது வங்க தேசம் அல்லது தாய்லாந்து போன்ற ஒரு மொழிவழி நாடு அல்ல. பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், நாகரிகங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட இந்தியா ஆப்பிரிக்கா அல்லது ஐரோப்பா போன்றது. இருப்பினும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிரிக்க முடியாத அரசியல் ஒன்றியத்தில் இந்தியா ஒன்றுபட்டுள்ளது. 


மற்றவர்களுடன் பழகும்போது அது ஒருமித்த குரலில் பேசுகிறது. நவீன வரலாற்றில் பன்முகத்தன்மையின் மிகப்பெரிய பரிசோதனை இந்தியா. இந்த ஒற்றுமையை அழிக்க பெரும்பான்மைவாதத்தையோ அல்லது கட்சிவாதத்தையோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.


சேலம் தரணிதரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராகவும் செயலாளராகவும் உள்ளார். கர்கா சட்டர்ஜி பங்களா போக்கோவின் பொதுச் செயலாளர்.




Original article:

Share: