பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மையில் உள்ள அமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கலாம்.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, (Disaster Management (Amendment) Bill) அறிமுகப்படுத்தப்பட்டது. இது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் (2005) பல்வேறு மாற்றங்களை செய்தது. இது பேரிடர் தடுப்பு, தயார்நிலை, தணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதற்கான இந்தியாவின் முதன்மைச் சட்டமாகும். பேரழிவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் மாற்றங்களைச் செய்ய தயாராகும் போது, தற்போதைய அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை கவனத்தில் கொள்வது முக்கியம்.
உலக நிலப்பரப்பில் 2.4% கொண்ட இந்தியா, உலக மக்கள்தொகையில் சுமார் 17.78% ஆகும். இது வளங்கள் மீது அழுத்தத்தைத் உருவாக்குகிறது மற்றும் பேரழிவு அபாயங்களை அதிகரிக்கிறது. 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயறக்கை பேரிடர்கள் காரணமாக 2.5 மில்லியன் இந்தியர்கள் இடம்பெயர்ந்ததாக ஜெனீவாவில் உள்ள உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (Internal Displacement Monitoring Centre) தெரிவித்துள்ளது. இந்தியாவின் 33.6% கடலோரப் பகுதி கடல் அரிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளன. குறிப்பாக, ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் புயல்கள் அடிக்கடி உருவாகுகின்றன என்பதை அறிவியல் அறிக்கைகளின் ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. கோடை காலத்தில் உருவாகும் புயல்களும், அவை ஏற்படுத்தும் சேதங்களும் பெரும் பிரச்சனையாக உள்ளது.
பேரழிவுகள், மனித பாதிப்பு மற்றும் நிதி மூலதனம் இரண்டையும் பாதிக்கிறது. செப்டம்பர் 2024-ஆம் ஆண்டில், ஒன்றிய அரசின் ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒன்றிய குழு, ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் ₹6,880 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மையை மேம்படுத்துவது மக்களுக்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும் என்பதை இது காட்டுகிறது.
நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாமை
இந்தியாவில், பெரும்பாலான பேரிடர்கள் வெவ்வேறு அமைப்பில் உள்ள அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. நிலநடுக்கங்களை நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (National Center for Seismology) (பூமி அறிவியல் அமைச்சகம், இந்திய அரசு) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) ஆகியவை பொறுப்பு வாய்ந்த முகமைகளாகும். மறுபுறம், சுரங்கத் துறை (Department of Mines) சுரங்கப் பேரழிவுகளைக் கையாளுகிறது. இந்த முகமைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்துகிறது.
பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அவர்கள் இப்போது தங்கள் தேவைக்கேற்ப பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கலாம். தேசிய செயற்குழு (National Executive Committee (NEC)) மற்றும் மாநில செயற்குழு (State Executive Committee (SEC)) ஆகியவற்றின் அதிகாரத்தை இந்த சட்டத்திருத்தம் பறிக்கிறது. தேசிய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு ஆகியவை பேரிடர் மேலாண்மையை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால், திட்டங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பங்கு இல்லை. இதனால், பேரிடர் மேலாண்மையின் செயல்திறன் பாதிக்கலாம்.
திறமையான அதிகாரப்பரவல் இல்லாமை
பேரிடர் நிதி நிர்வாகத்தில் மாநில அளவிலான மாற்றங்கள் தேவை என்று 15-வது நிதி ஆணையம் கூறுகிறது. தற்போதைய, அமைப்புகள் உள்ளூர் அவசரநிலைகளைக் கையாளும் மாவட்ட அதிகாரிகளின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி அதிகாரம் இல்லை. அரசியலமைப்பில் இது தொடர்பாக குறிப்பிடபட்டிருந்தாலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.79% மட்டுமே நகராட்சிகள் செலவிடுகின்றன.
2014 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் வெப்ப அலைகளின் காரணமாக 5,000 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். புவி வெப்பமடைதல் வெப்ப அலைகளை மோசமாக்குகிறது. குளிர் அலைகளைப் போலவே, வெப்ப அலைகளையும் பேரழிவுகளாக இந்தியா அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள வெவ்வேறு காலநிலை வேறுபாட்டின் காரணமாக அடுத்தடுத்து வந்த நிதி ஆணையங்கள் குளிர் அலைகளுக்கு நிதியளிப்பதை தவிர்த்து வருகின்றன. இருப்பினும், குளிர் அலைகள் பேரழிவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த வகைப்பாடு வெப்ப அலைகளை நிர்வகிப்பதற்கான நிதி மற்றும் வளங்களை அதிகரிக்க உதவும்.
மாநிலத் தலைநகரங்கள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள நகரங்களில் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை நிறுவுவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஆகியோர் இந்த ஆணையத்தில் இடம் பெறுவர். மேலும், மாநில அரசு தேவைக்கேற்ப கூடுதல் உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். கொள்கை அறிவு மற்றும் நடைமுறை அனுபவம் ஆகிய இரண்டையும் கொண்ட நிபுணர்களின் முயற்சிகளை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த அதிகாரிகளுக்கு முறையான நிதி மற்றும் சுதந்திரம் கிடைத்தால், நகர்ப்புறங்களில் நிலைத்தன்மையை பெரிதும் மேம்படுத்த முடியும்.
பின்பற்ற வேண்டிய சர்வதேச உதாரணங்கள்
நார்வே, டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு முன்மாதிரியாக செயல்படக்கூடிய உயர் மட்ட பரவலாக்கத்தை அடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, டென்மார்க்கில், உள்ளூர் அரசாங்கங்கள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 36.5% சமூக சேவைகளுக்காக செலவிடுகின்றன. இது உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்கவும் புதிய யோசனைகளை முயற்சிக்கவும் அனுமதிக்கிறது.
இந்த மசோதா தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (National Disaster Management Authority (NDMA)) பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளை முடிவு செய்வதற்கும், ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை பணியமர்த்துவதற்கும் அதிகாரத்தை வழங்குகிறது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு நேர்மறையான படியாகும். ஆனால், இதில் இன்னும் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6% முதல் 8% வரை பேரிடர் மேலாண்மைக்கு செலவிட்டது. இந்த முதலீடு ஜப்பானை பேரழிவை எதிர்கொள்ளும் உலகளாவிய முன்னணி நாடாக மாற்றியது. இதனால் ஜப்பான் நாடு இயற்கை அபாயங்களைக் கையாளவும் பொருளாதார சக்தியாக வளரவும் உதவியது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் டோக்கியோவில் உள்ள ஜி-கேன்ஸ் (G-Cans project) திட்டமாகும். இந்த திட்டம் வெள்ளத்தை தடுக்க சுரங்கங்கள் வழியாக உபரி நீரை வெளியேற்றுவதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
புது டெல்லி உட்பட இந்தியா முழுவதும் உள்ள பெரிய நகரங்களுக்கு ஜி-கேன்ஸ் போன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்படலாம். இந்த திட்டங்கள் அதிக மழைப்பொழிவு ஏற்படும் போது அன்றாட வாழ்க்கைக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். கூடுதலாக, தேவையான இடங்களில் நிலத்தடி கேபிள்களைப் பயன்படுத்துவது புயல்களின் போது மின்சார சேவைக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அவசர நிகழ்வுகள் தரவுத்தளத்தின் (Emergency Events Database (EM-DAT)) படி, சர்வதேச பேரிடர் தரவுத்தளம், சூறாவளி புயல்கள் மற்றும் வெள்ளம் 2019-ஆம் ஆண்டு முதல் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தியா தனது முழு திறனை அடைய, அதன் பெரிய மக்கள்தொகையை அதிகம் பயன்படுத்த வேண்டும். பேரழிவுகள் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு சமூகத்தின் திறனையும் பலவீனப்படுத்துகின்றன. மறுகட்டமைப்பு மற்றும் மீட்பு பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
14-வது நிதி ஆணையத்தின் கீழ் ₹61,220 கோடி ரூபாய் மாநில பேரிடர் மீட்புப் படைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 15-வது நிதிக் குழு அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படைக்கு ₹1.28 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது.
பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான முதல் படியாக இருக்கும். ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், இந்தியாவில் பேரழிவை எதிர்கொள்வதற்கான வலுவான அரசியல் ஆதரவு மற்றும் அதை செயல்படுத்துவதற்கு தலைமையின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டுகிறது.
கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி மக்களவையில் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். அக்ரிமா குப்தா கிருஷ்ண பிரசாத் தென்னெட்டியின் கொள்கை மற்றும் பாராளுமன்ற அலுவலகத்தை வழிநடத்துபவர் மற்றும் 2022-23 ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமன்ற உதவியாளராக (Legislative Assistant to Members of Parliament (LAMP)) இருந்துள்ளார்.